செவ்வாய், 21 நவம்பர், 2017

வரலாற்றுத் தடம்: அவர் ஏன் பெரியார் ஆனார்?


பா. ஜீவசுந்தரி
(நன்றி :தமிழ்இந்து 19.11.2017)

“பெண்கள் எங்களாலே எவ்வளவோ நன்மைகள் பெற்றிருக்கிறார்கள். இன்று பெண்கள், ஆண்களைப் போலவே எல்லாவிதமான உத்யோகங்கள், கல்வி முதலியவைகள் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். பெண்கள் கலெக்டராகவும் வக்கீலாகவும் பெரிய பெரிய உத்யோகங்களில் எல்லாம் இருப்பதைப் பார்க்கின்றோம். இவ்வளவும் பெண்கள் அடைய எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்? எவ்வளவு ஏசல்கள் வாங்கியிருப்போம்? நாங்கள் என்னென்ன மாறுதல்கள் அடைய வேண்டும் என்று கூறி பாடுபட்டு வந்தோமோ, அவையெல்லாம் சட்டமாகி அமலில் இருப்பதைக் காணும்போது இதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய சேதி வேறு இருக்க முடியுமா? எங்களது துணிவு எவ்வளவு தூரம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”

- (26.08.1959 அன்று வாலிகண்டபுரத்தில் பெரியார் ஆற்றிய உரை)
*பெரியார் என்றழைத்தவர்*

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927-ம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம்தள்ளிவிட்டார். பெரியார் என்று பெண்கள் பட்டம் கொடுப்பதற்கு முன்னதாகவே அன்பின் பொருட்டும் பெரியார் என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர் அவர் என்பதாலும் அப்படி முதலில் அவரை அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோவில் பி.சிதம்பரம் பிள்ளை. அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிர்வாகியாகவும் இருந்தவர் (ஐந்தாவது நிர்வாகி). ‘ஆலயப் பிரவேசம்’ என்ற ஆங்கில நூலையும் 1930-களில் அவர் எழுதியுள்ளார். பின்னர், அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார்.

பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் குறித்து மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் 1929-ல் செங்கல்பட்டில் நடத்தப்பட்ட இயக்கத்தின் முதல் மாநாடு விளக்கியதுடன், அவற்றை எதிர்த்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான தீர்மானம்.
*பெண்கள் நடத்திய மாநாடு*

அதற்கு அடுத்த ஆண்டு, அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் நிகழ்த்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாட்டிலும் பெண்களுக்கெனத் தனி மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியமான காரணம், ‘எலியின் விடுதலைக்குப் பூனை எங்காவது முயற்சி செய்யுமா?’ என்று பெரியார் குறிப்பிடுவது வேடிக்கையாகப் பேசுவதுபோல் தோன்றினாலும், பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காகப் பெண்களே முன்னின்று உழைப்பதே சிறந்தது என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.

அதற்கான செயல் வடிவம்தான் ஒரே மாநாட்டு அரங்கில் தனித்தனியாக நடத்தப்பட்ட இளைஞர்கள் மாநாடும் பெண்கள் மாநாடும். பெண்கள் உற்சாகத்துடன் தங்களுக்கான மாநாட்டைத் தாங்களே முன்னின்று நடத்தினர்.

இந்த மாநாட்டின் தீர்மானங்கள் பெண்களுக்கு 16 வயதுவரை கண்டிப்பாகக் கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது. பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டு தேவதாசிகளாக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு, கைம்பெண்கள் மறுமணம், தேவதாசிப் பெண்களை இளைஞர்கள் மணம் முடிக்க வேண்டும் என ஒவ்வொரு மாநாட்டிலும் பெண்களின் நலன் முன்னெடுக்கப்பட்டது.

பெண்களுக்கே முன்னிலை

அனைத்து மாநாடுகளிலும் பெண்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதைப் பெரியார் முதன்மைப்படுத்தினார். அதனால்தான் தொண்டர்கள் குடும்பமாக வந்து பங்கெடுக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார். மாநாட்டின் தொடக்க உரைகளைப் பெண்களே நிகழ்த்த வேண்டும் என்ற நடைமுறையையும் அவர் வழக்கமாக்கினார். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பெண்கள் பங்கெடுப்பதும் தொடக்க உரை நிகழ்த்துவதும் வெற்றுச் சம்பிரதாயமாக மட்டும் நின்றுவிடாமல், தொடர் நிகழ்வுகளாகவும் அவை மாறின.

சுயமரியாதை இயக்கத்தின் வழியாகப் பெண்களிடையே ஏற்பட்ட இந்தத் தன்னெழுச்சி பற்றி தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அறியப்பட்ட சிங்காரவேலர் குறிப்பிடும் கீழ்க்கண்ட வாசகங்கள் கவனத்துக்குரியவை:

“சமையலறைக்குள்ளே மட்டும் முடக்கப்பட்ட பெண்கள் இன்று மேடையேறிப் பேசுகிறார்கள், பொதுமக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்கிறார்கள். ஆண்களோடு சரிநிகர் சமமாக நின்று சமூகத் தொண்டாற்றுகிறார்கள். இதற்கான பெருமைகள் எல்லாம் பெரியாருக்குத்தான் சேரும், இந்த இயக்கத்தில் இருப்பதுபோல் பேச்சாற்றல் மிக்க பெண்களை வேறு இயக்கங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வம்.”
1937-ல் சென்னை மாகாணப் பிரதம அமைச்சர் ராஜாஜி, இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றது. 1938-ல் உச்ச நிலையை எட்டியது. பெண்கள் பலரும் அதில் கலந்துகொண்டு குழந்தைகளுடன் சிறை சென்றார்கள்.

தினந்தோறும் போராட்டமும் கைதுமாகத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்துதான் தர்மாம்பாள், மீனாம்பாள் சிவராஜ், நாராயணி அம்மாள் போன்ற பெண்கள் அவருக்குப் ‘பெரியார்’ என்று பட்டம் சூட்ட முடிவெடுத்தனர். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது.

மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தனக்கு வழங்கப்பட்ட ‘பெரியார்’ என்கிற பட்டத்தை மகிழ்வுடன் பெரியார் ஏற்றுக்கொண்டார். 20.11. 1938 தேதியிட்ட ‘குடிஅரசு’ இதழில் ‘தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு’ என்று தலைப்பிட்டு முகப்புச் செய்தியாகவும் இது வெளியிடப்பட்டுள்ளது.

*என்றைக்கும் நிலைத்துநிற்கும் பட்டம்*

பெண் ஏன் அடிமையானாள் என்பதையும் பெண்ணுக்குப் புரிய வைத்தவர். ‘உன் விடுதலைக்குத் தடையாக இருக்கும் கூந்தலை நறுக்கு. ஆறு கெஜம், ஒன்பது கெஜம் புடவைக்கு மாற்றாக பேண்ட் அணிந்துகொள். பிள்ளைப்பேறு உன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் என்றால், கருப்பையையும் அறுத்துப் போடு’ என்றெல்லாம் பெரியார் மட்டுமே பேசினார். தமிழ்நாட்டில் அவரளவுக்குத் தீவிரமாகப் பெண்ணுரிமையை வலியுறுத்தியவர்கள் மிகக் குறைவு. இதை மட்டுமே அவர் பெண்களுக்குச் சொல்லவில்லை.
தன் வாழ்நாளில் தான் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால், பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்றும் அவர் பேசியிருக்கிறார். ஆனால், அவர் அமைச்சராகவும் இல்லை, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் இல்லை.

சமூகநீதியும் எளியவர்களுக்கான கல்வியும் இன்று பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் பெரியாரை நினைக்காமல் இருக்க முடியுமா?

மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பிறகு நம் குழந்தைகளின் உயர்கல்வி, எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது தவறாமல் நினைவில் எழும் சமூகநீதிக் காவலரை ‘பெரியார்’ என்றழைத்த பெண்கள் போற்றத்தக்கவர்கள். தன் வாழ்நாள் கடந்தும் அவர் பெரியாராகவே நிலைத்து வாழ்கிறார்.

-கட்டுரையாளர் எழுத்தாளர்,
பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

புதன், 15 நவம்பர், 2017

*பணம் நிலைக்காது*

தந்தை பெரியாரின் அறிவுரை*
                   ■■■■■■
💐💐💐💐💐💐💐💐💐💐
*________________________________*

◆ *‘‘பணக்காரத்தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதன்று; அந்த முறை தொல்லையானது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும், அது பணக்காரனுக்கும் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக் கூடியதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.’’*

_(‘குடிஅரசு’, 9.11.1946)_

                 🙈  🙉  🙊

🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

செவ்வாய், 14 நவம்பர், 2017

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியது

பெண்கள் உரிமைக்காகவும் போராடினார்

வர்க்கப் போராட்டத்துக்கு ஜாதி ஒழிப்பு மிக அவசியம்

கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் முழக்கம்



மதுரை, நவ.7 வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய தீண்டா மைக்கு எதிரான போராட்டம் நாட் டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியது. வர்க்கப் போராட்டத்துக்கு ஜாதி ஒழிப்பு மிக அவசியம் என்றார் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்.

தாழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் 2-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று(திங்கட்கிழமை) மாலை காளவாசலில் இருந்து பழங்காநத்தம் வரை ஜாதி ஒழிப்பு சமத்துவ பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கானேர் கலந்து கொண்டனர். அத னைத் தொடர்ந்து பழங்காநத்தத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, 'இந்தியா வில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பல காலமாக இருந்து வருகிறது. ஜாதிய ரீதியான ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது. பாஜக அரசு ஜாதிய ஒடுக்குமுறையை உயர்த்திப் பிடிக்கிறது. நாடு முழு வதும் இந்த ஒடுக்குமுறை பரப்பப் பட்டு வருகிறது.

"வர்க்கப் போராட்டம் வெற்றி பெற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டும். கேரளாவில் ஜாதி ஒழிப்பிலும், தீண்டாமை அகற்றும் நடவடிக்கையிலும் இடது முன்னணி செயல்பட்டுவருகிறது. அதன் ஒரு நடவடிக்கைதான் அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகும் திட்டமாகும். அண்ணல் அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், நாராயண குரு போன்றோரின் வழியில் இடது சாரிகள் இயக்கம் ஜாதி ஒழிப்பில் செயல்பட்டுவருகிறது. ஜாதி ஒழிப் புக்காக எந்த அமைப்பு போராட்டம் நடத்தினாலும் நாங்கள் இணைந்து போராடுவோம்"

ஜாதி ஒழிப்பில்

தந்தை பெரியார்!

ஜாதி ஒழிப்புப் பணியில் தந்தை பெரியாரின் செயல்பாடுகள் இன்றிய மையாதவை. பெண்களுக்குச் சம உரிமை தர வேண்டும் எனப் பெரியார் போராடினார். ஜாதி ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக பெரியார் இறுதிவரை போராடினார் என்பது நினைவு கூரத்தக்கது. அதன் வெளிப் பாடாகவே திராவிடர் கழகம் உரு வாக்கப்பட்டது. கேரள மாநிலம், வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக் களுக்கான அவரது போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜாதி வேறுபாடுகள் நாட்டில் வித்தியாசமாக உள்ளது. இந்தியாவில் 18 நிமிடத்துக்கு ஒருமுறை ஜாதி ரீதியான ஒடுக்குமுறை நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 3 தாழ்த்தப்பட்ட வர்கள் பாலியல் ரீதியான தொந் தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். 2 பேர் கொல்லப்படுகின்றனர்.

நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு எதிரான தாக்குதல்கள் அதி கரித்து வருகின்றன. புதுடில்லியில் கடந்த ஒரு மாதத்தில் 13 துப்புரவுப் பணியாளர்கள் இறந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித் துள்ளன. சமீபத்திய புள்ளிவிவரப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 163 சதவீதம் அதிகரித் துள்ளது. ஆண்டு தோறும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் கள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண பதிவேடு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2012-இல் 33 ஆயிரமாக இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 2015இ-ல் 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2016இ-ல் தாக்குதல் எண்ணிக்கையை வெளியிடாமல் மூடி மறைக்க முயற்சி நடக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதி ரான தாக்குதல் குறித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் 23 சதவீதம் பேருக்கு மட்டுமே தண் டனை வழங்கப்பட்டுள்ளது. தற் போது  எழுத்தாளர்களை, சங் பரி வாரங்கள் மிரட்டி வருகின்றன. தாழ்த்தப்பட்ட சமூகம் பின் தங்கி யுள்ள நிலையில் எழுத்தறிவு, வேலைவாய்ப்பிலும் பின்தங்கியே உள்ளது. 15 வயது முதல் 59 வயது வரையுள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் 18 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஒரு வயது நிரம்பாத தாழ்த்தப்பட்ட குழந்தைகளில் 1000 பேருக்கு 83 பேர் இறக்கின்றனர். 5 வயதுக்குள் 119 பேர் உயிரிழக் கின்றனர். 41 சதவீதம் பேருக்கு மின்சார வசதி இல்லை. 66 சதவீதம் பேருக்கு கழிப்பிட வசதி இல்லை. 35 சதவீதம் பேருக்கு மட்டுமே குடிநீர் வசதி உள்ளது என அதிகார பூர்வ அறிவிப்பு கூறுகிறது. 37 சதவீதம் பேர் பட்டினியாக உள்ளனர். 54 சதவீதம் பேர் ஊட்டச்சத்து இல் லாமல் உள்ளனர் என புள்ளி விவ ரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம்.

கிராமப்புறங்களில் 80 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் சொந்த நிலம் இல்லாமல் உள்ளனர். தாழ்த்தப்பட்ட வர்களின் பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி தீர்க்கும் என நம்பினர். ஆனால், பிரச்சினை எதுவும் தீரவில்லை.  இந்த நிலை முன்பு இருந்ததை விட தற்போது பாஜக ஆட்சியில் மோச மாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி ஒதுக்கீடே குறைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக் கீடு தேவையில்லை என மத்திய அரசு நினைக்கிறது.

ஜாதிய அமைப்பு முறையை ஒழிப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நோக்கம். ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் வர்க்கப் போராட்டம் சாத்தியம் இல்லை. எனவே மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு எதிராக போராட் டம் நடத்தும் அதேவேளையில் ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டும். போராடும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். முற்போக்குவாதிகள் ஜாதி ஒடுக்குமுறையை எதிர்க்கின் றனர். ஆர்.எஸ்.எஸ். ஜாதி அமைப் புகளை வலுப்படுத்தி வருகிறது. இடஒதுக்கீடு தேவையே இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலய  அர்ச்சகராகலாம் என்ற நிலையை உருவாக்கியதன் மூலம் பெரியாரின் கனவு நினைவாகி யுள்ளது. ஜாதியத்தை ஒழித்து மனிதநேயத்தை வலுப்படுத் துவது மட்டுமே தற்போதைய முக் கிய தேவையாக உள்ளது. தாழ்த்தப் பட்டவர்களுக்கு கேரளத்தில் மட் டுமே அதிக நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

அனைவருக்கும் மின்சாரம், இணையதள இணைப்பு வசதி, தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, வீடில்லாதவர் களுக்கு வீடு, குடும்பத்தில் ஒருவ ருக்கு வேலைவாய்ப்பு, வயதானவர் களுக்கு சிகிச்சை, பொதுக் கல்வித் திட்டம், நல்ல குடிநீர், இயற்கை வேளாண்மை உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன என்றார்

- விடுதலை நாளேடு,7.11.17

தமிழ்நாட்டில் மத மோதல்கள் குறைவுக்குக் காரணம் தந்தை பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்வின் தாக்கமே! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் கணிப்பு

கோவை, நவ. 13 தந்தை பெரியாரின் கருத்துக்கள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய தாக்கம்தான் மற்ற மாநிலங்களை காட்டி லும் மதரீதியிலான மோதல் கள் நடக்காமல் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது என கோவை விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் கூறினார். கோயமுத்தூர் வழக்குரை ஞர்கள் சங்கம் சார்பில் வழக்குரைஞர்கள் எழுதிய படைப்புகள் குறித்த அறிமுக விழா மற்றும் எழுத்தாளர் களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை யன்று கோவையில் நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோயமுத்தூர் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் கே.எம்.தண்டபாணி தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் உரையாற்றுகையில், சமூக அறிவு சார்ந்த சிந்தனைகள் உருவாகும்போது தான் நமது பண்பாடு, கலாச்சாரம் உயர்கிறது. இதன் மூலம் தான் சிறந்த தத்துவ ஞானிகளும் உருவாக்கப் படுகின்றனர். கோவையில் நீதி பதிகளும், வழக்கறிஞர் களும் சிறந்த புத்தகங்களை படைத்துள்ளது பெரும் வரவேற்புக்குரியது. பாரதி யாரின் கவிதைகள் தேசப் பற்றை நமக்கு ஏற்படுத்தி யது போல, தந்தை பெரியாரின் கருத்துக்கள் தான் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத் தியது.

இதன் காரணமாகத்தான் மற்ற மாநிலங் களைக் காட்டிலும் மதரீதியிலான மோதல் கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டு வளர்ச்சி யடைந்த மாநிலமாக உருவாக பெரியாரின் விழிப்புணர்வு கருத்துகள் பயன்பட்டது.  விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இச்சூழலில் சமூக வலை தளங்கள் மூலம் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். அத்தகைய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் சமூக வலைத் தளங்களை பயன் படுத்தி நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வு கருத்துக்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
- விடுதலை நாளேடு-13.11.17

ஈ.வெ.ராவுக்கு "பெரியார்" என்ற பட்டம்


13.11.1938



13.11.1938 இந்நாள் மறக்கவே முடியாத எழுச்சித் திருநாள்! அது இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலம் - களமும்கூட! அன்று பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை - பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து பெண்களே பெருமை யோடு பங்கு கொண்ட மாபெரும் பேரணி" "வீரத்தமிழ் நாடு - எம் நாடு" என்று மங்கையர் போர் முரசம் கொட்டப் புறப்பட்டது. திருவாட்டி திருவரங்க நீலாம் பிகை அம்மையார் (மறைமலை யடிகளாரின் மகள்) டாக்டர் தரு மாம்பாள், மூவலூர் இராமா மிர்தம் அம்மையார், மீனாம்பாள் சிவராஜ், பண்டித நாராயணி அம்மையார் முதலியோர் முன் னெடுத்துச் செல்ல, "ஒழிக, ஒழிக! இந்தி ஒழிக!" "விழித்தெழுந்தோம் பெண்கள்யாம் - வீணாக இந்தித் திணிப்பு ஏன்?" என்று விண் ணைக் கிழிக்கும் முழக்கங்களை வீரப்பெண்கள் சென்னையின் முக்கிய வீதிகளிலே முழங்கி வந்தனர்.

ஊர்வலம் ஒற்றவாடை நாடகக் கொட்டகையை வந்த டைந்தது. தோழர் மீனாம்பாள் சிவராஜ், தமிழ்க் கொடியை உயர்த்தினார் தோழர் வ.பா. தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரையாற்றினார். தோழர் நீலாம்பிகை அம்மையார் தலைமையேற்றார்.

மறைந்த அன்னை நாகம் மையார் உருவப் படத்தினை, தோழர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார்.

அந்த மாநாட்டில் தான் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம். ஈ.வெ.ராவுக்கு "பெரியார்" என்ற பட்டம் சூட் டப்பட்டது!

ஆகா! எத்தகைய பெருமை யுடையது அந்நாளும் அம் மாநாடும்!.

"இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலை வர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெருந் தலைவர் ஈ.வெ.ரா. செய்து வருவதாலும் தென்னாட் டில் அவருக்கு மேலாகவும், ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையாலும், அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்க வேண்டும்" என்பதுதான் வரலாற்றை வென் றெடுக்கும் வெண்தாடி வேந்த ருக்குப் பெண்களே மாநாடு கூட்டி பெரியார் என பட்டம் அளித்து மகிழ்ந்த அரும்பெரும் தீர்மானமாகும்.

தீர்மானத்தை விளக்கிப் பேசியவர்களுள், அண்ணாவின் துணைவியார் இராணி அம்மை யாரும் ஒருவர் என்பது கூடுதல் தகவலாகும்.

- மயிலாடன்

- விடுதலை நாளேடு,13.11.17