செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

சுயமரியாதைத் தலைவர்

28.12.1930 - குடிஅரசிலிருந்து...

சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர் உயர்திரு. கீ.றி.கி  சவுந்திர பாண்டியன் அவர் கள் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை கண நேரத்தில் ராஜினாமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரணமாய் விளங்கிவிட்டார். திரு. பாண்டியன் அவர்கள் அந்த தானத்தை ஒருபோதும் விரும்பினதேயில்லை. அவரது நண்பர்களின் வலியுறுத் தலுக்காகவும், ஒரு கொள்கைக்காகவும் அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவுமே அதை ஒரு ஆயுதமாக ஒப்புக் கொண்டது முதல் அந்த வேலையை மிக்க நீதியுடனும், பொறுப்புடனும், சுயமரியா தையுடனும் யாருடைய தயவு தாட்சண்யத் திற்கும் கட்டுப்படாமல், தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்து வந்தார்.

முக்கியமாய் ஒடுக்கப்பட்ட சமுகத்தாருக் கும் தாழ்த்தப்பட்ட சமுகத்தாருக்கும் தன்னால் கூடியவரையில் அதன் மூலம் நன்மை செய்து வந்தார். பணக்காரர் ஏழை என்கின்ற வித் தியாசமில்லாமல் அதிகாரத் தையும், சலு கையையும் பிரயோகித்து வந்தார். பணக் காரர்கள் குற்றத்தை எடுத்துச் சொல்லுவதிலும், அவர்களின் பணத்திமிரான காரியங்களைக் காண்பதிலும், சிறிதும் பின் வாங்காது, ஜாதித் திமிர்காரரைக் கண்டிப்பது போலவே தைரிய மாய் கண்டித்து நடவடிக்கை நடத்தி வந்த தோடு அவர்களுக்கு அடிக்கடி புத்தி புகட்டி யும் வந்தார். அப்பதவியின் மூலம் சுயமரி யாதைக் கொள்கையை பல விஷயங்களில் நடை முறையில் நடத்திக் காட்டினார். தனக் கென்று வேறு தொழில் ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் தனது முழு நேரத்தையும் அதிலேயே செலுத்தி வந்தார். இவை மாத்திர மல்லாமல் எந்த நிமிஷத்திலும் நாளைக்கும் அந்த வேலையில் இருக்க வேண்டும் என்றாவது மறுபடியும் அதை அடைய வேண்டு மென்றாவது கருதாமல் ஒவ்வொரு நிமிஷமும் அந்தப் பதவியை அலட்சியமாய் கருதிக் கொண்டே நடுநிலையிலிருந்து பிசகாமல், தான் செய்ய வேண்டிய காரியங் களை துணிவுடன் செய்து வந்தார். (இவ்வளவு காரியங் களும் சர்க்கார் நியமனத் தின் மூலம் அப்பதவி கிடைத்ததினா லேயேதான் செய்ய முடிந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகின்றோம். ஏனெனில் தேர்தல் மூலம் பதவி பெற்றிருந்தால், அங்கத்தினர்களுக்கு விலை கொடுத்தோ, வியாபாரம் பேசியோ அடிமைப்பட்டோ அடைந்திருக்க வேண்டு மாதலால் இவ்வளவு சுயேச்சை யோடும் சுயமரியாதையோடும், நாணயத்தோடும், நீதியோடும் இருந்திருக்கவே முடியாது. இப்படிப்பட்ட ஒரு பெருமையும் நீதியும் வாய்ந்த கனவானின் நிர்வாகம் சிலருக்காவது தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாமல் போவதில் ஆச்சரிய மொன்றுமில்லை. அதுமாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் இயக்க அரசியல் வானம் கருத்து அடித்த சண்ட மாருதத்தால் பொதுக் கட்டுப்பாடு நாணயம் ஆகியவைகள் சின்னாப் பின்னப் பட நேர்ந்து. சுயநலமும், பேராசையும் நாட்டில் தாண்டவ மாடியதின் பயனாய் நடந்த நிகழ்ச்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங் களுக்கு அதிகமான தலைவிரி கோலம் ஏற்பட்டு அதைச் சுலபமாய் யாரும் கையாளும்படி செய்துவிட்டது.

ஆகவே அது உசிதா உசிதமில்லாமல் கையாளப்படும்படியாக ஆனதும் அதிசிய மல்ல. இந்த நிலையில் சிலர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் மீது அதை பிரயோ கிக்கக் கருதி அது வெளிப்பட்டால் தங்களுக்கு ஆமோதிக்கவும், ஆதரிக்கவும் கூட நபர்கள் கிடையாதென நினைத்து வெகு பத்திரமாக இரகசியத்திலேயே ஏற்பாடு செய்து திடீ ரென்று கொண்டு வந்திருப்பதாகத் தெரிகின் றது. இத் தீர்மானம்  வருமென்று தெரிந்திருந் தால், உடனே முன்னமேயே ராஜினாமா செய்திருப்பார். வெறும் மந்திரி சம்மதமான கட்சி காரணமாய் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது தவிர திரு. பாண்டியன் அவர்கள் நிர்வாகத்தைப் பற்றி சிறிதாவது அதிருப்தி அடைந்து அதனால் கொண்டு வரப்பட்டது என்று யாராலும் சொல்லமுடியாது. அவரது நிர்வாகத்தில் யாரும் எந்தச் சமயமும் மீட்டிங்கில் அதிர்ப்தி பட்டதாக காட்டினதே கிடையாது.

உதாரணமாக சமீபத்தில் ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் திரு. மெக்வீன் அவர்கள் மீட்டிங்கில் ஒரு காரியத்தில் பிரசிடெண்டின் நடவடிக்கைக்கு அதிர்ப்தி காட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கவோ ஆமோதிக்கவோ கூட அந்த கூட்டத்தில் ஒரு மெம்பரும்  இல்லை. ஜில்லா கலெக்டரை அனுசரித்துப் பேசக்கூட ஆளில்லை இதுவரை எந்தப் பத்திரிகை களாவது அவரது நிர்வாகத்தை ஆட்சே பித்தோ, அதிர்ப்தி காட்டியோ அல்லது கட்சிவாதம் நடந்ததாகவாவது காட்டியோ ஒரு வரியும் எழுதப்பட்டதாக சொல்ல முடியாது. அவர் நிர்வாக நேர்மைக்கு ஒரு சிறிய உதாரணம் வேண்டுமானால் ஒன்றைக் காட்டுவோம். அதாவது எந்த மோட்டார் காரராவது தீண்டப்படாத மக்கள் என்ப வரை  ஏற்றிச் செல்ல மறுத்தால் அந்த லைசென் கேன்சல் செய்யப்படும் என்று உத்தரவு போட்டார். பள்ளிக்கூட விஷயங் களில்  தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்க்காத பள்ளிக்கூட உபாத்தியாயர் களையெல்லாம் மாற்றியும், தண்டித்தும் சர்வசாதாரணமாக எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் யாரும் படிக்கும்படியாய் செய்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார் விஷயங்களில் பணக்காரர்களை விட சாதாரண மக்களிடமே அதிகநேசம் வைத்தும் சீர்திருத்த வாலிப உலகத்திற்கு உற் சாகத்தை தந்து அவ்வகுப்பில் அநேகருக்குப் பணமே எல்லாம் செய்யவல்லது என்கின்ற உணர்ச்சியை மாற்றி, அன்பைப் பெருக்கி வந்தார்.. வைதிகர்களிடமும் பணக்காரர் களிடமும் பேசும் நேரம்மெல்லாம் தனக்கு மிக்க கஷ்டமாக இருப்பதாகவே இருக்கும். வாலிபர்களிடமும், சாதாரண மக்களிடமும், தாழ்த்தப்பட்ட மக்களிடமும் பேசும் நேரத் தையே மிக்க உற்சாகமாகக் கருதுவார். இப்படிப்பட்ட குணமுள்ளவர் ஆட்சியில் வைதிகர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், பிரபுத்தனக்காரருக்கும் அதிருப்தி ஏற்பட் டதும் நம்பிக்கை இல்லை என்று சொல்ல வேண்டி வந்ததும் திரு. பாண்டியன் அவர் களுக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரமாகும். இதன் மூலம் மற்ற மெம்பர்கள் போர்டிலிருந்து சீர்திருத்த உலகத்திற்கும், சுயமரியாதை உலகத்திற்கும், சமதர்ம உலகத்திற்கும் தொண்டு செய்ய திரு. பாண்டியனை உத வியது ஒரு பெரிய உப காரமேயாகும். ஆதலால் இந்த நிலை ஏற்பட்ட தற்கு நாம் உண்மையாகவே மகிழ்ச்சி யடைகின்றோம்.

(தொடரும்)
-  விடுதலை நாளேடு, 9.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக