வியாழன், 29 நவம்பர், 2018

சட்ட எரிப்பு - ஒரு சரித்திரக் காவியம் (3)

"திராவிட இயக்கமும், கம்யூனிஸ்டும் இணைந்து ஜாதி, மதவாத சக்திகளை முறியடிப்போம்!"


கலி. பூங்குன்றன்ரம்




ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதிகளைக் கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் கட்டளைப்படி 1957 நவம்பர் 26 அன்று நடைபெற்ற நாளை நினைவு கூரும் வகையில் சென்னையில் பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில்  ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடாக நடைபெற்றது. மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் பங்கு கொண்டு சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்தார். அவ்வுரையில் மின்னிய சிந்தனை முத்துகள் சில.

தோழர் இரா. முத்தரசன் பெரியார் திடலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வரலாற்றுச் சிறப்புடன் - பின்னணி யுடன் நடைபெற்று வருகின்றன.

வேறு யாரும் சிந்திக்காதவற்றை முன்னிலைப் படுத்தி நடைபெறும் நிகழ்ச்சிகளாக அவை அமைகின்றன. எவ்வளவோ நாகரிகம், நவீனங்கள் எல்லாம் பேசப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் ஆணவக் கொலைகளும் இன்னொரு பக்கத்தில் நடந்துகொண்டு தானிருக்கின்றன - அப்படியென்றால் நாம் பெருமைப்பட்டுக் கொள் ளும் அந்த நாகரிகமும், நவீனமும் எத்தகையது? பாராட்டத்தக்கதுதானா என்ற வினாவை எழுப் பினார் அந்தப் பாட்டாளி இயக்கத் தோழர்.

எந்தக் காலத்திலோ, யார் சூழ்ச்சியாலோ உருவாக்கப்பட்ட இந்த ஜாதி இன்னும் உயிர் வாழ்வது வெட்கக் கேடு.  இதிகாசங்களையும், வேதங்களையும் பெருமையாகப் பேசுகிறோம். உண்மையிலே பெருமைப்பட அவற்றில் என்ன இருக்கிறது என்பதை தந்தை பெரியார் ஒரு முக் கால் நூற்றாண்டுக் காலம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

எடுத்துக்காட்டாகக் கீதையையே எடுத்துக் கொள்வோம். போர்க் களத்தில் நிற்கும் அர்ஜுனன் போர் செய்யத் தயங்குகிறான். என் எதிரே உற்றார், உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மறைந்து விடுவார்கள் என்பதோடு அவன் நிற்கவில்லை.  போர் செய்யத் தயங்குவதற்கு அர்ஜூனன் கூறும் காரணங்கள் என்னென்ன?

யுத்தம் செய்யும்போது ஆட வர்கள் மரணம் அடைவார்கள். அதனால் ஏராளமான பெண்கள், விதவையாகி விடுவார்கள். இதனால் வருணக் கலப்பு ஏற்பட்டு விடும் - குல தர்மம் அழிந்து விடும் என்று அர் ஜுனன் சொல்லுவதாகக் கீதை சொல்லுவதை தோழர் முத்த ரசன் எடுத்துக் கூறினார்.

கீதை என்பதே வருணக் காப்பு நூல்தானே!

"நான்கு வருணங்கள் என் னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும் அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தரும உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது" (கீதை அத்தியாயம் 4 - சுலோகம் 13).

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேகூட இந்தக் கீதையின் சுலோகங்களை எடுத்துக் கூறித்தான் தனது செயலுக்கு 'நியாய தர்மம்' கற்பித்தான்.

பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி ஜி.டி. கோஸ்லா "மகாத்மாவின் கொலை" (The Murder of Mahatma) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

"கோட்சே பகவத் கீதையைப் படித்திருந்தார்; அதன் பெரும்பாலான சுலோகங்களை மனப் பாடமாகப் படித்திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச்  செய்யப்படுகின்ற வன்செயல் களை நியாயப்படுத்துவதற்கு அவற்றை மேற் கோளாகக் காட்டுவதில் அவர் விருப்பம் கொண்டி ருந்தார்" (பக்கம் 274) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் கீதை ஒரு மகாத்மாவையே கொலை செய்தது. தோழர் இரா. முத்தரசன் அவர்களின் உரை இதனைத்தான் உள்ளடக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.

2018இலும் ஜாதி தீண்டாமை ஒழிப்பைப் பற்றிப் பேச வேண்டிய அவல நிலையை நொந்துகொண்ட தோழர் முத்தரசன் அவர்கள் இந்தப் பிறவிக் கொடுமையை ஒழித்துக் கட்ட கம்யூனிஸ்டுகளும், திராவிடர் கழகமும், திராவிட இயக்கமும் ஒன்று பட்டுப் போராட வேண்டும் - இந்த கைகோர்ப்பு வலிமையாகத் தொடர வேண்டும் என்ற கருத்தை முத்தாய்ப்பாக வைத்தபோது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரஒலி.

1952 பொதுத் தேர்தலில் தந்தை பெரியார் கம்யூனிஸ்டு கட்சியை ஆதரித்தார். நல்ல வெற் றியும் பெற்றது - ஆட்சி அமைக்க வாய்ப்பும்கூட இருந்தது. ஆனால் சூழ்ச்சிகள் காரணமாக அந்த வாய்ப்புப் பறி போனதையும் நினைவுப்படுத்திய தோழர் முத்தரசன் அவர்கள் மீண்டும்  நம்மிடையே ஒருங்கிணைப்புத் தொடர வேண்டும் என்று கூறி நவம்பர் 26  சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வீர மரணம் அடைந்த தோழர்களுக்கு இந் தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் வீர வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தோழர் கே. பாலகிருஷ்ணன்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் இம்மாநாட்டில் பங்கேற்று மக்கள்முன் சவாலாக தோன்றி நிற்கும் மதவாத, ஜாதிய சக்திகளை முறியடிப்போம் என்று சூளுரை புகன்றார்.

60 ஆண்டுகளுக்குமுன் ஜாதியைப் பாது காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகு தியைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்து அதில் பல ஆயிரம் தோழர்கள் பங்கேற்றுச் சிறை சென்ற தியாக வரலாற்று நாளிது. சிறையில் பலரும் மாண்டனர் என்பதெல்லாம் ஜாதி ஒழிப்புச் சரிதத்தில் முக்கியமானதாகும்.

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவர் ஒரு வாழ்நாள் போராளி. ஒவ்வொரு நாளும் பிரச்சாரம் - போராட்டம் என்பதே அவரின் வாழ்க்கைப் பயணமாக அமைந்திருந்தது. மனுதர் மத்தை, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து அவர் உதிர்த்த ஒவ்வொரு சொல்லுமே ஒவ்வொரு போர் ஆயுதமாகும்.

இன்னும் ஜாதிப் பாம்பு சாகவில்லை; ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவது வெட்கக் கேடு.

பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு காட்சி. மேல் ஜாதிக்காரன் பகுதிக்குக் கீழ் ஜாதிக்காரன் வீட்டு நாய் செல்லக் கூடாதாம், இது ஒரு சரியான சமுதாயப் படை எடுப்பு.

பெற்றோர்களே தாங்கள் பெற்றெடுத்த - பாசத்தோடு வளர்த்த பெண்ணைக் கொலை செய் கிறார்களே! ஜாதியால் மனிதன் மிருகமாக மாறி விடுகிறான்.

முற்போக்கு சக்திகளுக்கு அதிக வேலை காத்திருக்கிறது. அன்று 1932களில் தந்தை பெரியார் ருசியா சென்று வந்தபிறகு ஈரோட்டிலே தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் சந்தித்து உருவாக்கிய ஈரோட்டுத் திட்டம் போல - இந்தக் கால கட்டத் திலே கம்யூனிஸ்டுக் கட்சிகளும், திரா விடர் கழகமும், திராவிட இயக்கங்கள் மூன்றும் இணைந்து போராட்டத் திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வடக்கே அயோத்தி பிரச்சினையையும், தெற்கே சபரி மலையையும் இந்த இந்துத்துவ மதவாத சக்திகள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளன; ஆட்சி சாதனைகளை சொல்ல வக்கற்றவர்கள், மத வாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்டு கட்சியும், திராவிட இயக்கமும் இணைந்து முறியடிப்போம் என்று தோழர் கே. பாலகிருஷ்ணன் முழக்கமிட்டார்.

 -  விடுதலை நாளேடு, 29.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக