புதன், 27 நவம்பர், 2019

கணக்கு வழக்கு எங்கே? - 2 (27)

தந்தை பெரியார்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன் உரை வருமாறு:

சென்ற வாரத் தொடர்ச்சி

இந்நூற்பாவுக்குச் சான்று காட்டவந்த நன்னூலுரையா சிரியர்களுள் ஒருவரும் நான்கெழுத்திற்கு மேற்பட்ட தமிழ்ச் சொல்லினைச் சான்று காட்டிலர்.

அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்திரட்டாதி-பகாப்பதம்.

கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், உத்திராடத்தான், உத்திரட்டாதியான்-பகுபதம்.

இவை நன்னூலுக்குப் பேருரை (விருத்தியுரை) எழுதிய சிவஞான முனிவர் காட்டியவை. இவற்றுள் பகாப்பதத்துள் அகலம்வரை தமிழ், பகுபதத்துள் பொருப்பன்வரை தமிழ்.

அகலம் என்பது நான்கெழுத்தாலாயது; அகல்+அம் எனப் பிரித்துக் காணின் மூன்றெழுத்து, ஈரெழுத்தாய் நிற்கும்.

பொருப்பன் என்பது பொருப்பு+அன் எனும் இரு சொற்புணர்ச்சி; பொருப்பு நான்கெழுத்தாலாயது. ஏனைய உரையாசிரியர் சான்றுகளை விரிப்பின் பெருகும்.

பதம் என்பது வடசொல், மொழி, சொல், கிளவி என்பன தமிழ். இம்மூன்றனையும் இன்று பதம், பதம் பார்த்து வருகிறது.

தொல்காப்பியர் ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர்மொழி எனச் சுட்டுகிறார். ஈண்டுத் தொடர்மொழி என்பது மூவெழுத்து மொழியினையும், நான்கெழுத்து மொழியினையும் சுட்டும்.

ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி

இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

என்பது தொல்காப்பியர் திருவாக்கு.

ஆ, கா, நா - ஓரெழுத்தொருமொழி

மணி, வரகு, கொற்றன் - ஈரெழுத்தொருமொழி

கணவிரி (அலரி) - நாலெழுத்தொருமொழி

அகத்தியனார் - அய்யெழுத்தொருமொழி

திருச்சிற்றம்பலம் - ஆறெழுத்தொருமொழி

பெரும்பற்றப்புலியூர் - ஏழெழுத்தொருமொழி இவை உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் அந்நூற்பாவிற்குக் காட்டும் சான்றுகள். இவற்றுள் நாலெழுத்தொருமொழிவரை தமிழ் ஏனையவை பகுத்தற்குரியன.

ஆ, மணி, வரகு, கொற்றன் இவை உரையாசிரியர் இளம்பூரணர் காட்டும் சான்றுகள். நான்கெழுத்துச் சொல்லுக்கு மேற்காட்டாமை இவரது தமிழ் மரபை உணர்ந்து உரை எழுதும் திறத்தைக் காட்டுகிறது.

மேற்கண்ட விளக்கங்களால் நான்கெழுத்திற்கு மேம்பட்ட தமிழ்ச்சொல் இல்லை என்பது தெளிவாகப் புலனாகிறது.

இந்நிலையில் இலக்கியமும் இலக்கணமும் எவ்வாறு தமிழ்ச் சொற்களாக இருக்க முடியும்? அவை தமிழ்ச் சொற்கள் அல்லவே அல்ல; வடமொழிச் சொற்கள்.

லக்ஷியம் எனும் வடமொழியின்

தற்பவம் இலக்கியம்.

லக்ஷணம் எனும் வடமொழியின்

தற்பவம் இலக்கணம் ;

(தற்பவம் - தன்னிலிருந்து தோன்றியது) இவற் றைத் தமிழெனக் கொண்டு மனம் போன போக்கில் விளக்கம் காண்பது ஏற்புடைத்தன்று.

இலக்கணம் எனும் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருப்பதைக் கொண்டு அது தமிழ்ச்சொல் என வாதிடுதல் பொருந்துவதன்று. தொல்காப்பியர் காலத் திற்கு முன்பே வடமொழி மயமாக்கும் பணி தொடங்கப்பட்டதன் விளைவு அது.

அவ்வாறாயின் இலக்கிய இலக்கணம் எனும் தொடருக்கு ஈடாய்த் தமிழ்த் தொடர் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?

அத்தொடர் யாது ?

கணக்கு வழக்கு என்பதே அத்தொடர்

அக்கணக்கு வழக்கு எங்கே? -

அன்னை மொழியின் அருமையை உணராது அயல்மொழிக்கு ஆக்கம் தேடக் கருதிய பண்டைக்கால உரையாசிரியர் சிலரால் அத்தொடர் தன்னிடத்தை இழந்து, பிளவுபட்டுத் தன் பொருளை மட்டும் விடாது, கரந்து நிலவுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு எனும் தொடர்களின் கண்வரும் கணக்கு என்பதும்,

காணக்காயர் எனும் சொற்கண் நிற்கும் கணக்கு என்பதும்,

-"கணக்கினை

முற்றப்பகலும் முனியா(து) இனிதோதிக் கற்றலின்

கேட்டலே நன்று"

எனும் பழமொழிப் பாடல் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும்,

கணக்கறிந்தும் விடுவானோ கண்டாய் என் தோழி எனும் வள்ளலார் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும் எப்பொருளைச் சுட்டுகின்றன?

கருதுதல்-கருத்து, கருதுதற்குரிய நூல் எனும் பொருளைச் சுட்டுகின்றன. இலக்கியத்தைச் சுட்டுகிறது என்றால் தெளிவாகப் புரியும். அந்த அளவிற்கு வடமொழி, நம்மைத் தன்மயமாக்கிவிட்டது.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழு முயிர்க்கு"

எனும் திருக்குறட்கண்ணும்

"எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்

எண்ணெழுத்திகழேல்"

எனும் முதுமொழிகளின் கண்ணும் இடம் பெற்றுள்ள எண் என்பதும் கணக்கையே உணர்த்தும்.

கண் என்பது கணக்கு என்பதன் வேர்ச்சொல்;

கண் - கருது

எண் - எண்ணுதல் - கருதுதல்

கருதுதற்கு-எண்ணுதற்கு-சிந்தித்தற்கு உரியதாய்த் திகழ்வது கணக்கு.

இலக்கியம் எனும் வடமொழி மயத்தால் கணக்கு இவ்வாறு கரந்து மறைந்து திரிந்து வருகிறது; என்னே தமிழ் நிலை ?

ஏவல் கண்ணிய (கண்ணிய - கருதிய)

கண்ணிய மரபு

கண்ணிய நிலைத்தே கண்படை கண்ணிய கண்படை

கபிலை கண்ணிய வேள்வி

காலம் கண்ணிய ஓம்படை

காமம் கண்ணிய நிலைமைத்து

கண்ணிய புறனே

முதலாய தொடர்களுள் கண்ணிய (கண்) எனும் சொல்லினைக் கருது-கருத்து எனும் பொருளில் தொல் காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க. மேலும் பல இடங்களிலும் இவ்வாறு கையாண்டுள்ளதைப் புலவர் உலகம் நன்கறியும்.

வழக்கு - வழங்கு - வழங்குவது வழக்கு வழங்குதலால் அமையும் மொழியின் அமைதியே வழங்கு, வழக்கு, இயல், மரபு முதலாயவை ஒரு பொருட் சொற்கள்.

இயல் என்பது இலக்கணம் எனும் பொருளில் வழங்கி வந்த சொல்லாகும். எழுத்தியல், பிறப்பியல், புணரியல் முதலாய பல இடங்களில் இடம் பெற்றிருக்கும் இயல் என்பதற்கு இளம்பூரணர். நச்சினார்க்கினியர், பேராசிரியர், சங்கரநமச்சிவாயர் முதலாயவர்களை உள்ளிட்ட உரையாசிரியப் பெருமக்கள் அனைவரும் இலக்கணம் என்றே உரை காண்கின்றனர்.

இயல் (இயல்பு)-மொழியின் இயல்பு-மொழி இயல்பாய் அமைந்த நிலை.

வழங்கியல் மரபு

வழக்கத்தான

வழங்கியல் மாவென் கிளவி

வழக்கு வழிப்பட்டன

முதலாய தொடர்களுள் வழக்கு (வழங்கு) எனும் சொல்லினை இயல் (இலக்கணம்) எனும் பொருளில் தொல்காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க.

இக்கருத்துணராது இயல் என்பதற்கு சிறு பகுதி (ஊயயீவநச) என்று பொருள் காண்பது பொருந்து வதன்று. ஆறுமுக நாவலரும் தொல்காப்பிய நூற்பாக் களைக் குறிப்புரையுடன் வெளியிட்ட இளவழகனாரும். அப்பொருள் இருப்பதாகச் சுட்டுதல் ஏற்புடைத்தன்று. அதற்கு ஒத்து எனும் சொல்லொன்று இருப்பதை அவர்கள் அறியாதவர்களல்லர்.

கணக்கு வழக்கு எனும் தொடர் இலக்கிய இலக் கணம் எனும் வடமொழி மயத்தால் கரந்துறைந்து, கரைந்து வருதலைப் போல, படலம், பால் எனும் தமிழ்ச் சொற்கள் அதிகாரம் எனும் வடமொழி மயத்தில் கரைந் துறைகின்றன. இவைபோன்றே எத்துணையோ தூய தமிழ்ச்சொற்கள் தம்மிடத்தை வடமொழிச் சொற்கள் கைப்பற்றிக் கொள்ள, வாழவழியின்றி, ஏங்கிக் கரந்து நின்று தவிக்கின்றன. அவற்றையெல்லாம் வெளிக் கொணர்தல் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.

- விடுதலை நாளேடு 19 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக