வியாழன், 4 ஜூலை, 2019

உயிர்ப்புடன் இருக்கும் திராவிட இயக்கத்தின் சித்தாந்த பலம்!

அமெரிக்காவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் வெளியீடு


"தி காமன் சென்ஸ்" (The Common SENSE) மாத இதழில் புகழாரம்!




அமெரிக்காவில் உள்ள பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் வெளி வரும் "The Common Sense” என்ற மாத இதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர்களின் படங்களுடன் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது.)

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்- அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்கா வாழ் தோழர்களிடம் கொண்டு சேர்க்க 2017 ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்டது. அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கலைஞரின் 96 ஆவது பிறந்த நாளை ஒட்டி இந்த சிறப்பு இதழை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. கலைஞர் நம் நெஞ்சங்களில் என்றும் நிறைந்து இருப்பார் என்பதற்கான வெளிப்பாடே இந்த சிறப்பு இதழ் மேலும் சமுக நீதி காவலர், மண்டல் நாயகர் வி.பி. சிங் அவர்களின் பிறந்த நாள் (ஜூன் 25) வாழ்த்துகளையும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய துணைக்கண்டத்தில் இந்துத்துவ காவிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை, இஸ்லாமி யர்களை ஜெய் சிறீராம் கூற வற்புறுத்தி அதைக்கூறாத காரணத்தினால், கொன்று போடும் வன்கொலைகளை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. தப்ரெஸ் அன் சாரி (Tabrez Ansari) ஜார்க்காண்ட் மாநிலத்தில் ஜெய்சிறீராம் சொல்லாத காரணத்தினால் கட்டி வைக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார். அதேபோன்று மேற்கு வங்கத்தில் Hafeez Mohd Sahrulkh Haidar ஜெய் சிறீராம் சொல்லாத காரணத்தினால் ஓடும் தொடர் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு காயங்களோடு உயிர் பிழைத்திருக்கின்றார். இதுபோன்ற தொடர் தாக்குதல்களை காவிகள் நிறுத்திட மக்கள் ஒன்றிணைந்து ஆதிக்கத்திற்கு எதிராக குரலெழுப்புவது ஒன்றுதான் வழி.

தெலங்கானாவில் ஒன்பது மாத பெண் குழந்தையை, 25 வயது ஆண் கடத்திக் கொண்டுச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கின்றார் என்ற செய்தி நாடெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான, பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்தப் போக்கை கட்டுப்படுத்த சமுகம் இணைந்து செயல்படுவது ஒன்றேவழி என்று பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கருதுகின்றது.

அமைப்பின் புதிய முயற்சிகளுக்கு உங்களின் ஆதரவைக் கோருகின்றோம்

நன்றி ஆசிரியர் குழு (இதைத் தொடர்ந்து 'ஒரு ஒலி வாங்கியின் குரல்' என்ற தலைப்பில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்அமெரிக்கா என்ற அந்த அமைப்பின் சார்பில் சுதாகர் சிவசாமி எழுதியுள்ள கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்)

ஒரு ஒலிவாங்கியின் குரல்!


தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் பல்வேறு கண்டு பிடிப்புகளில் நமக்கு பரிச்சியம் இருந்தாலும் 'ஒலிவாங்கி' பயன்படுத்தும்போது மட்டும் நமக்கு பழைய நினைவுகள் கலந்த ஒரு உணர்வு இருக்கும். அரைஞாண் கயிற்றின் தயவால் அரைக்கால் சட்டையை இழுத்து கட்டிக்கொண்டு மைக் செட்காரர்பின் ஓடிய அனுபவம் நம்மில் பல பேருக்கு இருந்திருக்க கூடும். மைக்செட்காரர் அசந்த நேரம் மைக்கில் ஹலோ ஹலோ என்று கூச்சலிட்டுவிட்டு ஓடுவது அக்கால சிறார்களின் விழாக்கால விளையாட்டு. சிறுவயதில் சந்தித்த மைக் செட்காரர்கள் நம் ஆதர்சநாயகர்கள்.

விருந்தினர் இல்லாமல்கூட ஒரு பொது நிகழ்ச்சி நடக்கலாம் ஆனால் மைக் செட்காரர் இல்லாமல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

சமுக நீதியும் சாதி ஒழிப்பு அரசியலும் பேசும் இடத்தில் மைக்செட் நினைவுகளை பேசி பூரிப்படைய என்ன இருக்கிறது என கேள்வி எழலாம். நிச்சயமாக தொடர்பு உண்டு. ஆண்டாண்டு காலமாய் ஏற்ற தாழ்வுடன் வாழ்ந்த நம் சமூகம் கொஞ்சமேனும் சமத்துவம் நோக்கி பயணித்து கொண்டிருக்கிறதென்றால், அதற்கு மிக முக்கிய காரணம் இங்கே எளிய மக்களின் சமத்துவத்திற்காகவும்

முன்னேற்றத்திற்காகவும் உழைத்த அறிஞர் பெருமக்கள் தான். அவர்களின் கருத்துகளும் எண் ணங்களும் மக்களிடம் சென்றடைய கருவிகள்  தேவை. இக்காலம் போல் ஒவ்வொருவர்  கையிலும் ஸ்மார்ட் போன் இல்லை, நல்ல வேளை அதனால்தான் என்னவோ பொய்ச் செய்திகள் பரப்பப்படுவது குறைவாக இருந்தது. தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு பேச்சு. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினாலும், அனைவர் உள்ளத்திலும் கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கக் கூடிய சர்வ வல்லமை பொருந்திய ஒலி வாங்கி, தன்மனதில் இருப்பதை சொல்வதே இக்கட்டுரை.

நான் ஒலி வாங்கி!




மைக் என்று சொன்னால்தான் எளிய மக்களுக்கும் இலகுவாய் புரியும். மனிதகுலம் கண்ட மிகச் சிறந்த நடுநிலையாளர் நான். கேட்பதை மட்டுமே எடுத்துரைப்பேன், என்னுடைய தனிப்பட்ட கருத்துகளை என்றுமே நான் திணித்ததில்லை. படித்து உயர்ந்த பண் பாளர்கள் பலருக்கு பக்கபலமாய் அவர் கள் கருத்துகளை பரப்புரை செய்ய உழைத்ததும் நானே.

வாட்ஸ் எப்பில் வரலாறு(?) படிக்கும் இன்றைய தலைமுறைக்கு, மக்கள் நலனுக்காக முழங்கிய மேதைகள் நிறைந்த மேடைகளை பார்த்து வியக்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. என் மூலமாய் புகழை அடைந்தோர் பலர் இருக்க, இவர்கள் பேசியதால் பெருமைஎன நான் உணர்ந்தவர்களும் சிலர் உண்டு. வாழ்நாள் முழுவதும் மக்கள் விடுதலைக்காக பரப்புரை செய்த தலைவர்களையும் போராளிகளையும் நான் கண்டிருக்கிறேன். அப்படி என்னை மிகவும் கவர்ந்த சில தமிழக தலைவர்களுடனான என் நினைவை பதிவு செய்கிறேன்.

பகுத்தறிவு பகலவன்


தந்தை பெரியார்




உலக சிந்தனையாளர்கள் வரிசையில் தமிழகம் கண்ட தன்னிகரில்லா சிந்தனையாளர் தந்தை பெரியார். எதையும் ஏன் எதற்கு எப்படி என்று ஆராய்வதே பகுத்தறிவு என்றார் சிந்தனை சிற்பி சாக்ரடீஸ். நான் சொல்வதை கேளுங்கள் என உரைப் போர் பலர் இருக்க பெரியாரோ, யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்று கூறியவர். வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மேம்பாட்டுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். இன்று பலரால் கொண்டாடப்படும் அவர் அன்று சந்தித்தது அவமானங்களை மட்டுமே. ஆனால் அவர் சந்தித்த அவமானங் கள் எதுவும் வீண் போகவில்லை , அவர் வாழும் காலத்திலேயே அவர் எடுத்த போராட்டங்கள் பலவற்றில் வெற்றி கண்டார். தொண்ணூறு வயதிற்கு பிறகும் இளைஞனாய் தமிழகம் முழுதும் வலம் வந்தவர், தன்னுடைய கடைசி பரப்புரையில் அவர் பேசியது இன்றும் ஆழமாய் ஒலித்து கொண்டிருக் கிறது. ''உலகமெல்லாம் முன்னேற்றம் அடை யுது, நம்ம நாடு மட்டும் பட்டிக்காடா போகுது.. உலகமெல்லாம் விஞ்ஞானத்துல் விருத்தி ஆகுது நம்ம நாடு மட் டும் மூடநம்பிக்கை  விருத்தி ஆகுது... ஏதாவது ஒரு காரியம் பாத்து விட்டுடனும்" என்று முழங்கினார். தன் உடல்நல குறை பாடுகளையும் தாண்டி அவர் பயணித்த தூரம் மிக மிக அதிகம். அந்த உத்வேகமே அவருக்கு பின்னால், அவர் கண்ட இயக்கம் வெற்றிகரமாய் செயல்பட காரணமாய் இருக்கின்றது

திராவிட பேராசான் அறிஞர் அண்ணா




பெரியாரின் பாசறையில் பயின்ற ''தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என முழங்கியவர். தமிழகத்தில் மேடை பேச்சிற்கான இலக்கணத்தை வகுத்தவர். ஒரு தேர்தல் பரப்புரையில் அண்ணா மேடைப் பேச்சின் முக்கியத்து வத்தை இவ்வாறு கூறுகிறார். 'நீண்ட உரை நாட்டுக்கு தேவைப்படுகிறது, ஏனென்றால் நெடுங்காலமாக மூண்டு போயிருக்கின்ற கேடுபாடு களை நீக்குவதற்கு நீண்ட உரையும் தேவை. அடிக்கடி உரைகளும் தேவை. தொடர்ந்து உரைகளும் தேவை. தாம் ஒடுக்கப்பட்டுள்ளதையும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதையும் மக்களை உணர வைக்க இங்கே நிறைய உரைகள் தேவைப்பட்டன. ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமே ஒப்பற்ற பேச்சாற்றல் கொண்டிருந்த பேரறிஞர், அடுத்தடுத்து இரண்டு மேடைகளில் வெவ்வேறு தலைப்பு களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்ற கூடியவர்.

இந்தி திணிப்பு போராட்டங்களின் தொடக்க காலத்தில் அண்ணா முழங்கிய இணைப்பு மொழி குறித் தான கூற்று, இன்றும் வடக்கிலிருந்து வரும் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக இன்றைய இளைஞர் களால் மேற்கோள் காட்டப்படுகிறது பூனைக்கு ஒரு வழியும் பூனைக் குட்டிக்கு ஒரு வழியும் தேவையா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. இரண்டே ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்திருந் தாலும் அடுத்த சில நூற்றாண்டு களுக்கும் சேர்த்து அடித் தளத்தை அமைத்துவிட்டே சென்றுள்ளார்.

செம்மொழி தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்




பெரியார், அண்ணா வரிசையில் பகுத்தறிவு வளர்த்தவர், தமிழகத்தில் அய்ந்து முறை முதல்வராய் இருந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. சிறந்த எழுத்தாளர், கதாசிரியர், அரசியல் வாதி என பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்திருந்தாலும், மக்கள் மனதில் என்றுமே ஒரு ஆகச்சிறந்த பேச்சாளராக பதிந்தவர். அரசியல் மேடையானாலும் சரி இலக்கிய மேடையானாலும் சரி எதிர்திசையில் அமர்ந்திருப்போர் அனைவரையும் தன் உரைவீச்சில் கட்டிப்போடக் கூடிய நுண்ணாற்றல் கொண்டவர். இவர் அரசியல் மற்றும் சித்தாந்தத்தின் மீது வெறுப்பு கொண்டோர் கூட இவர் பேச்சை ரசிப்பர். முதல்வராய் இருந்த பொழுதும் கூட இலக்கிய கூட்டங் களில் கலந்து கொள்ள அவர் தவறியது இல்லை . ஒரு கவியரங்க நிகழ்ச்சியில் "இலக்கணம் எனும் தாய்ப்பால் அருந்தாமல் பசியெடுத்த போதெல்லாம் புதுக்கவிதை புட்டிப் பால் குடித்திடும் குழந்தை நான் என்று கவிபாடி அரங்கத்தை அதிர வைத்தவர். கலைஞரின் ஆயிரமாயிரம் உரைகளும் படைப்பு களும் இருப்பினும் அவர் அண்ணாவிற்காக இயற்றிய இரங்கற்பா எவரையும் உருக வைக்கும். அண்ணா வின் தம்பியாய் அவருடைய மாநில சுயாட்சி கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையிலேயே தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தார்.

இவர்களை போலவே தமிழகத் தில் பல தலைவர்களை நான் கண்டுள்ளேன். திராவிட இயக்கத்தினர், பொதுவுடைமை வாதிகள், தலித்திய வாதிகள், ஜாதியற்ற தமிழ் தேசியம் அமைய உழைப்பவர்கள் என பல்வேறு தரப்பினரின் பல் கருத்துகளையும் வாதங்களையும் கேட்டு கொண்டே இருக்கிறேன். இவர்களை எல்லாம் கண்ட நான் கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் கேலி கூற்றுகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எந்த மண்ணில் சமத்துவமும் சகோதரத்துவமும் மலர் பரப்புரை செய்யப்பட்டதோ அதே மண்ணில் இன்று ஜாதி ரீதியாக மத ரீதியாக பிரிவினை சக்திகள் வேரூன்றி வருகின்றன. தொண்ணூறு களுக்கு பின் தமிழகத்தில் ஜாதி கட்சிகளின் துவக்கம் பெருகி கொண்டே போகிறது, அதன் விளைவு ஓவ்வொரு ஜாதி கட்சியும் மேடை போட்டு வன்மத்தை கக்கி கொண்டிருக்கின்றன. ஒரு ஊரில் வசிக்கும் ஒரே வர்க்க நிலையில் இருக்கும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இணைந்து உழைத்து முன்னேறலாம். மாறாக ஜாதியவாதிகளின் ஜாதி பித்துக்கு பலியாகி, இருக்கும் வாழ்வாதாரத்தையும் இழக்கின்றனர்.



இன்னொருபுறம் இந்துக்களும் சிறுபான்மையினரும் ஒன்றாய் வாழ்ந்து வந்த தமிழகத்தில், மதவாத சக்திகள் ஆங்காங்கே புற்றீசல் போல் முளைத்துள்ளனர். தமிழ் கலாச்சாரத்தை காப்பதாக கூறிக்கொண்டு வடவரின் இந்துத்துவா சித்தாந்தத்தை தமிழ் மண்ணில் நிறுவமுயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இவர்கள் மேடைகளில் கக்கும் வன்மம் ஆபத்தானவை. இந்தியாவின் பன்முகத்தன்மையை மறுத்து ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க நினைக்கும் சக்திகளின் முயற்சி தமிழகத்தில் தோல்வியையே சந்திக்கும், இருப்பினும் அலட்சியம் காட்டாமல் அவர்களை வேரறுக்க  வேண்டியது அவசியம். இவர்கள் ஒருபுறமென்றால், வரலாற்றை திரித்து வெறுப்பு அரசியலை வளர்த்தெடுக்கும் கூட்டங்களும் இங்கே காலூன்றி கொண்டிருக்கிறது. மாண்டுபோன மனித மாண்பை மீட்டெடுப்பதே தலையாய கடமை என்றார் அண்ணல். அவ்வாறு கடந்த அறுபது ஆண்டுகளில் மனித மாண்பை மீட்டெடுக்க நடந்த போராட்டங்கள் மற்றும் வெற்றிகள், அதன் மூலம் அடைந்த சட்ட அங்கீகாரங்கள் என எல்லாவற்றை யும் புறந்தள்ளி வைத்து விட்டு இங்கு அரசியல் பேசுவது அறியாமை இல்லை, ஏமாற்று வேலை. இன்று அரசியல் களத்தில் இருக்கும் அனைவருக்குமே ஒரு வேலை திட்டம் உண்டு, அவை மக்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதே முக்கியம் வரலாற்றை யார் வேண்டுமானாலும் திரித்து பேசலாம், எந்த விதமான கட்டுகதைகளையும் கூறலாம். திரிபு வாதம் செய்வதில் வல்லவராக இருக்கலாம். ஆனால் மக்கள் எல்லாவற்றையும் அறிவர், உண்மை மட்டுமே என்றும் நிலைத்திருக்கும். திராவிட இயக்கம் தோற்று விக்கப்பட்ட காலத்தி லிருந்தே அதனை வீழ்த்த பல்வேறு சக்திகள் முயற் சித்து கொண்டே இருந்தாலும் அதன் சித்தாந்த பலம் அந்த இயக்கத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

சந்தேகமிருப்பின், நானே சாட்சி. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்க அரசியலில் பேசப்பட்ட அனைத் திற்கும், அதனால் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் சாட்சியாக என்றும் வீற்றிருக்கும் நான் ஒலிவாங்கி!

வாழ்க தமிழ்! வளர்க திராவிடம்!!


நன்றி: 'முரசொலி', 3.7.2019

- விடுதலை நாளேடு, 4.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக