திங்கள், 18 பிப்ரவரி, 2019

தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்

திருச்சி தமிழ்நாடு புரோகித மறுப்புச்சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் 4.8.1935 மாலை 6 மணிக்கு ''சோஷியல் ஹோமில்'' தலைவர் டி. வி. சோமசுந்தரம் பி.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெரும் பாலான அங்கத்தினர்கள் அது காலை விஜய்ஞ் செய்திருந்தார்கள். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேறியது.


தீர்மானங்கள்


1. காரியதரிசிகளிலொருவரான தோழர் உறையூர் ச.ம.சி. பரமசிவம் அவர்கள் சங்கக் கொள்கைகளுக்கு விரோதமாக தனது திருமணத்தை வைதீக சமய சாதிச்சடங்குகளுடன் புரோகிதனை வைத்து திருநெல்வேலியில் நடத்திக்கொண்டதைப் பற்றி இக்கூட்டம் வருந்துவதோடு அவர் இதுவரை ராஜிநாமா கொடுக்காத படியால் காரியதரிசி பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தீர்மானிக்கிறது.

2. சங்கத்தை ரிஜிஸ்தர் செய்ய அடியிற்கண்ட தோழர்களைக் கமிட்டியாக ஏற்படுத்தி, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படி அதிகாரம் அளிக்கிறது.

கமிட்டியார் 1. டி. வி. சோமசுந்தரனார், பி.ஏ., பி.எல். 2 நீலாவதியார் 3. என், எஸ். எம். செல்வக்கணபதியார்

3. காரியதரிசியாகவிருந்த தோழர் ச.ம.சி.பரமசிவம். அவர்களை சங்க சம்பந்தமான எல்லா ரிக்கார்டுகளையும் கணக்குகளையும் சங்கத் தலைவர் அவர்களிடம் ஒப்புவித்துவிடும்படி தீர்மானிக்கிறது.

4. சங்கத்தின் காரியாலயத்தை தற்காலிகமாக திருச்சி கோட்டை 41 நிர் திப்புரான் தொட்டித்தெரு சோஷியல் ஹோமில் அமைத்துக் கொள்வதென்று தீர்மானிக்கிறது.

4ஏ. இச்சங்க சம்பந்தமாக தோழர்கள் எழுதியனுப்பும் எல்லாக் கடிதப் போக்குவரத்துக்களும், நன் கொடை, சந்தா முதலியவைகளும் ''தலைவர்” தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கம் சோஷியல் ஹோம் 41 திப்புரான் தொட்டித் தெரு

திருச்சி என்ற விலாசத்திற்கே அனுப்ப வேண்டுமெனத் தெரிவிக்கிறது.

5. சங்கத்தின் புதிய வருடத்தேர்தல் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக 25.8.1935 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருச்சி சோஷியல் ஹோமில் ஓர் பொதுக்கூட்டம் நடைபெற வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.

மேற்படி கூட்டம் இரவு 8 மணிக்கு முடிவு பெற்றது. தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு உள்ளூர் வெளியூர் தோழர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டுமென தலைவர் டி.வி.சோமசுந்தரம் உபதலைவர் நீலாவதி ஆகியவர்கள் அறிவிக்கிறார்கள்.

-  விடுதலை ஞாயிறு மலர், 16.2.19

சனி, 16 பிப்ரவரி, 2019

தாழ்த்தபட்டோர் தலைவர்களை தந்தை பெரியார் ஒளித்தாரா?



2. சுவாமி சகஜானந்தா

தாழ்த்தப்பட்டோர் தலைவர்களுள் சாமி சகஜானந்தா மிக முதன்மையானவர். அவரையும், அவரது கருத்துகளையும் தந்தை பெரியார் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரப்பினார்.
1932இல் காந்தி உண்ணாவிரதம் இருந்த-போது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சகஜானந்தம் எம்.எல்.சி. பேசிய பேச்சை 25.9.1932 தேதியிட்ட குடிஅரசு முழுமையாக வெளியிட்டுள்ளது.
நாங்கள் தனித் தொகுதியை விட்டுத்தர முடியாது என்று தலைப்பிட்டுள்ளது. தனித் தொகுதியை ஆதரித்து சகஜானந்தர் பேசியதை வெளியிட்ட குடிஅரசு மிக முக்கியமான ஒரு பகுதியை நீக்கம் செய்துவிடாமல் வெளியிட்டுள்ளது. பெரியார் யாருக்ககான பெரியார், பிற்பட்ட ஜாதியினருக்கா, ஆதி திராவிடர்களுக்கா என்பதை சகஜானந்தர் பேச்சை வெளியிட்டதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.


சகஜானந்தரின் பேச்சு:



....பொதுத் தொகுதியின் பெயரால் எஙகள் சமூகத்தார் எந்த ஸ்தாபனங்களையாகிலும் எட்டிப் பார்க்க முடியுமா? பொது ஸ்தாபனங்கட்கு வருவது பின் இருக்கட்டும். முதலாவது அவர்களையும் மனிதர்கள்தான் என்று கருதப்படுவார்களா?
இன்று நம்மவர்கள் உயர்ஜாதி இந்துக்களிடம் படும் கஷ்டத்தை எவர் அறிகின்றார்? பொது ரோடுகளில் நடக்கும் உரிமை, பள்ளிக் கூடங்களில் படிக்கும் உரிமையும் குளத்து நீரை எடுத்துக் குடிக்கும் உரிமையும் தடுக்கப்பட்டு வரும் கொடுமையை எவரால் மறுக்க முடியும்? மற்றும் தேவகோட்டை, திருவாடானை, கூத்தூர், மதுராந்தகம் முதலிய இடங்களில் உயர் ஜாதிக்காரர்களால் சகிக்க முடியவில்லையே. இக்கஷ்டங்களையெல்லாம் பின்னர் தானாகவே ஒழிந்துவிடும். நாளடைவில் தீண்டாமையும் போய்விடும் இன்று நீங்கள் கூட்டுத் தொகுதியை ஆதரியுங்கள் என்று கூறுவது எவ்வளவு நீதியானது என்பதை நீங்களே யோசியுங்கள்...

இந்நாட்டு மக்கள் தீண்டாமையொழிந்து சுயமரியாதை கொடுத்து பொது ஸ்தாபனங்-களிலும் பிற முன்னேற்றங்களிலும் எங்களுடன் அன்புடன் கலந்து பழகும் நாள் என்றோ அன்று வேண்டுமானால் நமக்கும் உயர் ஜாதிக்காரர்-களிடம் நம்பிக்கையும் உண்மையான அன்பும் ஏற்பட்டால் அப்போது காந்தியின் பொதுத் தொகுதியைப் பின்பற்றலாம்...

நாம் நமது உரிமையை இழந்து உயர் ஜாதிக்காரர்களிடம் இன்னும் அடிமையாகவும் மனிதத் தன்மையற்ற இருகால் மிருகங்களாகவும் இருக்க முடியாது. காந்தியார் வேண்டுமானால், உயர் ஜாதிக்காரர்களிடம் தீண்டாமையை ஒழிக்குமாறு கேட்டுக்கொண்டு உண்ணாவிரத மிருக்கட்டும். உயிரை விடப்போவதாகவும் கூறட்டும். அது எல்லோராலும் போற்றத்தக்கதாகும். நாமும் போற்றுவோம்.... (குடிஅரசு, 25.9.1932)

காங்கிரஸ்காரர்கள் ஹிட்லர் ராஜ்யம் என்ற தலைப்பில் சாமி சகஜானந்தம் எழுதியதாக 23.5.1937 குடிஅரசு இதழில் ஒரு கட்டுரை உள்ளது. சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத்துக்கு காங்கிரஸ்காரர்கள் கொடுக்கும் தொல்லைகள் அதில் உள்ளது. நந்தனார் கல்விக் கழகத்துக்கு கொடுத்துவந்த 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை கடலூர் போர்டு தலைவர் லட்சுமி நாராயண செட்டியார் 29.4.1937 அன்று நிறுத்திவிடுவிறார். 01.05.1937 அன்று விடுதியை மூடியதாகவும், அரசு செய்துள்ள உதவிகளைக் குறைத்து விட்டார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது. காங்கிரஸ்காரர்கள் ஹரிஜனங்களுக்குச் செய்துவரும் அக்கிரமங்களைக் கண்டித்து காங்கிரஸ்காரரிடத்தில் நம்பிக்கையில்லை என்றும், கனம் எம்.--சி.ராஜா அவர்களிடத்தில் ஹரிஜனங்களுக்கு நம்பிக்கை உண்டென்றும்.... (அச்செயதியில், இந்த வரிகள் மட்டும் தடித்த எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது).

உணர்வையும், உணவையும் தடுத்ததைத் கேட்ட ஒவ்வொரு ஹரிஜனன் ரத்தமும் கொதிக்கிறது.
என்று அச்செய்தி முடிகிறது. (23.5.1937 குடிஅரசு)
சகஜானந்தர் மறைவுச் செய்தியை 2.5.1959 விடுதலையில் சகஜானந்தர் மரணம் என்ற தலைப்பில் வெளியிட்டது. தாழ்த்தப்பட்டோருக்காக மிகத் தீவிரமாக உழைத்தவரும், தாழ்த்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பொருட்டு நந்தனார் உயர்நிலைப் பள்ளியை நிறுவியவருமான திரு.ஏ.எஸ்.சகஜானந்தா அவர்கள் தம் 69ஆம் வயதில் மாரடைப்பினால் காலமானார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

திரு. சகஜானந்தா அவர்கள் திருமண-மாகாதவர். இவர் தமிழ்மொழி வல்லுநர். வடமொழியையும் கற்றவர். இவர் சென்னை சட்டசபைக்கு காங்கிரசு சார்பில் தேர்ந்-தெடுக்கப்பட்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட்டின் உறுப்பினருமாவார். (விடுதலை, 2.5.1959)
திரு. சகஜானந்தா மறைவுக்கு இறுதி மரியாதை என்ற தலைப்பில் இன்னொரு செய்தியையும் விடுதலை வெளியிட்டது.

பெரியார் அவர்களின் சமூகத் தொண்டைப் பின்பற்றி ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பணியாற்றியவரும் நந்தனார் கல்விக் கழகம் என்ற பெயரில் ஆண்களுக்கு ஒரு பள்ளியையும் பெண்களுக்கு ஒரு பள்ளியையும் (உயர்நிலைப் பள்ளிகள்) வைத்து நடத்தி வந்தவரும் சிதம்பரம் வட்டத்தின் சென்னை சட்டசபை உறுப்பினருமான திரு.ஏ.எஸ்.சகஜானந்தர் அவர்கள் 68ஆவது வயதில், 1.5.1959 வெள்ளி காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார். அன்னாருக்கு சிதம்பரத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் ஏராளமான ஆதிதிராவிடர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தென்னார்க்காடு மாவட்ட திராவிர் கழகத் தலைவர் கு.கிருஷ்ணசாமி அவர்களும் மற்றைய கழகத் தோழர்களும் இதில் கலந்துகொண்டனர். மவுன ஊர்வலத்தில் 10,000 பேர் கலந்துகொண்டனர். (விடுதலை 8.5.1959) என்பதே அச்செய்தி.

சுவாமி சகஜானந்தா எழுத்தும் பேச்சம் என்ற தலைப்பில் அவரது எழுத்தையும் பேச்சையும் தொகுத்த பூவிழியன், பெரியார் குறிப்பிட்டதாக பின்னிணைப்பில் ஒரு செய்தியைத் தருகிறார். அரசினர் நந்தனார் கல்வி நிறுவனங்களின் பொன்விழா மலர் 1969இல் இடம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்.

இதோ சகஜானந்தர் பற்றி பெரியார் சொல்கிறார்:

சிதம்பரம் சாமி சகஜானந்தா அவர்க-ளுக்கு சிதம்பரம் அரசினர் நந்தனார் கல்வி நிறுவனங்களின் சார்பில் சிலை வைப்பது என்பது மிகவும் பொருத்தமானதும், செய்து தர வேண்டியதுமான ஒரு நற்பணியாகும். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்திற்காக சாமி சகஜானந்தா அவர்கள் அரும்பெரும் தொண்டாற்றி இருக்கிறார்கள். எந்தவிதமான எல்லையும் இல்லாமல் நல்ல வண்ணம் முன்னேறி இருக்கின்றது.
பொதுவாக சொல்லப்போனால், நம் நாட்டில் சகஜானந்தா அவர்களைப் போல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தொண்டாற்றியவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.
இதுவரையில் அவர் இருந்திருப்பாரேயானால், அந்த சமுதாயத்திற்கென்றே ஒரு தனிக் கல்லூரி ஏற்படுத்தி இருப்பார் என்று கருதுகின்றேன். சட்டசபையிலும் மற்றும் அரசியல் துறையிலேயும் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லி மிகத் தைரியமாகக் கண்டித்தவராவார். அவருக்குப் பிறகு அந்த இடத்திற்கு வேறு யாரும் வரவில்லையென்றே சொல்லலாம்.
(பூவிழியன் நூல்: பக்கம்: 161)

ஆன்மிக உள்ளம் கொண்டவர் சகஜானந்தர். அவரது ஆன்மிக செயல்பாடுகளை பெரியாரே கண்டித்து எழுதியுமிருக்கிறார். ஆனால், சமூக சீர்திருத்த விவகாரங்களில் சகஜானந்தரை முழுமையாக ஆதரித்து நின்றவர் பெரியார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பேரறிஞர் அண்ணா, சகஜானந்தா போட்டியிடும் வரை அவரது தொகுதியில் தி.மு.க. போட்டியிடாதென முடிவெடுத்துள்ளது என்று அப்போது அறிவிப்பு செய்தததாக ஒரு செய்தி உண்டு என்று பூவிழியன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பெரியாரும், அண்ணாவும் சகஜானந்தரை எந்தளவுக்கு மதித்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
(தொடரும்...)

- உண்மை இதழ், 16-30.11.18

ஏன் அவர் பெரியார்? - 2

பெரியார் பட்டம்” அளித்தவர்கள் பார்வையில்...




வழக்குரைஞர் கிருபா முனுசாமி


(சென்ற இதழின் தொடர்ச்சி...)

"ஜாதியும், தீண்டாமையும் பலமாய் இருந்துவருவதற்கு கடவுளும், மதமும் ஒரு வகையில் காரணம். இனி, அத்தகைய கடவுளை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்" என்று 1929 சென்னை தீண்டாமை விலக்கு மாநாட்டில் பேசியதோடு, கடவுள் மறுப்பையும், மத எதிர்ப்பையும் திராவிட இயக்க கொள்கைகளாகவே ஆக்கினார்.

"தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சகல ஜாதிகளையும் பிடித்த நோய்; தீண்டாமை ஒழிய வேண்டுமானால், பார்ப்பனியம் ஒழிய வேண்டும்" என்று 1931 விருதுநகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், பார்ப்பனர்களோடு சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டிக்கவும் பெரியார் தவறவில்லை. "பறையன் என்ற இழிவு நீங்காமல் உங்களது சூத்திர இழிவை நீங்கள் போக்கிக் கொள்ள முடியாது" என்று இடித்துரைத்தார் பெரியார். "எவனாவது உயர் ஜாதி என சொல்லிக்கொண்டு குறுக்கே வந்தால் அவனை அடித்து விரட்டுங்கள்" என்று பட்டியலினத்தவரிடமும் கூறினார்.

"மனித உரிமைகளைப் பெற அரசு தடையையும் மீறுவோம்; தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போர் திராவிடர் இயக்கத்தின் எதிரிகள்’’ என்று திருமங்கலத்தில் உரை-யாற்றினார்.

“ஜாதிகளை ஒழிப்பதே திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. நம் இயக்கமும், பழங்குடி மக்களும் நகமும், சதையும் போல’’ என்று திருச்சி மான்பிடிமங்கலத்தில் பேசினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்-படும் கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்து வந்த பெரியார், இவற்றை வெறும் தீர்மானங்-களோடும், உரைகளோடும் நிறுத்திக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பிற்கான போராட்டங்களாக முன்னெடுத்து அவரும், அவரது தொண்டர்களும் சிறைசெல்லவும் தயங்கவில்லை.

ஒருபுறம் அரசியலமைப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனித்தொகுதியே அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 1931 சேலம் ஆதிதிரா-விட மாநாட்டில் பேசியும், செயல்பட்டும் வந்த பெரியார், எம்.சி.இராஜா போன்ற ஆதிதிராவிட தலைவர்களே டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தை ஆதரித்தபோதிலும், அம்பேத்கரின் சமூகநீதி பாதையில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

"ஒரு காந்தியாருடைய உயிரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உமது கையில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்" என்று ஐரோப்பாவிலிருந்து டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு பெரியார் தந்தி அனுப்பியதே இதற்கு ஆதாரமாகவும், சமூகநீதியின் மீதான பெரியாரின் தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

கல்வி - வேலைவாய்ப்பு - மொழி:

ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, அரசியல் சமூக உரிமைகளோடு சேர்த்து, உரிமை மீட்பையையும் ஒரு இயக்கமாக கட்டமைக்கிறார் தந்தை பெரியார். அதென்ன உரிமை மீட்பு என்றால், சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பால் ஒழிக்கப்பட்டுவரும் தமிழ் மொழியையும், தமிழ் அடையாளத்தையும் மீட்பது, ஜாதிய தீண்டாமை காரணமாக கல்வி மறுக்கப்பட்டு அதன் விளைவாக வேலைவாய்ப்-பின்மை ஆகியவற்றிற்கு எதிராக கல்வி கொள்கைகள் என நம்மிடமிருந்து பறிக்கப்-பட்ட உரிமைகளை மீட்க பல  போராட்டங்களையும் முன்னெடுத்தார் தந்தை பெரியார் அவர்கள்.

1920ஆம் ஆண்டிற்கு முன்பு பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கல்லூரிகளில் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதும், ஓரிருவரே வெற்றி பெறுவதும் என்ற நிலை இருந்தது. பொது பணியிடங்களிலும் பார்ப்பனர்-களே ஆதிக்கம் செலுத்தினர். எனவே, எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகங்களை வழங்க வேண்டும்" என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை ஒன்றை அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பானகல் அரசர் பிறப்பித்தார். மேற்குறிப்-பிட்ட ஆணை, 1921-இல் வந்திருந்தாலும், செயல்-படுத்தும் அதிகாரிகளாகப் பார்ப்பனர்களே இருந்தமையால் அது நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்தது.

 

பானகல் அரசர்   சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்  ஞானியார் அடிகள்    தமிழவேள் உமாமகேஸ்வரனார்

அதோடு மட்டுமில்லாமல், வருணாசிரமக் கொள்கையை பார்ப்பனரல்லாதோர் மீது கட்டாயப்படுத்தும் விதமாக, சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணித்து வந்த பார்ப்பனர்கள், தமிழ்வழி கல்வியை முற்றிலுமாக மறுத்ததோடு, நமது கல்வி உரிமையை மறுக்க பலவித சூழ்ச்சிகளையும் செய்தனர். அதற்கு திருவையாறு தமிழ்கல்லூரியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

திருவையாறு தமிழ் கல்லூரியை பற்றி நாம் அறிந்திருப்போம். இன்று அது, கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக மட்டும் இருந்தது என்பதை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தான் கொடுத்துள்ள இடமும், பணமும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று மன்னர் தன் உயிலில் எழுதி வைத்திருப்-பதால் அங்கு அம்மொழி மட்டுமே கற்பிக்கப்-படுவதாக கூறியிருக்கின்றனர்.

தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையும், செல்வகேசவராய முதலியாரும், மன்னர் ஏன் அவ்வாறு எழுதினார் என்று அவரது உயிலை படிக்க முயற்சித்தனர். அதுமுழுக்க முழுக்க வடமொழியில் எழுதப்பட்டிருந்ததால், அவர்களால் படித்தறிய இயலவில்லை. தமிழும், வடமொழியும் நன்கறிந்த புலியூர் ஞானியார் அடிகளிடம் அதனைக் கொடுத்து கேட்ட பொழுது, உயிலைப் படித்த ஞானியார் சிரித்து விட்டு கூறினாராம், இடமும், நிதியும் கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, சமஸ்கிருதத்திற்கு மட்டும் என்று கூறப்படவில்லை என்று.

அதற்கும் பார்ப்பனர்கள் விடை கூறினர். என்ன தெரியுமா? கல்வி என்றால் சமஸ்கிருதம், சமஸ்கிருதம் என்றால் கல்வி. இதில் உங்களுக்கு என்ன குழப்பம் என்று. தமிழ்வேளும், செல்வகேசவராயரும் அடங்கா சினம் கொண்டு இச்செய்தியை சர். ஏ.டி.பன்னீர்செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின் அவரது முயற்சியால் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி தமிழும் அங்கு படாமாகியது. பிறகு படிப்படியாக, பல்வேறு தமிழ் படிப்புகளைக் கொண்ட தமிழ்க் கல்லூரி ஆயிற்று.

ஆக, பார்ப்பனர்களின் இத்தகைய சூழ்ச்சி-களை முறியடிக்க, நீதிக்கட்சி ஆட்சியால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த, கல்வி தொடர்பான தீர்மானங்கள் பலவற்றையும் தனது மாநாடுகளில் கொண்டுவந்த வண்ணமே இருந்தார் பெரியார். இந்தியாவின் வருங்காலத்து அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்திய-தோடு, பார்ப்பனரல்லாத மாணவர்கள் என்று மட்டுமில்லாமல், தாழ்த்தப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்குப் புத்தகம், உடை, உணவு முதலியவற்றை இலவசமாக வழங்கி மற்ற வகுப்பு சிறுவர்களைப் போலவே உயர்த்த வேண்டும், உயர்கல்விக்கு வகுப்புவாரி விகிதப்படி மாணவர்-களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், காலியாகும் பணியிடங்களை நிரப்பும் போது, தாழ்த்தப்-பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றினார்.

கட்டாயத் தாய்மொழி வழிக் கல்வி, வேண்டுமானால் பொது மொழியாக ஆட்சி மொழியை கற்பிக்கலாம், இரு பாலருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி போன்ற தீர்மானங்-களும் அடுத்தடுத்த சுயமரியாதை மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.

(தொடரும்...)

 -  உண்மை இதழ், 16-30.11.18

சுயமரியாதைத் தலைவர் (2)

28.12.1930 - குடிஅரசிலிருந்து...

சென்ற வாரத் தொடர்ச்சி...

திரு. பாண்டியன் அவர்கள் பெரிய தனவந்தர். அதாவது வருஷம் 50 ஆயிரம் ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை வருவாயுள்ள செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆகவே அவர் தனக்குப் பணமில்லாததால் பணக் காரரை வெறுத்தார் என்று யாரும் சொல்லி விட முடியாது.

திரு. பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லாபோர்டுத் தலைமைப் பதவியில் பட்டுக் கொண்டதாலும், மற்றும் அரசியல் தொல்லையாலும் சுயமரியாதை இயக்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதே தவிர, அதாவது அவர் வெளியில் இருந்தால் எவ்வளவு பலன் ஏற்பட்டு இருக்குமோ, அவ்வளவு பலன் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது.

இது நிற்க, ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்பதும், சீர்திருத்தம் என்பதும், அரசியல் சுதந்திரம் என்பதும் நாட்டிற்கும், பாமர மக் களுக்கு ஏழை மக்களுக்குத் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எவ்வளவு தூரம் பயனளிக்கக் கூடியதாயிருக்கின்றது என்பதைப் பொது ஜனங்கள் அறிய இது ஒரு சந்தர்ப்பமாக ஏற்பட்டது மற்றொரு விதத்தில் மகிழ்ச்சி யடையத் தக்கதாகும்.

ஆகவே, இன்றைய தினம் இந்நாட்டில் பொதுஜனங் களுக்குப் பிரதிநிதியாக பிரபுத் தனமும், வைதிகமும்தான் இருக்க யோக்கி யதையுடைய அரசியல் சுதந்திரங்கள் இருக் கின்றனவே ஒழிய உண்மையான மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு எவ்வித சாதனமும் இல்லை என்பது உறுதியாகி விட்டது.

இது தவிர தல ஸ்தாபன நிர்வாகங்கள் இந்த மாதிரி காரணங்களில் அடிக்கடி மாறி மாறித் தொல்லையடையாமல் ஒரே ரீதியில் நடை பெற வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங் களுக்குச் சுதந்திரமாய் நடக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தியோகஸ்தர் இருப்பாரானால் இம்மாதிரிக் காரியங்களால் கொள்கைகள் மாறுபடாமல் இருக்கலாம். ஆனால் இன்றுச் சட்டசபையிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத் தலைமையிலும் ஒரே கனவான்கள் பெரிதும் இருப்பதால் அதை ஏற்படுத்த முடியவில்லை. ஆனபோதிலும் இவைகளுக்காக வெல்லாம் நம்பிக்கை இல்லாத் தீர்மானச் சட்டம்  வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. அது இருந்துதான் தீர வேண்டும். இன்றைய தினம் கட்சி பிரதிக்கட்சிகளால் மந்திரி போட்டிகளால், அரசியல் தகராறுகளால் தான் இது வரை மேற்படி சட்டம் பிரயோகிக்கப் பட்டிருக்கின்றதே தவிர, நிர்வாகக் குற்றத் திற்குத் திறமைக்குப் பிரயோகிக்கப்பட வில்லை. இம்மாதிரி காரியங்களால் உடனே தலைமை ஸ்தானம் காலிசெய்யப்பட வேண்டி யதும் ஒரு விதத்தில் அவசியமாகும்.. இல்லாத வரை இக்கட்சிகள் நிர்வாகத்திற்குள் புகுந்து, ஸ்தாபனங்களை மிக்க கேவலமாக ஆக்கி விடும். இந்தக் குறிப்பிட்ட சம்பவம்கூட சுய மரியாதை உணர்ச்சியினால் ஏற்பட்ட தாகும்.

ஏனெனில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் போதிய மெஜாரிட்டி இல்லை என்பது உறுதியானாலும் இம்மாதிரி மனப்பான்மை உள்ள இடத்தில் இனி இருப்பது கொஞ்சமும் சுயமரியாதை அல்ல என்றே விலகி விட்டார். ஆனால் மற்ற சம்பவங்களில் மெஜாரிட்டி மெம்பர்கள் எந்தக்  காரணத்தைக் கொண்டானாலும், ஒருவரை வேண்டியதில்லை என்று கருதி விட்டால், அவர் மறுபடியும் அதிலேயே இருக்கும் படியாக இருந்தால் அந்த மெஜாரிட்டி மெம்பர்கள் தொல்லையால் நிர்வாகம் பாதிக்கப்படாதா என்று கேட்கின் றோம். மெஜாரிட்டிக்கு  விரோதமாய் உள்ளே இருந்து எப்படி யாருடைய தயவின் மீது சமாளித்துக் கொண்டிருந்தாலும் அது சுயமரியாதை அற்ற தன்மையோடு, நிர்வாகம் பாழ் என்றே சொல்லுவோம். பொதுவாக பதவிகள் அடையும் மார்க்கமும் மந்திரிகளாய் வரப்பட்டவர்கள் நிலையும் இன்று இருப்பது போலவே என்றும் இருக்குமேயானால் கீழ் நிர்வாகங்களுக்கு எவ்வளவு பந்தோபஸ்து ஏற்படுத்தினாலும் இப்படித்தான் நடக்கும். சாதாரணமாக மந்திரிகளுக்குக் கூட இந்த நிபந்தனைகள்தானே இருக்கின்றது? அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தால் விட்டு விட்டுப் போய் விட வேண்டும் என்பதாகத் தானே இருக்கின்றது. ஆகவே மேலுள்ளது போலவே தான் கீழ் இருப்பதும் இருக்கின்றது. ஆதலின் நாம் இதை மாத்திரம் குற்றம் சொல்வது ஒழுங்காகாது.

இவைகளையெல்லாம் நினைப்பதற்கு முன் ஜனநாயகம் நல்லதா? தனி நாயகம் நல்லதா; அல்லது பஞ்சாயத்து குடிஅரசு நாயகம் நல்லதா? என்று முடிவு செய்வதில் தான் உண்மை, நன்மை கிடைக்க முயற்சி செய்ய முடியும்.

(முடிந்தது)

 

ஜாதி, மதம், கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லையென்றும், அவைகள் போலியும் சூழ்ச்சியும் நிறைந்த ஏமாற்றல்கள் என்றும் தைரியமாய்ச் சொல்லுகின்றேன். ஆகையால், அதை விட்டுவிட்டு, மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து, அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்தவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

மனித நாகரிகம் பெருக வேண்டுமானால், முன்னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும். இதுதான் மனிதத் தர்மமாகும். உடலுழைப்பு வேலைகளை வளர்க்க, நிலை

நிறுத்தப் பாடுபடுகிறவர்களே மனிதச் சமுதாய விரோதிகள் ஆவார்கள் என்பது எனது கருத்து.

- விடுதலை நாளேடு, 16.2.19