சனி, 29 அக்டோபர், 2016

காந்தி ஜெயந்தி புரட்டு


06-10-1929 குடிஅரசிலிருந்து....
திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின் பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும் அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப் போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையையாவது பின் பற்றுகின்றவர் களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம்.
அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜெயந்தி கொண்டாடுவது எதற்குச் சமானம் என்று பார்க்கப் போனால் புத்தரை நாஸ்திகர் என்று பழி சுமத்தி அவர் கொள்கையை அடியோடு அழித்து நாட்டில் செல்வாக்கில்லாமல் செய்துவிட்டு புத்தர் மகா விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று புராணங்களை எழுதிவைத்து வணங்கி வந்ததைத் தான் சமானமாகச் சொல்லலாம். இந்தத் தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனராவது திரு.காந்தி அபிப் பிராயத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உதாரணமாக சாரதா மசோதாவுக்கு ஆதரவளித்ததில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 24 வயதும் கல்யாண வயதாயிருக்க வேண்டும் என்று சொன்னதை எந்தப் பார்ப்பனர் ஒப்புக் கொண்டார் என்று கேட்கின்றோம். தீண்டாமை ஒழிந் தாலல்லாது நமக்கு சுயராஜ்யம் கிடைக்காதென்றும், தீண்டாமையை அடியோடு அழிக்காவிட்டால் நாம் சுயராஜ்யத்திற்கு அருகரல்லவென்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயற்சித்தாரா? முயற்சிக்கிறாரா? முயற்சிக்கப் போகிறாரா? என்று கேட்கின்றோம். கோவில்களில் தீண்டப்படாதாரை விடாவிட்டால் அது மிகவும் அக்கிரமம் என்று சொன்னாரே. அதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு கோயி லுக்குள் விட்டார்களா என்று கேட்கின்றோம். விதவை களுக்கு மறுமணம் செய்யுங்கள் என்றும் மறுமணம் செய்யப்படாத விதவைகள் வீட்டைவிட்டு ஓடிப்போய் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது கேட்டார்களா என்று கேட்கின்றோம்.
மற்றும் காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், பூரண சுயேச்சை என்பது பையித்தியக்காரத் தனமென்றும் சொன்னதை யாராவது எந்தப் பார்ப்பனராவது மதித்தார்களா? அன்றியும் கோயில்களில் கடவுள்கள் இல்லை என்றும், கோயில்கள் விபசார விடுதிகள் என்றும் சொன்னதை யாராவது மதித்து எந்தக் கோயில்களை யாராவது இடித்தார்களா அல்லது அடைத்தார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் லாகூர் காங்கிரசில் ஒரு காரியமும் ஆகப்போவதில்லை; காங்கிரசியக்கமும் ஒழுங்காயில்லை. ஆதலால் நான் காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்கு யாராவது பதில் சொல்லவோ அல்லது காங்கிரசை விட்டு வெளிவரவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளைத் திருத்தவோ ஒப்புக் கொண்டார்களா என்று கேட்கின்றோம். கடைசியாக திரு.காந்தி இன்னமும் தனக்கு ஒத்துழையாமையில் தான் நம்பிக்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லி வருகின்றாரே! இதை யாவது எந்தப் பார்ப்பனராவது கேட்டு உத்தியோகத்தை விடவோ சட்ட சபையை விடவோ, பட்டத்தை விடவோ, பள்ளியை விடவோ, வக்கீல் வேலையை விடவோ, சம்மதித்தார்களா என்றும் கேட்கின்றோம். திரு.காந்தி சொல்வதில் ஒன்றைக் கூட கேட்காமல் அவரைப் பைத்தியக்கார ரென்றும், முட்டாள் என்றும், மூளை இல்லை என்றும், அரசியலுக்கு லாயக்கில்லை என்றும், அராஜகன் என்றும், சட்டவிரோதி என்றும் மற்றும் அயோக்கியன், மடையன், போக்கிரி (கும்பகோணம் பம்பாய் முதலிய இடங்களில்) என்றும் சொல்லிவிட்டு அதுவும் சென்ற வாரத்தில் சொல்லிவிட்டு இந்த வாரத்தில் அதே பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் சேர்ந்து காந்தி ஜெயந்தி கொண்டாடுவதென்றால், இதைப் போன்ற வஞ்சகமும் சூழ்ச்சியும் வேறு உண்டா என்றுதான் கேட்கின்றோம்.
ஒரு காரியத்திற்காகக் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட் டது என்றால், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான். அதாவது தென்னிந்தியாவில் வருணாச்சிரமப் பிரச்சாரம் செய்ததற்கும் இந்த ஜென்மத்தில் சூத்திரன் தனது வருண தர்மத்தைச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் வைசியனாக அடுத்த ஜன்மத்தில் சத்திரியனாக, அடுத்த ஜன்மத்தில் பிராமணராகலாம் என்று சொன்னதற்கும் மற்றும் ராமாயண, பாரத பிரச்சாரம் செய்ததற்கும் கதரின் பேரால் லட்சக்கணக்காக பணம் பிடுங்கி பார்ப்பனாதிக் கத்திற்கு செலவு செய்ய பார்ப்பனர்கட்கு இடம் கொடுத்து விட்டு போனதற்கும் வேண்டுமானால் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி கொண்டாடலாம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆனால் சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லா தார்கள் அதில் கலந்து கொண்டதற்கு நாம் வெட்கப்படா மலிருக்க முடியவில்லை. இன்றைய தினம் நமது நாட்டில் நடக்கும் அனேக ஜெயந்திகளும் பண்டிகைகளும் திரு. நட்சத்திரங்களும் உற்சவங்களும் பார்ப்பனாதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாதார் இழிவுக்கும் அறிகுறியாக நடத்தப் படுகின்றது என்பதைப் பலர் அறிந்தும் அவ்வித பண்டிகை களையும் உற்சவங்களையும் இன்னமும் அறிவும் உணர்ச் சியுமற்ற பார்ப்பனரல்லாதார்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். அதுபோலவே காந்தி ஜயந்தியும் கொண் டாடப்பட்டது என்றுதான் நாம் வருத்தத்தோடு சொல்ல வேண்டியிருக்கின்றது. எனவே இனியாவது பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் இம்மாதிரியான பார்ப்பன சூழ்ச்சியிலும் வஞ்சகத்திலும் விழாமலிருக்க எச்சரிக்கை செய்கின்றோம்.
-விடுதலை,1.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக