சனி, 19 ஆகஸ்ட், 2017

நாவலர் பாரதியார் பிறந்த நாள் ஜூலை 27



நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழிப் புலவர் _ 1938இல் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் வளர்ந்தெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதிகளாகத் திகழ்ந்தவர்களுள் இப்புலவரும் முக்கியமானவர்.

“இந்தி வேண்டாம் வேண்டாம் என்று நான் அறைகூவிச் சொல்கிறேன். வேண்டாம் என்பதற்கு ஆயிரம் காரணமுண்டு. வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாவது உண்டா? எந்த அமைச்சருடனும் நான் வாதாடத் தயார்! யாரேனும் வருவார்களா?’’ என்று சூளுரைத்த தீரர் அவர்.

கட்டாய இந்தி வேண்டும் என்பதற்கு அமைச்சர்கள் கூறிய போலிக் காரணங்கள் எல்லாவற்றையும் மறுத்து, இந்தி ஏன் வேண்டாம்? என்பதற்குரிய பல்வேறு காரணங்களையும் தொகுத்து 24 பக்கங்களைக் கொண்ட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட திறந்த மடல் ஒன்றை பிரதம அமைச்சர் ஆச்சாரியாருக்கு (ராஜாஜிக்கு) அவர் எழுதியது _ அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்றாகும். ஒரு வார காலம் தொடர்ந்து சென்னையில் சொற்பொழிவாற்றி (13.8.1939 _ 20.8.1939) இந்தி எதிர்ப்பின் சூட்டைக் கிளப்பினார்.

திருச்சியில் இந்திப் போர் மந்திராலோசனைக் கூட்டத்தில், (28.5.1938) “சத்தியாக்கிரகம் அதில் வெற்றியில்லையேல், சட்ட மறுப்புதான்’’ என்று சங்கநாதம் செய்த வீரத்திருமகன் அவர். அன்றுமுதல் 1939 முடிய சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியத்தின் (High Command) தலைவராக விருந்தார்.

குறிப்பு: நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மகள்தான் மறைந்த டாக்டர் லலிதா காமேசுவரன் _பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் தாத்தாவும் ஆவார்.

-உண்மை இதழ்,16-31.7.17

 


டாக்டர் முத்துலட்சுமி நினைவு நாள் ஜூலை 22


இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகிய  (Doctor) முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் ஜூலை 22. இன்னொரு சிறப்பும் இவருக்கு உண்டு. உலகளவில் சட்டமன்ற துணைத் தலைவராக வந்த முதல் பெண்மணியும் இவரே.

பெண்கள் அந்தக் காலத்தில் அதுவும் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால், அது சாதாரணமான ஒன்று அன்று. புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதி பெற்று கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் தன்னந்தனியான பெண்ணாகப் படித்துத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

அம்மையார் -ஏடு ஒன்றினை நடத்தினார். அதன் பெயர் “ஸ்த்ரி தர்மா’’ என்பதாகும். பெண்கள் பிரச்சினை, சமூக அவலங்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்தார். அரசின் நல்ல திட்டங்களை ஆதரித்தும், கேடு பயப்பவைகளை எதிர்த்தும் கட்டுரைகளைத் தீட்டினார்.

நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அம்மையார் ஒருமனதாக சென்னை மாநில மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் அதன் துணைத் தலைவராகவும் ஒளி வீசினார். தேவதாசி ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயது உயர்த்தும் சட்டம் இவற்றிற்காகப் பெரும் குரல் கொடுத்தார். குறிப்பாக தேவதாசி ஒழிப்புச் சட்டம் (பெண்களுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு விடுவதை ஒழித்த சட்டம்) அம்மையாரை என்றென்றும் நினைவு கூரச் செய்வதாகும்.

இந்தச் சட்டத்தை அம்மையார் கொண்டு வந்தபோது, இது தெய்வ காரியத்தில் தலையிடுவதாகும் _ இந்த ஜென்மத்தில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சத்தியமூர்த்தி அய்யர் வாய் நீளமாகப் பேசினார். ‘அப்படியா? இதுவரை எங்கள் ஜாதியினர் மோட்சம் அடைந்தது போதும்; வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஜென்மத்தில்  தேவதாசிகளாக இருந்து அடுத்த ஜென்மத்தில் மோட்சத்தை அடையட்டுமே!’ என்று போட்டாரே ஒரு வெடிகுண்டு. சத்தியமூர்த்தி அய்யர்கள் சப்தநாடியும் அடங்கிப் போனார்கள்.
-உண்மை இதழ்,16-31.7.17

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மாயவரம் சி. நடராசன் நினைவு நாள் 10.07.1937


“பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப்-பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்-படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி’’ என்று ‘குடிஅரசு’ இதழால் பாராட்டு வழங்கப்பட்டவர் மாயவரம் சி.நடராசன். பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்னையில் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். 

ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து கட்டுரைகளை குடிஅரசுக்குத் தந்தவர்.
அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கலவரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில் எல்லாம் மாயவரம் சி.நடராசன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்தாடுவார். நாகைமணி, திருவாரூர் தண்டவாளம் அரங்கராசு என்ற ஒரு படையே அவ்வாறு இருந்ததுண்டு.

சர்க்கஸ் கம்பெனியில் ஓராண்டுகாலம் சாகசங்கள் புரிந்து, பின் இராணுவத்துக்குச் சென்று, நாடு திரும்பி, காங்கிரசிலும் சேர்ந்து, தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு வெளியேறியதையொட்டி தந்தை பெரியாருடன் நடந்தவர் மாயவரம் நடராசன்.

‘வெற்றி முரசு’ என்ற ஏட்டையும் நடத்தியுள்ளார். மாயவரத்தில் இம்பீரியல் பிரஸ் இவருக்குச் சொந்தமானது.

தந்தை பெரியார் அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அன்னை நாகம்மையார் உடல் நலிவுற்ற நிலையில், அவர்களை மாயவரம் அழைத்து வந்து தம் வீட்டில் தங்க வைத்து வைத்திய உதவிகளைச் செய்தவர்.

குறிப்பு: மயிலாடுதுறையில் (9.3.2002), மாயவரம் நடராசன் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் தலைமையில் வெகுசிறப்பாக திராவிடர் கழகத்-தின் சார்பில் கொண்டாடப்பட்டது.
-உண்மை இதழ்,1-15.7.17

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் 07.07.1859


அன்றைய செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகத்தை அடுத்த கோழியானூர் கிராமத்தில் இரட்டை மலை என்னும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் இரட்டை மலை சீனிவாசன் (1860 ஜூலை 7).

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பெம்மான் இவர்.
1893இல் பறையன் என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். மூன்று மாதம் மாத இதழாகவும், அதன்பின் வார இதழாகவும் 7 ஆண்டு காலம் தொடர்ந்து அவரால் நடத்தப்பட்டது. தன் சமுதாயம் வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டு இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டார்.

1891 இல் ஆதிதிராவிட மகாசபையில் சேர்ந்து செயல்பட்டு, பின்னர் அந்த அமைப்பின் செயலாளராக இருந்து அரும்பணியாற்றினார். 1923 இல் சட்ட சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு நீதிக் கட்சி ஆட்சியைப் பயன்படுத்தி பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள் ஆகியவற்றில் தாராளமாக தாழ்த்தப்பட்டவர்கள் புழங்கிட வழிவகை செய்தார். ஒரு முக்கியமான தகவலைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.

1895 ஆம் ஆண்டில் லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. அத் தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் வெள்ளைக்காரர்களே! அவர்களில் இருந்துதான் மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு வந்தனர். 

அத்தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று லண்டன் பார்லிமெண்டுக்குக் காங்கிரஸ் சார்பில் மனு ஒன்றை அனுப்பினர்.

இதற்கு அதிகாரப் பூர்வமான எதிர்ப்பைத் தெரிவிக்கக் காரணமாக விருந்தார் இரட்டை மலை சீனிவாசன். 112 அடிநீளமுள்ள ஒரு மனுவைத் தயாரித்து அதில் 3412 பேர்களின் கையொப்பங் களைப் பெற்றார்.

இந்தத் தேர்வு இந்தியாவில் நடந்தால் உயர்ஜாதி இந்துக்களான பார்ப்பனர்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து, ஏழை ஜாதியினரை, தாழ்த்தப்பட்டோரை இம்சை செய்வார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜெனரல் சர் சார்ஜ் செஸ்னி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் இந்த மனுவை அனுப்பி வைத்தார்.
-உண்மை இதழ்,1-15.7.17