வெள்ளி, 29 ஜூன், 2018

புதியமுறை சீர்திருத்த மணம்

31.05.1931 - குடிஅரசிலிருந்து...



சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப் படுபவைகள் எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங் களேயாகும்.  சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர் களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில்  ஒரு மனைவி ஏற்கெனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன.

ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத்

தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கெனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத் திலும் இருந்து கொண்டிருக்கிறார்.

அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண் டாவதாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும்.  இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும்.  பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய  பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது.

பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தி யோகத்தில் இருப்பதாக அறிகிறேன்.

பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல் யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது.

பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார்.  அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திரு மணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன்.  மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.  அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம்  அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர்.

பெண் சிறீவைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார்  என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர்.  அவற்றை யெல்லாம் அடியோடு விட்டு விட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத் திற்கு இசைந்தனர்.

ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர்  பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)

 

- விடுதலை நாளேடு, 23.6.18

தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்

12.04.1931 - குடிஅரசிலிருந்து...

பகத்சிங்

1. (ஏ) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம்மகாநாடு மனமாரப் பாராட்டுகின்றது.

(பி)பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக் கொள்கையும் கவர்ந்து கொள்ளும் படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத் தோடு வரவேற்கின்றது.

(சி) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும், பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப் படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகின்றது.

விடுதலை சுதந்திரம்

2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி பூமிக்கு உடையவன் - உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவைகளான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுகத் துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சம சுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

பெண் உரிமை

3.  (ஏ) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டு மென்பதாக இம்மகாநாடு திட்டமாய்க் கருதுகின்றது. (பி) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடை களையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் எனவும், தேகசக்திக்கும் செல்வநிலைக்கும் தகுந்த அளவில் குழந்தை களைப் பெறுவதற்காகக் கர்ப்பத்தடை முறைகளை அவசியம் கையாள வேண்டும் என்றும் இம்மாகாநாடு தீர்மானிக்கின்றது.

நம்பிக்கையில்லை

4. 1. மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கை களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினாலும், 2. தனது செய்கை களுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால்  ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்புமற்றுப் போவதாலும், 3. வருணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழைய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாலும் 4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடைசெய்து வருவதாலும், 5. சமதர்மகொள்கைகளுக்கு விரோதமாய் இருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அருப்புக்கோட்டை போலீஸ் மாற்றப்படுமா?

29-03-1931 - குடிஅரசிலிருந்து...

இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெருவில் நடக்காமல் தடைப்படுத்தப்பட்டதும், அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.  மற்றும் அவர்கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத் தடுத்து உபத்திரப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும்.  இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றது.  போதாக்குறைக்குத் திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணி யென்னும்  கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வல மாய் எடுத்துக் செல்ல வொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங்கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.

சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலையற்றதாகவும் மக்களுக்குள் எப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவதாகவும், இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.  பார்ப்பனியப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வதாகவே செய்திகள் கிடைத்து வருகின்றன.  போலீஸ் இலாகாவும், சட்ட இலாகாவும் 30 நாள் கணக்கெண்ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணுவதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதாயிருக்கின்றதேயொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப்படுவதற்கு ஒரு பரிகாரம் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை என்று வருத்தத்துடன் எழுதுகின்றோம்.

இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதாவது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லு வதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படுவ தாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் தொலைக்கக் கூடாதா? என்று நாடார் சமுகத்தையும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

- விடுதலை நாளேடு, 23.6.!8

வியாழன், 28 ஜூன், 2018

மூவலூர் இராமாமிர்தம் அம்மா

தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண்  போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மா அவர்களின்  நினைவு தினம் :-
..
* பெண்களுக்கெதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்கும் கருவியாக்கியதுதான்.
* குறிப்பிட்ட சமூகப் பெண்களை கோவிலில் நடனமாடவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளவிடாமல் பொட்டுக் கட்டும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை நீடித்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள், நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.
* இக்கொடுமையைக் கண்ட மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883-ம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.
* ஆச்சிக் கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும், ஒரு பழைய புடவைக்கும் விற்றுவிட்டார் சின்னம்மாள். காரணம். குடும்பத்தின் வறுமை. ஆச்சிக் கண்ணுவிடம் 7 வயது முதல் வளர்ந்தார் இராமாமிர்தம். பின்னாளில் தன் இனிஷியலாக ஆ என்று இவர் போட்டுக் கொண்டது இந்த ஆச்சிக் கண்ணுவின் பெயரைத்தான்.
* தன் 17 வயதில் பொட்டுக்கட்டும் சடங்கை வெறுத்துக் கடும் எதிர்ப்பு தெரிவித்த இராமாமிர்தம், பின் உள்ளூர் தேவதாசிகள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.
* 65 வயது பணக்கார மிராசுதாரைத் திருமணம் செய்ய வற்புறுத்தி மீண்டும் தனக்கு வந்த சோதனையை எதிர்த்து, நடனம் சொல்லித் தந்த காங்கிரஸ் பற்றாளர் சுயம்புப் பிள்ளையை ஒரு கோவிலில் நெய் விளக்கின் முன் சத்தியம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தேவதாசி முறை ஒழிய காங்கிரசில் ஈடுபட்டு தீவிரப் பிரசாரம் செய்தனர்.
* இராஜாஜியின் கடும் எதிர்ப்பையும் மீறி இராமாமிர்தம் நடத்திய மாநாட்டில் காந்தியார் கலந்து கொண்டார்.1925-ம் ஆண்டு நடத்திய மயிலாடுதுறை மாநாட்டில் திரு.வி.க., பெரியார் போன்றோர் கலந்து கொண்டனர்.
* பெண்ணுலகு போற்ற வந்த கற்பகம் என்று இராமாமிர்தத்தை திரு.வி.க. பாராட்டினார். தேவதாசி முறை ஒழிக்கப்பட திட்டம் வகுக்க வேண்டும் என்று காந்தியாருக்கு பல நீண்ட கடிதங்கள் எழுதினார். எதற்கும் காந்தியிடம் இருந்து பதில் வரவில்லை.
* 1925-ம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கிய போது, அவருடன் சுயமரியாதை இயக்கத்தில் பங்கு பெற்ற முதல் பெண்மணி இராமாமிர்தம் அம்மையார்.
* முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் உள்பட பல போராட்டங்கள் என அனைத்துமே அம்மையார் இல்லாமல் நடந்ததில்லை.
* தன் சுயசரிதை போன்று இவர் 1936-ல் எழுதிய நாவல்தான் தாசிகளின் மோசவலை (அ) மதி பெற்ற மைனர் . இதில் தேவதாசி முறைக் கொடுமை பற்றியும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். பல கட்டுரைகள், கதைகளை எழுதி திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தை யாருக்கும் பயப்படாமல் செய்தார்.
* 1932ம் ஆண்டு தஞ்சையில் நடந்த பிரசார நாடகத்தில் சிலர் புகுந்து கலவரம் செய்ததுடன் அவரின் நீண்ட தலைமுடியை அறுத்து எறிந்தனர். அதன் பின் கிராப்புத் தலையுடனே இறுதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.
* டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகம் செய்த போது, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி  கடும் எதிர்ப்புத் தெரிவிக்க முத்துலெட்சுமி ரெட்டி,,  தேவையென்றால் அவரினத்துப் பெண்கள் ஆடட்டும். எங்கள் இனப் பெண்கள் இனி ஆடமாட்டார்கள் என்றபோது, சட்டசபையே அதிர்ந்தது. முத்துலட்சுமி ரெட்டியின் இந்த அறைகூவலுக்குப் பின்னால் இருந்தவர்கள் தந்தை பெரியாரும், இராமாமிர்தம் அம்மையாரும்தான்.
* மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை முற்றாய் ஒழிக்கப்பட்டது.
* 1949ல் திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.கவில் இணைந்து பணியாற்றிய மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஜூன் 27-1962ம் ஆண்டு மறைந்தார். அம்மையாரைச் சிறப்புச் செய்யும் முகமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ஒன்றை 1989ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
(தொகுத்து வழங்கிய சு.குமாரதேவன், வழக்கறிஞர் அவர்களுக்கு நன்றி )

செவ்வாய், 26 ஜூன், 2018

அன்னை நாகம்மையார்

பெரியார் பேருரையாளர் அ.இறையன்



சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் திரு.ரெங்கசாமி திருமதி. பொன்னுத்தாய் ஆகியோரின் மகளாய்ப் பிறந்து, அந்தக் காலத்திலேயே விடாப்பிடியாக நின்று தந்தை பெரியாரவர்களை மணம் புரிந்து கொள்ளுவதில் வெற்றியடைந்த அன்னை நாகம்மையார், துணைவி எனும் சொல்லுக்குரிய அத்தனை விளக்கங்களுக்கும் ஏற்ப, துணையாகத் திகழ்ந்தார்.

தொடக்கத்தில்அய்யா அவர்களின் புரட்சியான சுயமரியாதைக் கருத்துக்களை முழுமையாக ஒப்புக் கொண்டு நடப்பதில் அன்னையார் தயக்கம் காட்டினாரென்றாலும், சில காலத்திற்குள் உண்மைகளை ஆழமாக உணர்ந்து தெளிவடைந்து, பின்னர் தம் வாழ்நாள் முழுவதையும் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கென்றே ஒப்படைத்துக் கொண்டார்.

படிப்படியாக மேடைப்பேச்சு நிகழ்த்தும் அளவுக்கு ஆற்றல் பெற்றுவிட்ட அம்மையார், தம் துணைவரின் அண்ணன் திரு.ஈ.வெ.கி. அவர்கள் தலைமை தாங்கிய உண்மை நாடுவோர் சங்கத்தில் ‘தோழர் கிருஷ்ணசாமி’ என்று விளித்து கூடியிருந்த மகளிருக்கெல்லாம் பேரதிர்ச்சியை விளைவிக்கக்கூடிய அளவுக்குப் புரட்சிப் பெண்மணியாக உயர்ந்துவிட்டார்!

“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல’ என்றும், “எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார்’’ என்றும் தந்தை பெரியார் அவர்களே பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல்வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்ட அன்னையை நன்றியுடன் பாராட்டி மகிழாத தொண்டர் எவரும் இல்லை.

அக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமொழிகள் உரைத்து, பிறகு அவர்கள் விரும்பும் ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்து சில நாட்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு ஊர் திரும்புவார்.

இயக்க நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள அம்மையார் தவறவில்லை. சுயமரியாதை மாநாடுகளில் பெரும் பங்காற்றி நிறையத் திராவிட மகளிரைக் கவர்ந்திழுத்து இயக்கத்திற்குக் கொணர்ந்தார் சுயமரியாதை மணங்களைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

தந்தை பெரியாரவர்கள் தொடங்கிய ‘குடிஅரசு’ என்னும் சுயமரியாதை இயக்க இதழ் வெளியார் அச்சகத்தில் அச்சாகிய நிலை மாறி, முதன்முறையாக ‘உண்மை விளக்கம்’ எனும் சொந்த அச்சகத்தில் 9.1.1927 முதல் அம்மையாரைப் பதிப்பாளராகக் கொண்டு வெளியிடப்பட்டது. அப்பொறுப்பினைத் திறம்பட அவர் நிறைவேற்றினார்.

அய்யா அவர்கள் அய்ரோப்பியச் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது சுயமரியாதை இயக்க இதழான ‘குடிஅரசு’ வெற்றியாக நடந்து வர அம்மையார் பெரும் அக்கறை காட்டினார். 24.4.1932இல் ‘ஈ.வெ.ரா.நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’ எனும் பெயரில், “நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின் பொருட்டுப் புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன; இந்த நான்கு மாதங்களாக நமது ‘குடிஅரசு’க்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட் செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப்போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களும் வாசகர்களும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்’’ என்பதாக அம்மையார் வெளியிட்ட அறிக்கை அவர்தம் இயக்க ஈடுபாட்டிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.

அய்யா அவர்களின் கீழைநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது அம்மையாரும் உடன் சென்று இயக்கக் கொள்கைகள் பரப்பும் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். காங்கிரஸ் கட்சியில் அய்யா ஈடுபட்டுத் தொண்டாற்றி வந்தபோது, கள்ளுக்கடை மறியற்போரை நிறுத்திவிடுவது என்பது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடந்தான் இருக்கிறது’’ எனக் காந்தியாரோலேயே புகழப்படும் அளவுக்கு எப்படி அன்னையார் தீவிரப்பணி புரிந்தாரோ, வைக்கம் போரில் அய்யா சிறைசென்ற காலத்தில்  தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி அம்மையார் எவ்வாறு நாடெல்லாம் சுற்றிக் கருத்துகளைப் பரப்பினாரோ, அவ்வாறே சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதிலும் முனைப்போடு பணி மேற்கொண்டார். சிங்கப்பூர் சென்று திரும்பும்வேளை அங்கு வதிந்த தன்மான வீரர்கள் அம்மையாரிடம், “தங்கட்குத் தேவையான, விருப்பமான மலாய் நாட்டுப் பொருள்கள் என்னென்ன?’’ என்று பரிவோடு கேட்டு முன்வந்தபோது, “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்’’ என்று கூறிப் பரிசுப் பொருட்களை வேண்டாது, கொள்கை பரவுதலில் நாட்டம் காட்டிய அன்னையின் செய்கை நமக்கு எத்தனையோ உணர்த்தவல்லது. தாம் ஈன்ற ஒரே மகவும் மறைந்த பிறகு அய்யா அவர்களின் தொலைநோக்கான விருப்பத்திற்கிசைந்து இயக்கத் தொண்டர்களையே தம் பிள்ளைகளாக வரித்துக்கொண்டு அவர்களால் ‘அன்னை’யென்று மதிக்கப் பெறும் உயர் நிலையை எய்தினார்.

எனவேதான் அவர் 11.5.1933 அன்று மறைவுற்ற காலை, “உணர்ச்சி போயிற்று என்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்று என்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்று என்று சொல்லட்டுமா?’’ என்று கழிவிரக்கத்துடன் எழுதினார் தந்தை பெரியாரவர்கள்.

அம்மையார்தம் பிரிவுக் கட்டத்தில்கூடப் புரட்சிக்கு மூலமானார். அதாவது நெருங்கின உறவினர் முதல் உற்ற இயக்கப் பெருங்குடும்பத்தினர்வரை  எல்லோரும் ‘அழுதல்’ என்னும் நாகரிகமற்ற வழக்கை விட்டொழிந்து அமைதியாக விருக்கும் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். 1933இல் இது மிகவும் பெரும் புரட்சிதானே!

நம் அன்னையாருடன் பொதுவுடைமைக் கொள்கைத் தந்தை காரல் மார்க்சின் துணைவியார் ஜென்னிமார்க்ஸ் ஒப்பிடத் தகுந்தவர் எனலாம்.

அய்யா அவர்களின் ஒவ்வோர் அசைவுக்கும் துணையாக இயங்கிய அம்மையார் பொதுத்தொண்டு புரியும் மகளிர்க்கு வழிகாட்டும் ஒளியாவார்! அன்னை நாகம்மையார் வாழ்க!

    நூல்: சுயமரியாதைச் சுடரொளிகள்

-  உண்மை இதழ், 1-15.5.18