திங்கள், 29 ஜூலை, 2019

அய்யாவிற்கு அய்.நா. (யுனஸ்கோ) விருது தந்த நாள் “ 27-06-1970

உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையில் கொண்ட விருது; ஒப்பற்ற ஏற்பளிப்பு. உலகில் வேறு யாருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை. இவ்விருது 27.06.1970 அன்று மத்திய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் என்றால் பார்ப்பானைத் திட்டுவார்; கடவுள் இல்லையென்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அவரை குறைத்து குறுக்கிக் காட்டும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இவ்விருது ஒரு பதிலடி!

ஆரிய பார்ப்பனக் கூட்டம் அய்யாவை எவ்வளவு மறைக்க முயன்றாலும் அய்யா ஆதவன்போல் அறிவு பரப்பி வெளிப்படுவார் என்பதன் அடையாளம் இவ்விருது. “
Periyar - The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions, 
meaningless customs and base manners”.
- UNESCO (27.06.1970)
இதன் தமிழாக்கம்: பெரியார் _ புதிய உலகின் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி அண்ணா அவர்கள் (தமிழக முதல்வர்) அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நிலையில் 10.10.1968இல் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில் என்று குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் ஒப்பாரில்லா உலகத் தலைவர் என்பதை இந்த விருது வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, அவரைக் கொச்சைப்படுத்த, புரட்டு, திரிபுவாதங்கள், அபாண்ட குற்றச்சாட்டுகள் கூறும் குறுமதியாளர்களின், மோசடிப் பேர்வழிகளின் அயோக்கியர்களின் முகத்திரையையும் கிழித்தெறிந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூறிய மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்ற வரிகளின் ஏற்பளிப்பாகவும் இது அமைந்தது! தந்தை பெரியாரின் இனிவரும் உலகம் என்ற நூல் அவர் ஓர் தொலைநோக்காளர் என்பதை உறுதிசெய்தது.
அதையும் இவ்விருது ஏற்பளிப்புச் செய்தது! வாழ்க பெரியார் பெருமை!
குறிப்பு: இந்த விருது பற்றி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வரியை எடுத்துக்கொண்டு நான்கு நாள்கள் ஆற்றிய உரை (23.09.2014 முதல் 26.09.2014 வரை) விரைவில் நூலாக வந்து, அய்யாவின் பெருமையின் அழியாச் சின்னமாக நிலைக்கவுள்ளது என்பதை அறிவித்து மகிழ்கிறோம்.
- உண்மை இதழ், 16-30.6.15

வியாழன், 25 ஜூலை, 2019

வரலாற்றில் இன்று (ஜுலை 17): "திராவிட லெனின் " டாக்டர் டி.எம். நாயர் நூற்றாண்டு நினைவு நாள்

அப்பெருமகன் பற்றிய சில செய்தித்துளிகள்


- சு.குமார தேவன்




* நீதித்கட்சியைத் தோற்றுவித்தவர் களில் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயருக்குப் பின் மூன்றாவது மிகப் பெரிய தலைவர் டாக்டர் நாயர் என்று அன்புடன் அழைக்கப் பட்ட "தாரவார்ட் மாதவன் நாயர் "ஆவார்.

* கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள திரூருக்குப் பக்கம் உள்ள தாரவார்ட்டில் சங்கரன் நாயரின் மகனாக ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.

*  டாக்டர் நாயர் தான் பயின்ற எல்லாப் பாடங்களிலும் எல்லாத் தேர்வுகளிலும் முதலிடத்தில் தேறி, சென்னை மருத்துவக் கல்லூரியிலும், பின்பு இங்கிலாந்திலும் மருத்துவம் பயின்று MPCM என்ற உயர்ந்த பட்டம் பெற்றார். பின்பு பிரான் சிலும் பயின்று ENT மருத்துவத்தில் பட்டமும், எடின்பரோ பல்கலையில் M.D.யும் படித்து மருத்துவத்தில் சாதனை படைத்தார்.

* சென்னை திரும்பி Anti Septic என்ற சென்னை ராஜதானியின் முதல் மருத்துவ இதழை நடத்தினார். Madras Standard என்ற ஆங்கில நாளேட்டிற்கும் ஆசிரியராக இருந்தார். இந்த இதழே சென்னையின் முதல் மருத்துவ இத ழாகும். இந்த இதழில் வந்த கட்டுரைகள் டி.எம். நாயருக்கு மிகப் பெரும் புகழினைப் பெற்றுத் தந்தது.

* பொது வாழ்வில் தீவிர ஈடுபாடு கொண்டு காங்கிரசில் பணியாற்றிய டாக்டர் நாயர் 1904 முதல் 1916 வரை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றி னார். அவர் காலத்தில் Madras Medical Registration Act கொண்டு மருத்துவத் தொழில் செய்வதை ஒழுங்குபடுத்த வகை செய்தார்.

* ஆறரை அடி உயரம், அகன்ற நெற்றி, ஒளி மிகுந்த ஊடுருவிப் பார்க்கும் கண்கள், முறுக்கு மீசை என்று கம்பீரத் தோற்றம் கொண்ட டாக்டர் நாயர் பொது வாழ்வில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டும், சுயமரியாதையோடும் பணி யாற்றினார். 1908ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதிக் கோவில் குளத்திற்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டுமென்று அப்போது மேயராக இருந்த சர்.பிட்டி தியாகராயரின் தீர்மா னத்தை எதிர்த்த நாயர் அப்படி செய்தால் மிகுந்த வருமான இழப்பும், தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிடும் என்றார். சிலர் (மயிலாப்பூர் கூட்டத்தினர்)இதற்காக அவரைக் கடுமையாக விமர்சித்தும் பதவி விலக வேண்டும் என்றும் எழுதியும் பேசியும் வந்ததை அறிந்த தன்மானத் சிங்கமான டாக்டர் நாயர் நேர்மையாகவும், உண்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் இடமில்லை என்று கூறி பதவி விலகினார். இதனால் பொது வாழ்வின் தூய்மைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கினார்.

* காங்கிரசில் இருந்த டாக்டர் நாயர் 1915இல் டெல்லி இம்பீரியல் சட்டமன்றத் திற்கு தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் பார்ப்பனர்கள் சொல்லி வைத்து தோற்க வைத்தனர். அப்படித் தோல்வியுற்றதே அவரது பொது வாழ்வில் நீதிக் கட்சியின் பக்கம் திரும்ப வைத்தது.

* அப்போது டாக்டர் நடேசன், தியாகராயர் சந்தித்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேர வற்புறுத்தி அவரை இயக்கத்தில் சேர்த்தனர். நன்கு ஆலோ சித்து ஒரு தீவிர உறுதியோடு பார்ப்பன ரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு சமரசமின்றிப் பாடு படத் தயாராகி நீதிக் கட்சியில் இணைந்தார் டாக்டர்  நாயர்.

* டாக்டர் அன்னிபெசன்ட் பற்றி யாரும் விமர்சிக்காத போது,அவரின் நோக்கம்,சர்ச்சைக்குரிய நடவடிக்கை பற்றியும் Madam Besant என்ற நூலை எழுதி HIGGIN B0THAMS நிறுவனத்தால் வெளியிடச் செய்தார். இதனால் கோப முற்ற பெசன்ட் தாக்கல் செய்த அவதூறு வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அப்போது பெசன்ட் பெருமை பேசியவர்கள் பின்பு அவரின் நோக்கம் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதி ரானது என்பதை விளங்கிக் கொண்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலையினை நியாயப்படுத்திப் பேசியவர் அன்னி பெசன்ட் என்பதைப் பெரியார் தோலு ரித்துக் காட்டி யதை நினைவில் கொள்ள வேண்டும்.

* 10-11-1917 அன்று மாண்டேகு - செம்ஸ் போர்டு சென்னை வந்து புதிய ஆட்சி அமைப்பது பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்திக்க வந்த போது டாக்டர் நாயர், நடேசனார், சர்.பிட்டி தியாகராயர் ஆகியோர் சந்தித்து நான் பிராமின் ரிசர்வேசன் (Non-Brahmin Reservation) பற்றி கோரிக்கை ஒன்றை அளித்துப் பேசினர். ஆனால் அவர்கள் அதைப் பற்றி பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதன் பின்னணியில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும்,பெசன்ட் அம்மையாரும் இருந்தார்கள் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங் களுடன் கூறுகின்றனர். பின்பு அந்தக் கோரிக்கை மனு நீதிக் கட்சியின் மிக முக்கிய "Non-Brahmin Manifesto " என்று அறிக்கையாக உருவாகி திராவிட இயக்கத்தின் உயிர்நாடிக்கொள்கையாகி இன்று வரை ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வேலைவாய்ப்புகளின் இட ஒதுக்கீடு பெற வழிவகை செய்துள்ளது.

* டாக்டர் நாயர் இது பற்றி வலியுறுத்த இங்கிலாந்து சென்றார். ஆனால் அவர்  எந்தப் பொதுக் கூட்டத்திலும் லண்டனில் பேசக்கூடாது என்று காங்கிரசாரும், சுயராஜ்யக் கட்சியினரும் நெருக்கடி தந்ததை முடியடித்து ஒவ்வொரு பகுதி யாக தெருமுனையிலும், பூங்காக்கள் முன்பும் நின்று பிரச்சாரம் செய்து வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தினார். இந்த நிகழ்வுகள் டாக்டர் நாயருக்கு ஒரு பெரிய செல்வாக் கைத் தேடித் தந்தது.

* சுயராஜ்யம் பெறுவதே நம் லட்சியம் என்று காங்கிரஸ் காரர்கள் சொன்னபோது, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்கள் சரிசமமாக  ஆட்சியில் பங்கு பெற்று சரிசமமாக வாழ்வதே உண்மை யான சுயராஜ்ஜியம் என்று தன் கம்பீரக் குரலால் கர்ஜனை புரிந்தவர் டாக்டர்  நாயர்.

* ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பங்களிப்பில்லாமல் நீதிக்கட்சி வேரூன்ற முடியாது என்ற நாயர் 7-10-1917இல் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் ஆற்றிய வீர உரையால் சென்னை வாழ் தாழ்த்தப் பட்ட இயக்க நிர்வாகிகள் பெருவாரியாக நீதிக் கட்சியை ஆதரிக்க முன் வந்தனர். "நீதிக்கட்சி வரலாறு" என்ற புத்தகத்தில் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு இந்த உரையினை முழுவதுமாகப் பதிவு செய் துள்ளார்.

* 1910இல் அயோத்திதாசப் பண்டிதர் டாக்டர் நாயரின் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளார். எம்.சி.ராஜா குறை கூறாத ஒரே நீதிக் கட்சித் தலைவர் நம் டாக்டர்  நாயர் மட்டுமே.

*நீதிக்கட்சி 1920இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு நாயரின் பணி அடித்தள மிட்டது என்பது கல்லின் மேல் செதுக்கப் பட்ட உண்மை.

* வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்ததற்காகவும் காங்கிரசிலிருந்து விலகி தீவிரமாக நீதிக் கட்சியை ஆதரித்து வந்ததற்காகவும் டாக்டர் நாயரை திரு.வி.க தன் தேசபக்தனில் திட்டித்தீர்த்தார். "தேசிய கவி" பாரதியும் நாயரை சகட்டு மேனிக்கு விமர்சித்து அவரை வகுப்புவாதி என்றார். இதன் மூலம் நாயரின் இயக்கப்பற்று வெளிப்படும்.

* 1918இல் இங்கிலாந்து பாராளுமன்றத் தில் தன்னந்தனியாக பார்ப்பனரல்லாதார் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியாகவும் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பது பற்றி விரிவாக விளக்கினார். தன் சொந்த சப்பாத்தியத்தில் லண்டன் சென்று பார்ப் பனரல்லாத மக்கள் இட ஒதுக்கீடு பெறப் பாடுபட்ட டாக்டர் நாயர் இன்றளவும் வரலாற்றில் ஒரு உதாரணமாக உள்ளார்.

* 1919இல் மீண்டும் தன் நியாயமான வகுப்புரிமைக் கொள்கையை வலியுறுத்த லண்டன் சென்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உரையாற்ற சென்றார். அவர் பேச தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் சைடம்ஸ் பிரபுவின் பெரு முயற்சியால் 18-07-1919 அன்று அவருக்கு பேச வாய்ப்பளிக்கப் பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் (17-07-1919) டாக்டர் நாயர்  இதய நோய் தாக்குண்டு முடி வெய்தினார். கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) என்ற இடத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

* தான் வாழ்ந்த 51 ஆண்டுக் காலத்தில் திருமணம் என்ற எண்ணம் கூட எழாமல் படிப்பு, பொதுவாழ்வு என்று திறந்த புத்தகமாய் ஒடுக்கப்பட்ட மக்களுக் காகவே வாழ்ந்தார் டாக்டர் நாயர்.

* பல்வேறு இதழ்கள், சங்கங்கள், அய்ரோப்பிய தலைவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாலும் காங்கிரசின் எந்தப் பிரிவு தலைவர்களும் டாக்டர்  நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வில்லை என்பதே அவர் கொள்கை உறுதியை பறைசாற்றும் என்பதோடு அவர்களின் குரூர எண் ணமும், நாகரிகமின்மையும் அப்போ தைய காங்கிரசில் இருந்தவர்கள் மனிதாபி மானம் இன்றி உயர் ஜாதிமனப்பான்மையினராக இருந்தார்கள் என்பதை வெளிக்காட்டும்.

* டாக்டர் நாயரை " திராவிட லெனின் " என்பார்கள்.லெனின் எப்படி எப்போதும் படித்துக் கொண்டே இருப்பாரோ அப்படி நம் டாக்டர் நாயரும் படித்துக் கொண்டே பொது வாழ்வில் ஈடுபட்டார்.

* டாக்டர் நாயரின் மறைவுக்குப் பின் அவர் எதிர்பார்த்த நீதிக்கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு சாதனைகளை சமூகத்திலும், அரசியலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தில் செய்து சாதனை படைத்தது.1937இல் நீதிக் கட்சி தோற்ற போது சத்தியமூர்த்தி அய்யர் நாங்கள் நீதிக் கட்சியை ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டோம் என்றார். 1967இல் அண்ணா தலைமையில் தி.மு.க.ஆட்சி அமைந்த போது, தி.மு.க. நீதிக் கட்சியின் தொடர்ச்சி என்று சொன்னார். அந்த ஆண்டு தான் நீதிக் கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற பொன்விழா ஆண்டு ஆகும்.

திராவிடர் இயக்கத்தின் அசைக்க முடியாத கொள்கைத் தூண் டாக்டர் டி.எம்.  நாயர் நினைவைப் போற்றுவோம்.

வாழ்க டாக்டர் டி.எம்.  நாயர்.

- விடுதலை நாளேடு, 17.7.19

செவ்வாய், 23 ஜூலை, 2019

கோவில் பிரவேசம் பொதுவுடைமைத் தத்துவம்

12.05.1935  - குடிஅரசிலிருந்து....

கோவில் பிரவேசத்தைப் பற்றி ஒரு கெட்டிக்கார பேர் போன வக்கீல் ஒருவர், நம்மிடம் பேசும் போது கோவில் பிரவேசம் கேட்பது பொதுவுடைமைத் தத்துவமேயாகும் என்றார்.

எப்படி என்று கேட்டதற்கு அவர் பதிலளித்ததாவது:

ஒருவனுக்கு அல்லது ஒரு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஆதாரப்பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும், பழக்க வழக்கமாகவும் இருந்து வரும் ஒரு சொத்து அல்லது ஒரு கட்டடம், ஒரு குறிப்பிட்ட இடம் முதலியவைகளில் மற்றொருவனோ அல்லது மற்ற கூட்டத்தார் என்பவர்களோ உரிமை வேண்டும் என்பதும் பொதுவுடைமைக் கொள்கையேயாகும்.

ஆதலால், ஒரு கோவிலுக்குள் அனுபவ பாத்தியமில்லாத ஒருவன் போக வேண்டுமென்பது அதாவது ஒரு கூட்டத்தார் மாத்திரம் போகலாமென்றோ, ஒரு கூட்டத்தார் மாத்திரம்தான் உபயோகித்துக் கொள்ளலாம் என்றோ உள்ள நிபந்தனையில் சட்டப் படிக்கு உள்ள காலாவதிக்கு மேற்பட்ட காலமாய் பழக்கத்திலும், அனுபோகத்திலும் இருந்து வந்த இடங்களில் (கோவில், சத்திரம் முதலிய இடங்களில்) அக் கூட்டத்தாருக்கு வேறுபட்டவர்களும், வேறுபட்டவர்களாய்க் கருதப்பட்டவர்களும், அனுபவ பாத்தியம் இல்லாதவர்களும் பிரவேசிக்க உரிமை கேட்பது நியாயமாகாது. அதற்காக சட்டம் செய்வது என்பதும் கூடாததாகும்.

மீறி சட்டம் செய்யப்படுமானால் அது பொதுவுடைமைத் தத்துவப்படி செய்யப்படுவதாவதோடு மக்களின் சொத்து, சுதந்திரம், பாத்தியம் ஆகியவைகளுக்கு இனி பந்தோபஸ்து இல்லை என்றும் தான் கருத வேண்டியதாகும்.

அரசாங்கம் இதில் சம்பந்தப்படுமானால் அவர்கள் வாக்களித்த வாக்குறுதிகளுக்கு விரோதமாய் நடந்தவர்களாவார்கள், என்பதோடு தனி உடைமை முறையை ஒழிக்க கால் நட்டவர்களுமாவார்கள்.

கோவில்கள், கடவுள் உணர்ச்சிகள் ஆகியவை எல்லாம் பொதுவுடைமைத் தத்துவத்துக்கு விரோதமான தாகும். தனிப்பட்டவர்கள் சொத்துக்கள், உரிமைகள் ஆகியவைகளைக் காக்கவே அவைகள் இருக்கின்றன.  ஆதலால், அவை சம்பந்தமான காரியங்கள் எதுவும், எந்தவிதத்திலும் அரசியலில் சம்பந்தப்படவும், சட்டம் செய்யவும் இடம் தரக் கூடாது என்று சொன்னார்.

மற்றும், இதைக் காந்தியாருக்கும் எடுத்துச் சொன் னாராம். அவரும் இந்த வாதத்தை ஒப்புக் கொண்டாராம்.  அதனால்தான் அவர் கோவில் பிரவேசத்துக்கு சட்டம் செய்வதால் பயனில்லை என்றும், இந்துக்கள் எல்லோ ரும் கோவில் பிரவேசத்தை ஒப்புக் கொண்ட பிறகுதான் சட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி, மசோதாவை வாபீஸ் பெறும்படி செய்துவிட்டதோடு அது சம்பந்தமான காரியத்தை காங்கிரஸ் சட்டசபை கட்சியார் செய்யக் கூடாது என்றும் கட்டளை இட்டாராம்.

- விடுதலை நாளேடு 19. 7.19

ஞாயிறு, 14 ஜூலை, 2019

பெரியாரும் பெருந்தலைவரும்



21 வயது நிறைந்தவர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் 1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தந்தை பெரியார், அந்தத் தேர்தலில் காங்கிரஸைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். "60 அடி ஆழக் குழி தோண்டி, அதில் போட்டுக் காங்கிரஸைப் புதைப்பேன்" என்று கூட்டத்திற்குக் கூட்டம் பிரச்சாரம் செய்தார்.

அந்தத் தேர்தலில், அன்றைய சென்னை ராஜதானியில், காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 152 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திராவிடர் கழகத் தின் கோட்டையாக விளங்கிய தஞ்சை மாவட்டம் போன்ற பகுதிகளில் காங்கிரசின் வீழ்ச்சி, காங்கிரஸ் தலைவர் களைக் கலக்கமடையச் செய்தது. பெரியாரின் ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்றது.

அந்த அளவிற்குக் காங்கிரஸைத் தமது ஜென்ம வைரியாக நினைத்த பெரியார், 1954 இல் முதல் மந்திரி பதவியை ராஜாஜி ராஜினாமா செய்த பிறகு, காமராஜர் சென்னை மாகாண முதல் மந்திரியான பின், மனத்தை மாற்றிக் கொண்டார். பெரியாரின் வாய்மொழிப்படியே, 1937 இல் இருந்து 17 வருட காலம் எந்தக் காங்கிரஸை ஒழித்தே தீர்வது என்று பாடுபட்டாரோ, அந்தக் காங்கிரஸை, காங்கிரஸ் ஆட்சியை ஆதரிக்கத் தாமாகவே முன்வந்தார். காமராஜ் ஆட்சி அமைந்த மறுநாளே, விடுதலை பத்திரிகை யில் பெரியார் கீழ்க்கண்ட தலையங் கத்தை எழுதினார்.  "சாதியை ஒழிப்பதற்கு இது நல்ல தருணம். திரு.காமராசர் அவர்கள் முதலமைச்சராகி யிருக்கிறார். இவருக்குச் சாதியை ஒழிப்பதில் தனி அக்கறையுண்டு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றிப் பலதடவை பேசியிருக்கிறார்.

சுயராச்சியம் வந்த பிறகு, சாதி வெறி பல மடங்கு வளர்ந்துவிட்டது என்று பலதடவை கூறியிருக்கிறார். இந்த வெறியை ஒழித்துக் கட்டுவதற்காக, எது வேண்டு மானாலும் செய்யத் தயார் என்று பலதடவை தெரிவித்திருக்கிறார். இவர் சாதி மாநாடுகளில் கலந்து கொள்வதில்லை என்பது நம் நினைவு. இப்பேர்ப்பட்டவர், இனி செய்கை மூலம் தம் இலட்சியத்தைப் பெற வேண்டும். இதற்கான கால்கோள் விழாவை நடத்திவிட்டார் என்றே நாம் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சாதிக்காக வே என்று தோன்றிய இரண்டு அரசியல் கட்சிகளைக் கலைத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியையே எதிர்த்து நின்று தேர்தலில் வெற்றி பெற்ற உழைப்பாளர் கட்சி - காமன்வீல் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் காங்கிரசு கட்சிக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகளாக ஆக்கிவிட்ட தனித்திறமைக்காகப் பாராட்ட வேண்டும். அரசியல் துறையில் இக்காரியம் எப்படிக் கருதப்பட்டபோதிலும், தனி சாதிக்காக ஒரு அரசியல் கட்சி என்ற அவமானத்தைப் போக்கிவிட்ட வகையில், அதாவது சமு தாயத் துறையில் இக்காரியம் வரவேற்கப் படக் கூடியதுதான் என்பதே நம் கருத்து.  சாதி ஒழிப்பு உணர்ச்சியை மக்களிடையே பரப்புவ தற்கு அவருக்கும் இது ஒரு நல்ல தருணம். சுயமரியாதைக் காரர்களுக்கும் இது ஒரு நல்ல தருணம். சட்ட திட்டங்கள் மூலம் முதலமைச்சர் இக்காரியத்தைச் சாதிக்கலாம். வழக்கமான பிரச்சாரத்தின் மூலம் சுயமரியாதைக்காரர் கள் இவருக்கு உதவியாக இருக்கலாம்.

புத்தர்கள், சித்தர்கள், பிரம்ம சமாஜ் தலைவர்கள், சமுதாயச் சீர்திருத்தவாதிகள் ஆகிய பலரால் சாதிக்க முடியாத ஒரு காரியத்தை, ஒரு சாதாரண முதலமைச்சர் வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டார் என்ற நிலை ஏற்பட்டால், இந்திய வரலாற்றிலேயே இடம் பெறக்கூடிய சாதனை அல்லவா இது?" (விடுதலை - 15.4.1954). பெரியாரின் மன மாறுதலுக்கு என்ன காரணம்?

ராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த புதிய கல்வித் திட் டத்தை , 'குலக் கல்வித் திட்டம்' என்று பெரியார் கடுமையாக எதிர்த்தார். ராஜாஜியின் கல்வித் திட் டத்தை எதிர்த்து, திராவி டர் கழகத்தினர் 600 மைல் பாதயாத்திரை நடத்தி, சி த ம் பரம் வந்தனர் . அங்கு 22.5.54 அன்று அவர்களைப் பாராட்டிப் பேசிய பெரியார் தமது மன மாறுதலுக்கான காரணத்தை விளக்கினார். அவரது பேச்சு 1.6.54 விடுதலை யில் முதல் பக்கத்தில் பிரதானமாக வெளியிடப்பட்டது. அவரது பேச்சு வருமாறு:

"இந்தப் படையினர் சென்ற மாதம் 29 ஆம் தேதி புறப்பட்டவர்கள் ; கால்நடையாகவே ஏறக்குறைய 600 மைல் நடந்து சுற்றி இங்கே வந்திருக்கிறார்கள்; வந்ததும், இங்கே வெற்றி கிடைக்கும் என்று கருதி வந்தவர்கள் அல்லர். இங்கே வந்ததும், சிறைக் கூடம் திறந்திருக்கும், நாம் போய் 'ஜம்' என்று உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொள்ள லாம் என்று வந்தவர்கள். எப்படியோ இவர்கள் ஏமாந்து போகும்படியான நிகழ்ச்சி நடைபெற்று, எல்லோரும் மகிழும்படியாக ஆகிவிட்டது.

இன்றைக்குக் காமராசர் இந்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளார். இனிப் பலரும் சொல்லப் போகிறார்கள்; 'காமராசரும் பெரியாரும் ஏதோ ஒரு ஒப்பந்தம் ஏற்படுத் திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி ரகசிய மாகச் சந்தித்துப் பேசுகிறார்கள்' என்றெல்லாம் கூறு வார்கள். இன்றைய தினம், இக்கல்வித் திட்டம் எடுக்கப் படும் படியான செய்தி வந்தது குறித்து, நாம் பெருமைப்பட வேண்டியதுதான். நாடு முழுவதும் பாராட்டுக்கூட்டம் போட வேண்டியுள்ளது. பெரும்பாலும் அந்தப் புகழ் எல்லாம் காமராசருக்கே போகும்.

1924 முதல் 1954 வரை ஒரு தமிழன்கூட முதன் மந்திரியாக வரமுடியவில்லை . முதல் முதலாகத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர் ஒருவர் முதல மைச்சராக வந்திருக்கிறார். இவர் மந்திரி சபையும், 15 நாளில் தீர்ந்து போகாத மாதிரி, இவர் வாழ்நாள் பூராவும் இருக்கிற மாதிரி இருக்க வேண்டும்.

இது நமக்குப் பெரிய வெற்றி. இந்த மகிழ்ச்சியினால், நாம் இந்த மந்திரி சபையைக் காப்பாற்ற வேண்டும் என்று கருதுகிறேன். இதைப் பார்த்துச் சிலர், எனக்குக் கொள் கையே இல்லை என்று சொல்லுகிறார்கள். எங்களுக்கு இரண் டொரு காரியம் செய் தாலே போதும். அது  எ ன் ன வெ ன் ற  ல்  'கல்வித் திட்டம் கேடு ப ய ப் ப து ' எ ன் று ஒப்புக்கொண்ட காரி யத்தை உடனே சாமா ளிக்க வேண்டும் என்பது. இரண்டாவது காரியம், ஜஸ்டிஸ் கட்சியி ல் இ ரு ந் து வ ந் த வகுப்புவாரி  பிரதி நிதித் துவத்தை, சட்டப்படி இருந்ததை 'அல்லாடி 'கெடுத்து விட்டார். அதைப் பற்றிப் பெரிய கிளர்ச்சி செய்தோம். அதைக் கண்டு அப்போதிருந்த மந்திரிகள் நடுங்கி, அதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்தும் படியாக ஆகிவிட்டது. இதன்படி ஏதோ ஒரு அளவுக்கு நம்முடைய மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கும் வசதி இருந்தது. அதை மீண்டும் இராசகோபாலாச்சாரியார் நன்கு கெடுத்து விட்டார். அதை மீண்டும் மாற்ற வேண்டும் என்று சொன்னேன். அதற்குக் காமராசரிடமிருந்து என்னிடம் வந்தவர், தனக்கும் அதில் அக்கறை இருப்பதாகவும் தனக்காகவே அதைக் கவனிப்பதாகவும் சொன்னார்கள். அதனால் இதை ஆதரிக்க வேண்டும்.

"நம்மைப் பொறுத்தவரையில் லட்சியம்தான் முக்கியம். எந்தெந்தக் காரியத்தில் காமராசருக்கு உற்சாகம் கொடுக்க வேண்டுமோ அதிலெல்லாம் அவருக்கு உற்சாகம் கொடுப் பதாக இருக்கிறேன்" என்றார் பெரியார்.

காங்கிரஸ் கட்சி அவரது ஆதரவைக் கோரவில்லை . காமராஜர் முதல்வர் ஆனதும் குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது பெரியார் தாமாகவே முன்வந்து காமராஜருக்கு ஆதரவு தந்தார்.

இதனை 21.11.55 அன்று சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்ற டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு பிறந்த நாள் விழாவில், பெரியார் ஆற்றிய உரையால் அறியலாம்.)

''தலைவர் காமராசர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார். அதற்கு எனது நன்றி. காமராசரிடம் நான் அன்பு கொண்டு என்னாலான வழிகளில் ஆதரவு கொடுத்து வருகிறேன்.

காரணம், அவர் சில விஷயங்களில் தமிழன் என்கின்ற உணர்ச்சியோடு ஆட்சி நடத்துகின்றார். அதனால் அவ ருக்கு, பொறாமை காரணமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலும், வகுப்பு காரணமாக இரண்டொரு வகுப்பாரிடையிலும் சில எதிரிகள் இருந்து கொண்டு, அவருக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அத்தொல்லைகள் வெற்றி பெற்றால் தமிழர் களுடைய நிலைமை மோசமாகி விடும்.

உத்தியோகத்துறையில் தமிழர்களுக்கு மிகமிகக் கெடுதிகள் ஏற்படலாம் என எண்ணுகிறேன். ஆதலா லேயே அவரது இன உணர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள் வெற்றி பெறாமல் இருப்பதற்காக என்னாலானதைச் செய்து வருகிறேன். அந்த யோசனை அற்றவர்களுக்கு, நான் காமராசரை ஆதரித்ததாக ஆகிவிடுகிறது. காமராசர் தமிழ் மக்களிடம் காட்டும் நேர்மையானது, அவர் எனக்கு ஏதோ ஆதரவு காட்டுவதாக ஆகிவிடுகிறது.

நான் அரசியல் தொண்டனல்ல. சமுதாய நலத் தொண்டனாவேன். அதிலும், பெரிதும் தமிழ் மக்கள் நலனுக்கென்றே பாடுபடுவேன். அதை முன்னிட்டு அரசியல் என்பதை எந்த அளவுக்கு வேண்டுமானலும் எதிர்க்கவும், விட்டுக் கொடுக்கவும் துணிவேன். காமராச ருக்கும் எனக்கும் அரசியல் கருத்துகளில் எவ்வளவு பேதம் காணப்பட்டாலும், தமிழர் நலத்தை முன்னிட்டு நானாகவே முன்வந்து அவரை ஆதரிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, மற்றப் படி எனது சுயநலத்தை முன்னிட்டோ , அல்லது அவர் விரும்புகிறார் என்று கருதியோ அல்ல. அவரும் என்னுடைய ஆதரவு தேவை என்பதாக என்னிடம் தனிப் பட்ட முறையில் கேட்டதும் கிடையாது.'

குடியாத்தம் சட்டசபைத் தேர்தலில் நான் அவரை ஆதரித்தேன் என்றால், அப்பொழுதும் அவரிடம் சொல்லிவிட்டு அவரை ஆதரிக்கவில்லை. அவரும் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று என்னைக் கேட்கவும் இல்லை.

திடீரென்று எனக்குத் தோன்றிய எண்ணத்தின் பேரில் தான், நான் வலியச் சென்று அவரை ஆதரிக்கும்படி யாகியது. நானும் அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த வனுமல்ல. அவர் விரும்புவார் என்று கருதினவனுமல்ல.

ஒரு நாள் நான் ஆத்தூர் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் ஒரு தோழர் என்னிடம் ஒரு பத்திரிகையைக் கொடுத்து, "முதல் மந்திரி அவர்கள் சட்டசபைத் தேர்தலுக்குக் குடியாத்தம் தொகுதியில் நிற்பதாகச் செய்தி வந்துள்ளது என்று சொன்னார். நான் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, அதே கூட்டத்தி லேயே என்னுடைய எண்ணத்தை வெளியிட்டேன்.

காமராசர் அவர்களையும் நான் அந்தப்படி கருது வதால், அவர் அவசியம் என்று கருதுகிறேன். அவருக்கு ஆதரவு தருவது பற்றி நான் வெட்கப்படவில்லை. அவரும் என்னைப் போலவே ஒரு துறவி ஆவார். எனக்காவது மனைவி உண்டு. அவருக்கு அதுவும் இல்லை . இப்படிப்பட்ட துணிச்சலுக்கு மனைவி மக்கள், சொந்த வாழ்வு இல்லாமை அவசியமாகும். இப்படிப்பட்டவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் செய்யலாம். ஆனாலும், தவறுதான் செய்யலாமே ஒழிய புரட்டு, மோசம், சுயநலப் பற்று, வேஷம் செய்ய அவசியமுடையவர்களாக மாட் டார்கள். இயற்கையை முன்னிட்டு நான் இப்படிப் பேசுகிறேன்.

இதுவரையில் நான் அவரை எந்த விதமான உதவியும் கேட்டது கிடையாது. அவரும் என்னை எதுவும் கேட்டது கிடையாது. எங்கள் இருவருக்கும் சொந்த சங்கதி என்பதாக எதுவுமே இல்லை. தமிழர் நலத்திற்காக அவர் தன்னா லானதைச் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுவ துண்டு. தனிப்பட்ட நபர்களைப் பற்றி நான் அவரிடம் எதுவும் பேசுகிறதே இல்லை . இனியும் பேசப் போவதும் இல்லை. நாங்கள் இப்படிப்பட்ட சம்பிரதாய சம்பந்த மில்லாமல் தனிப்பட சந்திப்பதுமில்லை!

இன்றுகூட, இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது காம ராசர் இங்கு வருவார் என்று தெரிந்திருந்தால், நான் கண்டிப்பாய் வர ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன். நான் இதுவரை, எந்த மந்திரி பேசுகின்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து  கொண்டதே இல்லை. அதில் கலந்து கொள்வதில்லை என்பது இதுவரை நான் செய்து கொண்டிருந்த முடிவான கருத்தாகும். ஆனால், இதில் மட்டும் கலந்து கொள்ளும் படியான நிலை ஏற்பட்டதானது, நான் இதற்கு வருவதற்கு ஒப்புக் கொண்டபின்புதான் முதல் மந்திரி அவர்கள் இதற்குத் தலைமை வகிக்கிறார் என்றும், சிலர் பேச வந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. இதன் பிறகு நான் மறுத்துக் கூறுவது முறை இல்லை என்பதாகக் கருதி, எதிர்பாராத இச்சந்தர்ப்பம் தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் பேரில் அமைந்து விட்டது.

கடைசியாகத் தலைவர் அவர்கள் (காமராஜர்) என்னி டம் அன்புகாட்டி என்னைப்பற்றிச் சில குறிப்பிட்டதற்காக வும், இவ்விழாக் குழுவினர்கள் எனக்கு இதில் கலந்து கொள்ள வாய்ப் பளித்துக்கொண்டு, டாக்டர் நாயுடு அவர்கள் உட் பட என்னிடம் உள்ள அன்பு என்றும் குறையாதிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண் டும், என்ன மாற்றம் ஏற்பட்டாலும் மனிதத் தன்மை முறையில் ஒருவருக் கொருவர் அன்பும், நாம் தமிழர்கள் என்கிற உணர்ச்சியும் எங்களிட மிருந்து மாறாது என்பதாக உறுதி கூறுகிறேன்." (விடுதலை - 3.12.1955).

1937 முதல் 1954 வரையில் எந்த அளவிற்குக் காங்கிரசைப் பெரியார் தீவிரமாக எதிர்த்தாரோ, அதே அளவு தீவிரமாக 1954 முதல் 1967 வரை காமராஜர் பெயரால் காங்கிரஸை ஆதரித்தார்.

1956 ஜூலை 11 ஆம் தேதியன்று குளித்தலை ஊராட்சி மன்றத்தில் காமராஜரின் உருவப் படத்தைத் திறந்து வைத்து, பெரியார் சிறப்புரை ஆற்றினார். உரை வருமாறு:

"முதலமைச்சர் காமராசரை ஆதரிப்பது பற்றிப் பலர் தவறாகக் கருதுவார்கள்; குறையும் கூறுவார்கள். காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்றபின், சில நாட்களுக்குப் பிறகு, நான் அனுப்பி வைத்த குலக்கல்வி எதிர்ப்புப் படை நாடெங்கும் பிரச்சாரம் செய்துகொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தது. போலீஸ் பாதுகாப்பு நிறைய இருந்தது.

மக்கள் பீதியடையக்கூடாது என்று போலிஸ் கமி ஷனர் பார்த்தசாரதி அய்யங்கார் அறிக்கை விட்டிருந்தார்.

பிறகு எங்கள் படைத்தலைவர் டெலிபோனில் முதலமைச்சரைக் கூப்பிட்டு "இந்த மாதிரி நாங்கள் வந்திருக் கிறோம். உங்களைச் சந்திக்க விரும்புகிறோம். எங்கே வரச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு முதலமைச்சர் 'கோட்டைக்கு ஐந்து பேர் மாத்திரம் வாருங்கள்' என்று சொன்னார். இவர்கள் இருபது பேராகவே கோட்டைக்குச் சென்றார்கள். எல்லோருக்கும் நாற்காலி போட்டு உட்கார வைத்து 'என்ன விஷயம்?' என்று கேட்டார்.

அதற்கு நம்முடைய படைத்தலைவர், 'புதுக்கல்வித் திட்டத்தை ஒழிக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது பதவியேற்று இருக்கிறீர்கள். எங்கள் குறையைச் சொல்ல வந்தோம்' என்றார்.

அதற்கு முதலமைச்சர் காமராசர் 'நானும் உங்கள் ஆள்தான். நீங்கள் இப்பொழுது வீட்டுக்குப் போங்க. நாளைக்கே மகிழ்ச்சியான செய்தி வரும்' என்பதாகச் சொல்லியனுப்பினார்.

அன்று இரவே முதலமைச்சர் ஒரு கமிட்டியைக் கூட்டி, புதுக்கல்வித் திட்டத்தை நீக்கிவிட்டார். அடுத்த நாள் எல்லாப் பத்திரிகைகளிலும் சமாச்சாரம் வந்து விட்டது.

இதுதான் நமக்கு முதலமைச்சர் காமராசர் முதன் முதலாகச் செய்த உதவியாகும். அவர் அப்படிச் செய்ய வில்லை என்றால், நமக்கு வெற்றியேற்பட முடியாது என்று சொல்ல வரவில்லை. நம்மில் பலர் சுடப்பட்டு இறந்திருப் பார்கள். சிலர் தூக்கு மேடை ஏறவேண்டிய நிலை இருந் திருக்கும். நாமெல்லாம் வெறிபிடித்தவர்களைப் போலவே ஆகியிருப்போம். பிறகு என்ன? எதையெதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நாம் திட்டம் போட்டிருந்தோமோ, அவையெல்லாம் நடந்து தானே இருக்கும்? அவற்றையெல்லாம் ஒரு வரியில் தடுத்து விட்டார் முதலமைச்சர் காமராசர்.  தமிழர்களுக்குப் பதவி - பிறகு பெரிய பதவிகளையெல்லாம் தமிழராகப் பார்த்துக் கொடுத்தார்.

எனக்கு 40-50 வருடங்களாகப் பொது வாழ்விலே பழக்கமும் அனுபவமும் உண்டு. காமராசருக்கு 20 வருட அனுபவமாவது இருக்கும். அவர் முதலமைச்சராக வருவதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புதான் அவரைப்பற்றித் தெரியும். அரக்கோணத்தில் ஒரு தடவை பார்த்தேன். பிறகு மேயர் வீட்டில் ஒரு தடவை பார்த்தேன். மற்றொரு தடவை என் பிறந்தநாள் விழாவிற்காக முதலமைச்சரே என் வீட்டிற்கு வந்திருந்தார்.

நான் காங்கிரசில் இருந்தபொழுது விருதுநகர் மாநாட் டில் தலைமை தாங்கினேன். அப்பொழுது இவர் தொண்ட ராக இருந்தாராம். அப்பொழுது அவருக்கு 21 வயது. நம்மைப் போல் நல்ல உணர்ச்சி கொண்டிருக்கிறார். அவரால் செய்யமுடியும். பிறரால் முடியாது. மேலும் அவர் என்னைப்போல் மொட்டை மரம். பெண்டாட்டி, பிள்ளை குட்டி இல்லை. தாயார் ஒருவர்தான் இருக்கிறார்கள். அவருக்கென்று எஸ்டேட் எதுவும் இல்லை. 'என்னை இப்பொழுது ஒழித்துக்கட்டி விட்டால்கூட, என்றும் நான் தொண்டன்' என்று கூறுகிறார். முதலமைச்சர் பதவியை விட்டு, காங்கிரசிலிருந்து அவரை வெளியேற்றினால்கூட அவரால் பிழைத்துக்கொள்ள முடியும். மற்றவரால் அது முடியாது.

ஆகவேதான் வரும் தேர்தலில்கூட அவரையே ஆதரிக் கப்போகிறேன். அப்பொழுதுதான் தமிழுக்கும் தமிழர் களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

சென்ற வருடம் எட்டாம் வகுப்புவரை இலவசக் கல்வி வசதி செய்தார். இந்த வருடம் பதினொன்றாம் வகுப்புவரை சாப்பாடு போட்டு, சொல்லித்தர வசதி செய்திருக்கிறார்." (விடுதலை - 23.7.56).

காமராஜர் ஆட்சியைக் கடுமையாக ஆதரித்த பெரியார் 'காமராசர் தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் நிதி' என்ற தலைப்பில் 7.5.59 அன்று சிறப்புமிக்க கீழ்க் கண்ட தலையங்கத்தை விடுதலையில் எழுதினார்.

"நமது முதல் மந்திரி காமராசர் தமிழர்களுக்குக் கிடைத்த நிதி போன்றவர். அவரது ஆட்சி தமிழகத்தில் மேலும் நீடிக்கவும், அவரது ஆட்சிக்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.

காமராசர் மத்திய ஆட்சிக்குக் கட்டுப்பட்டவர் என் றாலும், தமக்குள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு, நம் இனத்திற்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ, அந்த அளவுக்குச் செய்து வருகின்றார்.

கல்வித்துறையிலும் சரி, உத்தியோகத்துறையிலும் சரி, நம்மவர்கள்தான் மிக மிகக் கீழான நிலையில் இருந்து வருகின்றனர். 100 க்கு 100 படித்தவர்களாகவும், எல்லா உத்தியோகங்களிலும் 100 க்கு 100 அவர்களே ஆதிக்கம் உடையவர்களாகவும் இருந்த ஒரு நிலைமை மாறி, இன்று ஒரளவு நம்மவர்களும் படிக்க வசதி செய்து, ஒரு சில உத்தியோகங்களாவது கிடைக்கும்படியான நிலை ஏற்பட் டுள்ளதென்றால் அதற்குக் காரணம் நமது முதலமைச்சர் காமராசர்தான்.

இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சராக இருந்த போது, 'அவனவன் அப்பன் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும், மீதி நேரம் ஆடு மாடு மேய்க்கவும், கக்கூஸ் சுத்தம் செய்யவும் போ' என்று வருணாசிரமக் கல்வித் திட்டத்தைப் புகுத்தினார். மூவாயிரம் பள்ளிக்கூடங்களை மூடினார். ஆயிரம் அய்ஸ்கூல்களைத் திறக்கும் திட்டத் தையும் ரத்து செய்து, 'இனிமேல் புதிதாக அய்ஸ்கூலே திறக்க வேண்டாம்' என்று உத்தரவும் போட்டார். காமராசர் முதல்வராக வந்ததும் இராசகோபாலாச்சாரியாரின் வர்ணாசிரமக் கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்து ஏராளமான தமிழ்ப் பிள்ளைகள் புதிதாகப் பள்ளியில் சேர்ந்து படிக்க வழிவகுத்தார். எட்டாவது வகுப்புவரை இலவசக் கல்விக்கு ஏற்பாடு செய்தார். அதைப் பதினொன்றாம் வகுப்புவரை விஸ்தரிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்.

காமராசர் முதலமைச்சராக வந்த பின்னால்தான் அய்கோர்ட் நீதிபதிகளில் பாதிப்பேர் தமிழர்கள் உள்ளனர். இது எந்தக் காலத்திலும் ஏற்படாத முன்னேற்றம் ஆகும். அய்கோர்ட் தோன்றிய நாளில் இருந்து, ஓமந்தூரார் காலம் வரை ஒரு தமிழன்கூட ஜட்ஜாக இருந்ததில்லை. காமராசர் முதலமைச்சரான பின்னர் நிலைமை தலைகீழாக மாறி விட்டதே! இன்று அய்கோர்ட் ஜட்ஜூகளாயிருப்பவர் களில் பாதிப்பேர் தமிழர்களாக இருக்கிறார்களே! அரசாங்கத்தில், பல இலாகாக்களிலும் தலைமைப் பொறுப்பில் தமிழர்களே அதிகமாக உள்ளனரே! ஐ.ஜி. ஒரு தமிழர். கமிஷ்னர் ஒரு தமிழர். கல்வி இலாகா டைரக்டர் ஒரு தமிழர். இவ்வாறே 20-25 இலாகா தலைமைப் பொறுப்பில் எல்லாம் தமிழர் களே உள்ளனரே!

இப்படி எந்தக் காலத்தில் நடந்தது? ஜஸ்டிஸ் கட்சி ஆண்ட காலத்தில்கூட கிடையாதே? இப்படித் தலைமை உத்தியோகங்களில் தமிழர்களாக இருப்பதனால், அந்த அந்த இலாகாக்களில் வேலை செய்யும் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொடுமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்? உத்தியோக உயர்வு முதலியவற்றிற்கு நியாயம் கிடைக் கின்றது?

இத்தகைய காரணங்களுக்காகத்தான் நான் காம ராசரை ஆதரிக்கிறேனே தவிர, எனது சொந்தக் கார ணங்கள் எதுவும் இல்லை. சொந்தத்தில் அவரிடம் எதை யும் செய்து கொள்ள, வேண்டிய அவசியம் இல்லாதவன் நான்.

காமராசர் இப்படிக் கல்வித் துறையில் நன்மைகள் செய்து வருகின்றார் என்றால், அதில் நம் வீட்டுப்பிள்ளை குட்டிகள்தானே படித்துப் பயன் பெறுகிறார்கள். 100 க்கு 97பேராக உள்ள நம் சமுதாயத்தின் பிள்ளை குட்டிகள் தானே அதனால் முன்னுக்கு வருகிறார்கள்? உத்தியோகத் துறையில் செய்து வரும்படியான நன்மைகள் எல்லாம், தமிழர் சமுதாயத்தின் நன்மையைக் கருதித்தானே? இதை எல்லாம் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

காமராசர் கல்யாணம் ஆகாதவர். பிள்ளை குட்டி இல்லாத மொட்டை மரம்! தனக்கெனச் சொத்து சேர்க்க வேண்டிய அவசியமோ, சொந்தக்காரர்களுக்குப் பதவி உத்தியோகம் கொடுக்க வேண்டிய அவசியமோ இல்லாத வர். காமராசர் ஏதோ தம் பதவிக்காலத்தில் தம்மாலான உதவியைத் தமது சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும் என்ற விருப்பினாலேயே தொண்டாற்றி வருகின்றார். "

- ஏ. கோபண்ணா

('காமராஜ் ஒரு சகாப்தம்' என்ற நூலிலிருந்து)

- விடுதலை நாளேடு, 14.7.19