சட்ட எரிப்பு - ஒரு சரித்திரக் காவியம்
கலி. பூங்குன்றன்ரம்
ஒவ்வொரு நாளும் நாட்காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம். சில நாள்கள்தான் நம்மை பிரமிக்கச் செய்கின்றன. வீர வணக்கம் செலுத்தக் கூடிய நாட்களாக அமைகின்றன.
அத்தகு நாள்களில் கம்பீரமாக நம் நினைவில் நிற்கக் கூடிய, வீர வணக்கம் செலுத்தக் கூடிய நாள்தான் நவம்பர் 26. என்ன சிறப்பு? இந்திய அரசமைப்புச் சட்டத் தின் சில பிரிவுகளைக் கொளுத்தச் சொல்லி தந்தை பெரியார் அவர்களால் கட்டளையிடப்பட்ட நாள்! எந்தெந்த பிரிவுகள்?
13(2), 25(1), 26, 29(1)(2) 368 - இந்தப் பிரிவுகள் ஜாதியை மதத்தின் பேரால் கெட்டியாகப் பாது காக்கக் கூடியவை.
ஒரு சுதந்திர நாட்டில் ஜாதியைப் பாதுகாக்கும் இந்தப் பகுதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திர நாட்டில் பிராமணன் - சூத்திரன் என்ற பேதம் ஏன்? பேதத்தை ஒழிப்பது தானே உண்மையான சுதந் திரம்? என்ற வினாவை எழுப்பினார் தந்தை பெரியார்.
தஞ்சையிலே ஜாதி ஒழிப்பு (தனி) மாநாடு கூட்டி, இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் கூடிய அந்த மக்கள் கடலின் முன் ஓர் அறிவிப்பை - தீர்மானத்தைக் கொடுத்தார் அறிவுலக ஆதவனாம் நம் தந்தை பெரியார் (3.11.1957). "15 நாட்கள் வாய்தா தருகிறேன் மத்திய அரசுக்கு. அதற்குள் ஜாதியைப் பாதுகாக்கும் இந்தப் பகுதிகளை நீக்க வேண்டும். இல்லையேல் பட்டப் பகலில் முன் கூட்டியே அறிவித்து விட்டு ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் - இந்தப் பகுதிகள் கொளுத்தப்படும்" என்று அறிவித்தார்.
உலகில் அதுவரை எவரும் கேள்விப்படாத அறிவிப்பு அது. நாடே கிடுகிடுத்தது - அக்கிர காரம் அலறியது. ஆரிய ஏடுகள் ஆத்திர நெருப்பை அள்ளி வீசின.
நேரு தலைமையில் அமைந்த மத்திய அரசு என்ன செய்தது? ஒரு மாபெரும் மாநாட்டில், இலட்சக்கணக்காக கூடிய மக்கள் சமுத்திரத்தின் முன் - பெருமையும் சீலமும் மிகுந்த மாபெரும் தலைவர் - தந்தை என்று ஓர் இனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் தலைமையிலே நடைபெற்ற மிகப் பெரிய மாநாட்டில் ஒரு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது என்றால் - நடப் பது மக்களாட்சி என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? அமைச்சரவையைக் கூட்டிப் பரிசீலனை செய்திருக்க வேண்டுமல்லவா?
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நியாயம் குறித்து அலசி ஆராய்ந்திருக்க வேண்டாமா?
மாறாக அவர்களின் புத்தி எங்கே போய் மேய்ந்ததாம்? சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று ஆய்வு செய்தார்கள்.
என்ன வேடிக்கை தெரியுமா தோழர்களே? சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லை.
இப்படி ஒரு தலைவர் வருவார் - இப்படி யொரு அறிவிப்பைக் கொடுப்பார் என்று எவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் போலும்.
சென்னை மாநில சட்டப் பேரவையில் அவசர அவசரமாக ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அது குறித்துத் தந்தை பெரியார் கலங்க வில்லை. கருஞ்சட்டைத் தோழர்களும் பின் வாங்கவும் இல்லை.
அதுகுறித்துத் தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
"மூன்று ஆண்டுக்கோ,
பத்து ஆண்டுக்கோ,
நாடு கடத்தலுக்கோ, தூக்குத் தண்டனைக்கோ, ஆளாக்கப்பட்டாலும் மற்றும், பிரிட்டிஷ் காரன், காங்கிரசுக் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்த விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம்மீதும், கழகத்தின்மீதும் பிரயோ கித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ, மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
கழகத் தோழர்களே! தீவிர இலட்சிய வாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்துப் பயந்து விட்டதாகப் பெயர் வாங்காதீர்கள்! ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் (விருப்பப்பட்டவர்கள்) தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற - பெயர் கொடுங்கள்!"
- ஈ.வெ.ரா. (விடுதலை', 11.11.1957)
போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் தோழர்களின் பட்டியல் 'விடுதலை'யில் வந்து கொண்டே இருந் தது. குடும்பம் குடும்பமாக போட்டிப் போட்டுக் கொண்டு பட்டியலில் இடம் பிடிக்க முயன்றனர்.
'விடுதலை'யிலே ஒரு பெட்டிச் செய்தி வந்தது அது என்ன தெரியுமா?
சட்டத்தைக் கொளுத்துங்கள்! சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!
"சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர் "ஜாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்" என நமக்கு சவால் விட்டு இருக்கின்றனர். இந்த சவாலுக்கு நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?
சட்டம் கொளுத்தி சாம்பலை சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்!
சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்!"
- ஈ.வெ.ரா. (விடுதலை', 14.11.1957)
தந்தை பெரியார் இரயில் சுற்றுப் பயணம் செய்தார். முக்கியப் பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.
ஆம் நவம்பர் 26 வந்தது - வந்தே விட்டது - தமிழ்நாடெங்கும் 10 ஆயிரம் பேர் கொளுத்தினர்! கொளுத்தினர்!!
முதல் நாள் (25.11.1957) சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு, மறுநாள் சென்னையில் சட்டத்தைக் கொளுத்தவிருந்த தந்தை பெரியாரை, 25.11.1957 மாலை - சிறீரங்கம் பொதுக் கூட்டத்திற்குப் புறப்படத் தயாராக இருந்தபோது முன்கூட்டியே கைது செய்தது காவல்துறை.
தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தி அதன் சாம்பலை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பொழுது யாரும் எதிர் வழக்காடவில்லை. அதே நேரத்தில் சட்டத்தை எரித்த தோழர்கள் என்ன கூற வேண்டும் என்பதையும் அறிக்கை மூலம் தெரிவித்தார் தந்தை பெரியார்.
"நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண் டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டி ருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்."
பெரியார் அறிக்கை: (விடுதலை 23-11-1957)
சிறை செல்லுமுன் தந்தை பெரியார் என்ன சொன்னார்?
"நவம்பர் 25ஆம் தேதி நடக்கும் விசாரணையில் எனது முச்சலிக்கா பாண்டு கேன்சல் ஆகி என்னைச் சிறைப்படுத்தும்படியான நிலைமை பெரும்பாலும் ஏற்படலாம். இந்தச் சமயத்தில் பொது மக்களுக்கு ஏதாவது சொல்லவேண்டியது அவசியமாகும். நான் சிறைப்படுத்தப்பட்டு விட் டேன் என்பதாலேயோ அல்லது பொது மக்கள், அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவார்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங் கத்தார் ஏராளமான மக்களைக் கைதுசெய்து விட்டார்கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்டநாள் தண்டிக்கப்படநேரிடும் என்ற அச்சத்தினாலேயோ யாரும் அதாவது கொளுத்த வேண்டியது அவசியந்தான் என்று கருதுகிறவர்கள், எந்தவிதமான தயக்கமும் இல் லாமல் அரசியல் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத் துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவுகளைக் கொண்ட பிரசுரத்தொகுப்பைக் கொளுத்தியே தீரவேண்டியது முக்கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைவிட முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதை அவசியம் ஒவ்வொரு வரும் கவனிக்கவேண்டியதும், என்னை ரிமாண்டு (சிறையடைப்புச்) செய்வதனாலேயோ மற்றும் இப்பொழுது செஷன்சில் (மாவட்ட நீதிமன்றம்) நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்டநாள் அரசாங்கத்தார் தண் டனைக்குள்ளாக்கி விடுவதாலேயோ பொது மக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமோ, பலாத் காரமோ, பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, குழந்தை களுக்கோ, துன்பம், வேதனை உண்டாக்கக் கூடியதான எப்படிப்பட்ட பலாத்காரமான செய்கையையும், நஷ்டம் உண்டாக்கக் கூடியதான செய்கையையும் அதாவது ஆயுதப் பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத் துதலோ முதலிய ஒரு சிறுகாரியம் கூட நடத்தாமலும், நடைபெறாமல் இருக்கும்படியும் ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோகம் செய்யவேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும், சொல்லி வரு வதும் உண்மை. ஆனால் அவை இப்பொழுது அல்ல. அதற்கான காலம் இன்னும் வரவில்லை. வரக்கூடாதென்றே ஆசைப்படுகிறேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதற்குக் காலம் எப்போது வரும் என்றால் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங்கள் நடத்தி, அவைகளால் ஒன்றும் பயனில்லை, வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்று கண்டு, பலாத்காரத்தைத் தவிர வேறு வகையில்லை என்ற முடிவுக்கு வந்தபிறகுதான் நாம் அவற்றில் இறங்க வேண் டியவர்களாக இருக்கிறோம்.
ஆதலால் இந்த என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை ஒவ்வொருவரும் கருத்தில் வைக்க வேண்டும்
இப்பொழுது எனக்கு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் தண்டனையானது நம் முடைய அடுத்த திட்டங்களுக்கு வலுவான ஆதரவுகளையும், உணர்ச்சியையும், ஊக்கத் தையும், துணிச்சலோடும், வேகத்தோடும், ஈடு படுவதற்கு தூண்டுதலை உண்டாக்குவதற்கு வலிமையான சாதனமாக அமையும். பொது மக்கள் மீது எனக்குப் பலமான செல்வாக்கு (ஆதிக்கம்) இருக்கிறது என்று அரசாங்கமும், இந்தியாவிலுள்ள மற்ற மக்களும் எண்ணியி ருக்கிற ஒரு எண்ணத்திற்குப் பாதகம் ஏற்படாமல் பொதுமக்கள் நடந்துக் கொள்ள வேண்டு மென்றால் நான் மேலே வேண்டிக்கொண்டு இருக்கிறபடி எந்தவிதமான தண்டனைக்குப் (ஏற்பட்டால்) பிறகு பொது மக்களிடையில் மேற்சொன்னபடி எந்த விதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்ளுகிறேன்; அதிகாரி களிடத்தில், போலீஸ்காரர்களிடத்தில், மரியாதை யாகவும், கட்டுப்பாடாகவும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்."
- ஈ.வெ.ரா. ('விடுதலை' - 26.11.1957)
இப்படி அறிக்கை வெளியிட்ட ஒரு தலைவரை வரலாறு கண்டதுண்டா? இதனை சொல்லுக்குச் சொல் - வரிக்கு வரி ஏற்றுக் கொண்டு நடந்து கொண்ட கட்டுப்பாட்டின் கவசம் பொதுத் தொண் டின் புடம் போட்ட தொண்டர்களாம் பத்தரை மாற்றுத் தங்கங்களைத் தான் வரலாறு சந்தித்த துண்டா?
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 27.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக