திங்கள், 11 ஜூன், 2018

கி.வீரமணி மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்

மம்சாபுரம் தாக்குதல்கள்’’



தாக்கப்பட்ட கார்.


 


20.07.1982 அன்று இரவு ராஜபாளையத்தில் மேற்கு முகவை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டத்தை முடித்துக்கொண்டு நான் மம்சாபுரத்தில் பெரியார் மருத்துவமனை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரை தேவசகாயம் காரில் புறப்பட்டு வந்தேன். என்னுடன் காரின் பின் சீட்டில் மதுரை தேவசகாயம், ராஜபாளையம் தங்கராஜன் ஆகியோர் அமர்ந்து வந்தனர். முன்சீட்டில் மதுரை தமிழரசனும் அமர்ந்திருந்தார். ராஜபாளையம் மெயின்ரோடில் மம்சாபுரம் அருகில் உள்ள புதுப்பட்டி பிரியும் வழியில் கார் வந்து கொண்டிருந்தபோது 10 இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கொடியுடன் “கலைஞர் வாழ்க’’ என்று சத்தம் போட்டுக்கொண்டு, காரை நிறுத்தி, நான் காரில் இருந்தபோது “விடாதே அடிடா! அடி!’’ என்ற ஒரே சத்தம் கேட்டது; உடனே கம்பாலும், சைக்கிள் செயினாலும் என்னை நோக்கி பயங்கரமாக தாக்க ஆரம்பித்தனர். என்னுடைய மூக்கிலும், தோளிலும் கல்விழுந்து ரத்தம் கொட்டியது; உடனே நான் டிரைவரிடம் வண்டியை மிக வேகமாக எடு என்று சொன்னவுடன் வேகமாக எடுத்ததால் எனக்கு கடும் பாதிப்பு தவிர்க்கப்பட்டாலும் கார் முழுவதும் கல்வீச்சில் படு சேதமடைந்தது; உடல் முழுவதும் கண்ணாடித் துண்டுகளாக இருந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டவுடன் பொதுமக்கள் ஆத்திரத்தோடு ஏராளமாகத் திரண்டு விட்டனர். போலீஸ் காவலும் கொடுத்து, பாதுகாப்புக்காக வந்தனர்.    


வன் முறையில் ஈடுபட்டவர்கள்    மம்சா புரத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். தங்கம், ரவி, சுயம்பு, சண்டியர் தங்கராசன் என்று அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டனர். அவர்களில் ஒரு பார்ப்பன இளைஞர் இருந்ததையும் தாம் பார்த்ததாகவும் அவர் பெயர் தெரியவில்லை என்றும் அவர் சொன்னார். அவர்கள் அனைவரும் அதிமுகவைச் சார்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார். ஒரு தபால் ஊழியர் தடிகளோடு வந்தவர்களை மம்சாபுரத்தில் பார்த்ததாகவும் அவர்கள் ஒரு வரவேற்புக்குப் போவதாகத் தம்மிடம் சொன்னதாகவும் கூறினார். உடனே அங்கிருந்த த.சி.அய்.டி. போலீசாரிடம் இதைப் பதிவு செய்ய வேண்டுமாய் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.




ராஜபாளையத்தில் மின்சாரத் தடை காரணமாகக் கூட்டம் இரவு 10 மணிக்குத் துவங்கியது. கூட்டம் ஏராளமாகக் கூடிவிட்டது. மிகவும் கொந்தளிப்பான நிலை இருந்தது. நான் அந்தக் கூட்டத்தில் இரவு 12 மணி வரை உரையாற்றினேன். உடனே அங்கிருந்து திட்டமிட்டவாறு திருவில்லிபுத்தூர் கூட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன். என் காரைப் பின்தொடர்ந்து கழகத் தோழர்கள் லாரிகளிலும் பஸ்களிலும் உடன் வந்தனர். போலீசாரும் பின்தொடர்ந்து வந்தனர்.


இரவு 12.30 மணிக்கு திருவில்லிபுத்தூர் கூட்டத்தில் பேசினேன். நான் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே யாரோ சிலர் கல்வீசியதாக தோழர்கள் என்னிடத்தில் தெரிவித்தார்கள். நான் இரவு 2.30 மணி வரை தொடர்ந்து  உரையை நிகழ்த்தினேன். கூட்டத்திற்கு திருவில்லிபுத்தூரே திரண்டு வந்துவிட்டது. ஒரே உணர்ச்சியாகவும் கொந்தளிப்பாகவும் இருந்தது.


கூட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் தாக்கப்பட்டதற்கான மருத்துவச் சான்றிதழ்களைக் கேட்டனர்! அதற்குப் பிறகு அரசு மருத்துவமனைக்குச் சென்று தாக்கப் பட்டதற்கான மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்று காவல்துறையினரிடம் அளித்துவிட்டு  மதுரையிலிருந்து கழகத் தோழர்களுடன் திருச்சி வந்து சேர்ந்தேன்.


அடுத்த நாள் காலையில் பெரியார் மாளிகையில் இருந்தபோது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்து, கவனமாகப் பயணத்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். பின்பு அங்கிருந்த செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தேன். அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று திராவிடப் பாரம்பரியத்தைச் சார்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு ஆட்சியை, மத்திய அரசு குற்றம் சாட்டி மாநில அரசின் உரிமைகளை மேலும் பறித்து விடுவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்துவிடக் கூடாதே என்றுதான் கவலைப்படுகிறேன் என்று நான் செய்தியாளர்களிடம் கூறினேன்.




டாக்டர் காமேஸ்வரன் சிகிச்சை அளிக்கிறார்.


அப்போது எனக்கு ஏற்பட்ட காயங்களைக் கண்டு ஏராளமான கழகத் தோழர்களும் தாய்மார்களும், உணர்ச்சி வயப்பட்டு, கண்ணீர் விட்டு அழுதுகொண்டு பெரியார் மாளிகைக்கே வந்துவிட்டனர். விவசாயத் துறை அமைச்சர் காளிமுத்து அவர்களும், புதுவை மாநில அமைச்சர் சிவக்குமார் அவர்களும் என்னிடம் தொடர்புகொண்டு விசாரித்தனர்.


காலிகளால் திட்டமிட்டு நான் தாக்கப்பட்டதற்கு தலைவர்கள், தங்கள் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்கள். திரு.அப்துல் லத்தீப், திரு.குமரி அனந்தன், தென்னரசு, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


பின்னர் சென்னை வந்தவுடன், என் உடல் நிலையை காது, மூக்கு, தொண்டை (ணிழிஜி) டாக்டர் பெரியவர் காமேசுவரன் பரிசோதித்து மூக்கு எலும்பு முறிந்திருக்கலாம் என்று சந்தேகித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். இதை கேள்வியுற்ற திமுக தலைவர் கலைஞர் அவர்கள், தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது நேரில் என்னுடைய இல்லத்திற்கு வந்து டாக்டர்கள் கட்டளைப்படி வளவனூர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம், மருத்துவமனையில் சேரும்படி அன்புடனும் கண்டிப்புடனும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, ஆகஸ்ட் அன்று நடைபெறவிருந்த அறப்போரும், அதனை விளக்கி தஞ்சையில் நடைபெறவிருந்த மாநாடும் ஒத்தி வைக்கப்பட்டன.
(நினைவுகள் நீளும்...)

( தமிழர் தலைவர் கி.வீரமணி)

- உண்மை இதழ், 1-15.2.18


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக