வியாழன், 7 டிசம்பர், 2023

மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலை


2

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையினை, மலேசியா திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் மகன் கே.ஆர்.ஆர்.அன்பழகன் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் 

கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 6.12.2022).


ஞாயிறு, 3 டிசம்பர், 2023

வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக்கொண்டாட்டம்

  

 

திருவாங்கூர் ராஜ்யத்தில் அவர்ணஸ்தர்கள் அனு மதிக்கப்படாத பல தெருக்களிலும், ஜாதி பேதமின்றி மனித உடல் தாங்கிய யாவரும் நடக்கலாம் என்கிற கொள்கைக்கு வந்துவிட்டதோடு, திருவாங்கூர் அரசாங்கத்தாரும் அக் கொள்கைக்கு அனுகூலமாயிருந்து காரியத்தில் நடத்திக் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாய் வைக்கம் சத்தியாக்கிரகத்தை நிறுத்த ஓர் வெற்றிக் கொண்டாட்டம் சென்ற மாதம் 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீமான். ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் அக்கிராசனத்தின் கீழ் வைக்கத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு, ஸ்ரீமான், ராமசாமி நாயக்கரின் மனைவியும், பல ஸ்திரீகளும், கேரள தலைவர்களும் உள்பட சுமார் 3000 ஜனங்கள் வரை கூடியிருந்தார்கள். ஆரம்பத்தில்,

ஸ்ரீமான். கேலப்பன் நாயர்.

அவர்களால் வரவேற்பு நடந்தது. சத்தியாக்கிரகத்தின் விருத்தாந்தங்களையும், ஸ்திரீகள் உதவி செய்த வகை யையும் எடுத்துச் சொல்லி வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு இதுவரையில் 25,000 ரூபாய் வசூலாகி செலவாகியிருக்கிற தென்று சொன்னார்.

மன்னம் ஸ்ரீமான் பத்மநாத பிள்ளை.

20 மாத சத்தியாக்கிரகத்தில், பல ஆயிர வருஷங்களாய் ஏற்பட்ட கொடுமைகள் அழிந்து போய்விட்டதென்றும், திரு வாங்கூர் இராஜ்யத்திலுள்ள நாயர்களெல்லாம் சத்தியாக்கிர கத்திற்கு அதுகூலமாயிருந்தார்களென்றும், மலையாள நம் பூதிரிகள் அறியாத்தனத்தினாலும், குருட்டு நம்பிக்கையாலும், சத்தியாக்கிரகத்தை எதிர்த்து நின்றபோதிலும், அவர்களால் அவ்வளவு கெடுதிகள் ஏற்படவில்லையென்றும், ஆனால் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தான் தங்களுடைய சோம்பேறி மடத்துச் சாப்பாடு போய்விடுமேயென்று பயந்துகொண்டு வேண்டுமென்றே பல அக்கிரமங்களையும், கொடுமை களையும் சத்தியாக்கிரத்துக்குச் செய்து வந்தார்களென்றும், ஆலயப் பிரவேசத்திற்குக் கூட நாயர்கள் கொஞ்சங்கூட விரோதமில்லையென்றும், நம்பூதிரிகளுக்கும் அவ்வளவு கடுமையான ஆக்ஷேபனையில்லை என்றும், அவர்கள் சொன்னால் ஒப்புக் கொள்ளக் கூடியவர்களென்றும், ஆனால், வெட்டிச் சோற்றைத் தின்பதற்காக இங்கு வந் திருக்கும் ஊட்டுப்பறை தமிழ் பிராமணர்கள்தான் கொடுமை செய்கிறார்களென்றும், அந்தத் தமிழ்ப் பிராமணர்களைக் கேரளத்தை விட்டுத் தமிழ்நாட்டிற்கே ஓட்டி விட்டால், திருவாங்கூர் ராஜ்யத்தில் ஒருகலகமும் இருக்காதென்றும், பேசியதோடு இனி எல்லா வகுப்பாரும் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சத்தியாக் கிரகம் செய்யவேண்டும் என்று சொன்னார்.

ஸ்ரீமான். டி. கே. மாதவன். 

திருவாங்கூர் மகாராணியவர்கள் நமக்கு இப்போது அளித்துள்ள சில சவுகரியங்களை மறுபடியும் பிடுங்கிக் கொள்ளும்படி பட்டர்களென்னும் தமிழ்நாட்டுப் பிராமணர் கள் திவானைக் கைவசப்படுத்திக் கொண்டு சூழ்ச் சிகள் செய்து வருகின்றார்களென்றும், இதற்காக திருவாங்கூர்  ஹெட் சர்க்கார் வக்கீல் ஸ்ரீமான் சுப்பையர் என்கிற ஒரு பட்டர் கங்கணங்கட்டிக்கொண்டிருக்கின்றாரென்றும், அடுத் தாற் போல் கோயில் பிரவேச சத்தியாக்கிரகம் ஆரம்பித் தால்தான் இப்போது ஏற்பட்டுள்ள வெற்றியானது நிலைக்கு மென்றும், இல்லாவிட்டால் வஞ்சகப் பட்டர்கள் இதையும் பிடுங்கிக்கொள்ளுவார்களென்றும், நமது ஜனங்கள் முரட் டுத்தனமில்லாமல் சாதுவாய் நம்மைப் பின்பற்ற, பக்குவப் படுத்தி உடனே கோயில் பிரவேசம் ஆரம்பிக்க வேண்டு மென்றும், இதற்காக எல்லோரும் பண உதவி செய்ய வேண்டுமென்றும், இந்தப் பட்டர்கள் நமக்கு விரோதிகளே ஒழிய அவர்கள் பிராமணர்களல்லவென்பதை எல்லோரும் உணரவேண்டுமென்றும் அய்ந்து ஆறு தடவைகளில் இதைத்திருப்பித் திருப்பிக் கூறிவிட்டு,

அடியிற்கண்ட தீர்மானங்களைப் பிரேரேபித்தார்:-

"வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உத்தேசம் நிறைவேறிவிட்டதால், சத்தியாக்கிரகத்தை இன்று முதல் நிறுத்திவிட வேண்டுமென்றும், திருவாங்கூரிலுள்ள எல்லாச் சாலை களிலும், எல்லா ஜாதியாரும் நடக்க அரசாங்கத்தார் உதவியா யிருப்பதைப் பார்க்க அதிக சந்தோஷமடைவதோடு, கோயி லுக்குள்ளிருக்கும் தீண்டாமையையும் ஒழிக்க எல்லா இந்துக்களும் கிளர்ச்சி செய்ய வேண்டுமென்றும், தெருக் களில் சுவாதீனமாய் நடக்கும் உரிமையை ரீஜண்டு மகா ராணியார் அநுபவத்தில் நடக்க உதவி செய்ததற்கு இக் கூட்டம் மனமார்ந்த நன்றி செலுத்துவதோடு கோயிற்பிர வேசத்திற்கும் இதே உதவி செய்வாரென்று எதிர்பார்க்கிறது என்றும், மகாத்மா காந்தியிடம் நம்பிக்கை இருப்பதோடு அஹிம்சா தர்மத்தைக் கண்டிப்பாகக் கைக்கொள்ள வேண் டியது என்றும், வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு பலவிதத்திலும் உதவி செய்த பொது ஜனங்களுக்கு இக்கூட்டம் நன்றி செலுத்துகின்றது" என்றும், தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேறின.

ஸ்ரீமான் ஈ. வெ.ராமசாமி நாயக்கர்.

முடிவுரையில், தனக்கும், தமது மனைவிக்கும், செய்த உபசாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாக்கிரக இயக்கத்தின் ஜெயிப்பைப்பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்து விடவில்லையென்றும், தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அநுப் பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாக்கிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்குமென்றும், சத்தியாக்கிரக ஆரம் பத்தில் பிராமணர்கள் கக்ஷியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விரோதமாகவே தீண்டாதா ரென்போரைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிற போது நமக்கே சத்தி யாக்கிரகத்தின் தன்மையைப்பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறதென்றும் கூறியதுடன், சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அநுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம்; பலாத் காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். 

சத்தியாக்கிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனி தனுக்கு மனிதன் பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாதென்பதுதான். அந்த தத்துவம் இந்தத் தெரு வில் நடந்ததோடு முடிந்து விடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்தரத்தைக் கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை. மகாத்மா காந்தியும், மகாராணி யாரைக் கண்டு பேசிய காலத்தில், மகாராணியார் மகாத்மா வைப் பார்த்து இப்பொழுது தெருவைத்திறந்து விட்டு விட் டால் உடனே கோயிற்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்க ளேயென்று கேட்டார்கள். மகாத்மா அவர்கள் ஆம், அது தான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டிய ஜனங்கள், போதுமான பொறுமையும், சந்தமும், அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கின்றார்களாவென்று, அறியும் வரையில் அக்காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண் டிருப்பேனென்றும் சொன்னார்.

வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு விரோதியாயிருந்தவர் கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிறிஸ் துவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற்காவது செல்லலாமே யொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்ட மில்லை. ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதானால் பொருளில்லாத- அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்ளு வதோடு, 'பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத்தினம் நமது சுதந்தரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்க ளும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப் பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள், என்று சொல்லி மறுபடியும் தனக்காகவும், தன் மனைவிக்காகவும் செய்த உபசாரங்களுக்கு நன்றி செலுத்திக் கூட்டத்தைக் கலைத்தார்.

- குடிஅரசு, 6.12.1925

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

 

 தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு

என்னென்ன திட்டங்கள்?

9

வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30 ஆம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ் நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும்.  போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும்,  வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு அழைப் பாளராகப் பங்கேற்கிறேன்.  வைக்கம் போராட்டம் நடை பெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

2. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழி பெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

3. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகிய வற்றின் கூட்டு வெளியிடாக இது வெளியிடப்படவுள்ளது.  இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

4. இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். 

5. எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடு பட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமை கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். 

6. கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

7. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்குட்டி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். 

9. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத் தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓராண்டு முழுவதும்...

10. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப் புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும்.  இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். 

11. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும்.

இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

10

சென்னை, மார்ச் 30- வைக்கம் போராட்ட தள நாயகர் தந்தை பெரியார் செயற்கரும் செயல்கள் குறித்து ஓராண்டு முழுவதும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு சிறப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தும் என்று சட்டப்பேரவையில் இன்று (30.3.2023) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினைப் பிரகடனப்படுத்தினார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று வரலாற்றிலே ஒரு முக்கியமான நாள்.  1924 ஆம் ஆண்டு, மார்ச் 30 அன்று, மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று.  (மேசையைத் தட்டும் ஒலி)  

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் தந்தை பெரியாரைப் போற்றும் விதமாக, (மேசையைத் தட்டும் ஒலி) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை வரிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு

பொங்குற்ற வேங்கை போல்

நிமிர்கின்ற பார்வை உண்டு


செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு

வெண் சங்கொத்த கண்களிலே

விழியிரண்டும் கருவண்டு

அதில் சாகும்வரை ஒளி உண்டு!

பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் 

இவரோ, படுகிழமாய்ப் போன பின்னும்

பம்பரமாய்ச் சுற்றி வந்தார்; (மேசையைத் தட்டும் ஒலி)

எரிமலையாய்ச் சுடுதழலாய்

இயற்கைக் கூத்தாய்

எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடி ஒலியாய்

இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீசாய்

ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்

எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்.

இவை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எழுதிய கவிதை வரிகள்.

தி.மு.க. ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக, 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்றார்  பேரறிஞர் அண்ணா.  (மேசையைத் தட்டும் ஒலி) உடனடியாக பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் முதலானோர், திருச்சி சென்று பெரியாரைத்தான் முதன்முதலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசும், இப்போது தந்தை பெரியார் காட்டிய சமூக முன்னேற்றப் பாதையில்தான் பயணிக்கிறது.  

“ஈ.வெ.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன்.  இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு, தொண்டாற்றி  வருகிறேன்” என்று அறிவித்து, 95 வயது வரை, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காக சமூகநீதியை நிலைநிறுத்திடவும் அவர் நடத்திய சுயமரியாதைப்  போராட்டங்கள் பற்பல.  அவற்றில் மிக முக்கியமான போராட்டம்தான் வைக்கம் போராட்டம். 

சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம்!

1924-1925 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது; இந்தியாவின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது; ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால், அது மிகையல்ல. 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம்.  1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அந்தப் போராட்டம்.  அந்தப் போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, அதே பகுதியைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் இன்றி போராட்டம் தவித்தது. இந்தச் சூழலில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தார். வெகுமக்களிடம் அந்தப் போராட்டம் குறித்து பரப்புரை செய்து, போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். போராட்டக் காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார்.  முதல்முறை, ‘அருவிக் குட்டி’ என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில், ஒருமாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்குமாதக் கடுங்காவல் தண்டனையை, திருவனந்தபுரம் சிறையில் கழித்தார். மற்றவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள் போல நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்களின் கையிலும், காலிலும் விலங்கு போடப்பட்டு, கழுத்தில் மரப்பட்டை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார்.  சாதாரண கைதியைப் போலவே தந்தை பெரியார் நடத்தப்பட்டார். 

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே திரும்பாமல், வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார்.  வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையில் இருந்தார்; 67 நாட்கள் அங்கேயே தங்கி போராடினார்; மக்களைத் திரட்டினார்.  ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29 ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாரைப் பாராட்டினார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. அவர்கள்.  'திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது' என்று சுதேசமித்திரன் இதழில் எழுதினார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

போராட்டக்காரர்களுக்கும், மன்னருக்குமான பேச்சுவார்த்தையை நடத்திய அண்ணல் காந்தியடிகள் அவர்கள், தந்தை பெரியாரையே உடன் அழைத்துச் சென்றார்.  கோயில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையைப் பெற்றுத்தந்த வெற்றி விழாவுக்கு, தந்தை பெரியாரும், நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள்.  1929 ஆம் ஆண்டு மகர் போராட்டத்தைத் தொடங்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தனக்கு ஊக்கமளித்த போராட்டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார்.  இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.  இன்று வரையில் வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா” நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் உண்மையிலேயே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.   (மேசையைத் தட்டும் ஒலி)

ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து,  பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது, இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய  பெருமை.  அத்தகைய பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும்போது, வைக்கம் நூற்றாண்டு விழா வருவது பொருத்தமான ஒன்று.    சாதாரண இராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக வளரக் காரணமான போராட்டக் களம் அது.  அத்தகைய சமூக சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களாக இன்றைய இளைய சமுதாயம் திகழ, இதுபோன்ற கடந்தகால வரலாறுகளை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டும் 

சொந்தமானவர் அல்ல!

பெரியார் என்பவர், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் மொழி கடந்தவர்; நாடு கடந்தவர் என்பதை அவரது கருத்துகளின், செயல்களின் மூலம் நிரூபித்துக் காட்டியவர்.  சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவை உலகளாவிய கொள்கைகள்.  நேற்றைய கிளர்ச்சிக்கும், இன்றைய  முயற்சிக்கும், நாளைய வளர்ச்சிக்கும் அடிப்படையானவை தந்தை பெரியாரின் கருத்தியல்கள்.  அத்தகைய சுயமரியாதைச் சமதர்மப் பாதையில் நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படும் என்பதைத் தெரிவித்து, அமைகிறேன்.  (மேசையைத் தட்டும் ஒலி)

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்ற 

அனைத்துக் கட்சியினர்!

வைக்கம் அறப்போராட்ட நூற்றாண்டு விழா முதலமைச்சர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினர் வரவேற்பு.

வைக்கம் அறப்போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுவது குறித்து சட்டமன்றத்தில் இன்று (30.3.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற விதி 110இன்கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசியதை வரவேற்று தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈசுவரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சதன்திருமலைக்குமார் (மதிமுக), இராமச்சந்திரன் (சிபிஅய்), நாகை மாலிக் (சிபிஎம்), சிந்தனைசெல்வன் (விசிக), நயினார் நாகேந்திரன் (பாஜக), கோ.க.மணி (பாமக). ஒ.பன்னீர்செல்வம் (மேனாள் முதலமைச்சர்), ப.தனபால் (அதிமுக), செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் வழிமொழிந்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து உரையாற்றினர்.

வைக்கம் போராட்டம் - பரிணாமம்!

   

வைக்கம் போராட்டம் 

தொடங்கிய நாள் 30.03.1924

9

போராட்டத்தில் கலந்து கொண்ட 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெரியாருக்கு அழைப்பு வருகிறது.

போராட்டம் தொடங்கி 14ஆம் நாள். அதாவது 13. 4 .1924 அன்று. வைக்கம் வந்து சேர்ந்தார் பெரியார்.

வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் இரண்டு முறை கைது செய் யப்பட்டார்.

முதல் கைது: 22.5.1924 முதல் 21.06.1924 வரை அருவிக்குத்தி சிறைச்சாலை. 

சிறையில் இருந்த நாட்கள் 31

இரண்டாவது கைது: 18.07.1924 முதல் 31.08.1924 வரை திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில் சிறைச்சாலை. 

சிறையில் இருந்த நாட்கள் 44

1924 மற்றும் 1925 ஆம் ஆண்டு களில் போராட்டத்திற்காக பெரியார் வைக்கம் சென்றது 7 முறை

பிரச்சாரம் செய்த நாட்கள் 67.

சிறையில் இருந்த நாட்கள் 74

வைக்கத்தில் எல்லாத் தெருக் களிலும், எல்லோரும் நடக்கலாம் என, திருவாங்கூர் அரசி ஆணை பிறப்பித்த நாள்: 21.11.1925

1925 நவம்பர் 21 மற்றும் 22 தேதி களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, வைக்கம் போராட்ட வெற்றிக்காகப் பெரியாருக்குப் பாராட் டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. (தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய மாநாடும் இதுதான்)

வைக்கத்தில் வெற்றி விழாக் கூட்டம் நடைபெற்ற நாள்: 29.11.1925

தலைமை: மன்னத்து பத்மநாபன்.

தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டவர் தந்தை பெரியார் மட்டுமே.

வைக்கம் பொன்விழா நடை பெற்ற நாள்: 26.4.1975

அன்னை மணியம்மையாரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணியும் கலந்து கொண்டார்கள்.

தந்தை பெரியாரின் அரும் பணியைப் பாராட்டி ‘வைக்கம் வீரர்’ என்று பட்டம் கொடுத்தவர் திரு.வி.க.

* தமிழ்நாட்டில் மிக முக்கிய மான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்டம்‘ என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

* தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியீடாக இது வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை இன்று (29.11.2023) முதலமைச்சர் வெளியிட்டார்.

தந்தை பெரியார் பிறந்த 

நாளில் வைக்கம் விருது

10

* எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவு கூரும் வகையில், பிற மாநிலங் களில் ஒடுக்கப்பட்டவர்கள் நல னுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங் களுக்கு ஆண்டுதோறும் வைக் கம் விருது சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

* கேரள மாநிலம் வைக்கத் தில் அமைந்துள்ள பெரியார் நினை விடத்தை நவீனமுறையில் மறுசீர மைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட் கள் கூடுதலாக இடம் பெறுவ தற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் படும்.

* தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக் குட்டி கிராமத்தில் பெரியார் நினை விடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

* வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டின் முக்கிய பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் வைக்கம் போராட்டம் தொடர் பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும்.

ஓராண்டு முழுவதும்...

* வைக்கம் போராட்ட நூற் றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க் கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய் யப்படும். இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். 10 வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல் வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற் றாண்டு மலர் ஒன்று தமிழரசு பத்தி ரிகை மூலம் கொண்டு வரப்படும்.


வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா! - தந்தை பெரியாரின் நினைவலைகள்!

 

வைக்கம் போராட்டம் 

- தந்தை பெரியாரின் நினைவலைகள்!

2

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது தந்தை பெரியார் அவர்கள் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்:-

இந்த மாதவன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாய தலைவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.பி. கேசவமேனன் இவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். முறை ஜெபத்தன்று ஆரம்பிப்பது என்ற முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கலா மென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால் அந்த ஊரில்தான் ஊர்நடுவில் கோயிலும் அதன் 4 வாசலுக்கு எதிரிலும் 4 நேர் வீதிகளும் கோயில் மதில்கள் சுற்றிலும் தெருக்கள் பிரகாரம் எல்லாமும் இருக்கும்.

தீண்டாமைக் கொடுமை

அந்த வீதிகளில் கீழ்ஜாதிக்காரர்களான அவர்ணஸ்தர்கள் எல்லோரும் ஆயித்தக்காரர்கள் எனப்படும் தீண்டாதாரும் நான்கு புறத்திலும் கோயில் வாசல்களுக்கு முன்னால் நடக்கக்கூடாது; மூன்று ஃபர்லாங் தூரத்திலேயும் 4 ஃபர்லாங்கு தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில் கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக் கொண்டுதான் எதிர்ரோட்டுக்குப் போகவேண்டும். ஆயித்தக்காரர் தீண்டப்படாதவர்களைப் போலவேத்தான் ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக்கூடாது.

இதே மாதிரிதான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த ராஜ்யத்தில் உள்ள மற்ற கோயில்கள் பக்கமும் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

வைக்கத்தில் கோவிலுக்குப் பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில்தான் எல்லா முக்கிய ஆஃபீசுகளும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ இன்ஸ்பெக்டர்களையோ குமாஸ்தாக்களையோ மாற்றுவதனாலுங்கூட கீழ்ஜாதியார்களை அங்கு மாற்றமாட்டார்கள். ஏனென்றால் அந்த போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுகள் இருக்கும் இடத்திற்குப் போக கீழ்ஜாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் முக்கியமான கடைகளும் அந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ஜாதிக் கூலிகள் அங்கு செல்ல முடியாது.

போராட்டமும் கைதும்

சத்தியாக்கிரகம் ஆரம்பமானவுடன் வக்கீல் மாதவன், பாரிஸ்டர் கேசவமேனன், டி.கே. மாதவன், ஜார்ஜ் ஜோஸஃப் முதலியவர்களைப் போல் சுமார் 19 பேரை ராஜா அரஸ்ட் செய்யும்படி உத்தரவிட்டு அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தினசரி ஒருவர் வீதம் கைது செய்து அவர்களை மாத்திரம் தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் கைதிகளாக நடத்த உத்தரவிட்டார்கள். அப்போது இராஜாவிடம் மிஸ்டர் பிட் என்ற ஒரு வெள்ளைக்காரர் போலீஸ் அய்.ஜி.யாக இருந்தார். அவர் இந்த சத்தியாக்கிரகத்தை வெகு சாமர்த்தியமாகவும் ரொம்பவும் ஜாக்கிரதையாகவும் சமாளித்தார். இந்த பத்தொன்பது பேரைப்பிடித்து உள்ளே போட்டுவிட்டவுடன் அடுத்து சத்தியாகிரகத்தில் ஈடுபட யாரும் ஆள் கிடைக்கவில்லை. அதோடு அதுவும் நின்றுவிடும் போலத் தோன்றியது. உடனே எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசஃபும், கேசவமேனனும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள். நீங்கள் வந்துதான் இதற்கு உயிர் கொடுக்கணும்; இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்றாலும் பெரிய காரியம் கெட்டுப் போகுமே என்றுதான் கவலைப்படுகிறோம். உடனே நீங்கள் வந்து பொறுப்பு ஏற்கவேண்டும் என்று எழுதி அனுப்பினார்கள். எனக்கு ஏன் எழுதினார்கள் என்றால் தீண்டாமையைப் பற்றி பேசுவதில் நான் கெட்டிக்காரன், கிளர்ச்சியிலும் நான் கெட்டிக்காரன் என்று எனக்குப் பேர். நான் அப்போது சுற்றுப்பிரயாணத்தில் இருந்தேன்.

ஈரோட்டிற்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் ரீ டைரக்ட் செய்யப்பட்டு மதுரை ஜில்லாவில் உள்ள பண்ணபுரம் என்ற ஒரு மலைப்பக்க கிராமத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவன் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்தபோது என் கைக்குக் கிடைத்தது.

திடீர் பயணம் போருக்கு!

உடனே மீதி சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை எல்லாம் ஒத்திப்போட்டுவிட்டு நேரே ஈரோட்டுக்குப் போனேன். வீட்டுக்கு வந்தவுடன் வைக்கத்திற்குப் போய் சத்தியாக்கிரகத்தை நடத்துவதென்று மிக்க மகிழ்ச்சியோடு மூட்டைக் கட்டிவிட்டேன். திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கும் நான் வரும் வரைத் தலைமைப் பதவி ஏற்றுக்கொள்ளும் படி ஒரு லெட்டர் எழுதிவிட்டு இந்த சந்தர்ப்பம் ஒரு நல்லவாய்ப்பு - இதைவிட்டால் இந்த மாதிரி அருமையான வேலை செய்ய வேறு வாய்ப்புக் கிடைக்காது என்று எழுதி விட்டு 2 பேரைக் கூட்டிக்கொண்டு வைக்கத்திற்கு வந்தேன்.

எதிர்பாராத வரவேற்பு

வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்துகொண்டு, போலீஸ் கமிஷ்னர் பிட்., இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் போலீஷ்காரர் சுப்ரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும்போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள் எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித்தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வரவேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும்  ஏன் மகாராஜா அப்படி செய்தார் என்றால், அதற்கு 3-மாதத்திற்கு முன்பு இந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து ஒருநாள் ஈரோட்டிலே தங்கிவிட்டு அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிப் போவது வழக்கம். அப்படி ஈரோட்டிலே தங்கும்போது அதற்கு வேண்டிய வசதிகளையும், மகாராஜாவின் சிப்பந்திகள் தங்கும் இடம் எங்கள் சத்திரத்திலும், மகாராஜா எங்கள் பங்காளவிலும்தான் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி 3 மாதத்திற்கு முன்வந்தபோது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி இன்னும் இராஜாவுக்கு உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில் இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர் களாகவும் நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது சந்தித்துப் பேசியவர்களாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதை காட்டினார்.

எனது தீவிரப் பிரச்சாரம்

சத்தியாக்கிரகத்தை தொடர்ந்து நடத்தவந்த என்னை மகாராஜா சார்பில் இந்த பெரிய அதிகாரிகளே வரவேற்கிறார்கள் என்று கண்டதும் அப்பக்கத்திய பாமரமக்களுக்கு ஒரே குஷாலாக ஆகிவிட்டது. என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலுங்கூட நான் பல இடங்களிலும் சென்று பொதுக் கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினேன்; காரசாரமாகப் பேசினேன்! கீழ்ஜாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுப்பட்டுவிடும், செத்துப்போகும் என்று சொல்லும் வைக்கத்தப்பனை போட்டு வேட்டி துவைக்கணும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன். சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடி விட்டார்கள். அது இராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5-6 நாள் வரை சும்மாதான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு இராஜாவினால் சும்மா இருக்கமுடியவில்லை.

தடைச் சட்டத்தை மீறினோம்

இப்படி சுமார் 10 நாள் ஆனவுடனேயே ஒரு போலீசு (சூப்பிரண்ட்) அதிகாரி அவர் அய்யங்கார். அவர் முயற்சியால் பி.சி.26-இன்படி தடையுத்தரவு போட்டார். அந்த நாட்டிலே 26 என்பது இப்போது இங்கே 144 தடையுத்தரவு போன்றது, நானும் சட்டம் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசினேன். என்னுடன் (தற்போது காங்கிரஸ்காரராக இருக்கும்) திரு. அய்யா முத்து அவர்களும் மற்றும் இருவரும் சட்டம் மீறினோம், எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங்காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலிலே வைத்தார்கள்! அதற்குப் பிறகு எனது முதல் மனைவியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் எனது தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகிவந்து அதேமாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.

கிளர்ச்சிக்குப் பெருத்த ஆதரவு

நான் வெளியே வருவதற்குள் இந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது; மளமளவென்று ஆட்களும் வந்துசேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதியிலும் சென்று சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.

ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே இருந்தது! வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும், ஜாதிக்கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து அதற்கு தங்கள் எதிர்ப்பையும் ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூ.50, 60, 100 என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.

பெரியபந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200-300 பேர் சாப்பிடுவார்கள். தேங்காயும் மற்ற காய்கறிகளும் மலைமலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கல்யாணவீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்!

பார்ப்பனர் நடுங்கிவிட்டனர்

திரு. இராஜகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம்நாட்டை விட்டு இன்னொரு நாட்டிலேயே போய் ரகளை செய்கிறாய்? அது சரியல்ல, அதைவிட்டுவிட்டு நீ இங்கு வந்து விட்டுவிட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று எழுதினார். அப்போது இருந்த எஸ்.சீனிவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச் சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால் இதற்குள் சத்தியாகிரக ஆசிரமத்தில் 1000 பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும் தொண்டர்கள் ஊர்வலமும் நடந்தது; உணர்ச்சி வலுத்துவிட்டது.

பஞ்சாபியர் ஆதரவு

பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20-30 ஆட்களையும் இரண்டாயிரம் ரூபாயும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொள்ளும் ஆதரவு தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாம் சீக்கியர்கள் வந்து இந்து மதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.

காந்தியார் எதிர்த்தது

உடனே அதன் பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்துவன், சீக்கியன் ஆகிய பிறமதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று எழுதிவிட்டார்கள்.

காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிறிஸ்துவன் எல்லாம் போய் விட்டார்கள். அதுபோலவே தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசஃப் ஜார்ஜூக்கும் இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். “இந்து மதசார்புள்ள இந்தக் காரியத்தில் நீ சேர்ந்திருப்பது தப்பு” என்றார்.

போரை நீடிக்க எங்கள் உறுதி

அதை ஜோசஃப் ஜார்ஜ் அவர்கள் லட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார்; “நான் என் சுயமரியாதையை விட்டுவிட்டு இருக்கமாட்டேன். வேண்டுமானால் என்னை விலக்கிவிடுங்கள்” என்றார் தற்போதைய நாகர்கோவில் பயோனீர் டிரான்ஸ் போர்டைச் சேர்ந்த சேவு என்பவரும் அண்மையில் காலஞ்சென்ற டாக்டர் எம்.இ.நாயுடு (திரு எம்.எம்பெருமாள் நாயுடு அவர்கள் இந்தப் பேச்சுக்கு முதல்நாள் இரவு நாகர்கோவிலில் காலமானார். பிறகு தந்தை பெரியார் சென்று துக்கம் விசாரித்தார் என்பதை வாசகர்கட்கு நினைவூட்டுகிறோம்) அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போகமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள் என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோதமாக எழுதி பணத்தையும் ஆளையும் தடுத்து விடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

காந்தியார் எதிர்த்தும் போர் தொடர்ந்தது

அந்தச் சமயம் சாமி சித்தானந்தா அவர்கள் வைக்கம் வந்துதான் பணத்திற்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோதமாகவே சத்தியாக்கிரகம் நடந்து வந்தது. 

இதற்கிடையிலே நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. எங்கள் போராட்டத்திற்கு பெரிய மரியாதையையும் செல்வாக்கையும் தேடிக் கொடுத்துவிட்டது. இந்த காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக்காவல் விதித்து ஜெயிலில் போட்டுவிட்டார். பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலிலே இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும் சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்ருசங்காரயாகம் என்ற ஒன்றை வெகுதடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச்சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன். என்ன சேதி இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? இந்தப்பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான்; “மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்து மகாராஜா நேற்று இராத்திரி திருநாடு எழுந்துவிட்டார்” என்றான்.

அதாவது இராஜா செத்துப்போனார் என்று சொன்னான். அவ்வளவுதான் மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும் அந்த யாகம் சத்தியாக்கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.

இராணியின் ராஜிமுயற்சியும் பார்ப்பனர் சூதும்

இராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே இராணி பேசக்கூடாது என்று கருதி, திரு. இராஜ கோபாலாச்சாரிக்கு கடிதம் எழுதினார். இராஜகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் இராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும் புகழும் வந்துவிடுமே! அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்டவேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை; எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக்கொண்டேன்.

சமரசப் பேச்சு

காந்தியும் புறப்பட்டு வந்தார். இராணியோடு காந்தி பேசினார் (இப்படி இந்த சத்தியாக்கிரகம் நல்லபடி வேரூன்றி வெற்றி நிலைக்கு வந்தவுடன் பார்ப்பனர்கள் காந்தியை இதில் புகுத்தினார்கள்.)

இராணி காந்தியோடு பேசியபோது இராணி தெரிவித்தார்கள்; ‘நாங்கள் ரோடுகளைத் திறந்து விட்டுவிடுகிறோம். ஆனால் அதைவிட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமைவேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம்’ என்றார்கள். உடனே காந்தி டீபியில் தங்கி இருந்த என்னிடத்தில் வந்து இராணி சொன்னதைச் சொல்லி “என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டுவிடுவது நல்லது” என்றார். நான் சொன்னேன்; Public ரோடு திறந்து விடுவது சரி; ஆனால் அதை வைத்துக்கொண்டு கோயிலைத் திறந்துவிடும்படி கேட்கமாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும், எனது இலட்சியம் அதுதானே (கோயில் நுழைவு)? அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் இராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள் ‘இப்போதைக்கு இம்மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்சநாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால் தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப் படலாம்’ என்று சொல்லுங்கள்” என்று சொன்னேன்.

அதை காந்தி இராணியிடம் சொன்னவுடன் இராணியார் ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று சொல்லி பொது ரோடாக ஆக்கினார்கள்.

(8-1-1959 அன்று கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களிலும் சுற்றுப் பயணத்தின்போது பெரியார் ஈ.வெ.ரா ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை'8-1-1959)


 

செல்லரித்துப்போன செல்போன் புளுகுகள்! (நேர்மையின் குறியீடு:பெரியார்)

 

 நேர்மையின் குறியீடு:பெரியார்

கி.தளபதிராஜ்

10

காங்கிரசின் கதர் நிதியை களவாடி விட்டாராம் பெரியார். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவாள் பாட்டனும் பூட்டனும் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டையை மீண்டும் இப்போது சந்தைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கிறார் ஒரு பேர்வழி.

1935 ஆம் ஆண்டு பூனாவிலிருந்து வெளிவந்த ‘மராட்டா’ என்ற பத்திரிகை திலகர் சுயராஜ்ய நிதியை திருடியதாக ஒரு சில காங்கிரஸ்காரர்களின் பட்டியலை வெளி யிட்டு இருந்தது.

ராஜகோபாலாச்சாரியார் அட்வான்ஸ் தொகையாக வாங்கிய 19,000 ரூபாய் ஸ்வாஹா! பிரகாசம் பந்துலுக்கு கொடுக்கப் பட்ட 10,000 கடன் தொகை அபேஷ்! என ஏழு குற்றச்சாட்டுகளை அது அடுக்கியிருந்தது.

பெரும்பாலான குற்றச்சாட்டுகளில்  பார்ப் பனர்களுக்கு தொடர்பு இருந்ததால் அவா ளுக்கு ஆதரவாக வேட்டியை வரிந்து கட்டி பதில் அளிக்க முனைந்தது தினமணி. 

“ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து செல விட்டதில் ஏதோ சில தொகைகளை திரும்ப கொடுக்க முடியாமல் சில காங்கிரஸ்காரர்கள் கஷ்டப்படலாம். ஆனால், மோசம் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ளவில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேச பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாகிவிட்டதால் மூழ்கிப் போவது ஒன்றுமில்லை” என்று எழுதியது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாய் அநேக ஆண்டுகள் இருந்த தோழர் பி.வி.மகாஜனோ, ‘சுயநலக் கடலில் மூழ்கி மறைந்தது ஒரு கோடி ரூபாய்!’ என்று விளக்கமளித்திருந்தார். அதையும் குடிஅரசு எடுத்து வெளியிட்டது.

‘ஆச்சாரியார் தம்மிடம் கொடுக்கப்பட்டு உள்ள பணத்திற்கு கணக்கு விவரங்களையும், மீதப் பணத்தையும் திரும்ப கொடுத்து விட் டதை ரிப்போர்ட்டுகளில் பார்க்கலாம்‘ இதில் ஊழல் ஒன்றுமில்லை என்பதாக தினமணி எழுதியது.

அப்படி ‘ரிப்போர்ட்’ எதுவும் எழுதப்பட வில்லை என்பதுதான் மாஜி காங்கிரஸ் காரியதரிசி தோழர் மகாஜன் அவர்களுடைய குற்றச்சாட்டு! ரிப்போர்ட்டுகள் எழுதப்பட்டது உண்மையானால், அந்த ரிப்போர்ட்டுகளை தினமணி பிரசவிக்கட்டும்! என சவால் விட்டது குடிஅரசு.

“முட்டாள்களின் பணத்தை மோசக்காரர் கள், வஞ்சகர்கள் வசூலித்து வயிறு வளர்ப்பது இயற்கை என்றாலும், அந்தப் பணமானது மற்ற சாதுக்களுக்கும் உண்மையான தொண்டு புரியவர்களுக்கும் இடையூறாக இருக்குமா னால் இனியும் மக்களை ஏமாற்றி வசூலிக் காமல் இருப்பதற்கும், முட்டாள்கள் மோசம் போகாமல் இருப்பதற்கும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது உண்மை யான ஊழியர்களின் கடமை அல்லவா?” என்றும் குடிஅரசு எழுதியது.

1922, 23, 24, 25ல் காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்களான டாக்டர் ராஜன் சாஸ்திரி யார், எம்.கே.ஆச்சாரியார், சந்தானம் அய்யங் கார், சுப்பிரமணியம் முதலியவர்களும் மற்றும் சேலம் பார்ப்பனர்கள், திருநெல்வேலி பார்ப்பனர்கள், சென்னைக்காரர்கள் முதலிய சகல பார்ப்பனர்களும் தாங்கள் வாங்கிய பணத்திற்கு சரியான கணக்கு கொடுத் தார்களா? எவ்வளவோ ஆயிரம் ரூபாய் இவர்கள் பேரிலிருந்து சரியான வகையும் பொறுப்பும் தெரியாமல் வசூலிக்க முடியாமல் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வரவு வைத்து செலவு எழுதப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த கூட்டத் தில் சேராமல் இன்று எந்த காங்கிரஸ் பார்ப் பனராவது யோக்கியமாய் இருக்கிறார்களா? என்றும் கேட்டது.

மற்றும் எத்தனையோ பார்ப்பனர்கள் கதர்க்கடையில் இருந்து பணம் பச்சையாக திருடிக் கொண்டு போய் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் நடத்தாமல் விடப்பட்டிருக் கிறது என்பது பொய்யா? என்று குடிஅரசு கேள்வி எழுப்பியது.

குடிஅரசின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற ஒரு காங்கிரஸ் பத்திரிகை பெரியார் கதர்நிதியை சரிவர ஒப்படைக்கவில்லை என்றும், ஆதிநாராய ணன் எழுதிய கணக்கு அறிக்கையை பார்த் தால் ஈ.வெ.ரா யோக்கியதை வெளியாகும் என்றும் எழுதியது.

இதைத்தான்  இப்போது இணையதளத்தில் மீண்டும் வாந்தி எடுத்திருக்கிறார் ஒரு பேர் வழி. கதர்நிதியில் ஊழல் செய்ததால் தான் காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேற்றப் பட்டதாக உளறியிருக்கிறார்.

ஆதிநாராயணன் பெரியார் மீது குற்றம் சுமத்தி அறிக்கை விட்ட பிறகுதான் பெரியார் மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசியா கவும், காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், மாகாண கான்ஃபரன்ஸ், ஜில்லா கான்ஃபரன் ஸுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கான்ஃப ரன்ஸுகளுக்கு தலைவராகவும், கதர் போர் டுக்கு 5 வருட தலைவராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டார் என்பதெல்லாம் இந்த பேர் வழிக்குத் தெரியுமா?

பெரியார்மீது குற்றம் சுமத்திய அந்த ஆதி நாராயணன் யார்?

“ஈரோட்டைப் பொறுத்தவரை கதர் நிதி தொடர்பாக 500 ரூபாய் விஷயமாக  எந்த நபரிடம் பாக்கி இருந்ததோ அந்த நபரை காரியதரிசியாக இருந்த சந்தானம் அய்யங் காரே பல தடவை நேரில் சந்தித்து பகுதி வசூல் செய்து, பகுதி வசூல் செய்யாமல் அலட்சியமாய் விட்டுவிட்டார்” என்று நடந்த விஷயத்தை உண்மை நிலவரத்தை எடுத்து ரைத்தது. இந்த 500 ரூபாயைத்தான் இணை யக் காணொளியில் ஏழாயிரத்து அய்நூறு என்று இப்போது கயிறு திரித்திருக்கிறார் இந்த ஆசாமி.

வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து பெரியார் கடுமையாக போராட்டத்தில் ஈடுபட்டபோதும், சத்தியாகிரக பணத்திற்கு அவர் முறையான கணக்கு காட்டவில்லை என்ற இதே புரளியை சில பார்ப்பனர்களின் தூண்டுதலால்  அப்போதும் கிளப்பினர்.

வைக்கம் சத்தியாகிரகத்திற்கு அட்வான் சாக பெறப்பட்ட ஆயிரம் ரூபாயில் 700 ரூபாய் வைக்கம் சத்தியாகிரக காரியதரிசியி டம் கொடுத்ததையும், மீதம் 300 ரூபாயில் பாலக்காடு சவுதி ஆசிரமத்திற்கு கதருக்கு பஞ்சு வாங்கி அனுப்பியதையும், அது போக மீதி நூற்றுச் சில்லரை ரூபாய் கோர்ட்டார் சத்தியாகிரகத்திற்கு கொடுக்கப்பட்டதையும் ரசீதுகளோடு, தான் காங்கிரஸ் காரியால யத்திற்கு அனுப்பியதையும், அதை அவர்கள் தவற விட்டு விட்டு மீண்டும் கணக்கு கேட் டதால் தான் மறுபடியும் ஒருமுறை கணக்கு களை ரெஜிஸ்டர் தபாலில் அனுப்பியதையும் விளக்கி பொய்யர்களின் வாயை அப்போதே அடைத்தார் பெரியார்.

கதர் நிதி 500அய் இந்த ஆசாமி ஏழா யிரத்து அய்நூறு என்று திரித்ததுபோல் அன்றைக்கிருந்தவர்கள் சத்தியாகிரக அட் வான்ஸ் பணம் ஆயிரத்தை பத்தொன்பதா யிரம் என்று சொன்னார்கள்.    

“தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றுவரும் கதர் இயக்கம் ஈ.வெ.ரா வினாலேயே பலம டைந்தது. அவர்தாம் கதரை காங்கிரசோடு பிணைத்தார். காங்கிரஸ் கதர் வஸ்திரால யங்கள் அவரால்தான் ஏற்படுத்தப்பட்டன. அதுவரை தனிப்பட்ட வியாபாரிகள் கொள் ளையடித்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார்!” என்று நவசக்தியில் எழுதினார் திரு.வி.க.

பார்ப்பனர்களின் கொள்ளையைத் தட் டிக்கேட்ட பெரியார் மீது ஊழல் குற்றச் சாட்டை ஏவிவிட்டது பார்ப்பனீயம். அவர்க ளது பாச்சா அன்று பலிக்கவில்லை. பெரியார் மீது குற்றச்சாட்டை வைத்த ஆதிநாராயணன் தான் பின்னாளில் அந்தப் பதவியிலிருந்தே தூக்கி எறியப்பட்டார்.

அன்றைக்கே செல்லுபடியாகாத அந்த அண்டப் புளுகை மீண்டும் செல்போன்களில் உலவவிட்டு நோட்டம் பார்க்கிறார்கள்.    

பெரியார் ஈரோடு நகரசபை தலைவராக இருந்த போது எந்தக் கட்சியில் இருந்தார்? வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் அளிக்கப்பட்டதுதான் சேர்மன் பதவி என்றெல்லாம் வாய்க்கு வந்ததை  உளறிக்கொண்டிருக்கிறார்.

நீதிக்கட்சிக்கு போட்டியாக காங்கிரஸில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை மாகாண சங் கத்தின் துணைத்தலைவராக1917ஆம் ஆண் டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார்!

அன்னிபெசன்ட் அம்மையாருக்கு எதி ராக இராஜகோபாலாச்சாரியாரும்  விஜயராக வாச்சாரியும் சென்னையில் உருவாக்கிய நேஷனல் அசோசியேஷன் அமைப்பில் தமிழ்நாடு காரியதரிசியாக இருந்தவர் பெரியார்!

ஈரோடு நகரசபைக்கு தலைவராக மக் களால்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார். பெரியார் ஈரோடு நகரசபை தலைவராக இருந்தபோது ராஜாஜி சேலம் நகர சபைத் தலைவராக இருந்தார். பெரியாருக்கு வெள் ளைக்காரர்களால் பதவி வழங்கப்பட்டது என்றால் ராஜாஜிக்கு பதவி யாரால் கிடைத் தது? பெரியார் ஒருபோதும் பதவியை நாடி சென்றவரில்லை. தன்னைத் தேடிவந்த பதவி களை எல்லாம் துச்சமாக நினைத்தவர் பெரியார்.

“ஒத்துழையாமை சட்டவிரோதமானது. அதை அடியோடு ஒழித்துவிட வேண்டும்!” என்று வெள்ளைக்காரனுக்கு யோசனை சொன்ன சீனிவாச அய்யங்கார் போன்ற கங்காணி பரம்பரையில் பிறந்தவரல்ல எம் பெரியார். 

ஒத்துழையாமை இயக்கத்தில் பணிபுரிய வேண்டி ஈரோடு சேர்மன் பதவியிலிருந்து பெரியார் விலகிய போது ‘ராவ்பகதூர் பட்டம்‘ சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகவும் சேர்மன் பதவியை விட்டு விலகவேண்டாம் எனவும் ராஜாஜி கேட்டுக்கொண்டும் அதற்கு இணங் காமல் பதவியை விட்டு விலகியவர் பெரியார். 

கொண்ட கொள்கையில் நேர்மையாக பணியாற்றியவர். கள்ளுக்கடை மறியலின் போது தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர். 

சீனிவாச அய்யங்காரைப் போல காங்கிரஸில் இருந்துகொண்டே கோர்ட்டை புறக்கணிக்காமல் வழக்காடி பணம் சேகரித்த வரில்லை.

தன் குடும்பத்திற்கு வரவேண்டிய 50,000 ரூபாய் சொந்த பணத்தை இழந்தவர். இருபத் தெட்டாயிரம் ரூபாய்க்கு இருந்த ஒரு அட மான பத்திரத்தை ஒத்துழையாமை காரண மாய் கோர்ட்டுக்கு போய் வசூலிக்க பெரியார் விரும்பவில்லை. காங்கிரசுக்கு தலைவராய் இருந்த சேலம் விஜயராகவாச்சாரியார் இதைக் கேள்விப்பட்டு, “இந்த பத்திரத் தொகைக்காக தாவா செய்ய உங்களுக்கு இஷ்டம் இல்லையானால் நீங்கள் அதை எனக்கு மேடோவர் செய்து கொடுத்து விடுங்கள். நான் இனாமாகவே வாதாடி வசூல் செய்து தருகிறேன். அந்தப் பணத்தை அடைய உங்களுக்கு இஷ்டம் இல்லை யானால் வசூல் செய்ததும் அதை திலகர் சுயராஜ்ய நிதிக்காவது கொடுத்துவிடலாம்.” என்று பெரியாரிடம் வலியுறுத்திக் கேட்டார். ஆயினும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவ்வளவு பெரிய தொகையை மனதார இழந்தார்.  

“நானே வழக்காடுவதும் ஒன்றுதான். உங்களிடம் எழுதிக் கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்றுதான் இது என் கொள்கைக்கு ஒத்ததல்ல! கொள்கையே பெரிது! பணம் பெரிதல்ல!” என்று விஜயராகவாச்சாரியிடம் மறுத்தவர் பெரியார்!

பெரியாருக்கு முதலமைச்சர் பதவி கூட ஒரு கட்டத்தில் தேடி வந்தது. அனைத்தையும் ஒதுக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். தன் சொத்துகள் முழுமையும் இந்த இயக்கத்திற்கு பயன்படவேண்டி அதற்கான ஏற்பாட்டை செய்தவர் பெரியார். 

பார்ப்பனர்கள் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகளை  மீண்டும் சந்தையில் உருட்ட இப்பேர்வழிகள் பெற்ற  கூலி நிர்ணயம்தான் என்னவோ? பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்க இந்த கேடுகெட்ட பிழைப்பு ஏனோ?

நாகாக்க வேண்டும்!