திங்கள், 11 ஜூன், 2018

கி.வீரமணி எதிர்கொண்ட அறைகூவல்கள்

அரசியல்வாதிகள் அன்றாடம் எதிர்கொள் ளும் அறைகூவல் இயல்பானது. ஆனால் சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் _அதாவது சவால்கள் அப்படியல்ல; வேறு பாடானவை.

தந்தை பெரியார் என்னும் மாபெரும் சமூக அறிவியலார் எதிர்கொண்ட சந்தித்த அறைகூவல் களை அவருடைய அடித்தோன்றல் அண்ணாவோ, அண்ணாவின் அரசியல் வாரிசு கலைஞரோ சந்திக்கவில்லை எனலாம். ஆனால்,
அந்தவகையில் தந்தை பெரியாரின் அடியொற் றியே நடைபோடும் அவருடைய இயக்க வழித் தோன்றல் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்திக்க நேர்ந்தது இயற்கையான வியப்பின் வெளிச்சக்குறி. ஆம்! தந்தை பெரியார் என்னென்ன போராட்டங் களை_போர்க்களங்களைச் சந்தித்தாரோ அவற்றை யெல்லாம் ஆசிரியர் ஒவ்வொன்றாக அவருடைய எண்பது அகவைக்குள் சந்தித்து வருகிறார், சந்தித்து வருகிறார்.

அர்னால்டு டாயின்பீ

இதற்குக் காரணம் என்ன? என்று சிந்திக்கையில் அர்னால்டு டாயின்பீ என்னும் மேலைநாட்டு வரலாற்று அறிஞர் எழுதிய ‘History of Civilization’ என்னும் நூலில் எடுத்துக்காட்டும் வரலாற்றுத் தத்துவம் நம்முன் நிற்கிறது. அது இதுதான்:

அறைகூவலும் எதிர்கொள்ளலும்

உலக நாகரிகங்களின் நீண்ட, நெடிய வரலாற்றை ஆய்வு செய்து அவர் எழுதிய கோட்பாடு ‘Challenge and Response’ என்பதாகும். அதாவது அறைகூவலும் எதிர்கொள்ளலும் என்பதாகும். அக்கோட்பாட் டின்படி அறைகூவல் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதனை எதிர்கொள்ளலும் அதிகமாகிறது.

சுருக்கமாகச் சொல்வதாயின் எதிர்ப்புகள் வலிமை அதிக வலிமை பெறும் அளவிற்கு அவற்றை எதிர்கொள்ளல் வலிமை பெறுகிறது. இதனை ஆசிரியரின் எண்பதாண்டுக்கால வாழ்வில் நாம் தொடர்ந்து காண்கிறோம்.

வாழ்க்கையே அறைகூவல்

ஆசிரியர் வாழ்க்கை என்பது ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை. இதுபோல் ஒளிவு மறைவில்லாத ஒரு வாழ்க்கையுடைய தலைவர் எவரேனும் இருக்கிறாரா என்று தேடிப்பார்த்தபோது அதிலும் பெரியார்தான் அவருக்கு முன் நிற்கிறார், வழிகாட்டுகிறார். அவருடைய குடும்பம் ஒன்றும் மிட்டா _ மிராசுதார் குடும்பம் அல்ல. எளிய குடும்பம்தான்.

இதைப் பெரியாரே விடுதலை (6-.6.1964) தலையங்கத்தில் எழுதியிருக்கிறார்.

பெரியார் வாய்மொழி

பெரியார் அய்யா சொல்கிறார் பெருமை பொங்க: அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்தநிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல் மற்றொருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகரா கவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன் படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன்.

அய்யாவின் அறைகூவல்

ஆகக் கல்வி கற்பதிலிருந்து வாழ்க்கையை எதிர் நீச்சல் போட்டு, அதில் முன்னணியில் பொற்பதக்கம் பெற்றுத் தேர்வில் வெற்றி பெற்றுச் சட்டக் கல்வியி லும் முன்னணி நிலை வகித்து, சட்டத் தொழிலிலும் கடலூரில் முன்னணி நிலை வகித்தவருக்கு முதல் அறைகூவல் அவரை உருவாக்கிய பெரியார் ஒப்படைத்த விடுதலை ஏட்டைத் தூக்கி நிறுத்துவதில் தொடங்குகிறது. அந்த அறைகூவல் பெரியார் விடுத்த அறைகூவல், அய்ம்பதாண்டுக் கால அறைகூவல். அதை வெற்றிகொண்ட மாமனிதர் என்பதால் முதலில் தலைவணங்குகிறோம்.

அம்மாவின் அறைகூவல்

இயக்கப் பேச்சாளர் என்ற அளவில் மட்டும் தெரிந்து வைத்திருந்த அம்மா அன்னை மணியம் மையார் ஒரு பெறாத பிள்ளையாகக் கருதியதோடு, அள்ள அள்ளக் குறையாத அன்பையும், பாசத்தை யும் _ சிலர் பொறாமைப்படும் அளவிற்குக்கொட்டிய அம்மா அவர்களின் சொற்கள் ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட ஆணைகள் மட்டுமல்ல _ அறைகூவல்களும் கூட என்பேன்.

வீரமணி என்னைவிட அம்மா சொன்னால்தான் தட்டாமல் கேட்பான் என்று பெரியார் அய்யாவே சொல்லுமள விற்குரிய அந்த அன்னை விடுத்த அறைகூவல் 22.12.1977ல் வந்தது. எப்படி?

22.12.1977ல் திடீர் நெஞ்சு வலிக்கு ஆளான அன்னை மணியம்மையார் சென்னை பொதுமருத் துவமனையில் இருதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர். 25.12.1977 காலை 11 மணிக்குத் திராவிடர் கழக மய்ய நிருவாகக் குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் அறிவிக்கப்பட்டு இருந்தபோது, மருத்துவர்களின் இசைவோடும், மருத்துவர்களின் துணையோடும் வருகை தந்து, தலைமை தாங்கி சிறிதுநேரம் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றியவர், தாம் எழுதி வைத்திருந்த குறிப்பினை, தாம் கழகப் பொறுப்பி லிருந்து விலகுவதாகவும், ஆசிரியர் வீரமணி அப்பொறுப்புகளை ஏற்று கழகத்தை நடத்த வேண்டும் என்று படித்தபோது, அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து, தலைமையிலிருந்து அன்னையார் விலகல் என்னும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக உரையாற்றி அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்த துணிவு, ஓர் அறைகூவலுக்கான பதில். அதனால் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் எண் 10 அன்னையார் அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஒப்புதல் தர நிறைவேறியது என்பது திராவிடர் கழக வரலாறு காட்டும் அறைகூவல்தான்.

அன்றும் என்றும் தலைமைப் பதவிக்குத் தாவிஓடாத, தாவிப்பிடித்து விடவேண்டும் என்னும் தணியாத ஆர்வம் ஏதும் இல்லாத போக்கு, இதற்கெல்லாம் காரணம் இவருக்கு மாறாத மனிதநேயம், மறையாத தன்னல மறுப்பு இவற்றைக் கற்றுத் தந்தவர் நம் தலைவர் தந்தை பெரியார் என்பதுதான்.

விடுதலைக்கு அறைகூவல்

விடுதலையின் வளர்ச்சி என்பது ஒரு மாபெரும் அறைகூவல். விடுதலை என்பது வெறும் ஏடு அல்ல. விடுதலை என்பது பெரியார் ஒப்படைத்த மாபெரும் அறிவாயுதம் என்பதை உணர்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் ஆசிரியர் ஒருவர்தான். ஏனென்றால் விடுதலையின் வளர்ச்சிதான் நம் இனத்தின் எழுச்சி; அது இல்லையேல் நம் இன வீழ்ச்சி என்பதை உணர்ந்து வாழ்நாள் முழுமையும் விடுதலையை நாடெல்லாம், தமிழர் வீடெல்லாம் கொண்டு சேர்க்க எத்தகைய அறைகூவல்களையும் எதிர்கொண்டவர் அவர். இனமான எதிரிகள் நெருக்கடி காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளைத் தூள் தூளாக்கியவர் என்றும் கூறவேண்டும்.

சிறைக் கூவல்கள்

ஒரு சமூகப் புரட்சியாளரின் முன்னணித் தொண்டர் வாழ்வின் எண்பதாண்டுக் காலத்தில் தமிழர் நலன்களுக்காகச் சமூக நீதிக்காகவே போராட்டக் களத்தில் முன் நின்றிருக்கிறார் என்பது பெருமை. அதில் அய்ம்பதுக்கு மேற்பட்ட முறைகள் அரசின் கைதுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது பெருமைமிகு வரலாறு.

1956இல் முதன்முதலாக ராமன் பட எரிப்பில் கைதான வரலாறு _ 2012 வரை தொடர்கிறது. கைதுக்கு முற்றுப்புள்ளி இல்லை, இக்கழகத் தலைவருக்கு. கடைசியாகக் களம் கண்டது நெய்வேலியில் _ கைதானது நெய்வேலியில் _ அதுவும் தம்வாழ்விணையர் திருமதி மோகனா வீரமணி அவர்களையும் களத்தில் சேர்த்துக் கொண்ட பெருமைமிகு வரலாறு வேறு எவருக்கு வாய்க்கும்?

நெய்வேலி நிலக்கரிக்கும், நரிமணம் பெட்ரோ லுக்கும் ராயல்டி கேட்டுப் போராடி வென்ற அத்தலைவர், காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா விற்கு, தமிழ் உழவர் வயிறு காயக் கழுத்தறுப்புச் செய்யும் கர்நாடகத்திற்குக் கடிவாளம் போடக் களமாக, நெய்வேலியைத் தேர்ந்தெடுத்து 15.10.2012இல் வாழ்விணையரோடு போராட்டக் களத்தில் அறைகூவலைச் சந்தித்துத் தொண்டரோடு தொண்டராய் எளிய உணவு உண்டு ஓர் அறைகூவலை எதிர்கொண்டார்.
காலையில் கைதாகி மாலையில் விடுதலை ஆகாமல் காராக்கிரகக் கம்பிகளுக்குள் இருந்த சோதனை நாட்களும் உண்டு. அதில் சோதனை மிகுந்த சிறை வாழ்க்கையை எவ்விதப் போராட்டங் களும் தவறுகளும், குற்றங்களும் இழைத்திடாது, சுயமரியாதை வீரராய் வாழ்ந்ததற்காகவே மிசாக் கைதியாக 3.1.1976 முதல் 23.1.1977 வரை ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்த கொடுமையான அனுப வமும் மறக்க முடியாத, மறுக்க முடியாத அறை கூவல். அதைப்பற்றிக் கேள்விப்படுவோர் நெஞ்சம் நடுங்கும், வேதனைத் தீயில் மூழ்கித் திளைக்கும் _ காரணமானவர் மீது வெறுப்பு அகலவிடாது.

அடுத்த சிறை வாழ்வு 22.3.1979 முதல் 4.4.1979 வரை சென்னை மய்யச் சிறையில். அன்னை நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தானக் கவியை எதிர்த்த அறப்போராட்டம் அளித்த பரிசாகும்.

காவிரி நீருக்கு இன்று மட்டுமல்ல, 27 ஆண்டுகளுக்கு முன்னே போராடிச் சிறைப்பட்டவர் ஆசிரியர். திருவாரூர் வட்ட ஆட்சியர் முன் மறியல் செய்து திருச்சி சிறையில் 30.10.1985 முதல் இருந்தார்.

1986ல் புதிய கல்வித் திட்ட நகலை எரித்ததால் 22.6.1986 முதல் 4.7.1986 வரை மீண்டும் சென்னை மய்யச் சிறை வரவேற்றது. நல்லவேளை மிசாக் கொடுமை அரங்கேறிடவில்லை இப்போது என்பது நமக்கெல்லாம் ஆறுதல்.
சென்னைத் தொலைக்காட்சி, தொல்லைக் காட்சியாகத் தமிழர் வாழ்வில் பலமுறை விளங்கியதுபோல. ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்ய, அதனை முறியடிக்கத் தொடர்வண்டி மறியல் மேற்கொண்டு 26.10.1987 முதல் 4.11.1987 வரை சென்னை மய்யச் சிறையில்.

இதையடுத்துப் பதினைந்து நாள் சிறைவாழ்வு ஏகியது வேலூரில். சமூகநீதிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொடும்பாவி எரித்துச் சென்னையில் கைது செய்து வேலூரில் 15 நாள் சிறை வைத்தனர்.

இவ்வாறு சிறை சென்று சமூக நீதிக்-கு எதிரான எந்த அறைகூவலையும் எதிர்கொள்ளத் தயங்கியதில்லை.

அறக்கட்டளைக்கு அறைகூவல்

1952இல் தந்தை பெரியார் உருவாக்கிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளை துரோகிகள், எதிரிகள் கண்களை உறுத்தியது. இன்றைக்குப் பெருமையாகப் பெரியார் திடல் செல்கிறோம் என்று கூறுகிறோமே அந்தத் திடல் உள்ளிட்ட அறக்கட்டளைக்கு _ அய்யா காலத்தில் தொடங்கி, அன்னையார் காலத்தில் முடிந்து, ஆசிரியர் காலத்தில் தொடர்ந்த வருமானவரி வழக்கு _ ரூ. 80 லட்சம் வருமான வரி என்று வளர்ந்தது வேறு. அறக்கட்டளைக்கு ஏற்பட்ட அறைகூவலை வீரமணி அவர்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்று 80 ஜி எனும் நன்கொடை வரிவிலக்குப் பெற்றதும் பெருமைமிகு அரிய சாதனை மட்டுமல்ல _ அறைகூவல்களுக்கு எதிர்கூவலாகும்.

எம்.ஜி.ஆர் அறைகூவலும் ஈர்ப்பும்

எதிலும், எப்போதும் வெற்றி என்றே கூறப்பட்ட எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானபோது தவறான அணுகுமுறை ஒன்றை மேற்கொண்டார். இடஒதுக்கீட்டிலே வருமான வரம்பு எனும் அளவுகோலைத் திணித்து 2.7.1979இல் அரசாணை பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து முதல் அறிக்கை விட்டவர் வீரமணி. (3.7.79) வெறும் அறிக்கை வீரரல்லர் அவர் என்பதால் 4.7.79இல் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம். 14.7.1979இல் சேலத்திலும், சென்னையில் 22.7.1979லும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகாப்பு மாநாடு, தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம், 26.11.1979ல் வருமான வரம்பு அளவுகோல் ஆணை தீயிட்டுப் பொசுக்கல் என்று வரிசையாக நிகழ்வுகள் நடந்ததன் விளைவு, தோல்வி காணாத எம்.ஜி.ஆரின் கட்சி 1980 ஜனவரியில் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

எனது ஆட்சி இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்று வீரமணி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து நம்ப வைத்தார் என்று எம்.ஜி.ஆர். ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததோடு 21.1.1980ல் அனைத்துக் கட்சி  கூட்டத்தைக் கூட்டி அதில்  வீரமணி அவர்களே பேசினால் போதும் என்று கூறி 45 நிமிடம் அவர் விளக்கிப் பேச 21.1.1980ல் அரசாணையை எம்.ஜி.ஆர் அரசு திரும்பப் பெற்றது எம்.ஜி.ஆரின் அறைகூவலை எதிர்கொண்ட வரலாறு.

எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை

எம்.ஜி.ஆர். அரசு, அரசாணையைத் திரும்பப் பெற்றது என்று மட்டும் முடித்துக்கொள்ளக் கூடாது. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பின் இயக்கத் தலைமைப் பொறுப்பேற்ற ஆசிரியர், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எவ்விதச் சபலங்களுக்கும் ஆட்படாமல் செய்து முடிப்போம் என்று சூளுரைத்து 14.7.1979ல் சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு நடத்தி அதிலே இடஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். எம்.ஜி.ஆர் 1980 ஜனவரியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தியதையும் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 69 விழுக்காடாக்கியதையும் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை எனவும், அதற்குக் காரணமானவர் ஆசிரியர் வீரமணி என்பதையும் பதிவு செய்வோம்.

அறியாமைச் சேற்றில் அல்பர்கள்

31 சி சட்டத்தை 9ஆவது அட்டவணையில் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியில் சேர்த்திட மேற்கொண்ட முயற்சியையும், அதன் பயனாய்ச் சமூகநீதி காத்த வீராங்கனை என அழைத்ததையும், நன்கு ஆழமாகச் சிந்தித்து அதன் பின்னணியையும் சிறப்பையும் உணராத அற்ப மானிடர் சிலர் அறியாமைச் சேற்றில் விழுந்து இன்றும் நமுட்டாக ஆசிரியரை அறியாமையால் விமரிசிப்பது உண்டு. எனவே எத்தகைய அறைகூவலுக்கு இடையில் 31 சி சட்டம் 9ஆவது அட்டவணையில் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பதை விளக்குவோம்.

இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடு தரக் கூடாதென தடை விதித்திட, தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடு 50ஆகக் குறைத்து 19 விழுக்காடு இழக்கவேண்டிய ஆபத்து உருவாயிற்று. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.என். வெங்கடாசலய்யா, அகர்வால் ஆகியோர் இடைக்காலத் தடை ஆணை விதித்தனர்.

சமூக நீதிக்கு ஆபத்து என்றால் துடித்தெழும் முதல் மாமனிதர் ஆசிரியர் வீரமணிதான். எனவே 1993 செப்டம்பர் முதல் நாள் அந்த ஆணையைக் கொளுத்தினார். இந்தச் சமூக நீதிக்கு ஏற்பட்ட ஆபத்தைக் களைய வழிதேடினார். இந்திய அரசமைப்புச் சட்டம் 31 சி பிரிவின் கீழ் மாநிலச் சட்டப் பேரவை ஒரு சட்டம் நிறைவேற்றி அதற்குக் குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிடும். இது ஒன்றுதான் தீர்வு.

அப்போது ஆட்சியில் இருந்ததோ செல்வி ஜெயலலிதா. இந்தியத் தலைமை அமைச்சரோ பி.வி. நரசிம்மராவ், ஒப்புதல் அளிக்க வேண்டிய குடிஅரசுத் தலைவரோ சங்கர் தயாள் சர்மா. இது நடக்கக் கூடியதா? என்று பலரும் அய்யுற்றனர். ஏனெனில் மேலே குறிப்பிட்ட மூவரும் பார்ப்பனர்.

இந்நிலையில் இந்த அறைகூவலை வீரமணி எதிர்கொண்டு வென்றார் என்றால் அது சாமானியமானதா? அரசின் சட்டத்துறை செய்ய வேண்டிய பணியான சட்டமுன் வரைவை உருவாக்கும் பணியினை _ 31 சி சட்ட வரைவினை உருவாக்குதலை 17.11.1993ல் செய்து முடித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி 26.11.1993ல் அதனை விளக்கினார். ஆசிரியர் வீரமணி எடுத்துரைத்த நியாயத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றார். ஏற்றதோடு 31 சி சட்டமுன்வரைவு 30.12.1993ல் தமிழகச் சட்டப் பேரவையில் அறிமுகம் ஆகியது. குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவரை அதற்கு ஒப்புதல் அளிக்க 7.2.1994ல் தந்திகள் அனுப்புமாறு மக்களை வேண்டினார். 31 சி பிரிவுக்கு குடியரசுத் தலைவர் சங்கர்தயாள்சர்மா ஒப்புதல் வழங்கினார். அதனை 9ஆவது அட்டவணையில் சேர்த்திடப் போராடி வீரமணி அவர்கள் வெற்றிமணி ஆனார். மூன்று முதன்மைப் பொறுப்புகளில் பார்ப்பனர் வகுப்பினர் இருந்த நிலையில் 31 சி சட்டத்தை நிறைவேற்றி 9ஆவது அட்டவணையில் சேர்க்கும் அறைகூவலில் வெற்றி பெற்றார்.

மண்டல்குழு

மண்டல் குழு அறிக்கை கிடப்பில் கிடந்ததற்கு உயிர் கொடுக்க வகை செய்தவர் ஆசிரியர். 25.2.1982ல் தலைமை அமைச்சருக்குத் தந்தி அனுப்பினர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதுடன் அதனை நடைமுறைப் படுத்திட இடைவிடாமல் போராடிய மாவீரர். நடத்திய போராட்டங்கள் மட்டுமே 16. மாநாடுகள் மட்டுமே 42. பத்தாண்டுக் காலம் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், மாநாடுகள், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம், தந்திகள், நேர்முகங்கள், சந்திப்புகள் என்று எத்தனை எத்தனை. 8.8.1990ல் நடைமுறைக்கு மண்டல் அறிக்கை வந்தது நடைமுறையில்.

நெஞ்சில் தைத்தமுள்

1970ஆம் ஆண்டு டிசம்பர் 2இல் நம் தமிழர் தலைவர் பிறந்த நாளில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்றியது கலைஞர் அரசு. ஆனால் பெரியாரின் லட்சியக் கனவு நிறைவேறிடவில்லை. பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படவில்லை. 2006இல் மே மாதம் மீண்டும் கலைஞர் ஆட்சியில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேறியது. இன்றும் ஆதிக்க சக்திகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

கல்வி அறைகூவல்

சமூக மாற்றத்திற்குக் கல்வி முதன்மைக் கருவி என்று முழுமையாக நம்பிய பெரியாரின் வழியில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் வழங்கிய 100 பவுன் தங்கத்தைப் பெரியார் நூற்றாண்டு மகளிர் பல்தொழில் நுட்பப் பள்ளியாக உருவாக்கியவர். கல்வி வரலாற்றில் எதிர்கொண்ட அறைகூவலின் வெற்றிக்கனிதான் தஞ்சைத் தரணியில் தலைநிமிர்ந்து பெரியார் _ மணியம்மையார் பெயர் சொல்லும் தந்தை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்.

தனக்கு ஏற்பட்ட சோதனை

சமூகத்திற்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொண்டு சாதித்த ஆசிரியர். 1982ல், (20.7.1982ல்) இராசபாளையத்தை அடுத்த மம்சாபுரம் புதுப்பட்டியில் பார்ப்பனரால் தூண்டிவிடப்பட்ட சில துரோகிகளால் தாக்கப்பட்டபோதும், 11.4.1985ல் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் எதிரிகளால் கொலைமுயற்சிக்கு ஆளானபோதும், 27.4.1985ல் மீண்டும் கொலை முயற்சிக்கு ஆளானபோதும், 1987இல் சேலம் தம்மம்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் 28.8.87இல் தாக்கப்பட்டபோதும், 2011இல் சென்னையில் விருகம்பாக்கத்தில் தாக்குதல் முயற்சிக்கு ஆளானபோதும் அத்தனை அறைகூவல் களையும் துச்சமென உதறித் தன்பயணத்தைத் தொடர்கிறார்.

இத்தனைக்கும் இரண்டு முறை இருதய நோய்க்கு ஆட்பட்டவர். இந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் தன்நலனுக்கு ஏற்பட்ட அறைகூவல்களை எதிர்த்து நின்று வென்றிருக்கிறார்.

எனவே இவருடைய வாழ்க்கை _ 11 வயதில் தொடங்கியது 69 ஆண்டுகளாகத் தொடர்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பாராட்டுகளையும் அரவணைப்பையும் மிகச் சிறுவயதிலேயே பெற்று வளர்ந்தவர் ஆசிரியர். தலைவர் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகத்தை வலிவோடும் பொலிவோடும் வழிநடத்திச் செல்லுவதில் வல்லவராக, தந்தை பெரியார் அவர்களுக்கு என்றும் பெருமை சேர்க்கும் தளகர்த்தராகத் திகழ்கிறார் என்று கூறி உழைப்பும், தொண்டும் தொடர 75ஆம்  அகவையில் வாழ்த்திய தோடு, அறைகூவல்களை எதிர்த்து நின்று வென்று வீரமணியாகவும், வெற்றிமணியாகவும் விளங்குகிறார் என்பதையும் சேர்த்திட வேண்டும்.

- பேரா.ந.க.மங்களமுருகேசன்

- உண்மை இதழ், 1-15.12.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக