ஞாயிறு, 30 அக்டோபர், 2016

முத்துலட்சுமி ரெட்டி மசோதா


30. 03. 1930- குடிஅரசிலிருந்து..
(டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பொட் டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற் கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரிசிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது)
1. இந்துப் பெண்களை இந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டுவதினால் அவர்கள் விபசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.
2. பண ஆசையினால் தேவதாசிகள் விப சாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த விபசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்கு  பரவாமல் தடுக்க வேண் டியதும் முக்கியமான தாகும்.
3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் விபசாரத்தை அடியோடு ஒழிப்பதல்ல வானாலும் விபசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். விபசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.
வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்காகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம் இன்னும் வரவில்லை.
ஆனால் சமயத்தின்பேரால் மதக் கடமை யாகப் பெண்கள் விபசாரம்  செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்கவேண்டும்.
தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக்கட்டப்படும் பெண்களுக்கும்கூட இளவயது முதலே பெற்றோராலும், வளர்ப்போராலும் விபச்சாரம் செய்யத் தூண்டப்பட்டும், தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக்கட்டி விபசாரம் செய்வது மோட்ச சாதனமானதென்றும், பணம் சம்பாதிக்க நல்லவழி என்றும், சிறுவயது முதலே அப்பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது. பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தாமல் சட்டம் ஏற்படும் வரை பெற்றோரும், வளர்ப்போரும் அவர்களை விபசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வார்கள்.
4. மைனர் பெண்களுக்கு பொட்டுக்கட்டக் கூடாதென்று ஏற்கனவே சட்டம் ஏற்படுத்தி, மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரத்தில் அனுமதி இல்லை.
ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக்கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமுக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

-விடுதலை,22.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக