ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தமிழர் சங்கம்


7.7.1929 - குடிஅரசிலிருந்து...
சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.
தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகிய வைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர் களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும்,
நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச் சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக் கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கை களைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.
நிர்வாகஸ்தர்கள்
திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷக ராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவ ராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.


தமிழ்நாடு மாகாண மகாநாடு

14.07.1929 - குடிஅரசிலிருந்து...

தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும் ஆடம்பரங்களும் நடை பெற்றன.
தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926இல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது, வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண் ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண் யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காகக் கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரச்சாரமும் செய்யப்பட்டது என்றாலும் அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டுவிட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும்,
அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரச்சாரம் செய்து திரு. சத்யமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்த செய்தியை இன்னும் இரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.
வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடுவார்கள்.
திரு.வரதராஜுலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள் ஆனால், பார்ப் பனர்களும் காங்கிரஸ், ஆபீசுகளும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரச்சாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜுலுவே தெரிந்து எடுக்கப்பட்டிருப்பார்.
ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு கமிட்டி தேர்ந்தெடுத்தும், திருப்பி அனுப்பி, திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரியவருகின்றது.
ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும்.
அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு தூரம் வகுப்புவாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத் திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.
-விடுதலை,3.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக