புதன், 29 மே, 2019

நூற்றாண்டு விழா காணும் தந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டி: விழா ஏற்பாடுகள் தீவிரம்



தந்தை பெரியார் ஈரோடு நகரமன்றத் தலைவராக இருந்த போது கட்டிய கோட்டை வடிவிலான குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

ஈரோடு நகரமன்றத் தலைவராக தந்தை பெரியார் 1917 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது ஈரோட்டைச் சுற்றி உள்ள சிறுசிறு கிராமங்களை ஒருங்கிணைத்து நகராட்சி பகுதியாக மாற்றப்பட்டு திட்டங் கள் செயல்படுத்தப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட தடையில்லா குடிநீர்


அதில் குறிப்பாக மக்களுக்கு பாது காக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பது பிரதான திட்டமாகும். குடிநீருக்காக குடங்களை தூக்கிக் கொண்டு வீதி வீதியாக மக்கள் அலையாமல் அவர் களின் வீட்டிற்கே தண்ணீர் வரும் வகையில் இந்தியாவிலேயே முதன் முதலாக வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் திட்டத்தை தந்தை பெரியார் செயல்படுத்தினார். இதற்காக ஈரோடு வ.உ.சி. பூங்காவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்து ஒவ்வொரு வீடுகளுக்கும் இரும்பு குழாய்கள் மூலம் தடையில்லா குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

குழாய்கள் அமைத்து வீடுவீடாக மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் தந்தை பெரியாரின் குடிநீர் விநியோக திட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் அப்போதைய சேலம் நகர்மன்ற தலைவராக இருந்த ராஜாஜி சேலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் அப்போதைய சென்னை மாகாணத்திலும் ஆங்காங்கே கொண்டு வரப் பட்டது. தந்தை பெரியாரின் தொலை நோக்கு திட் டத்தில்கட்டப்பட்டகுடிநீர் மேல்நிலைத்தொட்டி யானது இன்றும் கம்பீர மாக ஈரோட்டில் வ.உ.சி. பூங்காவில் காட்சியளிக்கிறது. ஆனால், அது குடிநீர் தொட் டிதான் என்பது பலருக்கு தெரியாத வகையில் கோட்டை வடிவில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டிலும் இருந்து வருகின் றது.

ஈரோட்டில் குடிநீர் விநியோகம் 1919 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி தொடங்கப்பட்டதையடுத்து, வருகின்ற 26 ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவுப் பெறுவதையொட்டி திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வருகின்ற 26 ஆம் தேதி ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 21.5.19

செவ்வாய், 21 மே, 2019

சுயமரியாதை சுடரொளி : அன்னை நாகம்மையாரும் சுயமரியாதை இயக்கமும்


முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


பெரியாரின் வாழ்வில் நாகம்மையாரின் பங்கு நினைத்துப் போற்றுதற்குரியது. நம்மில் பலர் அரியாத காலத்தது. நாம் அறிந்துகொள்ள வேண்டியதில் அன்னை நாகம்மையாரின் வாழ்க்கை வரலாறு என்றாலும் சரி, அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாறு என்றாலும் சரி, இருவரின் வாழ்க்கை வரலாறும் தனிப்பட்ட இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறு அன்று. அது பெரியாரின் வாழ்க்கை வரலாறு. திராவிட இயக்கத்தின் வரலாறு. இரண்டு பெண்மணிகளும் -_ துணைவியர் ஆயினும் சமுகத் தொண்டாற்றிய ஒரு மாபெரும் தலைவரின் தொண்டர்கள். இன்னும் சொல்லப்போனால் _ அடிமைகள். அவரால் ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அவருடைய தொண்டுக்குத் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டவர்கள்.

தாய் அளித்த விருந்தோம்பல்

இயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்டவர் அன்னை நாகம்மையார் என்று சாத்தான்குளம் ராகவன் என்னிடம் 40 ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்துகொண்டது நினைவில் நிழலாடுகிறது. “நான், மாயவரம் நடராசன் எல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்போம் பெரியார் இல்லத்தில். அம்மா அன்பொழுகப் பரிமாறுவார்கள். அப்பொழுது பெரியார், கையில் கடை சாவியை எடுத்துக்கொண்டு எங்களைப் பார்த்துக்கொண்டு செல்வார். அம்மாவின் பிள்ளைகளாதலால் அவரோடு முரண்டு பிடித்திருந்தாலும் அய்யாவின் வீட்டில்தான் உணவு.’’

அக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமளித்து, பிறகு அவர்கள் விரும்பும் ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்துச் சில நாள்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு திரும்புவார் என்றால் அந்தத் தாயுள்ளம் யாருக்கு வரும்?

சாமி சிதம்பரனார் திருமணச் செய்தி ஒரு சான்று.

சுயமரியாதை இயக்க வளர்ச்சியில் அன்னையார்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வரலாற்றை வரைவோர் அன்னை நாகம்மையாரின் பங்களிப்பைக் குறிப்பிடத் தவறிவிடுகின்றனர். தந்தை பெரியாருடன் தன்மான இயக்கம் கண்ட காலத்தில் கூட உடனுழைத்தவரும், அய்யாவுடன் ரஷ்யநாடு சென்ற வந்தவருமான எஸ்.ராமநாதன் எழுதியவை இவை:

“அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்க வெற்றிக்குக் காரணமாகும். மூடக் கொள்கைகளினின்று மக்களை விடுவிக்கும் பொருட்டு அவர், தமிழ்நாடு, கேரளம், மலாய் ஆகிய இடங்களில் உள்ள எல்லா ஜில்லாக்களிலும் -சுற்றுப் பிரயாணம் செய்திருக்கிறார். அவர் ஒரு பிரசங்கியல்ல; ஆனால் அவர் பிரசன்னமாயிருக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்கள் தீவிரமாகக் கலந்துகொள்வார்கள். அவர் எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். அவருக்கு மகப்பேறு இல்லை; ஆனால் பொதுஜன நன்மைக்காக வேலை செய்து எல்லா இளைஞர்களையும், பெண்களையும் தம் சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரியங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார்.

ஆக, சுயமரியாதை இயக்கம் வெற்றி பெறுவதற்கும். அதில் ஏராளமான பெண்கள் தாராளமாய்க் கலந்து கொள்வதற்கும் அன்னை நாகம்மையாரே காரணமாவார். பெரியாரையும், அன்னையையும் மனிதத் தன்மையற்ற முறையில் திட்டிக் கடிதங்கள் பல வரும். இருவரையும் பொதுக்கூட்டங்களில் கொலை செய்து விடுவதாகக்கூட, மிரட்டல் வரும். கடிதங்கள் வரும். அய்யா ஆண் பிள்ளை; அஞ்சமாட்டார் என்றால், அம்மா அவரைவிட ஒருபடி மேல். எதற்கும், எந்த மிரட்டலுக்-கும் அஞ்சுவதில்லை.

சிங்கப்பூர் ஏட்டின் தலையங்கம்

“சிங்கப்பூர் முன்னேற்றம்’’ எனும் ஏடு எழுதிய தலையங்கத்தில் “ஈரோட்டு ராமன் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் உலகப் புகழ்பெற்று, நாளை உலக இயக்கமாக மாறப் போவதற்கும் உறுதுணையாய் நின்றது அன்னை நாகம்மாளன்றோ!

இயக்கம் காரணமாய் அருமையான உற்றார், பெற்றோர்களையும், உறவின் முறையார்களையும் இழந்த இளைஞர்களுக்கெல்லாம் அறுசுவை உண்டி அன்புடன் அளித்து ஆதரித்தது அன்னை நாகம்மாளன்றோ! காளையர்க்கும், கன்னியர்க்கும் கலங்காது ஊக்கமளித்தது அன்னை நாகம்மாளன்றோ!’’ என்று குறிப்பிட்டது.

அன்னையார் நாவன்மை பெற்றவர் இல்லை. படித்தவர் இல்லை. ஆயினும் அவரிடம் நிறைந்திருந்த தர்க்க சாமர்த்தியமும், விஷய விளக்கமும், திடசித்தமும், அன்பும், அருளும் பலரையும் தலைவணங்கச் செய்தது.

‘குடிஅரசு’ பதிப்பாளர்

சுயமரியாதை இயக்கத் தலைமைப் பத்திரிகையான ‘குடிஅரசு’ 09.01.1927 முதல் அன்னையின் பெயரால் வெளிவந்தது. அதில் வெறும் புகழுக்காக ஒப்புக்காக அவர் பெயர் இடம் பெறவில்லை. அன்னை அவர்களின் உயிரும் உடலுமே ‘குடிஅரசு’ பத்திரிகை எனலாம். 1929ஆம் ஆண்டு குடிஅரசைச் சென்னைக்கு மாற்றும்பொழுது தம் உயிரையே கொள்ளை கொடுத்துவிட்டதாக அன்னையார் பரிதவித்தார். அன்னையின் விருப்பப்படியே ‘குடிஅரசு’ சென்னையில் வெகுநாள் நிலைத்திடாமல் மீண்டும் ஈரோட்டிற்கு வந்தது. அன்னைக்குப் படிப்பில்லை. ஆனால் பிறரைப் பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். ‘குடிஅரசு’ சிறப்புற்று விளங்க வேண்டும் என்பது அன்னையின் மிகுந்த அவா. அதனால் அன்னை ‘குடிஅரசு’க்காக அறிக்கை விடத் தவறவில்லை.

நாகம்மையாரின் அறிக்கை

24.04.1932இல் “ஈ.வெ.ரா. நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’’ எனும் பெயரில் வெளியிட்ட அறிக்கை இது.

“நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்தின் பொருட்டு புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன. இந்த நான்கு மாதங்களாக நமது குடிஅரசுக்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட்செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப் போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.’’

அன்னையின் மலாய் நாட்டுப் பயணம்

‘சிங்கப்பூர் தமிழ் முரசு’ அன்னையின் மலாய் நாட்டு வருகை குறித்து எழுதியவை இவை:

“அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்-கு “நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள்’’ என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்றும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று எழுதியது.

ஆனால், 1931இல் அய்யா மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் செய்தபோது அன்னையை அழைத்துச் செல்லாதது உடல்நலிவை ஏற்படுத்தியது. ஆயினும் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தையும், குடிஅரசு பத்திரிகையையும் தளர்வின்றி நடத்தினார். பெரியார் சுற்றுப் பயணத்திலிருந்த சுமார் பத்து மாதங்களும் சுயமரியாதை இயக்கமானது அதற்கு முன்செய்த வேலையைவிட அதிகம் வேலை செய்தது. இதற்குக் காரணம் நாகம்மையார் அவர்கள் இயக்கத் தோழர்களுக்கு அளித்த உற்சாகம்.

“நாகம்மாளுக்குக் காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருஷ காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கியக் காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது. மூன்றாவதாக நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்கு ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்கு ‘கூற்றா’கின்றது என்றால் இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவிற்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன்’’ என்றே அய்யா எழுதினார்.

பெரியாரின் வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றிலும் ஒத்துழைத்து அன்னையார் வெற்றியளித்தார்கள்.

நாகம்மையார் ஒரு வாரகாலம் உடல்நிலை சரியில்லாது ஈரோடு லண்டன் மிஷன் மருத்துவமனையில் டாக்டர் போலோரிட் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். நாகம்மையாரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தவர்களில் ஆர்.கே.சண்முகம், இரத்தினசபாபதி, முருகேச முதலியார் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆயினும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனி தாங்காது எனும் நிலையில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசியில் செய்யக்கூடிய சிகிச்சைகளைச் செய்து பார்த்தும் இரவு 7.45 மணிக்க அன்னையாரின் உயிர் உடல் கூட்டிலிருந்து பிரிந்தது.

- உண்மை இதழ், 1-15.5.19

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (35) : தாழ்த்தப்பட்டோருக்கு தந்தை பெரியாரின் தொண்டு!



 நேயன்


இந்தியாவைப் பீடித்திருக்கும் பெருநோய்களில் முதன்மையானது, தீண்டாமையென்பதைச் சகலரும் ஒப்புக் கொள்கின்றனர். இதை ஒழிப்பதென்றால், ஷெட்யூல் வகுப்பினரின் பொருளாதார நிலை உயர வேண்டும். அவர்கள் யாவருக்கும் கல்வி வசதியளிக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் விசேஷ உரிமையும் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும். இவைகள் இல்லாத எந்த ஒரு அரசியல் திட்டமும் சர்க்காரின் அங்கீகாரத்தைப் பெற முடியாது.                     

  (‘விடுதலை’ 25.4.1945)

காங்கிரஸ் பதவி ஏற்றதும் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்கின்ற ஜாதி, ஆணவம், கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். பிராமணன் ஓட்டல், பிராமணன் சாப்பிடும், பிரவேசிக்கும் இடம் என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டும். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஜாதி இந்து, ஜாதி குறைவான இந்து என்பன சாதியவைகள் அரசாங்க ஆதாரங்களில் நடைமுறைகளில் இருக்க இடம் வைக்கக் கூடாது. 

  (‘குடிஅரசு’ 6.4.1946)

எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, பிராமணனாகவும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும், பாட்டாளியாகவும் பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன்.  

(‘குடிஅரசு’ 6.7.1946)

தீண்டாமை பழக்கத்தைக் கிரிமினல் குற்றமாகக் கூடிய சட்டத்தை நிறைவேற்றினாலொழிய அதை அழிக்க முடியாது என்பது உறுதி.

                                                (‘விடுதலை’ 12.9.1946)

பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக் கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்க மாட்டானா?         

       (‘குடிஅரசு’ 9.10.1946)

மனித வர்க்கத்திலே பறையனோ சூத்திரனோ சக்கிலியோ, பிராமணனோ, இழிஜாதியானோ இருக்கக் கூடாது.

(‘குடிஅரசு’ 12.10.1946)

கிராமங்களில் ஆரியர், உயர்ஜாதிக்காரர்கள் என்று கூறப்படுவோர் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்யும் வஞ்சகத்தை உடனடியாக ஒழித்துத் தீரவேண்டுவது நாட்டின் நலன் கருதுவோர் அனைவரின் கடமையாகும்.

                                                (‘விடுதலை’ 5.7.1947)

திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.        

          (‘விடுதலை’ 8.7.1947)

எந்த ஒரு சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டாதவர்கள் இருக்கிறார்களோ, அந்த சமூகத்தை முற்போக்கான ஒரு சமூகம் என்று யாரும் கருதமாட்டார்கள்.

                                    (‘விடுதலை’ 23.12.1947)

திராவிடர் கழகம் ஆதிதிராவிடர்களுக்கும் சேர்த்து பாடுபட்டு வருவதால்தான் திராவிடர் கழகக் கூட்டங்களில் மற்ற ஜாதியினரைக் காட்டிலும் ஆதிதிராவிடர்களே அதிகப் படியாகக் காணப்படுகிறார்கள்.

                                                (‘விடுதலை’ 12.1.1948)

மற்ற நாட்டாரைப் போல பணக்காரன் -_ ஏழை என்ற தொல்லையை ஒழிப்பதற்குப் பாடுபடுவதோடு முயற்சி செய்வதோடு இந்தப் பார்ப்பான் _ பறையன் என்ற தொல்லையையும் ஒழிக்க வேண்டிய நிலைமையிலே நாம் இருக்கிறோம்.                               

  (‘விடுதலை’ 1.5.1953)

அரசமைப்புச் சட்டத்திற்கு நெருப்பு வைக்க வேண்டும். இந்தச் சட்டப்படி உலகம் உள்ள அளவும் பறையன் இருப்பான். ஆனால், பறையன் என்ற பெயரால் இருக்க மாட்டான். அரிசன் என்ற பெயரில் இருப்பான். விளக்குமாறு என்றால் என்ன? துடைப்பக்கட்டை என்றால் என்ன? உலகம் உள்ள அளவும் பார்ப்பானும் சூத்திரனும் பறையனும் இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது அரசமைப்புச் சட்டத்தில்.                

   (‘விடுதலை’ 13.10.1957)

இந்த 10 வருடத்தில் அரிசன் தீண்டாமை ஒழியும் என்று சொல்லிவிட்டால் காரியத்தில் நடப்பதென்ன? எந்த சேரி ஒழிந்தது? 10 வருடத்தில் எந்தப் பார்ப்பான் சேரியில் குடியிருக்கிறான்? இன்றும் பார்ப்பான் பாடுபடாமல் நெய்யும் சோறும் சாப்பிடுகிறான். இன்றும் பறையன் பாடுபட்டும் கஞ்சிக்கு வழியில்லாமல் தவிக்கிறான். இன்றும் 100க்கு 100 பார்ப்பான் படித்தவன். இன்றும் பறையன் படிக்காதவன்...          

 (‘விடுதலை’ 12.12.1957)

சேரி என்று ஒன்று இருக்கிறது. அங்குள்ள மக்கள் கீழான நிலையில் வாழ்கிறார்கள். ஏதோ அந்த இனத்தில் முன்னேற்றுகிறோம் என்று சொல்லி ‘அரிசனம்’ என்று பெயர் வைத்து ஏதோ 2 பேருக்கு உத்தியோகம் தந்துவிட்டு மற்றப்படி அந்தச் சாதித்தன்மை, கீழ் நிலைமை அப்படியே வைக்கத்தான் முயற்சி செய்கிறார்கள்.                    

        (‘விடுதலை’ 4.7.1958)

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதே. அதாவது, எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே. 100க்கு 97 பேராக உள்ள மக்கள் பறையன், சூத்திரன் என்று வீட்டில் இன்று உள்ளார்கள். இங்குப் பறையனும் இருக்கக் கூடாது. இப்படிச் சொன்னால் இங்குப் பார்ப்பாரைப் பூண்டும் இருக்கக் கூடாது என்றுதான் அர்த்தம். சித்திரத்தில் வரைவதற்குக் கூட ஒரு பார்ப்பான் இருக்கக் கூடாது. பொம்மை பிடித்து வைக்கக்கூட ஒரு பறையன் இருக்கக் கூடாது. மனிதன்தான் இருக்க வேண்டும்.  

(‘விடுதலை’ 26.10.1958)

திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.                                                              

   (‘விடுதலை’ 8.7.1947)

உயர்ஜாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுகிறான்? பறைய சூப்பிரண்டு, பார்ப்பான் சப் இன்ஸ்பெக்டரை, சூப்பிரண்டைக் கண்டால் தொடை தட்டி, பார்ப்பான் சலாம் போட்டுத்தானே தீர வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கலெக்டர் வேலை கொடுக்க இருக்கிறார். சேலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்தான் கலெக்டர். இப்படிப்பட்ட காரியங்களால்தான் ஜாதியை ஒழிக்க முடியுமே ஒழிய, ஒரு ஏக்கர், அரை எக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதாலோ வீடு கட்டிக் கொடுத்து விடுவதாலோ ஜாதி ஒழிந்துவிட ஏதுவாகாது.

(‘விடுதலை’ 28.1.1964)

இன்றைய 20ஆம் நூற்றாண்டிலும் இந்திய தேசம் என்னும் காட்டுமிராண்டி சமுதாயம் நிறைந்துள்ள நாட்டில் மனிதனில் பிறவியின் பேரால் மேல் ஜாதி, கீழ் ஜாதி, பிராமணன், சூத்திரன், பறையன், முதலாம் ஜாதி, நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்கின்ற பாகுபாடும் நடப்பும் நடத்தப்படுவதும் ஆன அநீதியும், அயோக்கியத்தனங்களும் சாமி பேராலும் சாஸ்திரங்களின் பேராலும், சட்டத்தின் பேராலும் நீதியின் பேராலும் அமலில் இருந்து வருகிறது.       

  (‘விடுதலை’ 20.11.1967)

பறையன் என்று சொல்லக்கூடாது என்ற ஆரம்பித்தவன் நான்.

(‘விடுதலை’ 15.12.1964)

சேரியிலே இருக்கிற தீண்டப்படாத மக்களை மற்ற மக்கள் வாழும் இடங்களில் வாழ அனுமதிக்க வேண்டும்.

(‘விடுதலை’ 5.4.1964)

தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 100க்கு 100 பேருக்கு (எல்லோருக்கும்) கல்வி (சலுகை)யுடன் கல்லூரிச் சலுகையும் கொடுத்துப் பட்டதாரிகளாக ஆக்கிவிட வேண்டும். அவர்களுக்கு உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.

                                                (‘உண்மை’ 14.9.1970)

(தொடரும்)

 - உண்மை இதழ், 1-15.5.19

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் தலித்துகளும் இதுவரை வெளிவராத சில தகவல்கள்



 

 

நூல்             : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள்

ஆசிரியர்      : அ. மார்க்ஸ்

வெளியீடு     : அடையாளம் பதிப்பகம்.

 

விலை: 160. பக்கங்கள்: 175

 

 

(“திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு’’ எனக்கூறி, நூலாசிரியரால் அர்ப்பணிக்கப்பட்டது இந்நூல்).

பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் போக்கொன்றைச் சில ஆண்டுகளாக ஒரு சிலர் மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தலித் பிரச்சினையில் திராவிட இயக்கத்தின் போதாமை குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஒருவர் முன்வைத்தால் அதை யாரும் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், பார்ப்பன சக்திகளின் பகடைக் காயாக இருக்கும் சிலர் உள்நோக்கத்துடன் மேற்கொள்கிற இம்முயற்சி ஆபத்தானது. திராவிட இயக்கத்தவர்கள் கவனத்தில் நிறுத்த வேண்டிய ஒரு பிரச்சினை இது.

இன்னும் சிலர் பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் தொடக்க காலத்தில் (1920, 30களில்) தீண்டாமை ஒழிப்பில் காட்டிய ஆர்வத்தைப் பின்னாளில் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். விரிவான ஆய்வுகள் ஏதுமின்றி சும்மா போகிற போக்கில் இக்குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

1968ஆம் ஆண்டு விடுதலை இதழ்களின் ஒரு தொகுதியைச் சமீபத்தில் புரட்டிக்கொண்டிருந்தேன். ஜாதி ஒழிப்பிற்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் பெரியார் மேலதிக முக்கியத்துவம் கொடுத்து இயங்கியுள்ளதை அறிய நேர்ந்தது. மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் மற்றும் சத்தியவாணி முத்து அம்மையார் ஆகியோரின் தீண்டாமைக்கு எதிரான பேச்சுகள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில நாட்களில் விடுதலை இதழில் இரண்டு அல்லது மூன்று பக்கங்கள்கூட அவர்களின் பேச்சுகளால் நிரப்பப்பட்டுள்ளன.

‘கலப்புத் திருமணத்தால்தான் ஜாதி ஒழிப்பு’ என ஜெகஜீவன்ராம் அவர்கள் சென்னையில் பேசிய பேச்சு முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது (12.10.1968). டில்லியில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டவர் நல மாநாட்டில் சத்தியவாணி முத்து அம்மையார் கலந்துகொண்டதும் அங்கே அவர் பேசியதும் முதற் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன (அக்டோபர் 10, 1968). அதே இதழில் ‘தீண்டாமைக் கொடுமை’ எனப் பெரியார் தலையங்கம் எழுதியுள்ளார். காங்கிரசின் போலித்தனம், வட்டமேசை மாநாட்டில் காந்தி தானே தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதி எனச் சொன்னதை அண்ணல் அம்பேத்கர் மறுத்தது ஆகியன அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

எனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்பட வேண்டுமென்பதுதான். அது ஜப்பானால் முடியுமா, ஜெர்மனால் முடியுமா, ரஷ்யாவால் முடியுமா, பாகிஸ்தானால் முடியுமா என்பது பற்றி இன்றைய நிலையில் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நாம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிகளாக இருக்கலாம் என்பதே என் கருத்து.

தீண்டாமைக் குற்றத் தடுப்புச் சட்டங்கள் (PCR சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முதலியன) நீக்க வேண்டுமென ஆதிக்க ஜாதிக் கட்சிகள் இன்று கோருகின்றன. தீண்டாமைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என அன்றைய மத்திய அரசு ஒரு முயற்சி மேற்கொண்டது. அதை முழுமையாக ஆதரிக்கிறார் பெரியார். இந்தியாவில் தீண்டாமை எந்த அளவிற்கு கைக்கொள்ளப்பட்டு வருகிறதென்பதை மதிப்பிட மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி தன் இடைக்கால அறிக்கையில் தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் பார்லி மென்ட், மாநில சட்டசபைகள் முதலியவற்றில் உறுப்பினர்களாகக் கூடாதென்றும் விலக்கப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சத் தண்டனை இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், வழக்குகளை வெளியே ராஜி பேசிவிட்டு விடுவதை இச்சட்டத்தின் கீழ் தடைசெய்ய வேண்டும் என்றும், தீண்டாமையை விரட்டுவதற்குத் தாலுகா மட்டத்தில் போர்டுகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது. கமிட்டியின் சிபாரிசுகள் பற்றி மாநில அரசுகளின் கருத்தறிய மத்திய மாநிலங்களுக்குக் கிடைத்ததும் தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்திற்குத் திருத்தங்கள் கொண்டுவர உத்தேசித்திருப்பதாகவும் தெரிகிறது....

என மிக விரிவாக இது குறித்து அன்று விடுதலை (10.10.1968) எழுதியது. இந்த அளவிற்கு விரிவாக வேறு யாரும் தமிழில் இதை விளக்கி ஆதரவு சேகரிக்க முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுரையின் இறுதி, ஆயினும் புரட்சியொன்றினால்தான் இந்தத் தீண்டாமைக் கொடுமை ஒழிய முடியுமென்று மத்திய அமைச்சர் திரு.ஜெகஜீவன்ராம் கூறியுள்ளதை நாமும் ஆதரிக்கிறோம் என முடிகிறது.

திருச்சி மாவட்ட லால்குடி வட்டத்தில் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை உள்ளதை எதிர்த்து மத்திய அமைச்சர் ஜெகஜீவன் ராமிடம் புகார் கொடுக்கப்பட்டதையும் விடுதலை (23.10.1968) பதிவுசெய்யத் தவறவில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேர மாத வருமானம் ரூ.1500/- என்கிற மேல் வரம்பை ரூ.5000/- என ஆக்கவேண்டும் என்பதையும் விடுதலை ஆதரித்து வலியுறுத்தியது. (அதே நாள்).

பெரியார் லக்னோவில் (13.10.1968) பேசிய பேச்சொன்றும் அதே நாளில் பதிவாகியுள்ளது. அதில்,

எனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்பட வேண்டுமென்பதுதான். அது ஜப்பானால் முடியுமா, ஜெர்மனால் முடியுமா, ரஷ்யாவால் முடியுமா, பாகிஸ்தானால் முடியுமா என்பது பற்றி இன்றைய நிலையில் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நாம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிகளாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நான் சொல்லுவது அபாயகரமாக இருந்தாலும் கூட சமுதாய இழிவோடு இருப்பதைவிட, அது ஒழிய போராட்டத்திற்கு ஆளாகி இறந்துபோவது நல்லது என்று கருதுகிறேன். (விடுதலை, 23.10.1968)

எனப் பெரியார் அவருக்கேயுள்ள துணிச்சலுடன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

1968 டிசம்பர் 11 அன்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற மேயர் வேலூர் நாராயணன் அவர்கள் பிறந்த நாளில் பெரியார் ஈவெரா அவர்கள் பேசிய பேச்சு குறிப்பிடத்தக்கது. இது முழுவதும் விடுதலை (15.12.1968) இதழில் வெளிவந்துள்ளது. இதற்குப் பின்னணியாக இருந்த சில விஷயங்களை நாம் புரிந்துகொள்வது நல்லது.

தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வேலூர் நாராயணன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் சென்னை நகரமெங்கும் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலைகளில் அமைந்திருந்த நடைபாதைக் கோயில்களை நீக்கினார். இதற்குப் பார்ப்பனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. பார்ப்பன இதழ்களெல்லாம் கண்டித்து எழுதின. பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மேயரின் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரித்து வந்தார். 1967 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க அரசையும் பெரியார் ஆதரித்து வந்ததை நாம் அறிவோம்.

இச்சூழலில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு ஏற்பட்டது. சத்திய வாணி முத்து அம்மையாரின் மகனுக்கும் மேயர் நாராயணன் அவர்களின் மகளுக்கும் இடையே திருமண விருப்பம் இருப்பதை அறிந்தே மேயர் அம்மையாரைப் பற்றி ஜாதி சொல்லி இழிவு செய்ததாக ஒரு பேச்சு. இது ஒரு பிரச்சினையாக எழுந்த சூழலில்தான் தனது பிறந்த நாள் விழாவில் பெரியாரை அழைத்துச் சிறப்புரையாற்றச் சொல்கிறார் நாராயணன். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களை இழிவு செய்ததாக தி.மு.கவினர் போஸ்டர் பிரச்சாரம் செய்ததை எல்லாம் அப்பேச்சில் நினைவுகூர்கிறார் பெரியார். அவரது பேச்சிலிருந்து சில முக்கியப் பகுதிகள்:

அவர் (வேலூர் நாராயணன்) அப்படிச் சொல்லியிருக்கமாட்டார். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லியிருக்கமாட்டார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் நான் கேட்கிறேன். மன்னிப்புக் கேட்கச் சொல்கிறேன்.

பறையன் என்றால் என்ன? பறையடிக்கிறவன் பறையன். பறையன் என்று சொல்லக்கூடாது என ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டத்தகாதவர்களுக்குத் தனியாகப் பள்ளிக்கூடம், தனியாகக் கோயில், தனியாகக் கிணறு வெட்டுவதற்காக ரூ.55,000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன். நான் அதை அதற்காகச் செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்களெல்லாம் செலவழித்துத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக் கேணி, கோயில், பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன். நாம் அவர்களுக்கு இவையெல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதாக இருந்தாலும் தீண்டாமை ஒழியாது, அதற்குப் பதில் பறையன் கோயில், பறையன் கேணி, பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்கும் கேணிகளில் அவர்களும் தண்ணீர் எடுக்க வேண்டும். நாம் படிக்கும் பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்கவேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்.

நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காகச் சொன்னது தான். எலெக்ஷன் நேரத்திலே இப்படியெல்லாம் சொல்வது சாதாரணம்.

இந்த இடத்தில், பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவதாக ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று கூறி நோட்டீஸ் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கும் கட்சிக்கு ஓட்டுப் போடாதே எனக் கூறியதை நினைவுகூர்ந்த பெரியார், அப்படி அவர்களின் ரவிக்கை போடுவதை பெருமைக்குரிய மாற்றமாகவே தான் கூறியதை விளக்கினார். தொடர்ந்து, ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைபேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொருத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிடப் பறையனாக இருப்பதைப் பெருமையாகவே கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. பிள்ளை இல்லை என்பது பற்றி ரொம்பச் சந்தோஷப்படுகிறேன். ஒரு சமயம் பிள்ளையிருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லிவிடுவேன். இது போல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்துக் காதல் செய் என்று சொல்லி விடுவேன். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா அவர்கள் (திரு.வேலூர் நாராயணன்) அப்படிக் கருதியிருப்பாரானால் அவர் முன்னேற்றக் கழகத்திலே இருப்பதற்கே லாயக்கற்றவர்தான். அவர்களைப் பார்த்துப் பறையர் என்று சொல்லிவிட்டோம். அவர்களிலே வைப்பாட்டி மகன் இல்லை. நம்மில் தான் வைப்பாட்டி மகன் என்பது. நாம் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் நாட்டில் இரண்டே ஜாதிதான் இருக்கிறது. ஒன்று பார்ப்பான். மற்றது சூத்திரன். இதைத்தான் ஒழிக்க வேண்டும். இது ஒழியாமல் பார்ப்பதற்காகத்தான் பார்ப்பான், செட்டி, முதலி, நாயக்கன், கவுண்டன், படையாட்சி என நமக்குள் பல ஜாதிகளைப் பிரித்து, அதில் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு கற்பித்து நம்மை ஒன்று சேரவிடாமல் பிரித்துவைத்திருக்கின்றான்.

நாம் தமிழர்கள், சூத்திரர்கள் அல்ல. இந்துக்கள் அல்ல என்கிற உணர்ச்சி நம் மக்களுக்கு வரவேண்டும். இன்றைய தினம் இந்தப் பேச்சுப் பேசியதற்கு அம்மையாரிடம், அய்யா மேயர் அவர்களிடமிருக்கிற அன்பைவிட அதிகமாக அன்பு கொண்டிருக்கிறேன். அம்மையாரும் பெருமைமிகு மேயரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். நமக்குள் இதெல்லாம் இருக்கக்கூடாது (விடுதலை, டிசம்பர் 15, 1968)

இப்படி ஏராளமான தகவல்களை நாம் மறுவாசிப்பு செய்யவேண்டி இருக்கிறது. 1968ஆம் ஆண்டு விடுதலையின் இறுதி சில இதழ்களை மேலோட்டமாக புரட்டியபோது கிடைத்தத் தகவல்களே இவை இந்த ஆண்டில் தான் (டிசம்பர் 25) வெண்மணி கொடுமை நிகழ்ந்தது. டிசம்பர் 29, 1968 ‘விடுதலை’ இதழில் ‘‘இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை ஜனநாயகத்தால் ஏற்பட்ட பெருங்கேடு’’!! என முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தியில் இக்கொடுமை கண்டிக்கப்பட்டது. இத்தகைய கொடுமைகளைத் தடுக்க இயலாமற்போன இந்திய அரசியல் சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றையும் நிலவும் குற்றத் தடுப்புச் சட்டங்களின் போதாமையும் நீதிமன்றங்களையும் பெரியார் கண்டிக்கிறார். மனுதர்ம ஆட்சி ஒழிந்து மனித தர்ம ஆட்சி வேண்டும் என்கிறார். இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு அரச நாயகம் ஏற்பட வேண்டும் என்று கூறிய பெரியார், தனித் தமிழ்நாடு உருவாதல், மீண்டும் நாட்டை அந்நிய ஆட்சியின்கீழ் கொண்டுவருதல், இருகட்சி ஆட்சிமுறை எனப் பல மாற்றங்களை முன்வைத்து இறுதியாக,

நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும். ‘தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ - ஜான்சன் என முடிக்கிறார் (‘விடுதலை’, 29.12.1968)

‘அறிவுக்கொடி’ பிப்ரவரி 2006

(தொடரும்)

 -  உண்மை இதழ், 1-15.5.19