சனி, 30 நவம்பர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா?

நேயன்

அம்பேத்கர் உபநிஷத்துகளிலிருந்து தனது சீர்திருத்தங்களைப் பெற்றார். இந்த ஆழமான பகுத்தாய்வு ஈ.வெ.ரா.வுக்கு இல்லை என்பது எதிரிகளின் அடுத்தகுற்றச்சாட்டு.

அம்பேத்கர் அவர்கள், இந்து மத சாஸ்திரங்கள் பற்றி கூறியவற்றை சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். சாஸ்திரங்களையே அழிக்க வேண்டும். அதற்குப் பதில் புத்தக் கொள்கைகளைக் கொண்ட புதிய விதிகளை உருவாக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டுமே தவிர, மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என்று கூறியே தனது தீர்வை முன்வைக்கிறார்.

‘பகவத் கீதை முட்டாளின் உளறல்’ என்றார் டாக்டர் அம்பேத்கர்.

அப்படியிருக்க அதற்கு முரணான செய்திகளை இவர் கூறுவது உண்மைக்கு மாறானது.

தந்தை பெரியாரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி, ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரும் சரி, யார் எதைக் கூறினாலும் அதிலுள்ள உண்மையை அறிந்து சரியானதை ஏற்க வேண்டும், மற்றதைத் தள்ள வேண்டும் என்றே கூறியுள்ளனர். பிறர் கூறும் நல்லவற்றை ஏற்கக் கூடாது என்று பெரியார் என்றைக்கும் சொன்னதில்லை.

பெரியாரும் அம்பேத்கரும் பல்வேறு சூழலில், பல காரணங்களுக்காகக் கூறிய செய்திகளை கத்தரித்துக் காட்டி இந்த ஆள் மக்களைக் குழப்பி ஆதாயம் தேட முயல்வதே இதன்மூலம் வெளிப்படுகிறது. மாறாக, பெரியாரும் அம்பேத்கரும் ஒரே நோக்குடையவர்கள். அவர்களின் அணுகுமுறையில் சில வேறுபாடுகள் இருக்கலாம். இதை ஊதிப் பெரிதாக்கிக் காட்ட முயல்வது ஏமாற்று வேலையாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அயல்நாட்டுக் கருத்துகள் நமக்குத் தேவையில்லை. புத்தர் கூறியவற்றிலே எல்லாம் இருக்கிறது என்று கூறியவர் அம்பேத்கர். நம் நாட்டு சிந்தனைகளே நமக்குப் போதும். அதிலுள்ள அநீதிகளை ஒழித்தால் போதும் என்பதற்கு அம்பேத்கர் கூறியவற்றை இவர் எடுத்துக்காட்டி, இந்து மத சாஸ்திரங்களை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டதுபோல் காட்ட முனைவது மோசடியாகும். இந்து மதத்தை இந்து சாஸ்திரங்களை ஒழிக்க இருவருமே தீவிரங் காட்டினார். இருவருக்கும் இதில் வேறுபாடு இல்லை.

“இரட்டைப் பேச்சுகளை அம்பேத்கர் பேசவில்லை. ஆனால், ஈ.வெ.ரா. பேசினார்.” என்பது இவர் கூறும் அடுத்த குற்றச்சாட்டு!

தந்தை பெரியார் பற்றிய உயர் மதிப்பீடுகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்று அவர் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். யார் என்ன நினைப்பார்கள், என்ன விமர்சனம் வரும் என்பதற்கு ஏற்ப பேசாதவர். மனதிற்குச் சரியென்று படுவதை ஒளிவுமறைவு இன்றி பேசுவார். போராட்ட முறையில்கூட வெளிப்படையாகவே நடப்பார். இவை அவரது இன எதிரிகளே ஒப்புக்கொண்ட உண்மை. அப்படியிருக்க, அவதூறாய்ப் பேசுவதே கொள்கையென செயல்படும் ஆர்.எஸ்.எஸ். வெறியரான இந்த நபர் திட்டமிட்டு திசைதிருப்பவே ஆதாரமில்லாமல் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை பெரியார் மீது சொல்லியுள்ளார்.

எதையும் வெளிப்படையாகப் பேசுவது அம்பேத்கருக்கும் இயல்பு. ஆக கொள்கை, எழுத்து, பேச்சு, செயல்பாடு என்று இருவரும் ஒத்த இயல்புள்ளவர்கள். அப்படியிருக்க இருவருக்கும் நேர் எதிரியான இந்த ஆர்.எஸ்.எஸ். மதவாதக் கும்பல், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அம்பேத்கருக்கும் பெருமை சேர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, ஒத்த நோக்குடையவர்களின் தொண்டர்களைப் பிரித்து பலமிழக்கச் செய்ய மேற்கொள்ளும் ஒரு மோசடி முயற்சியே இந்தக் குற்றச்சாட்டுகள்.

பார்ப்பனரல்லாத உயர்ஜாதி திராவிடர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்வெண்மணியில் கொளுத்திக் கொல்லப்பட்டதை ஈ.வெ.ரா. கண்டிக்கவே இல்லை. கூலி உயர்வு கேட்கும் போராட்டத்தை தாழ்த்தப்பட்டோர் செய்யக் காரணமானவர்களையே கண்டித்தார். இது நியாயத்திற்கு எதிரான அவரது மனநிலையைக் காட்டுகிறது என்று பெரியார் மீது குற்றஞ் சாட்டுகிறார் இந்த ஆள்.

ஆனால், இவர் கூறுவது போன்று பெரியார் கூலி உயர்வு கேட்கச் சொன்னவர்களைக் கண்டித்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

28.12.1968 விடுதலையில் அவர் எழுதிய தலையங்கத்தில்,

நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட ஆண், பெண், குழந்தைகள் உள்பட 42 பேர்கள், பதுங்கிக்கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்டிருக்கிறது.

இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டம் இல்லை.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படியிருக்க, பழிவாங்கும், ஜாதி உணர்ச்சிகொண்ட சுயநலத்தையே முக்கியமாய்க் கருதும் நீதிபதிகளே 100க்கு 90 பேர் இருக்கிறார்கள் என்று தலையங்கத்தில் கண்டித்துக் கவலைப்படுகிறார்.

‘விடுதலை’யிலும் அது பற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அவர் கூலி உயர்வு கோரிக்கையைக் கண்டித்ததாக இல்லை.

இச்சம்பவத்தையும், அது அரசாங்கத்தின் கையாலாகாத நிலையாலும், ஆதிக்கவாதிகளாலும் நடைபெறுவதையும் கண்டிக்கிறார். இதில் என்ன இரட்டை நிலை? இதில் என்ன தலித் விரோத நிலையுள்ளது? தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியார் போராடியதை அம்பேத்கர் பாராட்டுகிறார். தலித் மக்களும் பாராட்டுகிறார்கள். தலித் தகவல் ஒருங்கிணைப்பு அமைப்பு, பெரியாரும் அம்பேத்கரும் எந்த அளவிற்கு ஒருங்கிணைந்தவர்கள் என்பதைக் கூறியுள்ளனர். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ்.காரர் எதற்கு இதைப் பேசுகிறார்?

தலித்துகளை பஞ்சமர்களாக்கி, தீண்டத்தகாதவர்களாக்கி, கல்வியைப் பறித்து இன்றளவும் கொடுமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு தலித் நலம் பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது?

(தொடரும்...)

 - உண்மை இதழ், 1-15.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக