வியாழன், 14 நவம்பர், 2019

தமிழ்ச்சொற்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை -தமிழ் "அரசு"- 25

"தமிழண்ணல்" டாக்டர் இராம. பெரியகருப்பன்

தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

 

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழியல்துறைத் தலைவர் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:

'வடநூல் உணர்ந்தார்க்கு அன்றித் தமிழ் இயல்பு விளங்காது என்பதும் உணர்ந்து கோடற்கு அன்றே, பாயிரத்துள் 'அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று கூறுவதனின்றும் இருமொழியறிவின் இன்றிய மையாத் தன்மையை சிவஞான முனிவர் உணர்ந்தவர்' என்பது பெறப்படுகிறது.

தமிழிலுள்ள 'அரசு' என்ற சொல் பழமையானது. தொல் காப்பியத்தில் அரசர் (1021) என்ற சொல் புறத்திணையியலில் காணப்படுவதுடன், மரபியலிலும் ஆளப்படுகிறது. (1571, 1572, 1574). புறநானூற்றில் அரசு (327, 369) அரைசு (42, 211) எனவரும் இடங்கள் பலவாகும். பொதுவாக அரசன், அரசர், அரசவை, அரசாண்ட, அரசாளன், அரசியல், அரசிளங்குமரர், அரசு, அரசுகட்டில், அரசுவா, அரைசர், அரைசு, அரையன் போன்ற சொல்வடிவங்களைச் சங்க இலக்கியத்தும் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான இடங்களிற் காண்கிறோம்.(1) அரசுவா என்பது பட்டத்து யானை; அரச அரா என்பது அரசராகிய பாம்பு. இத்தகைய தொடர்களும் நினைவுகூரத்தக்கன.

திராவிட மொழிகளில் அரசு என்ற சொல் பல்வேறு நிலைகளில் ஆட்சியிலுளது. கருநாடகத்தில் தேவராச அரசு என்று, 'அரசு' என்பது குலப்பெயராகக் குறிக்கப் படுகிறது. அரசு குற்றியலுகரமாதலின் ஒலித்துணை உயிர்களை விட்டுவிட்டு அர்ஸ் ஆகிறது. ஆங்கிலத்தில் அர்ஸ் (Ars) என்று எழுதப்படும்போது, முன்னைய வடிவமே மறக்கப்படுகிறது. அரசன்மனை என்ற சொல் அரமனை என ஒலிக்கப்படுவதே முறை. இன்று தமிழில் அரண்மனை எனல் ஒலிப்பில் நேர்ந்த தவற்றால் விளைந்ததாகலாம். ஏனெனில் மலையாளத்தில் அரமனா என்றும், கன்னடத்திலும், துளுவிலும் அரமனை என்றும் குடகில் அரமனே என்றும், கோடர், தோடர்  மொழிகளில் அர்மன் என்றும், தமிழிலும் பேச்சு வழக்கில் அரமனை என்றும் வழங்குதல் காண்கிறோம். மலையாளத்தில் அரசன், அரயன், அரசம், அரசு எனவும் கோடர் மொழியில் அர்ச் எனவும் தோடர் மொழியில் அர்ஸ் என்றும், கன்னடத்தில் அரச அரசு, அரசி, அரசத்தி (அர சாத்தி), அரமனை என்றும் துளுவில் அரசு, அரசெ என் றும் தெலுங்கில் அருசு என்றும் சமற்கிருதத்தில் ராஜன் என்றும் இச்சொல்வடிவங்கள் காணப்படுகின்றன.(2)

அரசகேசரி, இராசாதிராசன், இராசராசன், இரா சேந்திரன் என்ற பல சொற்கள் இடைக்காலத்து வழக்கிலிருந்தன. ஆண் மகவை அரசு எனல் இன்றும் சில சமூகங்களில் வழக்கிலுள்ளது. தலைமையான மரமொன்றை 'அரசமரம்' என அழைத்தனர்.

அரசன் என்ற சொல்லே அரைசன், அரயன், அரையன் என எழுத்துப் போலியாய் மாறி வழங்குகிறது. சிலம்பில் மலையரையன் என்று கூறப்படுவதைப் பர்வதராஜன் என்பர், முன்றுறை அரையனார் என்பவர் பழமொழி நானூற்றின் ஆசிரியர் ஆவார். அரையர் என ஒரு வகுப்பினர் பெயரும் குறிக்கப்படுகிறது.

வடமொழி எனக் கருதப்படும் ராஜு, ராஜன் என்ற சொற்கள் 'அரசு'  'அரசன்' என்ற மூலச்சொல்லின் திரிபு வடிவங்களேயாம்.

அரசு    அ ர்      அ சு     ராசு      ராஜு

ர் அ      அ சு

அரசன்  அ ர்      அ சன் ராசன் ராஜன்               ராஜா

ர் அ      அ சன்

உயிரிடம் பெயர்தல் என்பது ஓர் ஒலித்திரிபு. டாக்டர் மு. வரதராசனார் தம் மொழிநூலில் மூன்று உயி ரொலிகளைக் கொண்ட, உயிர் முதன் மொழியாக வரும் தெலுங்குச் சொற்களில் உயிரொலி இடம் பெயர்ந்து நிற்பதை விளக்குகிறார். (ப.33) இது திராவிட மொழிகளில் காணப்படும் ஓரியல்பு என்பது உணரத்தக்கது.

அவரு  அ வ் அ ரு     வ் அ    அ ரு

வ் ஆ   ரு     வாரு

இவரு    இ வ்இ ரு    வ் இ    இ ரு

வ் ஈ ரு   வீரு

மேலும் சில தெலுங்குச் சொற்களையும் மு.வ. காட்டுகிறார்:

சுட்டுச்சொற்கள்

அதி னி             அதினி              தானி

இதி னி             இதினி              தீனி

பிற தெலுங்குச் சொற்கள் சில:

உரல்   உரலு  ஓரலு ரோலு

உகிர்   உகிரு ஒகிரு கோரு

இலது               எலது  லேது

'இவற்றில் காணும் மாறுதல் என்ன? முதலில் உள்ள உயிர் இரண்டாமிடத்திற்குப் பெயர்ந்து சென்று, அங்குள்ள உயிரைக் கெடுத்து, அதற்கீடாக நீண்டு நிற்றலே இம்மாறுதலாகும்' என்றும்,  'இத்தகைய மாறுதல் நிகழும் சொற்களை ஆராயுமிடத்து இடையிலுள்ள மெய் ர, ல,வ என இடையின மெய்களாகவே பெரும்பாலும் இருக்கக் காண்கிறோம். அவற்றின் திட்பமின்மையே இம்மாறுதலுக்குக் காரணம் எனலாம்' என்றும் டாக்டர் மு.வ. கூறுவன மனங்கொளத்தக்கனவாம்.

இதே முறையில்தான் அரசு, ராசு என மாறுகிறது. அரசு என்ற சொல்லிலும் மூன்று உயிர் வருதலும் திட்பமில்லா இடையின மெய்யாக இடையிலுள்ள ரகர மெய்யிருத்தலும் காணலாம். தமிழ்நாட்டில் நகரத்தார் மரபில் 'ராசு' என்றும், ராசாச்சி என்றும் இன்றும் வழக்கிலுள்ள பெண்பால் குறிக்கும் மக்கட் பெயர்களைக் காணலாம். அதுபோலவே ராசப்பன், 'ராசாத்தி' என்ற பெயர்களும் உள. இவையே ராஜு, ராஜன், ராஜா, ராஜப்பன், ராஜாத்தி என்றெல்லாம் வடமொழிபோல் ஒலிக்கப்பெற்று ஆட்சி செய்கின்றன. மூலவர் தமிழிலுள்ள அரசரே என்பது. மேற்காட்டியவற்றால் அறியலாகும்.

தேவராஜன், மகராஜன் என்ற சொற்கள் கருதத் தக்கன. தேவ அரசன் என்பது ஒலித்தற்கு இடையீடாகத் தோற்றும் பொழுது தேவராசன் என இம்மாற்றம் எளிதாக அமைகிறது. அரசனுக்கு மகப் பிறந்ததும், மகவு அரசனாகிறது. அம் மக அரசன்தான் மகராசனாகிறது. ஒரு தாய் தன் குழந்தையை வாய்குளிர, மனங்குளிர மகராசா என்று கொஞ்சும்பொழுது மகவாய்ப் பிறந்த அரசையே-தமிழ்ச்சொல்லால் அவ்வாறு கொஞ்சுகிறாள்; மஹாராஜன் என்ற சொல்லுக்கும் இதற்கும் பொருள் வேறுபாடுண்டு. வரதராசன் என எழுதும் பொழுது, வடமொழி ராஜனைத் தமிழ் ஒலிக்கு ஏற்பத் தமிழ்ப்படுத்தி எழுதியதாக இதுகாறும் நினைத்து வருகிறோமே அது தவறு. வரதன்+அரசன் வரதராசன். ஒலித்தற்கு இடர்ப்பாடு நேருமெனின் உயிரிடம் பெயர்ந்து ராசனாகிவிடுகிறது. வரதராசன் என்பதே இயல்பானது. அதனை வரதராஜன் என்பதுதான் வடமொழிக்கு ஏற்ப ஒலித்திரிபு செய்து உச்சரித்தது மட்டுமல்லாமல், அதன்படி எழுதியதுமாகும். சூடு என்பதை ஜூடு எனவும், சாமான் என்பதை ஜாமான் எனவும் கொச்சை வழக்காய் ஒலிப்பது போல் பிறந்ததே அரசு, ராசு ஆகி ராசு, ராஜா ஆன வரலாறாகும்.

அரசன்-அரையர்-ராயன்

அரசன் என்ற சொல் அரைசன், அரையன், அரய்யன் என ஆதல் சங்க நூல்களிலேயே காணப்படுவதாகும். அய்காரக் குறுக்கம் என்பதற்கு ஏற்ப அரய்யன், அரயன் என ஒலிப்பு நிலையில் உச்சரிக்கப்படுவதே முற்கூறிய விதிப்படி ராயன் என மாறுகிறது. இதனால் ராயன் என்பதும் தமிழ்ச்சொல்லே என்பது விளங்கும்.

அரசப்பன்       -              ராசப்பன்

அ(ர)யப்பன்    -              ராயப்பன்

அரய்யன்        -              ராயன், ராய்

தேவராசன் தேவராயன் என மாறும். தமிழ்நாட்டில் ராயவேலூர் தேவராயன் பட்டினம், சேர்வராயன் பட்டணம் என்பனபோல் பல ஊர்ப் பெயர்களைக் காணலாம். புறநானூறு இரண்டாம் பாட்டின் அடியில் எழுதப்பட்டுள்ள கொளு 'சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது' என்பதாகும். அன்றே எவ்வாறு ராயர் வந்தார் எனத் தமிழறிஞர்கள் அய்யப்பட்டதுண்டு. அரசன், அரயன், ராயன் என்ற வழக்குத்திரிபை உணர்ந்தால் முடிநாகராயர் தொன்மைத் தமிழரே என்ற உண்மை விளங்கும்.

கிருஷ்ண தேவராயன் என மகாராட்டிர மொழியிலேயே 'ராயர்' வழங்குவது எதைக் காட்டுகிறது ? அரசனின் மறுவடிவான 'ராயன்' என்பதும் திராவிட மொழிகள் பலவற்றிலும் காணப்படும் பொதுக் கூறேயாகும். முன்னைய பிராகிருதங்களிலும் இது வழங்கியதாதல் வேண்டும். பரவு பரசு; விரவு விரசு என்பனவற்றையும் கரையல், கரைசல்; பரவல் - பரசல்; உரையல் - உரைசல் என்ற மாற்றங்களையும் எண்ணிப் பார்த்தால் அரையன், அரயன், ராயன் என்பனவே பழமை மிக்க வடிவங்கள் என எண்ணத் தோன்றும். அரவு அரசு, அரயன் அரசன் ஆகியிருக்கலாம். அரவு வலிமையைச் சுட்டிப் பின்பு பாம்பைக் குறித்தது.

கன்னடத்தில் ராயன் எனவும் தெலுங்கில் ராயலு எனவும் மலையாளத்தில் ராய் எனவும் வழங்கும் குலப்பெயர்கள் எல்லாம் இதன்வழிப் போந்தனவேயாம். ராவ் என்ற பெயருடையாரும் 'ராயரேஸ் என்றுதான் அழைக்கப்படுகின்றனர். ராமராவ் என்பதில் வரும் ராவும் ராயும் ஒன்றே. பாவாணர் தம் 'முதல் தாய்மொழி' நூலில்,

அரசு

உரவு  -              அரவு அரசு அரசன்

ஏவு      -              ஏசு

பரவு    -              பரசு

விரவு -              விரசு

அரவு  -              அரசு

அரவு  -              அரைசு அரைசன் அரையன்

(கன்) ராயன், (தெலு) ராயலு, (மாஹி) ராவ் எனத்தரும் காட்டுகள் இவண் நினையத்தகுவன. (பக். 225-226)

அவர் கூறுவதுபோல் அரவு, ராவு, ராவ் என்பதும் பழமையான வடிவமாக இருந்திருக்கக்கூடும் எனத் தோற்றுகிறது. உரவு வலிமை. அதுவே அரவு ஆகி அரசு ஆயிற்றென்று அவர் கருதினாரெனத் தோற்றுகிறது.

'அரசன் சண்முகனார்' என்ற இலக்கணப் பெரும்புலவர், மதுரையை அடுத்த சோழவந்தானில் வாழ்ந்தவர். அரசன் என்பது தந்தை பெயராகுமிடத்தும், அதுவே மன்னனைக் குறிக்குமிடத்தும் அரசன் இன்னார் என வழங்கப்பட்டது. பின்னர் அது ராசன், ராஜன் எனப்பட்டு இராசன் என்று வடமொழியாக்கம் பெற்று எழுதப்பட்டமைபற்றி நாமறிவோம். இங்ஙனம் கொச்சைத் தன்மையுடன் செந்தமிழ்ச் சொற்களை சமற்கிருத மயமாக்கும் போக்கைப் பல்வேறு நிலைகளிற் காணலாம். சிலர் சமற்கிருத மயமாக்கும் (Sanskritization)  என்பதை மேனிலையாக்கம் என மொழி பெயர்ப்பது இங்கு அடிபட்டுப் போகிறது.

அரசனுக்குக் கட்டியங்கூறும்போது 'ராசாதிராச ராச மார்த்தாண்ட ராசகுல திலக' என்றிவ்வாறு அடுக்குங் கால், ஒலித்திரிபு, உலக வழக்கில் இன்றியமையாத தாகிவிட்டது. அதனையே இன்று பெருமையாக இருக்கும் என்று கருதி, 'ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜராஜ' என்றிவ் வாறு ஒலிக்கலாயினர். ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதித்தன் என்பனவெல்லாம் தமிழ் மூலச்சொல் திரிந்து வடமொழிச் செல்வாக்குக் காலங்களில், ஒலித் திரிபு மட்டும் ஏற்றனவே தவிர, அவை அயற் பெயர்களல்ல என்பது மனங்கொள்ளத் தக்கது. செல்வர் என்ற சொல் எவ்வாறு செல்வந்தர் ஆனது? வடமொழித் 'தன்வந்தர்' என்ற சொல் வழக்கைத் தமிழிற் கலந்ததால் விளைந்த வினை இது.

இங்ஙனம் தமிழ், 'அரசை' உணர்வதன் பயன் யாது? 'சேம அச்சி'லுள்ள (புறம். 102) சேமம் என்பதே க்ஷேமம் ஆகிறது. தேம், தேஎம், தேயம் என்பதே தேசம், தேஷ் ஆகிவிடுகிறது. முதுமக்கட் சாடியிலுள்ள சாடி பின்னர் ஜாடி ஆகிவிடுகிறது. சுவடு, சோடியாகிப் பிறகு ஜோடி யாகிறது. துண்டிக்கப்படுகிற துண்டுபோல் வெட்டி யெடுக்கப் படுகிற வேட்டி வேஷ்டி ஆகிறது. பதறுவதால் ஏற்படும் பதற்றம் நம் பதற்றத்தில் பதஷ்டம் ஆகித் தொலைகிறது.

வேகும் கடம் வேங்கடமாகிறது. சங்க காலத்திலேயே கடம்-காடு என்ற சொல்லாட்சி மிகுதி. வேம்கடமாக அது மாற வேங்கடராமன் முதலிய கலவைத் தொடர்கள் தோன்றின. வேங்கடராமன், வெங்கடராமன், வெங்கட் ராமன், வெங்கட்ராம், வெங்கட், வெங்கு என்றும் வெங்கடாசலம், வெங்கிடாசலம், வேங்கடாசலம், வெங் கடேஷ் என்பன போலக் கலந்தும் பிறழ்ந்தும் சமற்கிருத மயமாக்குதல் கொச்சைப்படுத்தும் வழக்கின் பாற்படு மன்றோ? மூலச்சொல் எப்படி வெட்டி, ஒட்டி கட்கட் டாகிறது பாருங்கள் !

சமற்கிருத மயப்படுத்துதல் என்பது பெரும்பாலும் புறப்பூச்சு வண்ணம் போன்றதே; உள்ளீடெல்லாம் தமிழே. மறைக்காட்டை வேதாரண்யம் ஆக்கினால் அஃது அயல்தேசத்து ஊராகிவிடுமா? தமிழர்கட்கு உரிய பரதநாட்டியம் திருத்தணிக்கு அப்பாற் காணப் படாதது. அக்கலை பற்றிய பரதசாத்திரம் வடமொழியிலிருப்பதால், பரதக்கலை தமிழருக்குரிய தல்லாததாகி விடுமா ?

சொற்களைப் பொறுத்தவரை, சமற்கிருதமே தனக்கு அடுத்து வழங்கிய வடநாட்டுப் பாகதங்கள், பைசாச பிராகிருதங்கள், பிராகிருதங்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட வடநாட்டுத் திசை வழக்குகளிலிருந்து கடன்பெற்று வளர்ந்ததாகும். அப்பழம் திசைச் சொற்கள் பல தமிழோடு தொடர்புடையன. எனவே, வடமொழியில் வழங்குவனவெல்லாம் வடமொழிக்கே உரிமையுடையன என்று கருத இயலாது. வடமொழி ஒலிப்பால் ஏற்பட்ட மாறுதல்களும் வடமொழி போலத் தோற்றினும் அவை வடமொழியாகா. மேலும், தமிழக வரலாறு 'ஆறிடு மடுவும் மேடும்' போன்றது. தமிழ் செல்வாக்குப் பெற்றபோது தமிழ் மயப்படுத்துதலும் வடமொழி ஓங்கியபோது சமற்கிருதமயமாக்குதலும் என இவை மாறி மாறி நிகழ்ந்து வந்துள்ளன. வடமொழி அரசாட்சியிலிருப்பார் ஆதரவு பெற்று, மேலோங்கி நின்ற காலங்களில் தமிழ் நாட்டுக்கே உரிய கலைகள், சிற்பம், இசை, மெய்ப்பொருள், அறிவியல், வானநூல், மருத்துவம் எல்லாம் சமற்கிருதமயமாக்கப்பட்டன. அக்காலத்திலெல்லாம் அறிந்தும் அறியாமலும் பல தமிழ்ச்சொற்களும் சமற்கிருதமயமாக்கப்பட்டன. தமிழ் 'அரசு' அதை நன்கு மெய்ப்பிக்கிறதென்பதை நம் மொழியியலறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- விடுதலை நாளேடு 12 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக