வியாழன், 14 பிப்ரவரி, 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 27

சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கும் பி.என்.சர்மாவுக்கும் தந்த பதவியை சிவராஜுக்கு, வீரய்யனுக்கும் தராதது ஏன்?


’குடிஅரசு’ கேள்வி




நேயன்


இப்படிப்பட்ட தரவுகள் கொண்டு மிகக் கனமான, செறிவான வரலாற்றை எழுதலாம். இது எல்லாம் தெரியாததால்தான் தலித் அரசியலை பெரியார் மறைக்க நினைத்தார் என்றும், அம்பேத்கர் தவிர மற்ற தலித் தலைவர்களை பெரியார் மறைத்தார் என்றும் எழுதுகிறார்கள்.

‘சென்னையில் கலவரம்’ என்ற செய்தியைப் பாருங்கள்; சென்னை திருவல்லிக்கேணி கடல்கரையிலும், மவுன்ட்ரோடு நேப்பியர் பார்க்கிலும் எழுமூர் ஏரியிலுமாக மூன்று பொதுக் கூட்டங்கள் ஆதி திராவிட மகாஜனசபையாரால் கூடப் பெற்று திருவாளர்கள் வீ.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ.,பி.எல்., எம்.எல்.சி., எம்.சி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியவர்கள் தலைமையில் 11.10.1931, 14.10.1931, 18.10.1931 ஆகிய மூன்று தினங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதல்நாள் 1,000 பேரும், 2ஆம் நாள் 2,000 பேரும், 3ஆம் நாள் 7,000 பேரும் விஜயம் செய்திருந்தார்கள். அக்கூட்டங்களில் வட்டமேஜை மகாநாட்டில் தாழ்த்தப்பட்ட வர்களுக்குத் தனித்தொகுதி வேண்டாமென்று கூறிய திரு.காந்தியைக் கண்டித்தும் அவர் மீதும் காங்கிரஸ் மீதும் தங்கட்கு நம்பிக்கையில்லை யென்றும் தங்கள் பிரதிநிதிகளான டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சீனிவாசன் ஆகியவர்களால் வேண்டப்படும் கொள்கை-களையே முழு மனதோடு ஆதரிப்பதாகவும் தீர்மானம் செய்தார்கள். அதனையொட்டி திருவாளர்கள்: பொன்னு, கே.ஆர்.சாமி, கே.ஆர்.எத்திராஜுலு, தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதம், வி.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., பாலகுரு முதலி, சிவம், து.பொன்னம்பலம் ஆகிய கனவான்கள் நன்கு விளக்கி ஆதிதிராவிடர்களின் நிலைமையையும், வட்ட மேஜை மகாநாட்டையும், காந்தி காங்கிரஸ் முதலியவைகளைப் பற்றியும் எடுத்துப் பேசினார்கள். இந்நிகழ்ச்சியை சகியாத பார்ப்பனர்கள் கடல்கரை கூட்டத்தில், ‘வந்தே மாதரம்! காந்திக்கு ஜே!’ எனறு சத்தமிட்டு குழப்பத்தையுண்டாக்கி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தார்கள். பொது ஜனங்களில் இருவர் கூச்சல் போட்டு குழப்பம் செய்தவர்கட்கு நல்ல புத்திமதி கொடுத்தார்கள். அதன்பின் ஓட்டம் பிடித்தார்கள். அமைதியும் ஏற்பட்டது. அதேபோல் 14.10.1931 தேதியிலும் பொதுக்-கூட்டம் முடிந்து பஜனையாகப் போய்க் கொண்டிருந்த ஆதிதிராவிட மகாஜனங்களை பெரியமேட்டு பெரியண்ண மேஸ்திரி தெரு பக்கத்தில் ஒரு வீட்டு மாடியிலிருந்து கொண்டு கல்லாலும், சோடாப் புட்டிகளாலும் (தேச பக்தர்கள்) தாக்கியிருக்கின்றார்கள். அவர்கள், கையில் பஜனையில் கொண்டு போன படத்தையும் கீழே பிடுங்கி உடைத்திருக் கிறார்கள். பின்னர் இரு சாரார்கட்கும் ஆவேசம் ஏற்படவே, அது சமயம் போலீஸ் படைகளும் சோல்சர்களும் வந்து கூட்டத்தை கலைத்தனராம். பிறகு 18ஆம் தேதி கூட்டம் முடிந்த பிறகும் ஆயிரம் விளக்குக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கலகம் நடந்து இரு கட்சியிலும் பலர் காயமடைமந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பார்ப்பன தேச பக்தர்களின் ஏவுதலின்படி நம்மவர்களும் சிலர் கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது. பார்ப்பனர்களுடைய தேசபக்தி இதுபோன்ற கலவரம் இனியும் பல ஏற்பட்டு சைமன் கமிஷன் காலத்தில் நடந்ததுபோல் திருவல்லிக்கேணியிலும், மைலாப்பூரிலும் போய் புகும்வரையில் நிற்காது என்பதாகவே தெரிகின்றது.

திருவாளர்கள்: பொன்னு, கே.ஆர்.சாமி, கே.ஆர்.எத்திராஜுலு, தங்கராஜ், செல்வராஜ், ஜெகநாதம், வி.பி.எஸ்.மணியர், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., பாலகுரு முதலி, சிவம், து.பொன்னம்பலம் ஆகிய கனவான்கள் நன்கு விளக்கி ஆதிதிராவிடர்களின் நிலைமையையும், வட்ட மேஜை மகாநாட்டையும், காந்தி காங்கிரஸ் முதலியவைகளைப் பற்றியும் எடுத்துப் பேசினார்கள்.


இன்னும் பல கூட்டங்கள், பலயிடங்-களில்வட ஆதிதிராவிடர்கள் ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள். அதிலும் சில பார்ப்பனர்கள் வழக்கம்போல் தங்கள் விஷமத்தையும், காலித்தனத்தையும் கையாளக் கூடும். ஏன் இவ்வாறு அவர்கள் பொறாமை கொண்டு காலித்தனம் செய்யவும், கலகம் செய்யவும் முன்வருகிறார்கள், அல்லது பிறரைத் தூண்டி விடுகின்றார்கள் என்பது எல்லாருக்கும் தெரியாததல்ல. ‘தேசியம்’ என்பதற்கே பொருள் ‘பார்ப்பனியம்’ என்றுதான் அர்த்தம். எனவே, பார்ப்பனீயம் சென்னையில் நடக்கும் தாழ்த்தப்-பட்டடவர்கள் பொதுக் கூட்டங்களைக் கண்டு தங்கள் புரட்டுகளும் சூழ்ச்சிகளும் வெளிப்-படுமென்று எப்படியாவது கலவரத்தை-யுண்டாக்கி பார்ப்பனரல்லாத சமூகத்தின் முக்கியஸ்தர்-களுக்கு கெட்ட பெயரைச் சூட்டி அவர்கள் முயற்சியை தடைப்படுத்தவே பார்ப்பனப் பத்திரிகைகள் நடந்த செயலை மறைத்து பொய் பிரச்சாரமும் அவதூறாகவும் எழுதுகிறது. பார்ப்பனரல்லாத வியாபாரப் பத்திரிகைகளும் பார்ப்பனீயத்திற்குத் தான் ஆதரவளிக்கின்றன. எப்படி இருந்தபோதிலும் ‘தேசிய’ப் பார்ப்பனர்கள் முயற்சிக்கும் சூழ்ச்சிக்கும் இந்தக் காலத்தில் எந்த மனிதனும் பின்வாங்கப் போவதில்லை. இனியும் தொடர்ச்சியாக பல கூட்டங்கள் போட்டு  காந்தியின் செயலைக் கண்டிக்கத்தான் போகிறார்கள். தேசியத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியை வெளியிடத்தான் போகிறார்கள். ஆதிதிராவிடர்-களில் குறைந்தது 5,000 பேராவது ஜெயிலுக்குப் போவது என உறுதி கொண்டு விட்டார்கள். பார்ப்பனீயம் ஜெயிக்குமா? சமதர்மம் ஜெயிக்குமா? என்று பார்த்துவிட உறுதி-கொண்டு விட்டார்கள்.

ஒன்றாக மனிதத்தன்மை அடைவது அல்லது வாழ்வது இரண்டிலொன்றுதான் முடிவு. எத்தனை நாட்களுக்கு ஒரு சமூகம் ஏமாற்றப்-பட்டு அடிமையாகவே இருக்க சம்மதிக்கும். இனியும் இப்பகுதியில் நடைபெறும் பொதுக்-கூட்டங்கட்கு தோழர் அ.பொன்னம்-பலனார், காளியப்பன் முதலானவர்கள் வர ஒப்பியுள்ளார்கள்.

சைமன் கமிஷனில் யாரை நியமிக்கலாம் என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தபோது பெரியார் என்ன எழுதினார் என்றால்...


சிவபூஷனம் (‘குடிஅரசு’ 25.10.1931)

அதாவது சுயமரியாதை இயக்கம் ஒரு கூட்டம் நடத்தி அதில் ஒரு கலவரம் ஏற்பட்டால் எப்படி செய்தி வெளியிட்டு இருப்பார்களோ, அப்படி ஆதிதிராவிட மகாஜனசபை கூட்டம் குறித்த செய்தியை ‘குடிஅரசு’ வெளியிட்டுள்ளது. வி.பி.எஸ். மணியர், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் பங்கெடுத்த கூட்டம் இது. டாக்டர் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசனுக்கு ஆதரவான கூட்டம் இது. இதை தனது கூட்டமாக பெரியார் நினைத்து செய்தி வெளியிட்டுள்ளார்.

1928இல் சென்னையில் ஆதிதிராவிடர் மகாநாடு நடைபெற்றது. இதனை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை, ‘சர்க்கார் தாசர்களின் மாநாடு’ என்றும், ‘சுயநலக்காரர்கள் மாநாடு’ என்றும், ‘30 பேர்தான் கலந்து-கொண்டார்கள்’ என்றும் எழுதியது. இதை மிகக் கடுமையாகக் கண்டித்து எழுதியவர் பெரியார்-தான். இந்த நாட்டில் ஆதிதிராவிடர்-கள் என்ற சமுதாயம் இருப்பதாகவே மறைத்து சூழ்ச்சி செய்து வந்தவர்கள், ஆதிதிராவிடர்கள் மாநாடு நடத்துகிறார்கள் என்றதும் அதையும் கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஏற்பட்டு 42 வருடங்களாகியும், சீர்திருத்தம் ஏற்பட்டு 20 வருடங்களாகியும் ஏழு கோடி ஆதிதிராவிடர்களில் ஏதாவது ஓர் ஆதிதிராவிடர் ஸ்டேட் கவுன்சில் முதல் கிராமப் பஞ்சாயத்து வரையில் ஏதாவதொன்றில் பொதுப் பிரதிநிதியாக சர்க்கார் தயவில்லாமல் உட்கார இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்று கேட்கிறோம். (‘குடிஅரசு’ 22.1.1928)

இந்த மாநாட்டில் 500 பேர் கலந்து கொண்டதாகவும் ‘சுதேசமித்திரன்’ செய்தியை ‘குடிஅரசு’ மறுத்துள்ளது. ஆளுநரின் நிர்வாக சபையில் ஸ்ரீமான்களான பி.என்.சர்மாவுக்கும், சி.பி.ராமசாமி அய்யருக்கும் கொடுத்திருக்கும் உத்தியோகங்களை ஸ்ரீமான்களான எம்.சி.ராஜாவுக்கும் ஆர்.வீரய்யனுக்கும் கொடுத்தால் பார்க்க மாட்டார்களா? (‘குடிஅரசு’ 22.11.1925) என்று கேட்டது பெரியாரின் ‘குடிஅரசு’.

சைமன் கமிஷனில் யாரை நியமிக்கலாம் என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தபோது பெரியார் என்ன எழுதினார் என்றால்...

சைமன் கமிஷனில் கருப்பு மூஞ்சி ஆசாமி ஒருவரைப் போடுவதாக வெள்ளைக்காரன் சம்மதிப்பதாகவே வைத்துக்கொள்வோம். கருப்பு மூஞ்சியில் யாரைப் போடச் சம்மதிப்பது? எங்கள் சகஜாநந்தா சாமியையாவது, எம்.சி.ராஜாவையாவது, ஆர்.வீரய்யனையாவது போடச் சம்மதிப்பார்களா? ஒருகாலும் போட சம்மதிக்க மாட்டார்கள். (‘குடிஅரசு’ 29.11.1928)

இப்படி இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சகஜானந்தா, ஆர்.வீரய்யன் ஆகிய தலைவர்களை தனக்கு இணையாக, பல இடங்களில் தன்னைவிட உயர்த்தி எழுதியும் பேசியும் வந்தவர் பெரியார். இணைந்து செயல்பட்டவர் பெரியார். இதனுடைய உச்சமாகத்தான் இவர்கள் அனைவருமே ஒரே மேடையில் நிற்கும் மகத்தான நிகழ்வு 1939ஆம் ஆண்டு நடந்தது. வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய அந்த நிகழ்வு 8.10.1939ஆம் நாள் சென்னையில் நடந்தது.

தொடரும்...
-  உண்மை இதழ், 1-15.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக