திங்கள், 31 அக்டோபர், 2016

உலகில் மொத்தம் 189 நாடுகளில் இருந்து இணையம் வழியாக விடுதலை நாளேடு படிக்கப்படுகிறது



தமிழர்கள் விரும்பும் விடுதலை முகநூல் பக்கம்
விடுதலையின் முகநூல் முகவரி 
(https://www.facebook.com/viduthalaidaily)
  • முகநூல் மூலம் விடுதலை இணையத்திற்கு வரும் வாசகர் எண்ணிக்கை அதிகம்.
  • மே 31 வரை விடுதலை முகநூல் பக்கத்தை 2,97,393 பேர் விரும்பியுள்ளனர்.
  • நம் கழகத்தோழர்கள், இன உணர்வா ளர்கள் அவரவர் முகநூலில் (Facebook) விடுதலை இணையத்திலிருந்து  செய்திகளை அதிகம் எடுத்து (Share) பகிர்கின்றனர்.
  • சராசரியாக நம்முடைய அனைத்துப் பதிவுகளும் வாரத்திற்கு 5 இலட்சம் முதல் 10 இலட்சம் பயனாளர்களை சென்று சேருகிறது.
  • தற்பொழுது வாரத்திற்கு 2 ஆயிரம் புதிய பயனாளர்கள் பின்தொடர்கிறார்கள்.
  • ஆண்கள் 91 சதவீத பேரும், பெண் களில் 9 சதவீத பேரும்     முகநூல் தகவல் களை பார்க்கிறார்கள்.
  • அதிகம் பார்வையிடும் முதல் 10 நாடுகள்: இந்தியா, இலங்கை, சவுதி அரே பியா, சிங்கப்பூர், மலேசியா, அய்க்கிய அரபு நாடு கள், குவைத், கத்தார், அமெரிக்கா, ஓமன்.
  • நம் கழக முக்கிய நிகழ்வுகள், ஆசிரியர் அறிக்கைகள், கட்டுரைகள், உடனுக்குடன் நம் முகநூல் பக்கத்தில் பதியப்படுகின்றன.
  • நாள்தோறும் பெரியார் நாள்காட்டி அன்றைய தேதி அடங்கிய படம் வெளி யிடப்படுகிறது.
  • பெரியார் பொன் மொழிகள், தலைவர் களின் தத்துவங்கள், நிகழ்ச்சி வீடி யோக்கள், இரண்டு நிமிட காணொளிகள் ஆகியவை யும் பதிவு செய்யப்படுகின்றன.
  • ஒரு இயக்கம்,  சார்ந்து வரும் நாளி தழின் முகநூல் பக்கமாக அதிகம் பேரால் விரும்பப்படுவது நம்முடைய முகநூல் பக்கம்தான்.
  • விடுதலையின் Twitter முகவரி: twitter.com/viduthalainews

விடுதலை இணைய வரலாறு
  • தமிழில் இணையத்தில் வெளிவந்த முதல் நாளேடு.
  • தமிழ் ஒருங்குறியை இணையத்தில் பயன்படுத்திய முதல் தமிழ்நாட்டு நாளேடு.
  • தமிழ்நாட்டு இதழ்களில் இ-பேப்பரை முதலில் பயன்படுத்திய நாளேடு.
  • 5 ஆண்டுகளுக்கும் மேலான பழைய இதழ்களின் பக்கங்கள் அனைத்தும் படிக்கக் கிடைக்கும் ஒரே நாளேடு.
  • விடுதலை தவிர உண்மை, பெரியார் பிஞ்சு, மார்டன் ரேஷ்னலிஸ்ட் இதழ் களுக்கென தனித்தனி இணைய தளங் கள் செயல்படுகின்றன.
எங்கும் படிக்கலாம் விடுதலையை
  • readwhere-ல் விடுதலை PDF  வடிவில் படிக்கலாம். படங்களாக (Image)   மற்றவர்களுக்கு பகிரலாம்.
  • விடுதலை வலைப்பூவிலும் விடுதலை படிக்கலாம். (viduthalaidaily.blogspot.com)
  • Play store, (Android), App Store (IOS Apple)- -ல் விடுதலை செயலியை பதிவிறக்கம் செய்யப்பட்டு பல ஆயிரம் வாசகர் களால் படிக்கப்படுகிறது.
  • 757 இணைய தளங்களில் விடுதலை நாளிதழ் படிக்க நமது www.viduthalai.in செய்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.
  • Facebook, WhatsApp,  Blogger,  Twitter,  Google+, WordPress,  LinkedIn,  YouTube
    போன்ற பல சமூக வலைதளங்களில் நமது  கருத்துக்கள் அதிகம் பகிரப்படுகின்றன (Share).
  • நாம் விடுதலை இணையத்தில் பதிவேற்றும் செய்திகள், கட்டுரைகளை பலர் அப்படியே எடுத்து தங்களுடைய இணையத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் (Reference).
  • வரலாற்றுக் குறிப்புகளுக்கான ஆதாரங்களுக்கு நம்முடைய விடுதலை இணைய முகவரியை (viduthalai.in)  அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
  • ஆசிரியர் அறிக்கை, மின்சாரம், வாழ்வியல் சிந்தனைகள், தற்போதைய செய்திகள் போன்ற பகுதிகள் அதிகம் படிக்கப்படுகிறது.
  • Daily hunt செய்திச் செயலி-ல் விடுதலையின் செய்திகள் தொடர்ந்து தனிப்பக்கமாக வெளிவருகின்றன.

விடுதலை வரலாற்றுச் சுவடுகள்


விடுதலை  ஏடு வாரம் இருமுறை ஏடாக ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் டி.ஏ.வி. நாதன் அவர்களை அதிகாரபூர்வ ஆசிரியராகக் கொண்டு அரை யணா விலையில் 1.6.35 முதல் மவுண்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலிருந்து வெளிவந்தது.
(7.6.1935 குடிஅரசு)
அதன்பின் 1.1.1937 முதல் அதே முகவரியில் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை அவர்களை அதிகாரப்பூர்வ ஆசிரியராகக் கொண்டு நாளேடாக காலணா விலையில் வெளிவந்தது.
(10.1.1937 குடிஅரசு)
3.7.1937 முதல் விடுதலை நாளேடு காலணா விலையில் அவரையே ஆசிரியராகக் கொண்டு தந்தை பெரியார் அவர்களின் பொறுப்பில் ஈரோட்டிலிருந்து வெளி வந்தது.
(3.1.1937 குடிஅரசு)
1939இல் அண்ணா அவர்கள் விடுதலை ஏட்டின் பொறுப் பாசிரியராக இருந்து, அதன்பின் 21.12.1941இல் அப்பொறுப் பிலிருந்து விலகிக் கொண்டார்.
விடுதலை ஏட்டில் வந்த ஒரு கட்டுரைக்காக 124எ பிரி வின் படியும் விடுதலை வெளி யீட்டாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்மீதும், ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளை மீதும் ராஜ கோபாலாச்சாரியார் அரசு வழக்குத் தொடுத்து அதன் காரணமாக இருவரும் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டனர்.
அதன் காரணமாக அ.பொன் னம்பலனார் விடுதலை யின் அதிகாரபூர்வ ஆசிரியர் பொறுப் பை 9.1.1939 முதல் ஏற்றுக் கொண்டார்.
விடுதலை ஏடுயுத்தப் பிரச் சாரத்திற்காக தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் குத்தூசி குருசாமி அவர்கள் 12.9.1943 முதல் 30.9.1945 வரை பொறுப் பாசிரியராக இருந்தார். என்.கரி வரதசாமி அதிகாரப்பூர்வ ஆசிரி யராக இருந்தார்.
விடுதலை
விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவருவது இந்த இதழோடு  நிறுத்தப்பட்டிருக்கிறது.
இனி வெகு விரைவில் குடிஅரசுப் பத்திரிகை வாரப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கும். வாசகர்கள் ஆத ரிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்ளப்படு கிறார்கள்.   
(18.09.1943 விடுதலை)
யுத்தப் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட விடுதலை மீண் டும் தந்தை பெரியாரின் பொறுப் புக்கு 6.6.1946 முதல் வந்தது.
அதன் அதிகாரப்பூர்வ ஆசி ரியராக கே.ஏ.மணி (அன்னை மணியம்மையார்) இருந்தார். 20.06.1943 முதல் குத்தூசி குருசாமி விடுதலை பொறுப்பா சிரியராக இருந்தார். 2.01.1962 வரை அவர் அப்பொறுப்பில் இருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் தேதியன்று திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாடுமாறு தோழர்களுக்கு தந்தை பெரியார் விடுதலையில் அறிக்கை விட் டார்.
சென்னை மாகாணஅரசு வாளா இருக்குமா? விடுதலை மீது பாய்ந்தது.
ரூ.2000 விடுதலைக்கு ஜாமீன் கட்ட வேண்டும் என்று ஏட்டின் பதிப்பாசிரியரும், வெளியீட் டாளருமான அன்னை மணி யம்மையார் அவர்களுக்கு அரசு ஆணை பிறப்பித்தது.
இந்தப் பிரச்சனையை பொது மக்களிடத்தில் தந்தை பெரியார் வைத்தார்! விடுதலையின் ஈடு இணையற்ற தொண்டின் அவசி யத்தை உணர்ந்த பொதுமக்களோ ரூ.15,200 அள்ளித் தந்தனர்.
எஸ்.குருசாமி அவர்களைத் தொடர்ந்து கி.வீரமணி அவர்கள் விடுதலை பொறுப்பாசிரியாக  (ணிஜ்மீநீutவீஷீஸீ ணிபீவீtஷீக்ஷீ) இருந்து வந்தார்.
அன்னை மணியம்மையார் அவர்களது மறைவுக்குப் பிறகு 24.03.1978 முதல் கி.வீரமணி அவர்கள் அதிகாரபூர்வ ஆசிரிய ராகவும், பிரசுரதாரராகவும் இருந்து வருகிறார்.
-விடுதலை,1.6.16

விடுதலையால் விளைந்த விந்தைகள்(விடுதலை நாளேடு)


இதழாளர் என்னும் முறை யில் பெரியார் பொருள் இழப்பையும் பொருட்படுத்தாமல்  விடாப் பிடியாய் ‘விடுதலை' நாளிதழை நடத்திக் கொண்டு வந்தமைக்கு அதனால் தமிழ் மக்களுக்குக் கிட்டிய அரும்பெரும் நன்மைகள் தாம் தலை யாய அடிப்படை. பெரியார வர்களே, "நமது விடுதலை பத்திரிகை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் நமது நாட்டு மக்க ளுக்கு இன்னமும் சரிவரத் தெரியவில்லை. நமது விடு தலையே இல்லை என்றால் இன்றைக்கு அரசாங்கமே பார்ப்ப னரல்லாதார் கைக்கு வந்திருக்காது. இது ஒரு சிலருக்குத்தான் - பொறுப்பு ணர்ச்சியுடன் சிந்தித்துப் பார்க்கின்றவர்களுக்குத் தான் தெரியும்" என்பது அவரின் மதிப்பாய்வு.
நூற்றுக்கணக்கான அம் மாற்றங்களை இங்கே எண்ணிக் கையிட முடியாதாகையால் சிறப்பான சிலவற்றை நினைவு படுத்திக் கொள்ளலாம். ராஜகோபாலா ச்சாரியார் 1938ஆம் ஆண்டில் சென்னை மாநில ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், "சரணாகதி மந்திரி சபை... ஆம் நாள். இன்னும் எத்தனை நாள்" என்பதாக அன்றாடம் ‘விடுதலை' பெட்டிச் செய்தி போட்டது மட்டுமா? அவர் பள்ளிகளில் புகுத்திய கட்டாய இந்தியை எதிர்த்து, தந்தை பெரியாரும் தமிழ்ச் சான்றோரும் நிகழ்த்திய நீண்ட அறப்போர் தொடர்பான ஆயிரக்கணக் கான செய்திகளை ஆச்சாரியார் பதவியை விட்டுச் செல்லும்வரை ஒன்று விடாமல் விரிவான
செய்திகளை நாட்டுக்குத் தந்தது ‘விடுதலை'.
தொடர்ந்து
தொடர் வண்டி நிலையச் ‘சிற்றுண்டிச்சாலை'களில் "பிராமணர்" - "சூத்திரர்" என்னும் இடப்பிரிவினை நில விய இழிநிலை நீங்கியமை.
பார்ப்பனர்கள் நடத்தி வந்த உணவுக்கடைகளின் பெயர்ப்பலகைகளில் இடம் பெற்றிருந்த ‘பிராமணாள்' எனும் வர்ணாச்சிரமப் பெயர் மறைந்தோடியமை
ஒவ்வொரு ஆணின் பெய ருக்கும் பின்னொட்டாகக் குறிக்கப்பட்டு வந்த ஜாதிப் பெயர் ஒழிந்து விட்டமை
"குத்திரச்சி, ஒத்திப்போ!' என்று நீரெடுக்க வரும் நம் பெண்ணைக் கொச்சைப் படுத் திய பார்ப்பனிகளின் அநாகரி கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமை
பார்ப்பனச் சிறுவர்களைக் கூட, அல்லாதார் ‘சாமி' என்று விளிப்பதும், பஞ்சமர் ஏனைய ஆண்களின் முன்னிலையில் சாமி என அடங்குவதும் பழங் கதையாய் ஆகி விட்டமை
ஒவ்வொரு மாவட்டக் காங்கிரஸ் தலைமைப் பொறுப் பிலும் பார்ப்பனரே இருந்த காலம் காணாமற் போய், இன்று ஒவ்வொரு கட்சியின் மாநிலத் தலைவராகப் பெரும்பாலும் பார்ப்பனர் அல்லாதவரே இருக்கும் விந்தை நிகழ்ந்தமை
கலப்புத் திருமணம் செய்தோர்கள் "ஜாதி கெட்ட வர்கள்" என்று பழி சுமத்தப்பட்ட நாள்கள் மறைந்து, இன்று அத்த கையோர் மதிப்பிற்குரியோராக ஏற்கப்படும் சூழ்நிலை தோன்றியமை
'இராமாயணம் ஒரு கட்டுக்கதையே! என்று வாய் விரித்து ஆச்சாரியாரே ஒப்புதல் கூற்று வெளியிட நேர்ந்தமை
மடத்துத் தலைவர்கள் பல்லக்கில் அமர்ந்து கொள்ள, பஞ்சமரும் சூத்திரரும் அவர்களின் பல்லக்குத் தூக்கி களாகத் தொண்டாற்றிய காட்சிகள் இன்று காணக்கிடைக் காதவை என்றாகியமை
களிமண் பிள்ளையார் உருவங்களை நாடு முழுவ திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெளிப்படையாகப் போட்டு உடைத்து, நம்பிக்கையாளர்களுக்கு அறிவு கொளுத்தியமை
அரசுப் பணிமனைகளில் மாட்டப்பட்டிருந்த‘கடவுளர்' படங்கள் அகற்றப்பட ஏற்பாடு பண்ணியமை
புலவர்களிடம் உறைந் திருந்த ‘திருக்குறள்' எனும் அறிவு நூலைப் பொது மக்கள் கைக்குக் கிட்டச் செய்தமை
மடவார் என்றழைக்கப்பட்ட நம் மகளிர் மாஞாலமே வியக்கும் அளவிற்கு அறிவாளராக - ஆற்றலாளராக உலா வரும் உயர்நிலை உருவானமை
கல்விக் கூடங்களில் குறிப்பாகத் தொடக்கப் பள்ளி களில் பெண்பால் ஆசிரியர் நிறையப் பங்களிப்புச் செய்ய வைத் துள்ள புரட்சி
வகுப்புரிமைக் கொள்கையை விடாது பற்றிக் கொண் டிருந்த மாநில முதல்வர்கள் ஓமந்தூரார், குமாரசாமிராஜா இருவரின் சான்றாண்மை
தொழிற் கல்வியகங்களிலும், அரசுப் பணிகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு செய்ய ஏந்தாக இந்திய அரசமைப்புச் சட்டத் தை முதன் முறையாகத் திருத்திய புதுமை
நாட்டாட்சியின் தலை மைச் செயலகத்தில் கவரிமான் களெனத் தம் குடுமி களை விரித்துப் போட்டுக் கொண்டு பார்ப்பனர் இன்பந்துய்த்த காட்சியெல்லாம் மறைந் தொழிந்து, இன்று ‘கருப்புத் திருவுருவங்களும்' அமர்ந் திருக்கும் அழகுத் தோற்றம்
முதன் முதலாய் ஆதி திராவிடப் பெருமகன் ஒருவர் சென்னை உயர்முறை மன்றத்தில் தீர்ப்பாளராகப் பொறுப் பேற்றமை
ஆச்சாரியாரின் ‘குலக் கல்வி'த் திட்டம் தொலைந்து போக, காமராசரின் திட்டத்தில் 33,000 பள்ளிகள் முளைத்தமை
பஞ்சம-சூத்திரப் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிப் பொதுத்தேர்வில் அமர்ந்து தேறி, எளிதாகக் கல்லூரிக்குள் நுழைய முடியாதபடி தடுத்து விடப் பார்ப்பனர்க்குப் பெருங் கருவியாக விருந்த 'ஷிமீறீமீநீtவீஷீஸீ' எனும் வடிகட்டும் முறைக்கு விடையனுப்பு விழா எடுக்கப் பட்டமை
பாடநூல்களை அரசே அச்சிட்டு மலிவு விலையில் மாணாக்கர்க்கு வழங்கும் உருப்படியான திட்டம் நடை முறைக்கு வந்தமை
‘தாலுகா போர்டு', ஜில்லா போர்டு', 'ரெவின்யூ போர்டு' என்று அழைக்கப்பட்டகேடான அமைப்புகள் வெவ் வேறு கட் டங்களில் கலைக்கப்பட்டமை
நம் தாயகத்திற்குத் ‘தமிழ் நாடு' என்று பெயர் சூட்டிப் புதிய வரலாறு படைக்கப் பட்டமை
தேசியக் கொடி எரிப்புக் கிளர்ச்சித் தீர்மானத்தின் உடனடிப் பலனாக, இந்திய நடுவண் அரசுத் தலைமை, தமிழக அரசின் தலைமை ஆகிய இரண்டின் சார்பாகவும் "இந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்படவே மாட்டாது" என்பதாக வெளிப்படையாக உறுதி அறிவிக்கப்பட்டமை
தமிழ்நாட்டரசின் இரு மொழிக் கொள்கை உலகிற்கே தெரியும் வண்ணம் அறிவிக்கப் பட்டமை
தெலுங்கானாவில் தூக்குக் கயிற்றுச் சுருக்குக்கு இலக்காக விருந்த பொதுவுடைமைத் தோழர்கள் உயிர் பிழைக்கும் வண்ணம் சூழ்நிலை உருவாக்கப்பட்டமை
போன்ற பெரியாரியல் கோட்பாடுகள் நடப்புக்கு வரு மாறு நிறைவேற்றம் எய்தியமைக்கு ‘விடுதலை'யின் தொண் டறம் மாபெரும் காரணியாக நின்றது என்பது வரலாற்று உண்மையாகும்.
இவையெல்லாம் விந்தைகள் என்று அழைக்கப்படும் தகுதி படைத்தவை. இவ்வண்ணம் நாட்டின் ‘தட்ப வெப்ப இயற்கை'யையே மாற வைத்த பெருமிதத்திற்குரிய அருஞ்சிறப்பு இதழாளர் பெரியாரின் உடைமை!
"விடுதலை மலர்கள்
‘முடியின் இறகு'க்கு ஒப்ப ‘விடுதலை' ஆண்டு மலர்கள் ஒளிர்ந்தன. முதன் முதலில் ஆண்டு மலர் 1956 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளாகிய செப்டம்பர் 17ஆம் நாள் அன்றைய ‘விடுதலை' பொறுப்பாசிரியர் குத்தூசி குருசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
இன்றைய ‘விடுதலை' ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொறுப்புக்கு வந்த பின்னர் 1962ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 அன்று ‘விடு தலை' - பெரியார் பிறந்த நாள் மலர் வெளியிடப் பட்டுக் கொண்டு வருகிறது.
விடுதலை மலரில் பெரியாரின் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரையும், அவரின் கொள் கை விளக்கக் கட்டுரைகளும் இயக்க முன்னோடிகள், பொது வாழ்வுத் தலைவர்கள், பல் துறை அறிஞர்கள், பாவலர்கள் ஆகியோரின் ஆய்வுப் படைப்புகளும் இடம் பெற்றன.
விடுதலை மலர் ஒவ்வொன்றும் அறிவுக் கருவூலம் என்பதில் அய்யமே இல்லை. மலர்களின் தனித்தன்மை களை விளக்குவதென்றால் அதுவே ஒரு தனிப்பொழிவாகி விடும், ‘விடுதலை' வளாகத்தில் அமைந்துள்ள
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள் அந்நூலகம் போந்து நிறையச் செய்திகளை விடுதலை மலர்களி லிருந்து திரட்டித் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளில் பயன்படுத்துகின்றனர்.
விடுதலை,1.6.16

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

கருநாடக மாநிலத்தில் “சுயமரியாதை நதி” இயக்கம்

 தாழ்த்தப்பட்டவர்கள் ஊர்வலத்தால் தீட்டாகி விட்டதாம்


உடுப்பிக் கோயில், சுற்றுப்புறங்களை சுத்திகரித்தது ஆர்.எஸ்.எஸ்.
கொதி நிலையில் கருநாடக மாநில ஒடுக்கப்பட்டோர்!
தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் மடத்துக்குள் செல்வதற்கான உரிமை கோரும் சலோ உடுப்பிப் பேரணி
உடுப்பி, அக்.30 உடுப்பியில் உள்ள மடத்தின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தாழ்த்தப்பட்டவர் கள் மீதான தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து, உடுப்பிக்கு செல்வோம் (சலோ உடுப்பி) எனும் தலைப்பில் 4.10.2016 அன்று பெங்களூருவில் தொடங்கி 9.10.216 உடுப்பி வரை தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.
உடுப்பியில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊர்வல மாகச் சென்றதால், தீட்டாகிவிட்டதாகக்கூறி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் உடுப்பி கிருஷ்ணன் கோயிலில்   தீட்டிலிருந்து உடுப் பியைப் புனிதப்படுத்துவதாகக் கூறி தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளனர்.
கருநாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு வந் துள்ள நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் கிளர்ந் தெழுந்து போராட்டத்தில் குதித்தார்கள்.
குஜராத் உனா பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஊர்வலம் நடத்தியவர்களை வழிநடத்தியவரான ஜிக் னேஷ் மேவானி உடுப்பி உள்பட ஏனைய நகரங்களின் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதி யாக உடுப்பியில் 9.10.2016 அன்று நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
பழைமையின் பெயரால் தாழ்த்தப்பட்ட வர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் கவ் ரக்ஷாக்கள் என்போரின் வன்முறைகள் முடி வுக்கு வரவேண்டும் என்று தலைவர்கள் ஆவேசமாகப் பேசினர்.
உடுப்பியில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக 9.10.2016 அன்று  கண்டன ஊர்வலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பெருந் திரளாகப் பங்கேற்றதைத் தொடர்ந்து, உடுப்பி நகரமே தீட்டாகிவிட்டது என்று கூறி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் புனிதப் படுத்துவதற்கான அழைப்பு விடுத்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் கனகா நாடிகே

தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப் படாமல் உள்ள கிருஷ்ண மட கோயில் முகப்பு.
ஆர்.எஸ்.எஸ்- இளைஞர் பிரிவைச் சேர்ந்த தலைவரான சக்ரவர்த்தி சுலிபேலே என்பவர் கனகா நாடிகே எனும் பெயரில் புனிதப்படுத் தலுக்கு அழைப்பு விடுத்தார். புனிதப்படுத்தல் என்கிற பெயரில் முதலில் உடுப்பி நகரின் தெருக்களை கழுவுவதற்கான அறிவிப்பு வெளி யிட்டனர்.
தாழ்த்தப்பட்டவர்களின் சுவபிமான் நாடிகே
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் புனிதப்படுத் தல் செயலால் கொதிப்படைந்துள்ள தாழ்த்தப் பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் அமைப் பைத் தடை செய்ய வலியுறுத்தி, சுவபிமான் நாடிகே (சுயமரியாதை நதி) என்கிற பெயரில் 23.10.2016 அன்று மீண்டும் தாழ்த்தப்பட்டவர் களின் சுயமரியாதைப் பேரணி நடைபெறுமென அறிவித்தனர். உடுப்பி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் கே.டி.பாலகிருஷ்ணன் உடுப்பி யில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கனகா நாடிகே மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் சுவபி மான் நாடிகே ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கும் அனுமதி அளிக்கவில்லை. அதனால், தாழ்த்தப் பட்டவர்களின் சுவபிமான் நாடிகே ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் புனிதப்படுத்தல்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் புனிதப்படுத் தல் நிகழ்வாக கடந்த 23.10.2016 அன்று ஆர். எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் உடுப்பி கிருஷ்ணன் கோயில் வளாகம் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை தண்ணீர் ஊற்றிக் கழு வினார்கள். கோயிலைச் சுற்றியுள்ள கழிவறைப் பகுதிகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், சமையற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கழுவியுள்ளார்கள்.
பிஜாவர் மடாதிபதி விஷ்வேஸ்வரா தீர்த்தா மாநில அரசு அலுவலர்களிடம் புனிதப்படுத்தல் நிகழ்வு குறித்து கூறும்போது, புனிதப்படுத்தும் சடங்கினைச் செய்ய வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் அமைப்பினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டார்கள். “நமக்கு உள்ளும், புறமும் துய்மைப்படுத்த வேண்டியுள்ளது. இது குறிப்பிட்ட வகுப்பினருக்கு எதிரானதல்ல’’ என்றார்.
சுவபிமான் நாடிகே அமைப்பாளர் சியாம்ராஜ் பிர்தி
தாழ்த்தப்பட்டவர்கள் அமைப்பின் சார்பில் புனிதப்படுத்தல் நிகழ்வுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன், அதில் பங்கேற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
சுவபிமான் நாடிகே அமைப்பாளர் சியாம்ராஜ் பிர்தி கூறும்போது, “கனகா நாடிகே என்கிற நிகழ்வு குறிப்பாக  மடத்தின் வளாகத்து பகுதியில் நடைபெறவில்லை. அரசின் உத்தரவை மீறியதற்காக அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் என்ன கூறினாலும், அவர்களின் புனிதப்படுத்தல் செயலானது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டதாகும்’’ என்றார்.
ஜிக்னேஷ் மேவானி
தாழ்த்தப்பட்டவர்களின் சுயமரியாதை பேரணியாகவே சலோ உடுப்பி ஊர்வலம் நடைபெற்றது. நாடுமுழுவதும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை, சிறுபான்மையரை ஒருங்கிணைக்கின்ற வகையிலேயே நடத்தப்பட்டது.
சலோ உடுப்பி பேரணியில் தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் குஜராத் ஜிக்னேஷ் மேவானி முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றாக உடுப்பி கோயிலில் உணவு அளிக்கப்படுகின்ற இடத்தில்  (பங்கிடி பேடா) தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனியே இடத்தை ஒதுக்கிவைத்துள்ளதை மாற்றி எல்லோருக்கும் சமமான இடத்தை அளித்திடவேண்டும் என்றும், கருநாடக மாநில அரசு கோயில் நிர்வாகிகளுக்கு இந்த முறையை மாற்றுமாறு  உத்தரவிடவேண்டும் அல்லது கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜிக்னேஷ் மேவானி குறிப்பிட்டார்.
-விடுதலை,30.10.16

முத்துலட்சுமி ரெட்டி மசோதா


30. 03. 1930- குடிஅரசிலிருந்து..
(டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பொட் டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற் கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரிசிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது)
1. இந்துப் பெண்களை இந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டுவதினால் அவர்கள் விபசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.
2. பண ஆசையினால் தேவதாசிகள் விப சாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த விபசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்கு  பரவாமல் தடுக்க வேண் டியதும் முக்கியமான தாகும்.
3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் விபசாரத்தை அடியோடு ஒழிப்பதல்ல வானாலும் விபசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். விபசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.
வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்காகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம் இன்னும் வரவில்லை.
ஆனால் சமயத்தின்பேரால் மதக் கடமை யாகப் பெண்கள் விபசாரம்  செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்கவேண்டும்.
தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக்கட்டப்படும் பெண்களுக்கும்கூட இளவயது முதலே பெற்றோராலும், வளர்ப்போராலும் விபச்சாரம் செய்யத் தூண்டப்பட்டும், தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக்கட்டி விபசாரம் செய்வது மோட்ச சாதனமானதென்றும், பணம் சம்பாதிக்க நல்லவழி என்றும், சிறுவயது முதலே அப்பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது. பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தாமல் சட்டம் ஏற்படும் வரை பெற்றோரும், வளர்ப்போரும் அவர்களை விபசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வார்கள்.
4. மைனர் பெண்களுக்கு பொட்டுக்கட்டக் கூடாதென்று ஏற்கனவே சட்டம் ஏற்படுத்தி, மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரத்தில் அனுமதி இல்லை.
ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக்கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமுக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

-விடுதலை,22.10.16

ஜாதிக் கொடுமைகளை ஒழிக்கவே சுயமரியாதை இயக்கம்


11-8-1929, குடிஅரசிலிருந்து...
ஆதி திராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக் கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப் பட்டபோதிலும் அவர்களை இழிவு படுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவ தில்லை. இந்து வென்று சொல்லப்படும் திரு.முனுசாமி என்னும் ஆதிதிராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத்தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம். ஆனால், பிறவியில் மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டுவிடும்போது ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் முனிசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும்விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய் பிறந்துவிட்டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது. வேதத் தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின்மீது பழியைப் போடுவ தோடு, மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதர வாக்கிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங்களின் பேராலும் செய்யப்படும் கொடுமை களுக்கு அளவில்லை. மற்றும் பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்; கடவுளால் வேதங் களிலும் சாஸ்திரங் களிலும் எழுதி வைக்கப்பட்டு விட்டது. அதைப்பற்றி அதிகமாகக் கேட்காதீர்கள் என்று கொடுமைகளுக்குச் சாக்குச் சொல்லிக் கொண்டு, ஆயி ரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக் குள்ளாக்கப்பட்டும் வருகின்றது.
ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமுகம் கொடுமைக்குட்படுத்தப்பட்டு வரு கின்றது. ஆதிதிராவிடர் களாகிய உங்களை விட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப் படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களை விட உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போக வில்லை. உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப்பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்று இழி பெயர்களு மிட்டழைக்கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவு ளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென் கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தா லென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக் கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.
இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் ஒழிக்கப் பாடுபட்டபோதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கித் துன்புறுத்தப்பட்டு மிருக் கின்றனர். ஒவ்வொரு வரும் நமக்கென்ன? நம் ஜீவனத் துக்கு வழியைப் பார்போமென்று இழிவுக்கிடங்கொடுத்துக் கொண்டு போகும்வரை சமுகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்க மேற்படாது என்பது திண்ணம்கேளுங்கள்!
ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சுயமரியாதை .இயக்கத்தைக் குறித்து அந்த விரோதிகள் என்ன சொல்லு கின்றார்கள் என்பதைக் குறித்து நமது நண்பர் பால குருசிவம் சிறிது நேரத்திற்குமுன் தெளிவாய் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
அவர் இவ்வியக்கத்தில் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருக்கின்றதெனக் கூறியது முக்கிய மாய்க் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதைக்காரர்கள் கோயில் குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கின்றார்கள்;  இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய்விடும் போலிருக்கிறது, சுவாமி போய்விடும் போலிருக்கிறது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடு கின்றார்கள். பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலி களுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரச்சாரம் செய்வதற்காகத் தூண்டிவிட்டு மிருக்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரச்சார மோசத்தை யுமுணராது அவர்கள் பிதற்றல் களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லு கிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன். உண்மையில் ஆஸ்தீக நாஸ்தீகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. உலகத்தில் அவன் உயர்ந் தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமுக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தடையாயி ருக்கும் எந்த சாஸ்திர புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் தயாராயிருக் கிறோம், மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந் தாலும் அதனை ஒழித்துத்தானாகவேண்டும் (கேளுங்கள்) கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும் அக்கிர மங்களுக்கு அனுகூலமாயுமிருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம். சும்மா கிடக்கும் கடவு ளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவுளையும் ஒழிப்பதற்கு பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்த வனாயும் பல கொடுமை களுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்த கடவுளும் மதமும் போகவேண்டியதுதான்.

விடுதலை,8.10.16

சனி, 29 அக்டோபர், 2016

காந்தி ஜெயந்தி புரட்டு


06-10-1929 குடிஅரசிலிருந்து....
திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின் பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும் அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப் போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையையாவது பின் பற்றுகின்றவர் களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம்.
அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜெயந்தி கொண்டாடுவது எதற்குச் சமானம் என்று பார்க்கப் போனால் புத்தரை நாஸ்திகர் என்று பழி சுமத்தி அவர் கொள்கையை அடியோடு அழித்து நாட்டில் செல்வாக்கில்லாமல் செய்துவிட்டு புத்தர் மகா விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று புராணங்களை எழுதிவைத்து வணங்கி வந்ததைத் தான் சமானமாகச் சொல்லலாம். இந்தத் தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனராவது திரு.காந்தி அபிப் பிராயத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உதாரணமாக சாரதா மசோதாவுக்கு ஆதரவளித்ததில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 24 வயதும் கல்யாண வயதாயிருக்க வேண்டும் என்று சொன்னதை எந்தப் பார்ப்பனர் ஒப்புக் கொண்டார் என்று கேட்கின்றோம். தீண்டாமை ஒழிந் தாலல்லாது நமக்கு சுயராஜ்யம் கிடைக்காதென்றும், தீண்டாமையை அடியோடு அழிக்காவிட்டால் நாம் சுயராஜ்யத்திற்கு அருகரல்லவென்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயற்சித்தாரா? முயற்சிக்கிறாரா? முயற்சிக்கப் போகிறாரா? என்று கேட்கின்றோம். கோவில்களில் தீண்டப்படாதாரை விடாவிட்டால் அது மிகவும் அக்கிரமம் என்று சொன்னாரே. அதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு கோயி லுக்குள் விட்டார்களா என்று கேட்கின்றோம். விதவை களுக்கு மறுமணம் செய்யுங்கள் என்றும் மறுமணம் செய்யப்படாத விதவைகள் வீட்டைவிட்டு ஓடிப்போய் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது கேட்டார்களா என்று கேட்கின்றோம்.
மற்றும் காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், பூரண சுயேச்சை என்பது பையித்தியக்காரத் தனமென்றும் சொன்னதை யாராவது எந்தப் பார்ப்பனராவது மதித்தார்களா? அன்றியும் கோயில்களில் கடவுள்கள் இல்லை என்றும், கோயில்கள் விபசார விடுதிகள் என்றும் சொன்னதை யாராவது மதித்து எந்தக் கோயில்களை யாராவது இடித்தார்களா அல்லது அடைத்தார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் லாகூர் காங்கிரசில் ஒரு காரியமும் ஆகப்போவதில்லை; காங்கிரசியக்கமும் ஒழுங்காயில்லை. ஆதலால் நான் காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்கு யாராவது பதில் சொல்லவோ அல்லது காங்கிரசை விட்டு வெளிவரவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளைத் திருத்தவோ ஒப்புக் கொண்டார்களா என்று கேட்கின்றோம். கடைசியாக திரு.காந்தி இன்னமும் தனக்கு ஒத்துழையாமையில் தான் நம்பிக்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லி வருகின்றாரே! இதை யாவது எந்தப் பார்ப்பனராவது கேட்டு உத்தியோகத்தை விடவோ சட்ட சபையை விடவோ, பட்டத்தை விடவோ, பள்ளியை விடவோ, வக்கீல் வேலையை விடவோ, சம்மதித்தார்களா என்றும் கேட்கின்றோம். திரு.காந்தி சொல்வதில் ஒன்றைக் கூட கேட்காமல் அவரைப் பைத்தியக்கார ரென்றும், முட்டாள் என்றும், மூளை இல்லை என்றும், அரசியலுக்கு லாயக்கில்லை என்றும், அராஜகன் என்றும், சட்டவிரோதி என்றும் மற்றும் அயோக்கியன், மடையன், போக்கிரி (கும்பகோணம் பம்பாய் முதலிய இடங்களில்) என்றும் சொல்லிவிட்டு அதுவும் சென்ற வாரத்தில் சொல்லிவிட்டு இந்த வாரத்தில் அதே பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் சேர்ந்து காந்தி ஜெயந்தி கொண்டாடுவதென்றால், இதைப் போன்ற வஞ்சகமும் சூழ்ச்சியும் வேறு உண்டா என்றுதான் கேட்கின்றோம்.
ஒரு காரியத்திற்காகக் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட் டது என்றால், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான். அதாவது தென்னிந்தியாவில் வருணாச்சிரமப் பிரச்சாரம் செய்ததற்கும் இந்த ஜென்மத்தில் சூத்திரன் தனது வருண தர்மத்தைச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் வைசியனாக அடுத்த ஜன்மத்தில் சத்திரியனாக, அடுத்த ஜன்மத்தில் பிராமணராகலாம் என்று சொன்னதற்கும் மற்றும் ராமாயண, பாரத பிரச்சாரம் செய்ததற்கும் கதரின் பேரால் லட்சக்கணக்காக பணம் பிடுங்கி பார்ப்பனாதிக் கத்திற்கு செலவு செய்ய பார்ப்பனர்கட்கு இடம் கொடுத்து விட்டு போனதற்கும் வேண்டுமானால் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி கொண்டாடலாம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆனால் சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லா தார்கள் அதில் கலந்து கொண்டதற்கு நாம் வெட்கப்படா மலிருக்க முடியவில்லை. இன்றைய தினம் நமது நாட்டில் நடக்கும் அனேக ஜெயந்திகளும் பண்டிகைகளும் திரு. நட்சத்திரங்களும் உற்சவங்களும் பார்ப்பனாதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாதார் இழிவுக்கும் அறிகுறியாக நடத்தப் படுகின்றது என்பதைப் பலர் அறிந்தும் அவ்வித பண்டிகை களையும் உற்சவங்களையும் இன்னமும் அறிவும் உணர்ச் சியுமற்ற பார்ப்பனரல்லாதார்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். அதுபோலவே காந்தி ஜயந்தியும் கொண் டாடப்பட்டது என்றுதான் நாம் வருத்தத்தோடு சொல்ல வேண்டியிருக்கின்றது. எனவே இனியாவது பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் இம்மாதிரியான பார்ப்பன சூழ்ச்சியிலும் வஞ்சகத்திலும் விழாமலிருக்க எச்சரிக்கை செய்கின்றோம்.
-விடுதலை,1.10.16

இந்திய மடாதிபதிகள்



1-12-1929, குடிஅரசிலிருந்து...
இந்திய மடாதிபதிகள் என்று சொல்லிக் கொண்டு இந்திய செல்வங்களை கொள்ளையடித்து பாழாக்கு கின்றவர்கள் எத்தனை பேர் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுமென்கின்றோம். சங்கராச் சாரிகள் என்று ஒரு ஏழு எட்டு பார்ப்பனர்கள் இந்தியா விற்குள் தினமும் கிராமம் கிராமமாக பட்டணம் பட்டணமாய்ச் சுற்றிசுற்றி அடிக்கும் பகற்கொள்ளைக்கு ஏதாவது அளவு கண்டுபிடிக்கக் கூடியதாக இருக் கின்றதா?
ஒவ்வொரு சங்கராச்சாரிக்கும் அரண்மனை போல் மடமும், யானை, குதிரை, பல்லக்கு, படைகள், நகைகள், கூட்டங்களுடனும் தளங்களுடனும் சுற்றுப் பிராயணங்கள் நடப்பதைப் பார்த்தால் மனம் பதைக்கின்றது. இரத்தங் கொதிக்கின்றது.
இவர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் உள்ள பணக் காரர்கள் பதினாயிரம், அய்யாயிரம், ஆயிரம், அய்ந்நூறு, இருநூற்றைம்பது ரூபாய்கள் என்கின்ற கணக்குப்படி காணிக்கைகளும் 108-1008 ரூபாய்கள் என்கின்ற கணக்குப்படி பாதபூஜை களும், தினம் ஒரு வேளை பிச்சைக்கு என்று 427-430 ரூபாய்களும் கொடுக்கப் பட்டு வருகின்றது. அத்தோடு அவர்கள் காலிலும் விழுந்து கால் கழுவின பாத தீர்த்தம் அருந்தப்படு கின்றது. இப்படியாக ஆயிரக்கணக்கான வருஷங் களாக நாளெல்லாம் நடந்து வருகின்றது.
ஆனால் இப்படிப்பட்ட சங்கராச்சாரிகளைப் பற்றி பணம் கொடுக்கின்றவர்களில் எந்த மூடர்களாவது சிந்தித்துப் பார்த்து பணம் கொடுக்கின்றார்களா? என்று பார்த்தால் அது ஒரு சிறிதும் தென்படுவதில்லையே. சங்கராச்சாரி என்றால் என்ன? அவர் யார்? யாருக்கு குரு? எதற்காக குரு? அவரால் யாருக்கு என்ன பிரயோ ஜனம்? எதற்காக பணம் கொடுக்கவேண்டும்? அந்தப் பணம் என்ன ஆகின்றது? என்பது போன்ற விஷயங் களில் ஏதாவது ஒன்றைப் பற்றி கவனித்துப் பார்த்து யாராவது பணம் கொடுக் கின்றார்களா? ஒரு சிறிதும் இல்லவே இல்லையே. அந்தோ! அந்தோ! வெகுபணம் வீணாய்ப் போகின்றதே.
இதனால் நமது மானமும், மனிதத் தன்மையும் வீணாய்ப் போகின்றதே. உதாரணமாக, எந்த சங்கராச்சாரியும் ஸ்நானம் செய்வதற்கு முன்தான் நம்மைப் பார்ப்பார். ஏனெனில், நம்மை பார்த்தால் சூத்திரனைப் பார்த்த தோஷமும், நமது நிழல் பட்டால் சண்டாள நிழல் ஸ்பரிசமும்,
நம்முடன் பேசினால் நீச்ச பாஷை உச்சரித்த பாதகமும் அவரை சூழ்ந்து கொள்ளு கின்றன. ஆதலால் இவற்றிற்காக அவர் தோஷப்பரிகார பிராயச்சித்தம் செய்யவேண்டி இருக்கிறது. இதன் நிமித்தம் அவர் ஸ்நானம் செய்வதற்கு முன்பாகவே நம்மை பார்த்து, நம்மிடம் பேசி நமக்கு தீர்த்தம் கொடுத்து, பணம் பெற்று, அந்தப் பணத்தைக் கொண்டே மேல்கண்ட பிராயச்சித்தங்களும் செய்துவிட்டு பிறகு பூஜை செய்து சாப்பிடுகின்றார்.
தவிரவும், இந்தப் பணங்களால் சமையல் செய்து ஆயிரக்கணக்கான வெறும் பார்ப்பனர்களுக்கே சாப்பாடு போடுகின்றார்.
எஞ்சியதை ஊருக்கு அனுப்பு கின்றார். இந்தப்படி இனியும் குட்டி ஆச்சாரிகள் மடம் எத்தனையோ? ஆகவே இப்படிப்பட்ட சங்கராச்சாரிகள் கொள்ளை எத்தனை கோடி என்பதை வாசகர்கள்தான் கணக்குபோட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி ஜீயர்கள், பட்டர்கள், சுவாமிகள், குலகுருக்கள் என்கின்ற சில்லரைப் பார்ப்பனக் குருக்கள் கொள்ளைகள் ஒரு புறமிருக்க,
இனி பார்ப்பனரல்லாத பண்டார சன்னதிகள் என்ற மடாதிபதி கொள்ளைக்கும் கணக்கு வழக்கில்லை. சாதாரணமாய் தஞ்சை ஜில்லாவில் மாத்திரம் உள்ள இரண்டு மூன்று பண்டார சன்னதிகளின் வரும்படி ஆண்டு ஒன்றுக்கு 24 லட்ச ரூபாய்களுக்கு குறையாது என்று சொல்லலாம்.
இது போல் மற்றும் நம் நாட்டில் எத்தனையோ மடாதிபதிகளும், பண்டார சன்னதிகளும் ஆயிரக் கணக்கான பேர்கள் நமது கண்களுக்கு தென்படாமல் இருக்கின்றார்கள். இவர்கள் சொத்தும் வரும்படியும் எவ்வளவு ஆகும்? அது என்ன ஆகின்றது யாருக்கு பலன் கொடுக்கின்றது? இவைகளால் நாட்டிற்கு என்ன பலன்? என்று யாராவது எந்த தேசியவாதிகளாவது, மதவாதிகளாவது,
ஆஸ்திக வாதிகளாவது கவனிக் கின்றார்களா என்று கேட்கின்றோம். எனவே நமது நாட்டின் தேசியமும், மதவாதமும், ஆஸ்திகமும் எவ்வளவு புரட்டின் பேரிலும் அயோக்கியத்தனத்தின் பேரிலும் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை இப்போழ் தாயினும் மக்கள் உணர முடிந்ததா என்று கேட்கின் றோம்.


-விடுதலை,30.9.16

திருவாங்கூர் சமஸ்தானம்

திருவாங்கூர் சமஸ்தானம்

1-12-1929 - குடிஅரசிலிருந்து....
திருவாங்கூர் அரசாங்கம் என்பது சுதேச சமஸ்தானங்கள் என்று இந்திய அரசர்களால் ஆளப்படும் தேசங்களில் இது ஒரு நடுத்தர அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்தின் எல்லை சென்னை மாகாண ஜில்லாக்களில் இரண்டு ஜில்லாக்களுக்கு அதாவது சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களுக்கு சமானமானதாக இருக்கும். இதன் சனத்தொகை சுமார் நாற்பது லட்சமாகும்.
இதன் பரப்பு 7500 சதுர மைல்களாகும். இந்த நாற்பது லட்சம் ஜனத்தொகையில் ஏறக்குறைய சரிபகுதி ஜனங்கள், அதாவது இருபது லட்சம் பேர்கள் இந்துக்கள் அல்லாதவர்களான கிறிஸ்துவர்களும், மகமதியர் களுமே யாவார்கள். எஞ்சி உள்ள இருபது லட்சத்திலும் சமார் பன்னிரண்டு லட்சம்பேர்கள் தீண்டக் கூடாத வர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள்,  கண்ணில் தென்படக் கூடாதவர்கள் ஆகிய மிருகங் களிலும் கீழானவர்கள் ஆவார்கள்.
இப்படியாக முப்பத்தி யிரண்டு லட்சம் ஜனங்கள் போக எஞ்சியுள்ள சுமார் எட்டு லட்சம் பேர்களே, ஜாதி இந்துக்கள் அதாவது மனித உரிமையுடையவர்கள் ஆவார்கள். இதில் 50,000 பேர்கள் பார்ப்பனர்கள் இப்படியாக 40 லட்சம் சனத்தொகை கொண்ட இந்த அரசாங்கத்திற்கு வருஷாந்திர (ரிவினியூ) வருமானம் சுமார் எழுபது லட்ச ரூபாயாகும்.
எனவே, இந்த நிலையில் உள்ள மேற்படித் திருவாங்கூர், ராச்சியத்தில் தேவஸ்தான சம்பந்தமாக செலவு செய்யும் தொகையோ பதினேழு லட்ச ரூபாயாகும். இந்த 17 லட்ச ரூபாய் தொகையானது இந்து மத சம்பந்தமான தேவஸ்தானங்களில் செலவு என்று சொல்லப் பட்டாலும், இவைகள் ஏறக்குறைய, ஏன் முழுவதும், மேலே காட்டப்பட்ட 50 ஆயிரம் பார்ப்பனர் களுக்கே, அவர்களது சாப்பாட்டிற்கே செலவு செய்யப்பட்டு வருகின்றது.
அரசன் தனது ராஜ்ஜியதில் உள்ள எல்லா மக்களிடத்திலிருந்தும் வரிவசூலித்து ஒரு ஜாதிக்கு மாத்திரம் அதுவும் அநேகமாக வரி கொடுக்கக் கூடாத ஜாதியும், கஷ்டப்படாமல் பிறர் உழைப்பில் தேகம் நோகாமல் வாழ்கின்ற ஜாதியும், தங்களைத் தவிர மற்ற மக்களெல்லாம் கீழ்ஜாதி, இழிகுலத்தவர்கள், தங்களது வைப்பாட்டி மக்களாய் இருக்கத் தகுந்தவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் ஜாதியுமாகிய பார்ப்பனர்களுக்கே போய் சேருகின்றது என்றால், அந்த ராச்சியத்தின் நீதிக்கும் புத்திக்கும் வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
அந்த ராச்சியத்தில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும்; மற்றும் வெளிநாட்டிலிருந்து அந்நாட்டுக்கு சென்று குடியேறும் பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும் அவர்கள் அத்தனைப் பேருக்கும் ஆண், பெண், குழந்தை, குட்டிகள் சகிதம் அவர்கள் எந்த வேலையில் எவ்வளவு சம்பாதித் தாலும், எந்த உத்தியோகத்தில் எவ்வளவு சம்பளம் பெற்றாலும்,
எந்த வியாபாரத்தில் எவ்வளவு லாபம் அடைந்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலை யில்லாமல் பார்ப்பனர் என்கின்ற பேருக்கு மாத்திரம் தினம் இரண்டு வேளை கோயிலிலும், ஊட்டுப்பறை என்னும் சாப்பாட்டுச் சத்திரங்களிலும் தாராளமாகவும் நிரந்தர மாகவும் சாப்பாடு போடப்பட்டு வருகின்றது.
இது நிற்க; மற்றபடி, பண்டிகை நாட்களிலும் புண்ணியநாள்கள் விரதநாள்கள் என்பவைகளிலும் சிரார்த்த நாள்களிலும் மிகுதியும் விசேஷமான சாப்பாடும், தவிர பணமும், கால், அரை, ஒன்று என்பதாக தட்சணையும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர, மாதம், தவறாமல் உற்சவங்களுக்கு இப்படியே நடக்கின்றது. இவைகள் தவிர அந்த நாட்டு பார்ப்பனரல்லாத உயர்ந்த ஜாதிப் பெண்கள் என்பவர்கள் பார்ப்பனர்களை புணருவது மோட்ச சாதனம் என்றும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.
இவை தவிர, ஆறு வருஷத்திற்கு ஒரு முறை ஜபம் என்னும் பெயரால் சுமார் எட்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு சடங்கும் கொண்டாடப்படுகின்றது. இச்சடங்கானது 56- நாள்களுக்கு தொடர்ச்சியாய் நடத்தப்படுவதாகும்.
இந்த அய்ம்பத்தியாறு நாள்களுக்கும் சுமார் பதினையாயிரம் பார்ப்பனர்கள் வரை மூன்று வேளை உணவுகளும், ஒவ்வொரு வேளைக்கும் பத்து இருபது வகை காய்கறிகளுடனும், 5, 6, வகை பலகாரங்களுடனும், 2, 3 வகை பாயாசங்களுடனும், 2, 3 வகை அப்பளங்களுடனும் விருந்துகள் நடக்கும் இவ்விருந்து செய்வதற்காக சமையல்காரர்கள் மாத்திரம் தினம் ஆள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று ரூபா கூலியில் 600, 700 நபர்கள் அமர்த்தப் படுவார்கள்.
தவிரவும் மேற்கண்ட பதினையாயிரம் பேர்களுக்கும் தினம் இவ்வித விருந்தளிப்பதுடன் நபர் ஒன்றுக்கு நாலணா, எட்டணா, ஒரு ரூபாய் வீதம் தட்சணையும் கொடுப்பார்கள். மற்றும் ஆயிரக்கணக்கான பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை உடன் கூட்டிக் கொண்டு போய் அவைகளையும் பார்ப்பனப் பிள்ளைகள் என்று காட்டி அவைகளுக்கும் தட்சணை வாங்கிக் கொள்வார்கள்.
அன்றியும் தூர தேசங்களில் இருந்துவரும் பதினாயிரக் கணக்கான நம்பூதிரி பார்ப்பனர்களுக்கு போக வர பிரயாணச் செலவும், சாப்பாடு, தட்சணையும் கொடுத்து ஆள் ஒன்றுக்கு ஒவ்வொரு கட்டில் மெத்தை, இரண்டு தலையணை, சால்வை நான்கு, நான்கு ஜோடி வேஷ்டிகள் முதலியவைகளும் கொடுப்பார்கள். மற்றும் இவை போன்ற பல செலவுகளுக்காக மேற்கண்ட எட்டு லட்ச ரூபாயும் 56 நாள்களில் பஞ்சு பஞ்சாய்ப் பறந்து செலவாகிவிடும்.
இப்படிச் செலவு செய்து நடத்தப்படும். இந்த முறை ஜபமானது எதற்காக என்றால், சுமார் 200 வருஷத்திற்கு முன் இருந்த ஒரு ராஜா அந்நாட்டில் செய்த ஏதோ ஒரு சிற்றரசர்கள் யுத்தத்தில் சில பார்ப்பனர்கள் இறந்து போனதால் அந்தப் பாவம் தீர்ந்து தங்களுக்கு சந்ததி விர்த்தியாவதற்கு பிராயச்சித்தமாக இப்படி இந்த இருநூறு ஆண்டுகளாக ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு லட்ச ரூபாய் (அதாவது, அந்த பார்ப்பனர்களின் குடும்பத்திற்கு போய் சேரும்படி) செலவு செய்து முறை ஜபம் செய்யப்பட்டு) வருகின்றது.
இந்த மாதிரியான முட்டாள் தனமான கொள்கைகள் உடையவர்களாகிய இந்து அரசர்களால் இந்தியா ஆளப்பட்டு வந்து இருந்ததனால் இன்றைய தினம் இந்தியா ஆயிரக்காணக் கான வருஷங்களாக அன்னியநாட்டு நன்மையின் பொருட்டு அன்னி யர்களால் ஆளப்படுவதில் ஏதாவது ஆச்சரியம் இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.
நிற்க, இந்தப்படி ஆறு ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு எட்டு லட்ச ரூபாய் செலவு செய்து முறை ஜெப பிராயசித்தம் செய்து வந்தும், அந்த ராஜாங்கத்திற்கு சந்ததி இல்லாமல் அடிக்கடி சுவிகாரம் செய்துதான் பிள்ளைகள் உண் டாக்கி பட்டம் கட்டி ஆளப்பட்டு வருகின்றது. இதை அந்த ராஜி யத்திலுள்ள ஒவ்வொரு ராஜாக்களும் கண்டு வந்திருந்தும், இம் மாதிரியான மூடநம்பிக்கை இவர்களை விட்டு போகவில்லை யானால், இவர்கள் ஒரு நாட்டை ஆள யோக்கியதை உடையவர்களா என்று கேட்கின்றோம். 
-விடுதலை,30.9.16