வியாழன், 21 நவம்பர், 2019

கணக்கு வழக்கு எங்கே ? - 26

பேரா.இராம.சுப்பிரமணியன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன் உரை வருமாறு:

உலகுக்கெல்லாம் கணக்கு வழக்கு உண்மைகளை-அடிப்படைகளை வகுத்துத் தந்த தமிழன், தான் மட்டும் அவற்றினை உரியவகையில் வைத்துக் கொண்டா னில்லை; போற்றிப் பாதுகாத்தானில்லை. அதனால், கலாச்சாரம் எனும் பெயரால் தமிழகத்துப் புகுந்த கண்மூடிப் பழக்க வழக்கங்களுக்கு அவனது இயற்கையோடியைந்த-தூய பண்பாடும், ஒருநிலையின்றி முக்கல், கனைத்தல் முதலாய நான்கு நிலைகளான் நடந்துவந்த ஒருமொழிக்கு அவனது தூய, எளிய, இனிய மொழியும் இரையாகி, அதனதன் வண்ணமாயின. இன்றோ, தூய தமிழ்ப் பண்பாடு யாது? தூய தமிழ்மொழி யாது? எனத் துணியக் கூடாநிலை உருவாகி விட்டது.

தன்னிடம் தமிழனுக்குக் கணக்கு வழக்கு இல்லாம லில்லை. ஒருகாலத்திலிருந்தன; இன்றும் இருக்கின்றன. ஆனால், கரந்துறைகின்றன.

உலக அரங்கினுள் தமிழ்மொழி ஈடிணையற்ற ஒன்றெனின் அது மிகையன்று. அம்மொழிக்குள்ள இனிமையும், எளிமையும் வேறெம்மொழிக்குமில்லை. அவ்விரண்டனுக்கும் காரணம் தமிழ் ஒலியமைப்பும், மொழி (சொல்) அமைப்புமேயாகும்.

தமிழெழுத்துக்கள் அனைத்தும் பெரும்பாலும் மிடறு, பல், இதழ், நா, மூக்கு எனும் அய்ந்துறுப்புகளையே இடமாகக் கொண்டு இயல்பாகப் பிறக்கின்றன. எவ்வெ ழுத்திற்கும் வலிய முயற்சி தேவைப்படுவதில்லை. தமிழெழுத்துக்களோடு பிறமொழியெழுத்துக்களை ஒப்பிட்டொலித்துக் காண்போர்க்கு இது நன்கு புலனாகும்.

எழுத்து என்றால் எழச்செய்வது என்பது பொருள். எழு-வேர்ச்சொல், து-பிறவினை இறுதி (விகுதி), விழுத்து-விழச்செய் என்பதுபோல, எழுப்ப எழுவது ஒலி. ஆக, எழுத்தென்றால் ஒலி என்பது பொருளாயிற்று. எழுதப்படுவது எழுத்தெனக் கூறுதல் பொருந்துவதன்று. எழுத்தாகிய ஒலிகள் தமிழ்க்கண் முப்பத்தொன்று மட்டுமே உள்ளன. இம்முப்பத் தோரொலிக்குள் தமிழ்மொழி இயங்குகிறது.

உயிர் மெய்யென்பது தனியொலியன்று. உயிரு மெய்யும் இணைந்த ஈரொலி; அதனைத் தொல்காப்பியர் ஓரெழுத்தாகச் சுட்டவில்லை. பவணந்தியார் ஓரெழுத் தாகச் சுட்டினாலும், குற்றியலுகரங்களையும் நிலை மொழி, வருமொழிகளின் ஈறு, முதல்களையும் சுட்டும்போது அதனை ஈரொலியாகவே காண்கின்றார்.

எடுத்துக்காட்டு :

வரகு - உயிர்த்தொடர்

நாடு - நெடிற்றொடர்

ஈண்டு உயிர்மெய்த் தொடர் என்று கூறாது ஈற்றயலெழுத்துக்களை மெய்யும் உயிருமாய்ப் பிரித்து, ஈற்றயல் நின்ற எழுத்தாய உயிர்மேல் வைத்து, உயிர்தொடர், நெடிற்றொடர் எனச் சுட்டுகிறார்.

யானை + கால் = யானைக்கால்

உயிர் மெய்முன் உயிர்மெய் வந்தது எனக் கொள்ளாது, உயிர்முன் மெய்வந்தது எனக் கொள்ளு மாறு அவர்.,

"நின்ற நெறி யேயுயிர் மெய்முதல் ஈறே"

என விதி கூறுகின்றார். இதனால் உயிர் மெய் யெழுத்து ஓரொலியன்று; ஈரொலியேயென்பது பவணந்தியார் உள்ளக்கிடக்கை என்பதனை அறிகிறோம்.

உயிரெழுத்து-12; மெய்யெழுத்து-18; ஆய்தம்-1; உயிர்மெய்யெழுத்து-216; ஆக 247 எழுத்தெனச் சின்னஞ்சிறார் உள்ளத்தில் தவறான கருத்தினைப் புகுத்துதல் ஏற்றதன்று.

ஆங்கிலமொழி 26 எழுத்துக்களாலாய மொழி எனவும், உலக மொழிகளுள் அதுவே குறைந்த எழுத்துக்களாலாய மொழியெனவும் கூறுதலுண்டு; இஃது உண்மைக்குப் புறம்பாயது. ஆங்கில மொழி வரி வடிவால் 26 எழுத்துக்களையுடையதே தவிர ஒலி வடிவால் நூற்றுக்கு மேற்பட்ட ஒலிகளையுடையது என்பதனை அதன் ஒலி வேறுபாடுகளின் நுட்பங்களை நுனித்துணர்வார் பலரும் உணர்வர்.

ஏ (A), ஜி (G) இவ்வீரெழுத்துகளை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொன்றும் சொற்களில் இடம்பெறும் போது எத்துணை ஒலிகளாக ஒலிக்கின்றன என்பது புலனாகும்.

தமிழெழுத்துக்களின் நிலை அத்தகையதன்று. தனித்து ஒலிக்கும்பொழுதும், மொழியிடை ஒலிக்கும் பொழுதும் அதன் நிலை வேறுபடுவதில்லை; பல்வேறு நிலையாய் நின்று, பல்வேறு பொருளைத் தருவதில்லை.

தமிழ்மொழியின் எழுத்துகள் முப்பத்தொன்றே உயிர்-12, மெய்-18, ஆய்தம்-1.

தமிழ்க்கண் நாலெழுத்துகளுக்கு மேற்பட்ட மொழியே (சொல்லே) இல்லை. சிலருக்கு இது வியப் பாகத் தோன்றலாம்; இஃது உண்மை. தமிழ்ச் சொற்களை ஆய்தலைவிட அவற்றுக்கு அடிப்படையாய அசை களை ஆய்ந்தாலே அதன் உண்மை புலனாகும்.

நேர், நிரை, நேர்பு, நிரைபு இவை தொல்காப்பியர் சுட்டும் அசை நிலைகள். தமிழ்ச் சொற்கள் அனைத்தும் இவ்வசை நிலைகளின் கண் அடங்கிச் செய்யுளாகவும், உரைநடையாகவும் வெளிவருகின்றன. சான்றுக்கு உடலுறுப்புகளை எடுத்துக்கொண்டாலும், ஒரு மரத்தின் உறுப்புகளை எடுத்துக் கொண்டாலும் அவை இந்நான்கசைகளின் கண் அடங்கி நிற்றலைக் காணலாம்.

உடல் - நிரை

நா - நேர் (நாக்கு-நேர்பு)

கால் - நேர்

மார்பு - நேர்பு

கழுத்து, வயிறு - நிரைபு

மரம் - நிரை

வேர், காய் - நேர்

இலை, கனி, கிளை - நிரை

ஏனைய உறுப்புகளையும் பொருத்திக் காண்க.

தமிழ்மொழி அசைகளாகிய இவற்றை நுனித்து நோக்குவார்க்கு, தமிழ்மொழி அமைப்பினை இவை கொண்டு காட்டுதல் நன்கு புலனாகும். அஃதாவது நான்கெழுத்துகளுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொல் இல்லை என்பது புலனாகும். நான்கெழுத்துச் சொல் ஆயிரத்திற்கு ஒன்று கிடைத்தலே அரிது.

நேர்-ஓரெழுத்து; ஒற்றினைக் கணக்கிட்டால் ஈரெழுத்து.

நிரை - ஈரெழுத்து

நேர்பு - ஈரெழுத்து; ஒற்றினைக் கணக்கிட்டால் மூவெழுத்து

நிரைபு - மூவெழுத்து (கருத்து போன்றவை நான்கெழுத்து)

"தாமரை புரையும் காமர் சேவடி"

தாமரை - மூவெழுத்து

புரையும் - (புரை+உம்) ஈரெழுத்து; ஈரெழுத்து

காமர் - மூவெழுத்து

சேவடி - மூவெழுத்து (செம்மை+அடி)

எனப் பிரிப்பினும் மூவெழுத்து ஈரெழுத்தாய் நிற்றல் காண்க.

இத்தகைய சொற்களைத்தன்பால் கொண்ட தமிழ் என்பதும் மூவெழுத்தாலாயதே.

இத்தமிழ்க்கண் தோன்றிய நூல்களைத் தொகுத்துச் சுட்டும் சொற்கள் எத்துணை எழுத்துக்களால் இருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட நால்வகை அசை நிலைகளின் கண் அடங்கியல்லவா நிற்றல் வேண்டும்? அஃதல்லவா தமிழ் மரபு ?

சங்ககாலம் முதல் இன்று வரை தமிழ்க்கண் தோன்றிய நூல்களை எத்தொடரால் இன்று சுட்டுகிறோம்?

"இலக்கிய இலக்கணம்" என்னும் தொடராலல்லவா சுட்டுகிறோம் ?

இலக்கியம், இலக்கணம் இவை இரண்டும் எத்துணை எழுத்துகளானானவை? அவ்வாறெழுத்து களானானவையல்லவா?

இவைபோல ஆறெழுத்துகளானான ஒரு தமிழ்ச் சொல்லைச் சுட்ட முடியுமா?

அந்தணர் என்பதைச் சுட்டலாம்; அஃது ஒரு சுட்டுச் சொல்; அம்+தண்+அர் எனப்பிரிந்து நின்று அழகிய குளிர்ச்சியையுடையார் எனப் பொருள்தரும் (குளிர்ச்சி-அருள்)

அடுத்து "ஒட்டகம்" என்பதனைச் சுட்டலாம். அஃது இரு சொற் புணர்ச்சி; ஒட்டு+அகம் எனப்பிரிந்து நின்று பொருள்தரும்; அகத்தினுள்ளே நீர்பை ஒன்று ஒட்டி நிற்கும் விலங்கினை அச்சொல் சுட்டுகிறது என்பது நுனித்துணர்வார்க்குப் புலனாகும். வேறு ஏதேனும் ஒரு சொல்லினை-ஆறெழுத்துடைய ஒரு சொல்லினை - தமிழ்ச் சொல்லாக யாரேனும் சுட்டமுடியுமா?

பகாப்பதம் ஏழெழுத்து, பகுபதம் ஒன்பதெழுத்தெனப் பவணந்தியார் சுட்டுகிறார், தமிழ்மொழியை வடமொழியாக்கும் பெரும் பணியைத் தலைமைதாங்கிச் செய்தவர்களுள் குறிப்பிடத்தக்க அவர் அவ்வாறு சுட்டாது வேறு எவ்வாறு சுட்டுவார் ?

"பகாப்பக மேழும் பகுபத மொன்பது

மெழுத்தீ றாகத் தொடரு மென்ப" - 130

என்பது அவர் திருவாக்கு.

தொடரும்

- விடுதலை நாளேடு 14 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக