செவ்வாய், 21 மே, 2019

சுயமரியாதை சுடரொளி : அன்னை நாகம்மையாரும் சுயமரியாதை இயக்கமும்


முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


பெரியாரின் வாழ்வில் நாகம்மையாரின் பங்கு நினைத்துப் போற்றுதற்குரியது. நம்மில் பலர் அரியாத காலத்தது. நாம் அறிந்துகொள்ள வேண்டியதில் அன்னை நாகம்மையாரின் வாழ்க்கை வரலாறு என்றாலும் சரி, அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாறு என்றாலும் சரி, இருவரின் வாழ்க்கை வரலாறும் தனிப்பட்ட இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறு அன்று. அது பெரியாரின் வாழ்க்கை வரலாறு. திராவிட இயக்கத்தின் வரலாறு. இரண்டு பெண்மணிகளும் -_ துணைவியர் ஆயினும் சமுகத் தொண்டாற்றிய ஒரு மாபெரும் தலைவரின் தொண்டர்கள். இன்னும் சொல்லப்போனால் _ அடிமைகள். அவரால் ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அவருடைய தொண்டுக்குத் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டவர்கள்.

தாய் அளித்த விருந்தோம்பல்

இயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்டவர் அன்னை நாகம்மையார் என்று சாத்தான்குளம் ராகவன் என்னிடம் 40 ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்துகொண்டது நினைவில் நிழலாடுகிறது. “நான், மாயவரம் நடராசன் எல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்போம் பெரியார் இல்லத்தில். அம்மா அன்பொழுகப் பரிமாறுவார்கள். அப்பொழுது பெரியார், கையில் கடை சாவியை எடுத்துக்கொண்டு எங்களைப் பார்த்துக்கொண்டு செல்வார். அம்மாவின் பிள்ளைகளாதலால் அவரோடு முரண்டு பிடித்திருந்தாலும் அய்யாவின் வீட்டில்தான் உணவு.’’

அக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமளித்து, பிறகு அவர்கள் விரும்பும் ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்துச் சில நாள்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு திரும்புவார் என்றால் அந்தத் தாயுள்ளம் யாருக்கு வரும்?

சாமி சிதம்பரனார் திருமணச் செய்தி ஒரு சான்று.

சுயமரியாதை இயக்க வளர்ச்சியில் அன்னையார்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வரலாற்றை வரைவோர் அன்னை நாகம்மையாரின் பங்களிப்பைக் குறிப்பிடத் தவறிவிடுகின்றனர். தந்தை பெரியாருடன் தன்மான இயக்கம் கண்ட காலத்தில் கூட உடனுழைத்தவரும், அய்யாவுடன் ரஷ்யநாடு சென்ற வந்தவருமான எஸ்.ராமநாதன் எழுதியவை இவை:

“அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்க வெற்றிக்குக் காரணமாகும். மூடக் கொள்கைகளினின்று மக்களை விடுவிக்கும் பொருட்டு அவர், தமிழ்நாடு, கேரளம், மலாய் ஆகிய இடங்களில் உள்ள எல்லா ஜில்லாக்களிலும் -சுற்றுப் பிரயாணம் செய்திருக்கிறார். அவர் ஒரு பிரசங்கியல்ல; ஆனால் அவர் பிரசன்னமாயிருக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்கள் தீவிரமாகக் கலந்துகொள்வார்கள். அவர் எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். அவருக்கு மகப்பேறு இல்லை; ஆனால் பொதுஜன நன்மைக்காக வேலை செய்து எல்லா இளைஞர்களையும், பெண்களையும் தம் சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரியங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார்.

ஆக, சுயமரியாதை இயக்கம் வெற்றி பெறுவதற்கும். அதில் ஏராளமான பெண்கள் தாராளமாய்க் கலந்து கொள்வதற்கும் அன்னை நாகம்மையாரே காரணமாவார். பெரியாரையும், அன்னையையும் மனிதத் தன்மையற்ற முறையில் திட்டிக் கடிதங்கள் பல வரும். இருவரையும் பொதுக்கூட்டங்களில் கொலை செய்து விடுவதாகக்கூட, மிரட்டல் வரும். கடிதங்கள் வரும். அய்யா ஆண் பிள்ளை; அஞ்சமாட்டார் என்றால், அம்மா அவரைவிட ஒருபடி மேல். எதற்கும், எந்த மிரட்டலுக்-கும் அஞ்சுவதில்லை.

சிங்கப்பூர் ஏட்டின் தலையங்கம்

“சிங்கப்பூர் முன்னேற்றம்’’ எனும் ஏடு எழுதிய தலையங்கத்தில் “ஈரோட்டு ராமன் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் உலகப் புகழ்பெற்று, நாளை உலக இயக்கமாக மாறப் போவதற்கும் உறுதுணையாய் நின்றது அன்னை நாகம்மாளன்றோ!

இயக்கம் காரணமாய் அருமையான உற்றார், பெற்றோர்களையும், உறவின் முறையார்களையும் இழந்த இளைஞர்களுக்கெல்லாம் அறுசுவை உண்டி அன்புடன் அளித்து ஆதரித்தது அன்னை நாகம்மாளன்றோ! காளையர்க்கும், கன்னியர்க்கும் கலங்காது ஊக்கமளித்தது அன்னை நாகம்மாளன்றோ!’’ என்று குறிப்பிட்டது.

அன்னையார் நாவன்மை பெற்றவர் இல்லை. படித்தவர் இல்லை. ஆயினும் அவரிடம் நிறைந்திருந்த தர்க்க சாமர்த்தியமும், விஷய விளக்கமும், திடசித்தமும், அன்பும், அருளும் பலரையும் தலைவணங்கச் செய்தது.

‘குடிஅரசு’ பதிப்பாளர்

சுயமரியாதை இயக்கத் தலைமைப் பத்திரிகையான ‘குடிஅரசு’ 09.01.1927 முதல் அன்னையின் பெயரால் வெளிவந்தது. அதில் வெறும் புகழுக்காக ஒப்புக்காக அவர் பெயர் இடம் பெறவில்லை. அன்னை அவர்களின் உயிரும் உடலுமே ‘குடிஅரசு’ பத்திரிகை எனலாம். 1929ஆம் ஆண்டு குடிஅரசைச் சென்னைக்கு மாற்றும்பொழுது தம் உயிரையே கொள்ளை கொடுத்துவிட்டதாக அன்னையார் பரிதவித்தார். அன்னையின் விருப்பப்படியே ‘குடிஅரசு’ சென்னையில் வெகுநாள் நிலைத்திடாமல் மீண்டும் ஈரோட்டிற்கு வந்தது. அன்னைக்குப் படிப்பில்லை. ஆனால் பிறரைப் பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். ‘குடிஅரசு’ சிறப்புற்று விளங்க வேண்டும் என்பது அன்னையின் மிகுந்த அவா. அதனால் அன்னை ‘குடிஅரசு’க்காக அறிக்கை விடத் தவறவில்லை.

நாகம்மையாரின் அறிக்கை

24.04.1932இல் “ஈ.வெ.ரா. நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’’ எனும் பெயரில் வெளியிட்ட அறிக்கை இது.

“நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்தின் பொருட்டு புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன. இந்த நான்கு மாதங்களாக நமது குடிஅரசுக்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட்செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப் போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.’’

அன்னையின் மலாய் நாட்டுப் பயணம்

‘சிங்கப்பூர் தமிழ் முரசு’ அன்னையின் மலாய் நாட்டு வருகை குறித்து எழுதியவை இவை:

“அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்-கு “நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள்’’ என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்றும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று எழுதியது.

ஆனால், 1931இல் அய்யா மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் செய்தபோது அன்னையை அழைத்துச் செல்லாதது உடல்நலிவை ஏற்படுத்தியது. ஆயினும் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தையும், குடிஅரசு பத்திரிகையையும் தளர்வின்றி நடத்தினார். பெரியார் சுற்றுப் பயணத்திலிருந்த சுமார் பத்து மாதங்களும் சுயமரியாதை இயக்கமானது அதற்கு முன்செய்த வேலையைவிட அதிகம் வேலை செய்தது. இதற்குக் காரணம் நாகம்மையார் அவர்கள் இயக்கத் தோழர்களுக்கு அளித்த உற்சாகம்.

“நாகம்மாளுக்குக் காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருஷ காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கியக் காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது. மூன்றாவதாக நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்கு ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்கு ‘கூற்றா’கின்றது என்றால் இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவிற்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன்’’ என்றே அய்யா எழுதினார்.

பெரியாரின் வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றிலும் ஒத்துழைத்து அன்னையார் வெற்றியளித்தார்கள்.

நாகம்மையார் ஒரு வாரகாலம் உடல்நிலை சரியில்லாது ஈரோடு லண்டன் மிஷன் மருத்துவமனையில் டாக்டர் போலோரிட் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். நாகம்மையாரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தவர்களில் ஆர்.கே.சண்முகம், இரத்தினசபாபதி, முருகேச முதலியார் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆயினும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனி தாங்காது எனும் நிலையில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசியில் செய்யக்கூடிய சிகிச்சைகளைச் செய்து பார்த்தும் இரவு 7.45 மணிக்க அன்னையாரின் உயிர் உடல் கூட்டிலிருந்து பிரிந்தது.

- உண்மை இதழ், 1-15.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக