வெள்ளி, 16 நவம்பர், 2018

ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை பெரியார் மறைத்தாரா பெரியார்?


பிற்படுத்தப்பட்டோர் தலைவர்களை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை பெரியார் மறைத்தார்; இருட்டடிப்புச் செய்தார் என்று சிலர் அறிந்தும், அறியாமலும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால், இக்குற்றச்சாட்டு உண்மைக்கு எதிரான, பொய்யான குற்றச்சாட்டாகும்.

எடுத்துக்காட்டாக எம்.சி.இராஜா என்ற தாழ்த்தப்பட்டோர் தலைவரை பெரியார் தலைக்கு மேல் தூக்கி நிறுத்திக் கொண்டாடினார்.

“எம்.சி.ராஜா பேசி இருப்பதில் ஒரு சிறு எழுத்தையாவது எந்தக் காங்கிரஸ்வாதியோ, தேசியவாதியோ ஆட்சேபிக்க முடியுமா? என்று பந்தயம் கூறிக் கேட்கிறோம்.’’ (‘குடிஅரசு’ 24.05.1931)

என்று கேட்டவர் பெரியார். எம்.சி.ராஜா மறைந்தபோது, ‘விடுதலை’ எழுதியதைப் படியுங்கள். எம்.சி.ராஜாவின் பிரிவு என்பது திராவிட நாட்டுக்கே பெரும் நஷ்டம் என்று ‘விடுதலை’ கண்ணீர்விட்டது.

தோழன் திவான் பகதூர் எம்.சி.ராஜா எம்.எல்.ஏ., அவர்கள் திங்களிரவு தம் 60ஆவது வயதில் சென்னை பரங்கிமலையிலுள்ள தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரம் அடைந்தோம்.

ஒடுக்கப்பட்ட சமூக நலன் கருதி உழைத்தவருள் இவரைச் சிறப்பாகக் கூறவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உண்மையாக உழைக்க வந்தவர்கள் மிகச் சிலரே. அதிலும் அயர்வும் தளர்வும் அடையாமல் உழைத்தவர் நம் தோழர் திவான் பகதூர் எம்.சி.ராஜா அவர்களேயாவர். இவருடைய மரணமானது, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய நஷ்டமேயாகும்.

ஒடுக்கப்பட்ட குலத்தின் உயர்வு கருதி 1917ஆவது ஆண்டு முதலே இவர் உழைத்து வந்தார். அந்தக் காலத்திலேயே நம் சமூகக் குறைகளை அகற்றுமாறு இந்தியா மந்திரியிடம் தூது சென்றார்.

சென்னை சட்டசபையிலும் மத்திய சட்டசபையிலும் அங்கம் வகித்து இவர் அரும்பணியாற்றினார். சிறிது காலம் சென்னை  மாகாண மந்திரியாகவுமிருந்தார். ஒடுக்கப்-பட்டோர் மட்டுமின்றிப் பார்ப்பனரல்லாதார் சமூகமே இவர் மாட்டு மி-குந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்தது. எனவே, இவர் பிரிவு பொதுவாக திராவிட நாட்டுக்கே ஒரு பெரும் நஷ்டம் என்று கூறவேண்டும். (‘விடுதலை’ 25.8.1943)

இதில் ஒவ்வொரு சொல்லையும் கவனியுங்கள். தோழன் என்கிறது ‘விடுதலை’. அவரது மரணம் ஆற்றொணாத் துயரம் என்கிறது. ஒடுக்கப்பட்ட சமூக நலன் கருதி உழைத்தவர் என்கிறது. உண்மையாக உழைத்தவர் என்கிறது. ஒடுக்கப்-பட்ட சமூகத்துக்கே இவரது மரணம் நஷ்டம் என்கிறது. பார்ப்பனரல்லாதார் சமூகமே (தலித்துகள் மட்டுமல்ல!) இவர் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருக்கிறது என்கிறது. இந்தப் பிரிவு திராவிட நாட்டுக்குப் பெரும் நஷ்டம் என்கிறது. எம்.-சி.ராஜா இறந்துபோனார் என்பதற்காக ஒப்புக்கு எழுதப்பட்ட இறப்புச் செய்தி அல்ல இது. எப்படிப்பட்ட உன்னத-மான மனிதராக வாழ்ந்தார், எப்படிப்பட்டவரை பறிகொடுத்திருக்கிறோம் என்பதை இந்த ஒரு செய்தி சொல்லிவிடுகிறது. இறப்பு குறித்தும், இறுதி ஊர்வலம் குறித்தும் தனித்தனி செய்திகள் உள்ளன. (எம்.சி.ராஜா குறித்த விரிவான தகவல்களுக்கு இந்நூலின் 9ஆவது கட்டுரையை பார்க்கவும்!)

மதம் மாறுவது ஒன்றே தீர்வு என்று டாக்டர் அம்பேத்கர் முடிவு செய்கிறார். இதுபற்றி தமிழகபட்டியலினத் தலைவர்கள் என்ன செய்வது என்று கூடி முடிவெடுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை 12.1.1936 தேதியிட்ட ‘குடிஅரசு’ விரிவாக எழுதியுள்ளது. இது தொடர்பாக தோழர்கள் எம்.தர்மலிங்கம், ஆர்.டி.அய்யாக்கண்ணு ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு தகவல்கள் உள்ளன. டாக்டர் அம்பேத்கரின் முடிவைப் பற்றி தமிழக பட்டியலின மக்களிடம் கருத்து அறிய சென்னையிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் பல்வேறு கூட்டங்கள் நடந்துள்ளன. அதில் ராவ் சாகிப் என்.சிவராஜ், ராவ்பகதூர் எம்.சி.ராஜா, பி.வி.ராஜகோபால் பிள்ளை, ஆர்.ஒய்.அய்யாக்கண்ணு, எச்.எம்ஜகநாதம் எம்.எல்.சி., கங்காதர பால தேசிகர், வி.வி.முருகேச பாகவதர், என்.மீனாம்பாள் சிவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் என்கிறது ‘குடிஅரசு’.

அம்பேத்கரின் முடிவு குறித்து தனித்தனியே கருத்துச் சொல்லாமல் ஒன்றுபட்டுச் சொல்ல சென்னையில் மாகாண மாநாட்டைக் கூட்டுவது என்று 10.11.1935 அன்று சென்னை புரசைவாக்கம் பொன்னன் தெரு, 65ஆவது எண் வீட்டில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. அதில் 7 பேர் அடங்கிய காரியக் கமிட்டி உருவாக்கப்பட்டது. இவர்கள் 50 பேர் அடங்கிய வரவேற்புக் குழுவை உருவாக்கினார்கள்.

மாநாட்டின் தலைவராக ஆர்.வீரையன், வரவேற்பு கமிட்டித் தலைவராக ஜே.சிவஷண்முகம், மாநாட்டுத் திறப்பாளராக என்.மீனாம்பாள் சிவராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதற்கு அம்பேத்கரை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் சகஜானந்தம் ஓர் அறிவிப்பு செய்கிறார். 8.1.1936 அன்று ‘தமிழ் மாகாண ஆதி இந்துக்கள் மாநாடு நடக்கும்’ என்று அறிவிக்கிறார்.

இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் உள்ளிட்டோர் பங்கெடுத்து அம்பேத்கரையும் அழைத்து மாநாடு நடத்தும் ஏற்பாடு நடந்துவரும்போது தனிப்பட்ட முறையில் சகஜானந்தம் ஏற்பாடு செய்தது இத்தலைவர்களுக்கு கோபம் ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து எம்.தர்மலிங்கம், ஆர்.டி.அய்யாக்கண்ணு ஆகியோர் ஓர் அறிக்கை வெளியிடுகிறார்கள். சென்னை மாநாட்டுக்கு சகஜானந்தம் முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். (12.1.1936 ‘குடிஅரசு’)

முன்பு காந்தியையும் காங்கிரசையும் விமர்சித்து எம்.சி.ராஜா பேசியபோது வழிமொழிந்து எழுதியவர்தான் பெரியார் ஈ.வெ.ரா. சேலம் ஆதிதிராவிடர் மாநாட்டுக்குத் தலைமை வகித்து ராவ்பகதூர் எம்.சி.ராஜா பேசிய பேச்சை முழுமையாக வழிமொழிந்து ‘குடிஅரசு’ தலையங்கம் தீட்டியது.

“உலகத்திலுள்ள கொடுமைகள் எல்லாவற்றையும்விட இந்தியாவில் மக்களை தீண்டாமை என்கின்ற இழவு சம்பந்தமாகச் செய்துவரும் கொடுமையே மிகப் பெரியதாகிய கொடுமை என்றும், அதற்குச் சமமான வேறு எந்தக் கொடுமையையும் கூற முடியாது என்றும் எல்லா மக்களாலும் அரசியல் சமூகவியல்-வாதிகளாலும் சொல்லப்பட்டு பொதுமக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமாகும். ஆனால், அது விஷயத்தில் மாத்திரம் பயன்படுத்தத்தக்க வழியில் ஏதாவதொரு முயற்சியை இதுவரையில் யாரும் எடுத்துக் கொள்ளாமலேயே வெறும் வாய்ப்பந்தல் போடுவதனாலேயே மக்களை ஏமாற்றிக் கொண்டு காலங்கழித்து வருவதும் பிரத்தியட்சத்தில் தெரிந்த காரியமாகும். சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சட்டமறுப்புக் கிளர்ச்சியில் உப்புக் காய்ச்சுவது, வனத்தில் பிரவேசிப்பது, கள்ளுக்கடை, மறியல் செய்வது, ஜவுளிக்கடை மறியல் செய்வது என்பவை போன்ற சில சாதாரணமானதும் வெறும் விளம்பரத்துக்கே ஆனதுமான காரியங்கள் செய்யப்பட்டு 40 ஆயிரம் வரையில் ஜெயிலுக்குப் போய் அடிபட்டும் உதைபட்டும் கஷ்டமும் பட்டதாகப் பெருமை பாராட்டுக் கொள்ளப்பட்டதே தவிர, இந்த மிகக் கொடுமையான தீண்டாமையெனும் விஷயத்தைப் பற்றி எந்தவிதமான கவலையும் யாரும் எடுத்துக் கொண்டதாகத் தெரிய-வில்லை.... என்ற எம்.சி.ராஜா உரையை ‘குடிஅரசு’ முழுமையாக வெளியிட்டது.

“இப்போது இம்மேடையில் தோழர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒரு ஆதிதிராவிட மந்திரி நியமிக்கப்பட வேண்டுமென அவர் சென்ற 6, 7 வருஷ காலமாகக் கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார். அவர் தமது பத்திரிகைகள் மூலமாகவும், அதிகாரிகள் நேரில் சொல்லிக் கொள்வதன் மூலமாகவும் அவர் நமக்காகப் பெருமுயற்சி செய்து வந்திருக்கிறார். ஆதி திராவிடர்களுக்குரிய இன்றைய மந்திரி ஸ்தானத்துக்கு அப்பெரியாருடைய முயற்சியே பிரதான காரணம் என்பது பொய்யல்ல. இந்த மகாநாட்டை அவர் நம்முடனிருந்து நடத்திக் கொடுக்க உதவினமைக்கு என் நன்றியையும் சந்தோஷத்தையும் அவருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்’’ என்று முடித்தார்.

                                                                (தொடரும்...)

- நேயன்

-  உண்மை இதழ், 1-15.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக