வெள்ளி, 1 டிசம்பர், 2023

வைக்கம் போராட்ட வெற்றி என்பது ஏற்றத் தாழ்வுகள் எங்கு தலைதூக்கினாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும் ஒப்பற்ற இலட்சியத் திருநாள்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


 தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழா- வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் (1925) இந்நாள்!

வைக்கம் போராட்ட வெற்றி விழாவை எல்லா வகையிலும் சிறப்பாக நடத்திவரும் நமது முதலமைச்சருக்குப் பாராட்டுகள்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

1

வைக்கத்தில் தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு, அதன் வெற்றி விழா நடத்தப்பட்ட நாள் இந்நாள் (1925). ஏற்றத் தாழ்வுகள் எந்த வடிவத்தில் தலை தூக்கினாலும், அதனைத் தரைமட்டமாக்க உறுதி ஏற்கும் உன்னத வரலாற்றுத் திருநாள் இந்நாள் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத் திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில்  தந்தை பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை  ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துகள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 1923 மார்ச் மாதம் தொடங்கிய வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றன.

“வைக்கம் போராட்டம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியை யும் பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 30.3.2023 அன்று விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த  ஏப்ரல் ஒன்றாம் நாள் கேரளாவில் உள்ள வைக்கத்தில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதல மைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்ட வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில்,  எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய ‘‘வைக்கம் போராட்டம்'' நூலின் மலையாள மொழிப் பெயர்ப்பு வெளியிடப்பட்டது. 

இன்றைய தினமான நவம்பர் 29 ஆம் நாள், 1925 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தின் வெற்றிவிழா வைக்கத்தில் கொண்டாடப்பட்ட நாளாகும். அந்த விழாவிற்குத் தந்தை பெரியார் தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  அன்னை நாகம்மையாரும் அந்த வெற்றி விழாவில் பங்கேற்றார். 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நாளினை நினைவு கூரும் வகையில் இன்றையதினம் எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை முதலமைச்சர் வெளி யிட,  நான் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற் கான மகிழ்ச்சியையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சிறீதரா மேற்பார்வையில் செல்வகுமார் இந்நூலினை  மொழிபெயர்த்துள்ளார்.  கவுரி மீடியா டிரஸ்ட் நிறுவனத்தோடு இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செய லாளர் சிவ் தாஸ் மீனா,  பள்ளிக்கல்வித் துறை செயலா ளர் ஜெ. குமரகுருபரன்,  வைக்கம் போராட்டம் நூல் ஆசிரியர் பழ.அதியமான், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி. இரா. கஜலட்சுமி,  மொழிபெயர்ப்புப் பிரிவு இணை இயக்குநர் டாக்டர். சங்கர சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் திருப்புமுனைக் கானது. ‘மகத்' என்ற இடத்தில் பொதுக் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்கும் உரிமைப் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் நடத்தியது என்பது தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட் டத்தின் தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டம், குருவாயூர் கோவில் தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக அமைந்த தனிப்பெரும் உரிமைக் குரல் செயலி ஆகும்!

வைக்கம் போராட்டத்துக்கும், பெரியாருக்கும் சம் பந்தமில்லை என்று கொஞ்சம்கூட அறிவு நாணயமின்றி எழுதும், பேசும் பேர்வழிகள் - வரலாற்றைத் திரிக்கும் திரிபுவாதிகள் இதற்குப் பிறகாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.

வைக்கம் போராட்டம் என்பது ஏற்றத்தாழ்வுகள் எந்த வடிவத்தில் தலை எடுத்தாலும், அவை ஒழிக்கப் படவேண்டும் என்ற இலட்சியத்தைப் பறைசாற்றும். அதற்காக எந்த விலையையும் கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும் வெற்றிக்கான உந்து சக்தியாகும்!

வைக்கம் நூற்றாண்டு விழாவை எல்லா வகையிலும் வரலாற்றுச் சிறப்போடு நடத்தும் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீண்டாமை - அதற்கு ஆணிவேரான ஜாதியை ஒழிக்க நம்மை நாமே ஒப்படைத்துக் கொள்ள இந்நாளில் உறுதியேற்போம்!

வாழ்க வைக்கம் வீரர் பெரியார்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.11.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக