திங்கள், 11 ஜூன், 2018

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு

04.01.1931 - குடிஅரசிலிருந்து...

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்ததாகும்.  அந்தப்படி இவ்வருஷம் மார்ச் மாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.  ராமநாதபுரம் ஜில்லாவில் மகாநாடு நடத்துவதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம்.  ஏனெனில், ரயில் போக்குவரத்து சவுகரியமும், உற்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதைவீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்யஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி முதலிய இடங்களுக்கும் அருப்புக்கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்யபாகமாகவும் இருப்பதாகும்.

ஆகவே, இந்த வருஷம் மாகாண மகாநாடு விருதுநகரில் நடைபெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம்.  மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள் செந்தில் குமார நாடார், வி.வி. ராமசாமி முதலியவர்களும் மற்றும் பல காரியங்களுக்கு திருவாளர் அருப்புக்கோட்டை கோபாலகிருஷ்ணசாமி நாயக்கர், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், முருகப்பா முதலியவர்களும் பிரதானமாக இருந்து துவக்கப்பட்டால் மகாநாடு கண்டிப்பாய் இதுவரை நடந்து வந்ததைப்பார்க்கிலும் விசேஷமாக நடைபெறக்கூடும் என்பதில் நமக்கு எவ்வித அய்யமுமில்லை.

தலைவர் ஸ்தானத்திற்கு சென்ற வருஷம் போலவே வட நாட்டிலிருந்து ஒரு பெரும் சீர்திருத்தவாதியாகவும், தலைகீழ் கிளர்ச்சிக்காரராகவும் பார்த்து ஒரு கனவானை திரு. ஆர்.கே. சண்முகம் அவர்கள் தயவால் அழைத்து வரலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது.  இம்மகாநாட்டில் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாகவும், அமலில் நடத்த வேண்டியதாகவும் இருப்பதால் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாவரும் தவறாமல் பங்கு எடுத்து உழைத்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதவசியமாகும்.  தண்ணீர் சௌகரியத்தை உத்தேசித்து அதே சமயத்தில் வேறு பல மகாநாடுகளும், 3,4 நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாய் தெரியவருகிறது.  விருதுநகர் கனவான்கள் சுலபத்தில் ஒரு காரியத்தில் தலையிடமாட்டார்கள் என்பதும், தலையிட்டுவிட்டால் அவர்களைப் போல எடுத்துக் கொண்ட காரியங்களை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் முடிப்பவர்கள் அரிது என்பதையும் நாம் தமிழ் நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.  இதை உத்தேசித்தே மேற்கொண்ட காரியங்களைப் பற்றி யோசிக்க ஈரோட்டில் இம்மாதம் கடைசி வாரத்தில் நிர்வாக கமிட்டி மீட்டிங்கை தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

- விடுதலை நாளேடு, 9.6.18

1 கருத்து: