செவ்வாய், 13 நவம்பர், 2018

திராவிடர் இயக்க வீராங்கனை அன்னை டாக்டர் சத்திய வாணி முத்து

..வரலாற்றில் இன்று..
திராவிடர் இயக்க வீராங்கனை அன்னை டாக்டர் சத்திய வாணி முத்து
நினைவு நாள் (நவம்பர் 11, 1999)
....சு.குமார தேவன்....
* திராவிடர் இயக்கம் உருவான காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தான் மகளிர் பங்களிப்பு இருந்தது. சொற்ப எண்ணிக்கையிலான  அந்த மகளிர் செய்த சாதனைகள் எண்ணிலடங்காது.
* தன் தந்தை நாகைநாதர் வழியில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய "தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு " மூலம் அரசியலில் தடம் பதித்தார். இயல்பிலேயே ஜஸ்டிஸ் கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு தி.க.வில் இணைந்தார்.
* 1949ல் தி.மு.க. பிரிந்த போது அதில் இணைந்து பல ஆண்டுகள் கொள்கை விளக்க அணிச் செயலாளர், பேச்சாளர், சிறந்த தி.மு.க.பிரச்சாரகராக விளங்கிய சத்திய வாணி, முத்து என்னும் சுயமரியாதை இயக்க வீரரை 1943ல் திருமணம் செய்து சத்திய வாணி முத்து ஆனார்.திரு.வி.க. தலைமையில் இரா.பி.சேதுப்பிள்ளை வாழ்த்துரைக்க நடைபெற்றது.
* ஹோமியோபதி மருத்துவம் படித்து டாக்டர் சத்திய வாணி முத்து ஆனார். அன்னை என்ற இதழைத் தொடங்கி திராவிடர் இயக்கக் கொள்கை பரப்பியதால் அன்னை டாக்டர் சத்திய வாணி முத்து ஆனார்."எரிக்கப் பட்டவள் " என்ற நூல் இவரது உரைநடைத் தமிழ்க்கு அணி சேர்த்தது.
* சத்திய வாணி முத்து பேச்சில் சூடும் சுவையும் பொதிந்து கிடக்கிறது என்று அண்ணா இவரது பேச்சினைப் பாராட்டினார். இவரது பேச்சு அன்றைய காங்கிரஸ்காரர்களை மிகவும் எரிச்சலூட்டியது. T.N. அனந்தநாயகி மூலம் பதில் கொடுத்தாலும் அன்னையின் பேச்சே எடுபட்டது.
* தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், MGR. கி.வீரமணி ஆகியோரிடம் தனித்த மதிப்பும் அவர்கள் இவரிடம் மிக அதிக வாஞ்சையும் வைத்திருந்தனர்.
* அன்னையின் பேச்சால், செயலால் காங்கிரஸ் பரவியிருந்த சென்னையின் பெரும்பகுதிகள் குறிப்பாக குடிசைப் பகுதிகளில் தி.மு.க.செல்வாக்குப் பெற்றது.
* தி.மு.க.நடத்திய அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்று பேசிய பேச்சுக்கள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இலக்கியம், உலக வரலாறு, பகுத்தறிவு சிந்தனை, சமதர்மம் இழையோடும் நகைச்சுவையும் உடன் சேரும்.
* ஆச்சார்யார் 1953ல் திணித்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து அவர் இல்லத்தின் முன்  நடைபெற்ற போராட்டத்தில் நிறை மாத கர்ப்பிணியாகப் பங்கு பெற்றார். தி.மு.க.அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றார்.
* தி.மு.க. முதலில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற 15 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1957, 1967, 1971 ஆகிய தேர்தல்களில் தி.மு.க.சார்பில் பெரம்பூரில் வென்றும் 1962 (தி.மு.க.) மற்றும்  1977, (உளுந்தூர்ப்பேட்டை) 1985 ( பெரம்பூர் - அதிமுக) ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியும், அ.தி.மு.க.சார்பில் 1978 முதல் 1984 வரை மாநிலங்களவை  உறுப்பினராகவும் இருந்தார்.
* அறிஞர் அண்ணா, கலைஞர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார.சரண்சிங் தலைமையிலான மத்திய அரசில் இணை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.
* வட சென்னைப் பகுதியில் கல்லூரி அமைய அரும்பாடுபட்டார். அதனால் உருவானதே வியாசர்பாடி Dr.அம்பேத்கர் கலைக் கல்லூரி. அப்போதெல்லாம் கலைக் கல்லூரி அமைய அரசிடம் கொஞ்சம் பணம் கட்ட வேண்டும். திரைப்படத் தயாரிப்பாளர் A.L.சீனிவாசனிடம் 5000 ரூபாய் பெற்று அரசிடம் அளித்து வாதாடிப் பெற்ற அந்தக் கல்லூரியின் அடிக்கல் அன்னை சத்திய வாணி முத்து.
* தி.மு.க. மந்திரி சபையில் பங்கு பெற்றதால் அதிகமான நலத்திட்டங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றிட வழிவகை செய்தார்.
* கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்க தங்கப் பதக்கம், தாழ்த்தப்பட்டோர் தொழில் தொடங்க ரூபாய் 5000 வரை கடன், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்க 508 மாணவர் விடுதிகள், பால் கூட்டுறவு சங்கங்கள் அதிகப்படுத்தியது, விவசாயிகளுக்கான உரமான்யம் அரசே ஏற்பது என்று பலவற்றை நடைமுறைப் படுத்தினார்.
* 15-02-1923 முதல் 11-11-1999 வரை 76 ஆண்டுகள் நெடிய வாழ்வு வாழ்ந்த அம்மையார் இறுதி வரை பகுத்தறிவாளராக வாழ்ந்தார்.தஞ்சை மாநகரில் 1990ல் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட சமூக நீதி மாநாட்டில் அன்னையார் ஆற்றிய உரை நீண்ட நாள் சுய மரியாதைக்காரரின் உரை வீச்சாக இருந்தது.
வாழ்கDr.அன்னை சத்திய வாணி முத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக