சனி, 19 ஆகஸ்ட், 2017

டாக்டர் முத்துலட்சுமி நினைவு நாள் ஜூலை 22


இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகிய  (Doctor) முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் ஜூலை 22. இன்னொரு சிறப்பும் இவருக்கு உண்டு. உலகளவில் சட்டமன்ற துணைத் தலைவராக வந்த முதல் பெண்மணியும் இவரே.

பெண்கள் அந்தக் காலத்தில் அதுவும் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால், அது சாதாரணமான ஒன்று அன்று. புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதி பெற்று கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் தன்னந்தனியான பெண்ணாகப் படித்துத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

அம்மையார் -ஏடு ஒன்றினை நடத்தினார். அதன் பெயர் “ஸ்த்ரி தர்மா’’ என்பதாகும். பெண்கள் பிரச்சினை, சமூக அவலங்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்தார். அரசின் நல்ல திட்டங்களை ஆதரித்தும், கேடு பயப்பவைகளை எதிர்த்தும் கட்டுரைகளைத் தீட்டினார்.

நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அம்மையார் ஒருமனதாக சென்னை மாநில மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் அதன் துணைத் தலைவராகவும் ஒளி வீசினார். தேவதாசி ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயது உயர்த்தும் சட்டம் இவற்றிற்காகப் பெரும் குரல் கொடுத்தார். குறிப்பாக தேவதாசி ஒழிப்புச் சட்டம் (பெண்களுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு விடுவதை ஒழித்த சட்டம்) அம்மையாரை என்றென்றும் நினைவு கூரச் செய்வதாகும்.

இந்தச் சட்டத்தை அம்மையார் கொண்டு வந்தபோது, இது தெய்வ காரியத்தில் தலையிடுவதாகும் _ இந்த ஜென்மத்தில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சத்தியமூர்த்தி அய்யர் வாய் நீளமாகப் பேசினார். ‘அப்படியா? இதுவரை எங்கள் ஜாதியினர் மோட்சம் அடைந்தது போதும்; வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஜென்மத்தில்  தேவதாசிகளாக இருந்து அடுத்த ஜென்மத்தில் மோட்சத்தை அடையட்டுமே!’ என்று போட்டாரே ஒரு வெடிகுண்டு. சத்தியமூர்த்தி அய்யர்கள் சப்தநாடியும் அடங்கிப் போனார்கள்.
-உண்மை இதழ்,16-31.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக