புதன், 10 ஜூலை, 2019

திராவிடர் கழகத்தின் திட்டங்கள்



17.04.1948  - குடிஅரசிலிருந்து.... -

நான் அரசியல் என்னும் பொருள் பற்றிப் பேசுவேன் என்று தலைவர் குறிப்பிட்டார். நான் அரசியலைப் பற்றிப் பேசுவதற்காக வந்தவனல்ல. மேலும் அரசியல் பற்றிப் பேசுவதும் எனக்கு எப்போதும் முக்கிய கொள்கை அல்ல. நான் சமுகச் சார்பில்தான் அதற்குச் சம்பந்தப்பட்ட அரசியல் பற்றிப் பேசுவது வழக்கம்.

கழகத் திட்டம்


தற்போதைய நிலையில் அரசியலில் சம்பந்தம்  வைத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் எங்கள் கழகத்தின் திட்டமுமாகும். 1939ஆம் ஆண்டில் காங்கிரஸ் பதவியை விட்டு ஓடிய போதே ஜஸ்டிஸ் கட்சித் தலைவன் என்கிற முறையில் கட்சி நிர்வாக சபையைக் கூட்டி ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி ஏற்கக்கூடாது என்று தீர்மானம் செய்தேன். அத்தீர்மானத்தின் காரணமாக சில ஜஸ்டிஸ் பிரமுகர்களுக்கு என்மீது வருத்தம்கூட ஏற்பட்டது. சமுக இழிவு நீங்கி மக்களெல்லாம் மனிதத்தன்மை அடையும்படி செய்யவேண்டும் என்பதுதான் எனது முக்கிய கடமை என்பதையும், அரசியல் பிரவேசம் இதற்குப் பாதகமாகவே முடியும் என்பதையும் உணர்ந்ததால்தான் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவிப் பற்றுள்ள சிலர் இதனால் அதிருப்தி கொண்டு கட்சியிடையே கலவரம் விளைவிக்க முயற்சித்தனர் என்றாலும், நான் தலைவனாயிருக்கும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சியார் இப்படிப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசிக்க முடியாது என்பதை அவர்களுக்குத் தெளிவாக்கி விட்டேன். ஆகவே பதவிக்காக, சொந்த வாழ்வுக்காக கட்சியில் ஒட்டிக்கொண்டு இருந்த சிலர் என்னைத் தலைமைப் பதவியினின்று நீக்க பலமான முயற்சி செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பதவியில் ஆசைகொண்ட சிலர் அதைத் தங்களுக்கு நல்லவாய்ப்பு என்று கருதி மறைமுகமாக இதைத் தூண்டிவந்தனர். சேலம் மகாநாட்டின் போதுதான் இம்முயற்சி உச்சநிலை அடைந்தது.

அம்முயற்சியில் அவர்கள் படுதோல்வி யடையவும், மகாநாடு முடிந்தவுடன் கிளை ஸ்தாபனங்கள் அமைக்கும் வேலையும், அங்கத்தினர் சேர்க்கும் வேலையும் தொடங்கப்பட்டு 6 மாதத் திற்குள் 200 கிளை ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப்பட்டு 20,000 அங்கத்தினர்கள் சேர்க்கப்பட்டனர். இவ் வேலை முடிந்ததும் திருச்சியில் மாநாடு கூட்டப்பட்டு சேலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டன. அதன்படி அன்றே சிலர் நியமனப் பதவிகளைத் துறந்தனர். பட்டம் பதவிகளைவிட வசதி இல்லாத சிலர் கட்சி சம்பந்தத்திலிருந்து நீங்கிக் கொண்டனர். சிலர் வேறுகட்சி உண்டாக்கிக் கொண்டதாகக் கூறி அதுதான் ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண்டனர். ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அநேகமாக ஒருவரும் நிற்கவில்லை என்றாலும், ஒருவரிருவர் தங்கள் கட்சியைக் காட்டிக்கொள்ள நின்றனர். அவர்கள் உண்மையான ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டவர்கள் அல்ல என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும், ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கும் பொதுமக்களும் அவர்களுக்கு ஓட்டு கொடுக்கக் கூடாதென்றும் அறிக்கை வெளியிட்டோம். சுவரொட்டிகள் மூலமும் விளம்பரப் படுத்தினோம். சில ஊர்களில் தேர்தல் எதிர்ப்புப் பிரசாரமும் செய்தோம்.

எங்கள் கவலையெல்லாம்


ஆகவே, தோழர்களே! திராவிடர் கழகத்தாருக்கு அரசியல் பற்றிக் கவலையில்லை. மந்திரி பதவியைக் கைப்பற்ற வேண்டுமென்ற எண்ணமும் எங்களுக்குக் கிடையாது. அரசியல் தலைவர்களாக எந்தக் கட்சியில் இருந்து யார் வந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் சம்பளக் கணக்கைப் பார்த்துக் கொள்வதோடு நின்று விடாமல், மக்களுக்குச் சரியானபடி பணியாற்றினால் ஆதரிப்பதும், இல்லாவிட்டால் குறை கூறுவதும், நல்ல முறையில் பணியாற்றும்படி மக்களால் நிர்பந்தப்படுத்தப் படவேண்டும் என்பதுதான் எங்கள் கவலையும் அரசியலும் ஆகும். நாங்கள் அரசாட்சியின் மீது குறை கூறுவதெல்லாம் எங்களுக்கு கள்ள மார்க்கெட் லைசென்ஸ் பெறுவதற்காகவோ, அல்லது அவர்களை ஒழித்து விட்டு பதவியைக் கைப்பற்றிக் கொள்ளவோ, அல்லது அவர்களுடைய உத்தியோகங்களில் பங்கு கொள்ளவோ அல்ல. ஆட்சியாளர் யாவரேயாயினும் அவர்கள் ஒழுங்காக மக்களின் நலன் கருதியே உழைத்து வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

ஒரு நீக்ரோ ஆண்டாலும் ஆளட்டும்


ஆகவே, அரசியல் பதவியில் விருப்பமுள்ள எந்தக் கட்சியும், நாங்கள் போட்டி போடுவோமோ என்று கருதி எங்களை எதிர்க்கவேண்டிய அவசியமே இல்லை. திராவிட சமுகத்தைச் சேர்ந்த யாவரும் மற்றவர்களைப்போல் மனிதத் தன்மை பெற வேண்டுமென்பதுதான், அம்மனிதத்தன்மை அடைவதற்குத் தடையாயுள்ளவைகள் விலக்கப்பட வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை. எங்களை ஒரு நீக்ரோ ஆண்டால்கூடக் கவலைப்பட மாட்டோம். அவன் மனிதத்தன்மையோடு ஆளவேண்டுமென்பதுதான் எங்கள் ஆசை.

கள்ளமார்க்கெட் பேர்வழிக்குக்


கழகத்தில் இடமில்லை


அரசாங்கத்தைக் குறை கூறுவதன் மூலம் எவராவது சிறு சலுகை பெறவோ, அல்லது கள்ள மார்க்கட் செய்ய பர்மிட் பெறவோ, மந்திரிகளுக் கிடையே தரகராயிருந்து கொள்ளையடிக்கவோ முயற்சி செய்வாராயின், அத்தகையவருக்கு திராவிடர் கழகத்தில் வேலையில்லை என்று கட்டாயம் கூறிவிடுவோம். கூறுவது மட்டுமல்ல, அதைப் பத்திரிகையில் போட்டு விளம்பரப்படுத்தி அவன் அவமானம் அடையும்படியும் செய்துவிடு வோம். அவனுடைய அயோக்கியத்தனத்தை மூடி வைக்க ஒருபோதும் முயற்சிக்கவும் மாட்டோம். திராவிடர் கழகம் சமுதாய சீர்திருத்தத்திற்காகவே இருந்து வருகிறது.

 

சமுதாயத்தில் உண்மையான சமத்துவம் நிலவ வேண்டுமேன்பது தான் எங்கள் ஆசை. சமத்துவம் என்றால் சமுதாய இயல், பொருளாதார இயல், அரசியல், மொழியியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமத்துவ சுதந்தரம் வேண்டு மென்பதுதான் எங்கள் கோரிக்கை.

-தந்தை பெரியார்

 - விடுதலை நாளேடு, 6.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக