சனி, 19 ஆகஸ்ட், 2017

நாவலர் பாரதியார் பிறந்த நாள் ஜூலை 27



நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழிப் புலவர் _ 1938இல் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் வளர்ந்தெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதிகளாகத் திகழ்ந்தவர்களுள் இப்புலவரும் முக்கியமானவர்.

“இந்தி வேண்டாம் வேண்டாம் என்று நான் அறைகூவிச் சொல்கிறேன். வேண்டாம் என்பதற்கு ஆயிரம் காரணமுண்டு. வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாவது உண்டா? எந்த அமைச்சருடனும் நான் வாதாடத் தயார்! யாரேனும் வருவார்களா?’’ என்று சூளுரைத்த தீரர் அவர்.

கட்டாய இந்தி வேண்டும் என்பதற்கு அமைச்சர்கள் கூறிய போலிக் காரணங்கள் எல்லாவற்றையும் மறுத்து, இந்தி ஏன் வேண்டாம்? என்பதற்குரிய பல்வேறு காரணங்களையும் தொகுத்து 24 பக்கங்களைக் கொண்ட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட திறந்த மடல் ஒன்றை பிரதம அமைச்சர் ஆச்சாரியாருக்கு (ராஜாஜிக்கு) அவர் எழுதியது _ அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்றாகும். ஒரு வார காலம் தொடர்ந்து சென்னையில் சொற்பொழிவாற்றி (13.8.1939 _ 20.8.1939) இந்தி எதிர்ப்பின் சூட்டைக் கிளப்பினார்.

திருச்சியில் இந்திப் போர் மந்திராலோசனைக் கூட்டத்தில், (28.5.1938) “சத்தியாக்கிரகம் அதில் வெற்றியில்லையேல், சட்ட மறுப்புதான்’’ என்று சங்கநாதம் செய்த வீரத்திருமகன் அவர். அன்றுமுதல் 1939 முடிய சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியத்தின் (High Command) தலைவராக விருந்தார்.

குறிப்பு: நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மகள்தான் மறைந்த டாக்டர் லலிதா காமேசுவரன் _பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் தாத்தாவும் ஆவார்.

-உண்மை இதழ்,16-31.7.17

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக