சனி, 24 நவம்பர், 2018

செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாடு

25.08.1929 - குடிஅரசிலிருந்து... சுயமரியாதை இயக்கத்தின் சமய சமுக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்குச் செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மா னங்களே போதிய அத்தாட்சியாகும். அதைக் கொண்டேதான் தேசியவாதிகள், மதவாதிகள் என்பவர்களும் கூட்டம் போட்டு பேசுகின் றார்கள். ஆகவே அதைப் பற்றி சிறிது யோசிப் போம்.

1.            செங்கற்பட்டு தீர்மானங்கள் என்ன வென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.

2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.

3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது. 4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொதுஜனங் களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.

5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

6. ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.

7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனைவிக்கும் புருஷனுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.

8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில்லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.

9. கோயில் பூஜை விஷயத்தில் கோவில் களின் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாகக் காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.

புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத் திற்கும் வேதம் படிப்பதற் கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி ஆராய்ச்சி கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய் யும்படி கேட்டுக் கொள்ளுவது.

உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத் தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளா தார உணர்ச்சி ஆகியவை களுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.

10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.

11. பெண் உரிமை விஷயத்தில்; பெண் களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.

12. தீண்டப்படாதார் விஷயத்தில், தீண்டப் படாதார்களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப் பது என்பது.

13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.

14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.

15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.

மேலும் இவைகளும் அநேகமாக சிபாரிசு செய்வது, கேட்டுக் கொள்ளுவது, முயற்சிக்க வேண்டியது என்கின்ற அளவில் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப் படவில்லை. எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆத ரிப்பது என்றும் எவை எவை தேசியத்திற்கும், காங்கிரசிற்கும் விரோதமானவை என்றும் எந்த யோக்கியமான தேசியவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறைகூவி அழைக்கின்றோம். உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப்பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும் பிறவி அடிமையைப் போலும், கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்று, சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழி தகைமையது என்றும் அறிவினர்க்கு தற்றென விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.

எது எப்படி இருந்தபோதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்களை ஒழித்தல், கோவில் கட்டுவதையும் உற்வசங்கள் செய்வ தையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக்கின்றது, வருகின்றது என்பதும் இவ்விஷயங்களில் பொதுமக்களுக்கு எவ் வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்பதும் இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க்கையைக் கவனித்து வருபவர் களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கி வருகின்றது. அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆத ரவை பரீட்சிப்பதற்கு இவ்வியக்க சம்பந்தமான பத்திரிகைகள் வளர்ச்சியையும் ஜில்லாக்கள் தோறும் தாலுகாகள் தோறும் நடைபெறும் மகாநாடுகளும் அங்கு கூடும் கூட்டங்களும் கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும் அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்றதென்பது சிறு குழந்தையும் அறிய முடியும்.

நிற்க; தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்டக் கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக் காரர்களாலும் சொல்லப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்ததுதானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம். பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாசமெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்; புத்தகங்களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவைகளைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம். அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப்படுகின்றது. இவை களைத் தவிர வேறு எவ்வித வித்தியாசங்கள் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். ஆகவே, பொது ஜனங்கள் தயவு செய்து இவைகளை எல்லாம் நன்றாய் கவனித்து தங்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, இதன் குணதோசங்களை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டு மாயும், வந்த முடிவை காலந்தாழ்த்தாமல் அமலுக்குக் கொண்டு வர வேண்டுமாயும் ஆசைப்படுகின்றோம்.

- விடுதலை நாளேடு, 24.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக