சனி, 29 அக்டோபர், 2016

இந்திய மடாதிபதிகள்



1-12-1929, குடிஅரசிலிருந்து...
இந்திய மடாதிபதிகள் என்று சொல்லிக் கொண்டு இந்திய செல்வங்களை கொள்ளையடித்து பாழாக்கு கின்றவர்கள் எத்தனை பேர் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுமென்கின்றோம். சங்கராச் சாரிகள் என்று ஒரு ஏழு எட்டு பார்ப்பனர்கள் இந்தியா விற்குள் தினமும் கிராமம் கிராமமாக பட்டணம் பட்டணமாய்ச் சுற்றிசுற்றி அடிக்கும் பகற்கொள்ளைக்கு ஏதாவது அளவு கண்டுபிடிக்கக் கூடியதாக இருக் கின்றதா?
ஒவ்வொரு சங்கராச்சாரிக்கும் அரண்மனை போல் மடமும், யானை, குதிரை, பல்லக்கு, படைகள், நகைகள், கூட்டங்களுடனும் தளங்களுடனும் சுற்றுப் பிராயணங்கள் நடப்பதைப் பார்த்தால் மனம் பதைக்கின்றது. இரத்தங் கொதிக்கின்றது.
இவர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் உள்ள பணக் காரர்கள் பதினாயிரம், அய்யாயிரம், ஆயிரம், அய்ந்நூறு, இருநூற்றைம்பது ரூபாய்கள் என்கின்ற கணக்குப்படி காணிக்கைகளும் 108-1008 ரூபாய்கள் என்கின்ற கணக்குப்படி பாதபூஜை களும், தினம் ஒரு வேளை பிச்சைக்கு என்று 427-430 ரூபாய்களும் கொடுக்கப் பட்டு வருகின்றது. அத்தோடு அவர்கள் காலிலும் விழுந்து கால் கழுவின பாத தீர்த்தம் அருந்தப்படு கின்றது. இப்படியாக ஆயிரக்கணக்கான வருஷங் களாக நாளெல்லாம் நடந்து வருகின்றது.
ஆனால் இப்படிப்பட்ட சங்கராச்சாரிகளைப் பற்றி பணம் கொடுக்கின்றவர்களில் எந்த மூடர்களாவது சிந்தித்துப் பார்த்து பணம் கொடுக்கின்றார்களா? என்று பார்த்தால் அது ஒரு சிறிதும் தென்படுவதில்லையே. சங்கராச்சாரி என்றால் என்ன? அவர் யார்? யாருக்கு குரு? எதற்காக குரு? அவரால் யாருக்கு என்ன பிரயோ ஜனம்? எதற்காக பணம் கொடுக்கவேண்டும்? அந்தப் பணம் என்ன ஆகின்றது? என்பது போன்ற விஷயங் களில் ஏதாவது ஒன்றைப் பற்றி கவனித்துப் பார்த்து யாராவது பணம் கொடுக் கின்றார்களா? ஒரு சிறிதும் இல்லவே இல்லையே. அந்தோ! அந்தோ! வெகுபணம் வீணாய்ப் போகின்றதே.
இதனால் நமது மானமும், மனிதத் தன்மையும் வீணாய்ப் போகின்றதே. உதாரணமாக, எந்த சங்கராச்சாரியும் ஸ்நானம் செய்வதற்கு முன்தான் நம்மைப் பார்ப்பார். ஏனெனில், நம்மை பார்த்தால் சூத்திரனைப் பார்த்த தோஷமும், நமது நிழல் பட்டால் சண்டாள நிழல் ஸ்பரிசமும்,
நம்முடன் பேசினால் நீச்ச பாஷை உச்சரித்த பாதகமும் அவரை சூழ்ந்து கொள்ளு கின்றன. ஆதலால் இவற்றிற்காக அவர் தோஷப்பரிகார பிராயச்சித்தம் செய்யவேண்டி இருக்கிறது. இதன் நிமித்தம் அவர் ஸ்நானம் செய்வதற்கு முன்பாகவே நம்மை பார்த்து, நம்மிடம் பேசி நமக்கு தீர்த்தம் கொடுத்து, பணம் பெற்று, அந்தப் பணத்தைக் கொண்டே மேல்கண்ட பிராயச்சித்தங்களும் செய்துவிட்டு பிறகு பூஜை செய்து சாப்பிடுகின்றார்.
தவிரவும், இந்தப் பணங்களால் சமையல் செய்து ஆயிரக்கணக்கான வெறும் பார்ப்பனர்களுக்கே சாப்பாடு போடுகின்றார்.
எஞ்சியதை ஊருக்கு அனுப்பு கின்றார். இந்தப்படி இனியும் குட்டி ஆச்சாரிகள் மடம் எத்தனையோ? ஆகவே இப்படிப்பட்ட சங்கராச்சாரிகள் கொள்ளை எத்தனை கோடி என்பதை வாசகர்கள்தான் கணக்குபோட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி ஜீயர்கள், பட்டர்கள், சுவாமிகள், குலகுருக்கள் என்கின்ற சில்லரைப் பார்ப்பனக் குருக்கள் கொள்ளைகள் ஒரு புறமிருக்க,
இனி பார்ப்பனரல்லாத பண்டார சன்னதிகள் என்ற மடாதிபதி கொள்ளைக்கும் கணக்கு வழக்கில்லை. சாதாரணமாய் தஞ்சை ஜில்லாவில் மாத்திரம் உள்ள இரண்டு மூன்று பண்டார சன்னதிகளின் வரும்படி ஆண்டு ஒன்றுக்கு 24 லட்ச ரூபாய்களுக்கு குறையாது என்று சொல்லலாம்.
இது போல் மற்றும் நம் நாட்டில் எத்தனையோ மடாதிபதிகளும், பண்டார சன்னதிகளும் ஆயிரக் கணக்கான பேர்கள் நமது கண்களுக்கு தென்படாமல் இருக்கின்றார்கள். இவர்கள் சொத்தும் வரும்படியும் எவ்வளவு ஆகும்? அது என்ன ஆகின்றது யாருக்கு பலன் கொடுக்கின்றது? இவைகளால் நாட்டிற்கு என்ன பலன்? என்று யாராவது எந்த தேசியவாதிகளாவது, மதவாதிகளாவது,
ஆஸ்திக வாதிகளாவது கவனிக் கின்றார்களா என்று கேட்கின்றோம். எனவே நமது நாட்டின் தேசியமும், மதவாதமும், ஆஸ்திகமும் எவ்வளவு புரட்டின் பேரிலும் அயோக்கியத்தனத்தின் பேரிலும் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை இப்போழ் தாயினும் மக்கள் உணர முடிந்ததா என்று கேட்கின் றோம்.


-விடுதலை,30.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக