செவ்வாய், 2 ஜூலை, 2019

'தந்தை பெரியாரும், இந்தி எதிர்ப்பும்'

துண்டுதுண்டாய் செய்திகளை வெளியிட்டு


துக்ளக் ஏட்டின் பித்தலாட்டப் பிரச்சாரம்


மஞ்சை வசந்தன்


எத்தனை முறை மொத்துப்பட்டாலும் மூக்குடைபட்டாலும் சூடு சொரணை இல்லாமல் தொடர்ந்து பித்தலாட்டப் பிரச்சாரத்தை செய்து வருகிறது துக்ளக் ஏடு! அதுவும் கோயங்கோ கணக்குப் பிள்ளை குருமூர்த்திக்கு பித்தலாட்டம் தான் மொத்தக் குத்தகை!


26.6.2019 துக்ளக் ஏட்டில், ஹிந்தி எதிர்ப்பு மேலும் சில உண்மைகள் என்ற தலைப்பில் பெரியாரின் பெருமையை, பித்தலாட்டப் பிரச்சாரம் மூலம் குலைக்க துக்ளக் ஏடு முயன்றுள்ளது.


இந்தி எதிர்ப்பில் பெரியாரின் பங்கு பெரிதாய் ஒன்றும் இல்லை.


என்று பித்தலாட்டப் பிரச்சாரங்களை துக்ளக் செய்துள்ளது.


இந்தி எதிர்ப்புப் போரில் இறுதியில் இணைந்தவரா பெரியார்?


1938இல் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை ஆரம்பித்தவர்கள் சைவப் பெரியோர்களான தமிழ்ப் பண்டிதர்களே. இதில் ஈ.வெ.ரா.வும் அண்ணாதுரையும் கடைசிக் கட்டத்தில்தான் கலந்து கொண்டனர். 1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார்தான் துவக் கினார் என்பது தவறு.


1937 - தேர்தலில் சென்னை மாகா ணத்தில் காங்கிரஸ் வென்றது. ராஜாஜி, எல்லோரும் ஹிந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். இதை சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்ற சைவத் தமிழ்ப் பெரியவர்கள் எதிர்த்தனர். இதில் பாரதியின் சீடரான பாரதிதாசனும் உண்டு. கி.ஆ.பெ.விஸ்வநாதன், முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இப்போது மொழிப் போர் தியாகிகள் என்று கூறப்படுகிற தாள முத்துவும், நடராஜனும் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் அதில் பெரியாரும் அண்ணாதுரையும் சேர்ந்தனர்.


1965இல் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, ஈ.வெ.ரா. பெரியார் 3.3.1965 விடுதலை இதழின் தலையங்கத்தில்...


இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்ற பல வாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கெட்டு விடுமே என்கிற எண் ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு, தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்று எழுதியுள்ளார் என்கிறது துக்ளக் ஏடு.


மேலே கண்ட இரண்டு செய்திகளும் பித்தலாட்டத்தின் உச்சம். அப்படியானால் உண்மை என்ன?


மாநாடு நடத்தி இந்தியை முதலில் எதிர்த்தது யார்?


1937 ஆகஸ்ட் 27ஆம் நாள் திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் தலைமை உரையாற்றிய அண்ணா, தமிழர்கள் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க, இந்தியை எதிர்த்துப் போராட முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.


ஆனால், திருச்சியில் நாவலர் சோமசுந்தர முதலியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு 1937 திசம்பர் 26ஆம் நாள்.


இதில் சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுதான் முதலில் நடந்தது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து திருச்சி மாநாடு நடைபெறுகிறது.


அது மட்டுமல்ல திருச்சி மாநாட்டில் பெரியார் கலந்துகொண்டு, இந்தியைத் தமிழ்நாட்டில் நுழையவிட மாட்டோம் என்று முழங்கினார்.


அது மட்டுமல்ல, இந்த இரண்டு மாநாடுகளுக்கும் இடையில் 1937 செப்டம்பர் 5ஆம் நாள் சென்னையில் நாவலர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தி எதிர்ப் பிற்கான காரணங்களை விளக்கி அண்ணாதான் பேசினார்.


1938 ஆகஸ்டு முதல் நாள், சீருடை அணிந்த 100 தொண்டர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்புத் தமிழர் படை, தளபதி கே.வி.அழகிரிசாமி, மூவலூர் மூதாட்டி இராமாமிர்த்தத்தம்மாள், ஐ.குமாரசாமி பிள்ளை ஆகியோர் தலைமையில், திருச்சி-உறையூரிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது. ஏறத்தாழ 400 கி.மீ தொலைவை 234 ஊர் களின் வழியே 42 நாட்களில் நடந்தே கடந்து வந்த இந்தத் தமிழர் படை, வழியில் 82 இடங்களில் கூட்டங்கள் நடத்தித் தமிழ் மொழியையும் பண்பாட் டையும் காக்க வேண்டியதன் அவசி யத்தை விளக்கிய வண்ணம் செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை வந்தடைந்தது. தமிழர் படைக்குத் திருவல்லிக் கேணி கடற்கரையில் ஆரவாரமான வரவேற்பு அளிக் கப்பட்டது. அங்கு மறை மலை யடிகள் தலைமையில்   நடை பெற்ற கூட்டத்தில் பெரியா இந்தியை எதிர்த்து முழங்கினார்.


செப்டம்பர் 16ஆம் நாள் சென்னை ஜார்ஜ் நகரில் (George Town) இருந்த இந்து தியாலாசிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற மறியலில் தமிழர் படைத் தொண்டர்கள் நாற்பது பேர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனை வரும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.


சென்னை மாநிலத்தில் உள்ள பல நகரங்களிலும் பல்வேறு நாட்களில் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. அக்காலத்தில் தஞ்சை மாவட்டடம் திருவரூரில் 14 வயதுச் சிறுவனாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மு.கருணாநிதி, கையில் தமிழ்க் கொடியை ஏந்தி, இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிய வண்ணம், தன்னுடைய பள்ளித் தோழர்களுடன் சேர்நது இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார். அதனால், மறுநாள் அவர் வகுப்புக்கு வந்த இந்தி ஆசிரியரிடம் அடிவாங்க நேரிட்டது. 1938 சூன் 10ஆம் நாள் சென்னை - கதீட்ரல் சாலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், அரசின் ஆணைகளை மீறுமாறு மக்களைத் தூண்டிப் பேசினார் என்ற குற்றம் சாட்டப்பட்டு, அண்ணா செப் டம்பர் 21ஆம் நாள் கைது செய்யப் பட்டார். ஐந்து நாட்கள் நீதிமன்ற விசாரணைக்குப் பின், அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.


அது மட்டுமல்ல,


நவம்பர் 13ஆம் நாள் சென்னையில் மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை தலைமையில் தமிழகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. மீனாம்பாள் சிவராசன் தமிழ்க் கொடியை ஏற்றினார். நாராயணி மாநாட்டைத் தொடங்கி வைத் தார். இம்மாநாடு ஈ.வெ.இராமசாமியின் தொண்டினைப் பாராட்டி அவருக்குப் பெரியார் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இந்தித் திணிப்பைக் கண்டித்தும், தமிழ் மொழி காக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை புகுந்த தலைவர்களுக்கும் தொண்டர் களுக்கும் பாராட்டுகள் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறுநாள் டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்த்தத்தம்மாள், மலர்முகத்தம் மையார், பட்டம்மாள், மூன்று வயதே யான மகள் மங்கையர்க்கரசி மற்றும் ஒரு வயதேயான மகன் நச்சினார்க்கினி யனுடன் சீதம்மாள் ஆகியோர் இந்து தியாலாசிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற மறியலில் கலந்து கொண் டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். அவர் களைத் தொடர்ந்து ஏராளமான மகளிர் மறியலில் கலந்துகொண்டு சிறை புகுந் தனர். காங்கிரஜ்க் கட்சித் தலைவர்களில் ஒருவரான என்.வி.நடராசனின் துணை வியார் புவனேசுவரி இரண்டு வயதே யான மகன் சோமசுந்தரத்துடன் மறியலில் கலந்துகொண்டார். அவர் கைது செய் யப்பட்டு ஆறு மாதங்கள் சிறை தண் டனை விதிக்கப்பட்டார். அந்தஇரண்டு வயதுக் குழந்தை சோமசுந்தரம் பிற்காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், மைய அமைச்சராகவும் ஆனார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகம். மொத்தம் 73 பெண்களும் 32 குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர்.


தமிழகப் பெண்கள் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிற்காகப் பெரியார் மீது இ.பி.கோ.117ஆவது பிரிவின் கீழும், குற்றவியல் திருத்தச் சட்டம் பிரிவு 7(1)ன் கீழும் குற்றம் சுமத்தப்பட்டது. 1938 திசம்பர் 5ஆம் நாள் வழக்கை விசாரித்தத நீதிபதி மறுநாள் பெரியாருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். பெரி யாருக்கு அளிக்கப்பட்ட இந்தத் தண் டனையைக் கேள்வியுற்ற ஆளுநர் மிகவும் வருத்தப்பட்டதுடன், அவருக்கு அளிக்கப்பட்ட கடுங்காவல் தண் டனையை சாதாரண தண்டனையாக மாற்றியும், அவருக்குச் சிறையில் முதல் வகுப்பு வழங்கியும் ஆணை பிறப்பித்தார்.


இந்தி எதிர்ப்புப் போராட்ட செய்திகளை வெளியிட்ட இதழ்கள் மீதும் காங்கிரசு அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. விடுதலை இதழ் வெளியீட்டார்ளர் ஈ.வெ.கிருட்டிணசாமி, ஆசிரியர் முத்துச்சாமி ஆகியோர் அக்டோபர் 7ஆம் நாள் கைது செய்யப் பட்டு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். மேலும் விடுதலை, குடிஅரசு, பகுத்தறிவு ஆகிய இதழ்கள் கூடுதல் வைப்புக் கட்டணம் உரூ.1000/- செலுத்த வேண்டுமென்று 1938 ஜனவரி 4ஆம் நாள் ஆணை பிறப்பிக்கப்பட்டது.


இப்படி பெரியாரும் திராவிட இயக்கத் தொண்டர்களும் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும் தியாகங் களும் ஏராளம் ஏராளம். உண்மை இப்படியிருக்க, இந்தப் பார்ப்பன ஏடு(துக்ளக்) பெரியாரும் அண்ணாவும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஓடி ஒட்டிக் கொண்டார்கள் என்கிறது. இதைவிட பித்தலாட்டம் வேறு உண்டா?


அடுத்து, 3.3.31965 விடுதலை தலையங்கத்தில் பெரியார் எழுதியதில் ஒரு பகுதியை துண்டாக எடுத்துப் போட்டு, இந்தி எதிர்ப்பில் பெரியாருக்கு அக்கறையில்லை என்பது போல காட் டியுள்ளது. ஆனால், தலையங்கத்தில் பெரியார் உண்மையில் எழுதியது என்ன?


இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க் கிறேன். ஆனால், தமிழ் கெட்டுவிடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள். மற்றபடி தமிழ் கெடுவதற்கு சில புராணங்கள் அதுவும் பார்ப்பனர் நலனுக்கு பார்ப்பனர் சமய - தர்ம - கலாசார - ஆத்மார்த்த ஆஸ்திகத்திற்கு ஆகவே உண்டாக்கப் பட்ட தத்துவங்களை வடமொழியில் இருந்து தமிழாக்கம் செய்த பாரதம், இராமாயணம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் முதலிய குப்பை கூளங்கள் தான் இனி கெட்டால் கெடலாமே ஒழிய பகுத்தறிவு விஞ்ஞானம் புதிய நாகரீக வளர்ச்சி வகைகளுக் கேற்றவை தமிழில் எதுவும் இல்லை, கெடப்போகிறதில்லை.


பழைய அரசர்கள் தமிழைக் காத்தார்கள் என்றால் என்ன அருத்தம். புலவர்கள் புளை வளர்த்தார்கள் என்பதுதான் பொருள். சமயாச்சாரிகள் தமிழைக் காத்தார்கள் என்றால் என்ன பொருள்? மத மூடநம்பிக்கை குப்பை கூளங்களையும் மாசு பட்டுக் கிடந்த முட்டாள்தனமான கடவுள்களையும் புளிபோட்டு விளக்கி பிரகாசமாக்கினார்கள் என்பது தவிர வேறு என்ன கருத்து  காண முடியும்?


ஆனதினால் நான் தமிழ் கெட்டுவிடுமே என்று இந்தியை எதிர்க்கவில்லை. மற்றெதற் கென்றால் ஆங்கிலமே அரசியல் மொழியாக, சரித்திர மொழியாக, விஞ்ஞான மொழி யாக, தொழில் மொழியாக, இயந்திர சாதன மொழியாக, பெரியோர்கள், அறிஞர்கள், விஞ்ஞானகர்த்தாக்கள் வாழ்க்கைச் சரித்திர மொழியாக சட்டமொழியாக, சம்பிரதாய மொழியாக ஆகவேண்டும் என்பதற் காகவே இந்தியை எதிர்க்கிறேன்.


ஆச்சாரியார் நோக்கம் தமிழர் கல்வியை ஒழிப்பதே


பதவி கிடைத்தபோதெல்லாம் ஆச்சாரியார் இந்தியைப் புகுத்துவதையே முக்கிய கொள்கையாகவும், தமிழர் படிப்பை ஒழிப்பதையே இன்றியமையாத கொள்கையாகவும் கொண்டு ஆட்சி செலுத்தவில்லையா?


1938இல் இந்தியை கட்டாயமாகப் புகுத்தினார். கவர்னர் ஜெனரலாக இருக் கும்போது இந்தியை ஆட்சி மொழியாக் கினார்; மற்றும் மத்திய அரசாங்க மந்திரி யாக இருக்கும்போது இந்தி படித்தவனுக் குத்தான் உத்யோகம் என்று உத்தரவு போட்டார். உத்யோகம் போனபின்பு தமிழ்நாட்டில் இங்கிலீஷ் ஆட்சி மொழி யாக இருக்க வேண்டும் என்ற சாக்கில் தமிழ்மக்கள் நட்பைக் கொண்டார்.


இந்தி திணிக்க இடந்தர மாட்டோம்


இந்தி நம் மீது திணிக்கப்படுமானால் அதை ஒழிக்க இந்த நாட்டில் மருந்து நம் கையில்தான் இருக்கிறது; அதை இப் போது வீணாக்கிக் கொள்ளக்கூடாது.


இந்தியை புகுத்தினவர்கள் அரசி யலுக்கு ஆகப் புகுத்தவில்லை; கலாச்சார மாற்றத்திற்காகவே இன உணர்ச்சியை மறக்கடிப்பதற்கு ஆகவே புகுத்தி னார்கள்; காந்தியின் கருத்தும்; ஆச்சாரி யாரின் கருத்தும் வெறியர்களின் கருத் தும் இதுவேயாகும்.


ஆதலால் இந்தி விஷயத்தில் நான் -திராவிடர் கழகம் அசமந்தமாக இருப் பதாக யாராவது கதினால் அது தவறான கருத்தாகும்.


காமராஜர் ஆட்சியே கஷ்டங்களைப் பரிகரிக்கவல்லது


நான் சுமார் இரண்டாண்டுக்கு முன்னாலேயே பொதுமக்களுக்கு என் கருத்தை தெரிவித்திருக்கிறேன். அதா வது:


காமராஜர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்ற என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன். காமராஜர் ஆட்சி நிலைத் தால் இந்தியை மாத்திரமல்ல; மற்றும் அனேக காரியங்களை ஒழித்துக் கட்டலாம்.


இதுவே பெரியார் கூறியது:


இந்தத் தலையங்கத்தில் கடைசி பாராவில், கடைசி வரியை நீக்கிவிட்டு காமராசர் ஆட்சிதான் அவசியம்! என்பதை மட்டும் எழுதியுள்ளது துக்ளக் ஏடு. இதைவிட மோசடி வேறு உண்டா?


கடைசி வரிதானே முக்கியம்.


காமராசர் ஆட்சிதான் எனக்க அவசியம் என்று பலமாகச் சொல்வேன். காமராசர் ஆட்சி நிலைத்தால் இந்தியை மாத்திரமல்ல, மற்ற அனேக காரியங்களை ஒழித்து விடலாம் என்று பெரியார் எழுதினார். அப்படியென்றால் அதன் பொருள் என்ன? காமராசர் ஆட்சி மூலம் இந்தியை ஒழிப்பேன் என்பது தானே? கடைசி வரியை நீக்கிவிட்டு இந்தி ஒழிப்பில் பெரியாருக்கு அக்கறை யில்லையென்பது பித்தலாட்ட மல்லவா?


- விடுதலை நாளேடு 25. 6 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக