சனி, 29 அக்டோபர், 2016

திருவாங்கூர் சமஸ்தானம்

திருவாங்கூர் சமஸ்தானம்

1-12-1929 - குடிஅரசிலிருந்து....
திருவாங்கூர் அரசாங்கம் என்பது சுதேச சமஸ்தானங்கள் என்று இந்திய அரசர்களால் ஆளப்படும் தேசங்களில் இது ஒரு நடுத்தர அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்தின் எல்லை சென்னை மாகாண ஜில்லாக்களில் இரண்டு ஜில்லாக்களுக்கு அதாவது சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களுக்கு சமானமானதாக இருக்கும். இதன் சனத்தொகை சுமார் நாற்பது லட்சமாகும்.
இதன் பரப்பு 7500 சதுர மைல்களாகும். இந்த நாற்பது லட்சம் ஜனத்தொகையில் ஏறக்குறைய சரிபகுதி ஜனங்கள், அதாவது இருபது லட்சம் பேர்கள் இந்துக்கள் அல்லாதவர்களான கிறிஸ்துவர்களும், மகமதியர் களுமே யாவார்கள். எஞ்சி உள்ள இருபது லட்சத்திலும் சமார் பன்னிரண்டு லட்சம்பேர்கள் தீண்டக் கூடாத வர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள்,  கண்ணில் தென்படக் கூடாதவர்கள் ஆகிய மிருகங் களிலும் கீழானவர்கள் ஆவார்கள்.
இப்படியாக முப்பத்தி யிரண்டு லட்சம் ஜனங்கள் போக எஞ்சியுள்ள சுமார் எட்டு லட்சம் பேர்களே, ஜாதி இந்துக்கள் அதாவது மனித உரிமையுடையவர்கள் ஆவார்கள். இதில் 50,000 பேர்கள் பார்ப்பனர்கள் இப்படியாக 40 லட்சம் சனத்தொகை கொண்ட இந்த அரசாங்கத்திற்கு வருஷாந்திர (ரிவினியூ) வருமானம் சுமார் எழுபது லட்ச ரூபாயாகும்.
எனவே, இந்த நிலையில் உள்ள மேற்படித் திருவாங்கூர், ராச்சியத்தில் தேவஸ்தான சம்பந்தமாக செலவு செய்யும் தொகையோ பதினேழு லட்ச ரூபாயாகும். இந்த 17 லட்ச ரூபாய் தொகையானது இந்து மத சம்பந்தமான தேவஸ்தானங்களில் செலவு என்று சொல்லப் பட்டாலும், இவைகள் ஏறக்குறைய, ஏன் முழுவதும், மேலே காட்டப்பட்ட 50 ஆயிரம் பார்ப்பனர் களுக்கே, அவர்களது சாப்பாட்டிற்கே செலவு செய்யப்பட்டு வருகின்றது.
அரசன் தனது ராஜ்ஜியதில் உள்ள எல்லா மக்களிடத்திலிருந்தும் வரிவசூலித்து ஒரு ஜாதிக்கு மாத்திரம் அதுவும் அநேகமாக வரி கொடுக்கக் கூடாத ஜாதியும், கஷ்டப்படாமல் பிறர் உழைப்பில் தேகம் நோகாமல் வாழ்கின்ற ஜாதியும், தங்களைத் தவிர மற்ற மக்களெல்லாம் கீழ்ஜாதி, இழிகுலத்தவர்கள், தங்களது வைப்பாட்டி மக்களாய் இருக்கத் தகுந்தவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் ஜாதியுமாகிய பார்ப்பனர்களுக்கே போய் சேருகின்றது என்றால், அந்த ராச்சியத்தின் நீதிக்கும் புத்திக்கும் வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
அந்த ராச்சியத்தில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும்; மற்றும் வெளிநாட்டிலிருந்து அந்நாட்டுக்கு சென்று குடியேறும் பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும் அவர்கள் அத்தனைப் பேருக்கும் ஆண், பெண், குழந்தை, குட்டிகள் சகிதம் அவர்கள் எந்த வேலையில் எவ்வளவு சம்பாதித் தாலும், எந்த உத்தியோகத்தில் எவ்வளவு சம்பளம் பெற்றாலும்,
எந்த வியாபாரத்தில் எவ்வளவு லாபம் அடைந்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலை யில்லாமல் பார்ப்பனர் என்கின்ற பேருக்கு மாத்திரம் தினம் இரண்டு வேளை கோயிலிலும், ஊட்டுப்பறை என்னும் சாப்பாட்டுச் சத்திரங்களிலும் தாராளமாகவும் நிரந்தர மாகவும் சாப்பாடு போடப்பட்டு வருகின்றது.
இது நிற்க; மற்றபடி, பண்டிகை நாட்களிலும் புண்ணியநாள்கள் விரதநாள்கள் என்பவைகளிலும் சிரார்த்த நாள்களிலும் மிகுதியும் விசேஷமான சாப்பாடும், தவிர பணமும், கால், அரை, ஒன்று என்பதாக தட்சணையும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர, மாதம், தவறாமல் உற்சவங்களுக்கு இப்படியே நடக்கின்றது. இவைகள் தவிர அந்த நாட்டு பார்ப்பனரல்லாத உயர்ந்த ஜாதிப் பெண்கள் என்பவர்கள் பார்ப்பனர்களை புணருவது மோட்ச சாதனம் என்றும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.
இவை தவிர, ஆறு வருஷத்திற்கு ஒரு முறை ஜபம் என்னும் பெயரால் சுமார் எட்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு சடங்கும் கொண்டாடப்படுகின்றது. இச்சடங்கானது 56- நாள்களுக்கு தொடர்ச்சியாய் நடத்தப்படுவதாகும்.
இந்த அய்ம்பத்தியாறு நாள்களுக்கும் சுமார் பதினையாயிரம் பார்ப்பனர்கள் வரை மூன்று வேளை உணவுகளும், ஒவ்வொரு வேளைக்கும் பத்து இருபது வகை காய்கறிகளுடனும், 5, 6, வகை பலகாரங்களுடனும், 2, 3 வகை பாயாசங்களுடனும், 2, 3 வகை அப்பளங்களுடனும் விருந்துகள் நடக்கும் இவ்விருந்து செய்வதற்காக சமையல்காரர்கள் மாத்திரம் தினம் ஆள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று ரூபா கூலியில் 600, 700 நபர்கள் அமர்த்தப் படுவார்கள்.
தவிரவும் மேற்கண்ட பதினையாயிரம் பேர்களுக்கும் தினம் இவ்வித விருந்தளிப்பதுடன் நபர் ஒன்றுக்கு நாலணா, எட்டணா, ஒரு ரூபாய் வீதம் தட்சணையும் கொடுப்பார்கள். மற்றும் ஆயிரக்கணக்கான பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை உடன் கூட்டிக் கொண்டு போய் அவைகளையும் பார்ப்பனப் பிள்ளைகள் என்று காட்டி அவைகளுக்கும் தட்சணை வாங்கிக் கொள்வார்கள்.
அன்றியும் தூர தேசங்களில் இருந்துவரும் பதினாயிரக் கணக்கான நம்பூதிரி பார்ப்பனர்களுக்கு போக வர பிரயாணச் செலவும், சாப்பாடு, தட்சணையும் கொடுத்து ஆள் ஒன்றுக்கு ஒவ்வொரு கட்டில் மெத்தை, இரண்டு தலையணை, சால்வை நான்கு, நான்கு ஜோடி வேஷ்டிகள் முதலியவைகளும் கொடுப்பார்கள். மற்றும் இவை போன்ற பல செலவுகளுக்காக மேற்கண்ட எட்டு லட்ச ரூபாயும் 56 நாள்களில் பஞ்சு பஞ்சாய்ப் பறந்து செலவாகிவிடும்.
இப்படிச் செலவு செய்து நடத்தப்படும். இந்த முறை ஜபமானது எதற்காக என்றால், சுமார் 200 வருஷத்திற்கு முன் இருந்த ஒரு ராஜா அந்நாட்டில் செய்த ஏதோ ஒரு சிற்றரசர்கள் யுத்தத்தில் சில பார்ப்பனர்கள் இறந்து போனதால் அந்தப் பாவம் தீர்ந்து தங்களுக்கு சந்ததி விர்த்தியாவதற்கு பிராயச்சித்தமாக இப்படி இந்த இருநூறு ஆண்டுகளாக ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு லட்ச ரூபாய் (அதாவது, அந்த பார்ப்பனர்களின் குடும்பத்திற்கு போய் சேரும்படி) செலவு செய்து முறை ஜபம் செய்யப்பட்டு) வருகின்றது.
இந்த மாதிரியான முட்டாள் தனமான கொள்கைகள் உடையவர்களாகிய இந்து அரசர்களால் இந்தியா ஆளப்பட்டு வந்து இருந்ததனால் இன்றைய தினம் இந்தியா ஆயிரக்காணக் கான வருஷங்களாக அன்னியநாட்டு நன்மையின் பொருட்டு அன்னி யர்களால் ஆளப்படுவதில் ஏதாவது ஆச்சரியம் இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.
நிற்க, இந்தப்படி ஆறு ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு எட்டு லட்ச ரூபாய் செலவு செய்து முறை ஜெப பிராயசித்தம் செய்து வந்தும், அந்த ராஜாங்கத்திற்கு சந்ததி இல்லாமல் அடிக்கடி சுவிகாரம் செய்துதான் பிள்ளைகள் உண் டாக்கி பட்டம் கட்டி ஆளப்பட்டு வருகின்றது. இதை அந்த ராஜி யத்திலுள்ள ஒவ்வொரு ராஜாக்களும் கண்டு வந்திருந்தும், இம் மாதிரியான மூடநம்பிக்கை இவர்களை விட்டு போகவில்லை யானால், இவர்கள் ஒரு நாட்டை ஆள யோக்கியதை உடையவர்களா என்று கேட்கின்றோம். 
-விடுதலை,30.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக