செவ்வாய், 12 நவம்பர், 2019

சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம் (2) - 24

பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் பெ.திருஞானசம்பந்தன் உரை வருமாறு:

பிரயோக விவேக ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர் தாம் இயற்றிய நூலின் சிறப்பியல்பையும் பயனையும் கூறுமிடத்து தொல்காப்பியனாரும் நன்னூலாரும் கூறிய வடமொழி இலக்கணம் பெற்ற தற்சமந் தற்பவமாகத் தத்தம் நூலுள்ளே எழுத்திற்கும் சொல்லிற்கும் காரணக்குறி இடுகுறியாகிய யோகரூட நாமங்களைச் சிறுபான்மை கூறினார். அவ்வாறு சிறுபான்மை கூறாது, யாம் இந்நூலுட் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களாற் கூறினாம். இப்பெரும்பான்மையும் கூறியது, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்று என்பதறியாது சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமையாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கி என்க. இந்நூல் செய்ததற்கும் இதுவே பயன் என்று விளக்குகிறார். ஆகவே, இவர் அகத்தியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் முதனூல் பாணினி இயற்றிய அஷ்டாத்யாயியும் இந்திரன் ஆக்கிய இலக்கணமும் என்று கொண்டார். சென்ற நூற்றாண்டில் கால்டுவெலும் இன்றைய நூற்றாண்டில் பர்ரோ, எமனோ, சுநீதிகுமார் சாட்டர்ஜி முதலான பல்வேறு ஆரிய திராவிட மொழியாய்வாளர்களும் இக்கூற்று முற்றிலும் தவறானது என்பதைத் தெள்ளிதின் நிலை நாட்டிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் சொல்லப்போனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கருத்தைச் சிவஞானமுனிவர் தெளிவாகக் கூறிவிட்டார் என்பதை நாம் காண்கிறோம்.

காரகத்திற்குரிய பெயர்களுள் கருத்தா, கருமம், கரணம், அவதி, ஆதாரம் என்ற வடமொழிப் பெயர்களையே எடுத்தாள்கிறார். ஆறாம் வேற்றுமையைக் காரகமாகக் கொள்பவன் என்ற பொருளில் வரும் நான்காம் வேற்றுமைக்குரிய காரகத்தை மட்டும் கோளி என்ற தமிழ்ச் சொல்லாகக் குறிப்பிடுகிறார்.

வடமொழியில் ஆண், பெண், அலி என்ற முப்பாலிலும் வரும் சொல் ஏழு வேற்றுமைகளையும், ஒருமை, இருமை, பன்மை என்ற மூன்று எண்களையும் கொண்டு உறழ 63 வடிவங்களைப் பெறுகின்றன. இவற்றிற்கொப்பத் தமிழிலும் 64 வடிவங்கள் உளவாக ஆசிரியர் கருதுகின்றார். பெயர் உருபு எட்டுடன் வேற்றுமை உருபு எட்டையும் உறழ்ந்து இவ்வெண்ணைப் பெறுகிறார். வினையியலில் துமந்தம், துவாந்தம் என்பவற்றைத் தமிழ்ச் சொற்களோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார்.

இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். இவரது இலக்கணக் கொத்து வடமொழி இலக்கணத்தை உட்கொண்டு அமைந்துள்ளது. இவரது தீவிர வடமொழிப்பற்று இவரை வடநூலை விட்டுத் தனியே தமிழ் நடவாது என்று கூறும் அளவிற்கு அமைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் அவர் காலத்தில் நிலவிய வடமொழிச் செல்வாக்கு, அய்ந்தெழுத்தால் (ற, ன, ழ, எ, ஒ) ஒரு பாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே என்று அவர் கூறும் அளவிற்கு மிகுந்திருந்தது. வடநூலார் சந்தியக்கரம் என்பதை இணையெழுத்து என்றும் ஏகவாக்கியம் பின்னவாக்கியம் என்பனவற்றை ஒரு தொடர், பல தொடர் எனவும் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார்.

தொன்னூல் விளக்க ஆசிரியரான வீரமாமுனிவர் பொருளதிகாரத்தில் விரித்துரைக்கப்படும் பொருளாகத் தொல்காப்பியல் கூறிய அகம், புறம் என்பவற்றை விடுத்து அறம், பொருள், இன்பம், வீடு என்று கொண்டார். அதற்கு அவர் கூறும் காரணம்-பொருணூல் தந்த செந்தமிழுணர்ந்தோர் மற்றை யாவும் ஒழிய அகப்பொருள் எனச் சிற்றின்பம் ஒன்றையும், புறப்பொருள் எனப் படைச்சேவகம் ஒன்றையும் விரித்துரைத்தார். அங்ஙனம் பொதுப்படாது உரைத்த நூல் சிறுபான்மையாகையான் இங்ஙனம் அறம் முதல் நான்கிற்கேற்ப பொது நூலாக இவ்வதிகாரம் முடியும் எனவே கொள்க என்பதாகும். இப்படி வடநூலார் மரபையொட்டித் தண்டி முதலாயினோர் கூறியவாறு நால்வகைப் புருடார்த்தங்களே அகமும் புறமுமாம் என்பதோடமையாது இப்பொருள், வழக்கு, தேற்றம், தோற்றம் என மூவகைப்படும் என்றும், வடநூலார் இவற்றை ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் என்பர் என்றும் கூறினார். பொருளிலக்கணம் கூறவந்த வீரமாமுனிவர் மிருதி நூலில் கூறப்பட்டவற்றைக் கூறுவது வியப்பாகும். புறத்திணை ஒழுக்கத்தைக் கூற முற்பட்டவர், வேதநூல், நீதிநூல், மனு நூல் முதலிய நூல் வழி விலக்கியனவும் விதித்தனவும் எடுத்துக்காட்டித் தன் பொருள் தோன்ற விளக்கல் நூற்புறத்திணையாம் என்றாலும் வடநூற் கருத்துகளை மரபுக்குப் புறம்பாக இலக்கண நூலில் அமைப்பது பொருத்தமாகப்படவில்லை.

ஆரிய மொழிகளைத் தமிழிடத்துரைக்குங்காலைப்  பொதுவெழுத்தால் வரும் பதமே சிறப்புடைத்து; அல்லன வருதல் சிறப்பன்று என்ற மரபு வழிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்கிறார். தமிழிலக்கணக் குறியீட்டுச்  சொற்களுக்கு ஒத்த தன்மை உடைய வடசொற்களைத் தருவதை ஆங்காங்கு காண்கிறோம். வடநூலார் பகாப்பதத்தை ரூடம் என்பர் (சூ.46) விகுதியை பிரத்தியயம் என்பர் (சூ, 84). அநீதி, அனாதி, நிராயுதன், நிருவிகல்பம் முதலான எதிர்மறை வடசொற்கள் தமிழில் பயில்வதால் அவற்றிற்குரிய வடமொழி இலக்கணத்தை 87ஆம் சூத்திரத்தில் தருகிறார். எனினும் ஒரு சில இடங்களில் தவறான செய்திகளையும் தருகின்றார் - அடைமொழியை வடநூலார் அவ்வியயம் என்பர் (93) தந்திரம் என்னும் வடமொழியை நூலென்று வழங்குவது தமிழ் வழக்கெனக் கொள்க என்றாற் போல்வன சில.

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிவஞான சுவாமிகள் வடமொழியையும் தமிழ் மொழியையும் கற்றுத் தெளிந்தவர். வடமொழித் தத்துவ நூல்களையும் தருக்க நூல்களையும் கற்றவர். அப்படிக் கற்றுத் தெளிந்த காரணத்தால்தான் அவருக்கு முன் வந்த இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் போன்ற இலக்கண நூலாசிரியர்களைப் போலன்றி இவ்விரு மொழிகளும் இன்றைய மொழி நூலார் கூறுவதுபோல, வேறுபட்ட ஆரிய, திராவிட மொழியினங்களைச் சார்ந்தவை என்பதை இவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியில் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அய்ந்திரம் நோக்கித் தொகுத்தான் எனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம், புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்,

இரு மொழியறிவைப் பெற்றவராகலின் ஆங்காங்கு ஒப்புநோக்கு முறையில் சில கருத்துக்களைக் கூறிச் செல்கிறார். இத்தகைய ஒப்பாய்வு தெளிவைத்தரும்.

எடுத்துக்காட்டாக அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரித்து, என்ற வரியில் தெரிவித்து என நிற்கப்பாலது தெரித்து என விவ் விகுதி தொக்கி நின்றது.

இங்ஙனம் வருவனவற்றை வட நூலார் அந்தர் பாவிதணிச் என்பர். பாயிரத்தின் சிறப்பியல்பைக் கூறும்போது யாப்பு, முதலிய பொருள், கேட்போர், பயன் இந்நான்கையும் வடநூலார் ஆனந்தரியம், விடயம், அதிகாரிகள், பிரயோசனம் என்று கூறுவர் என்கிறார். முத்தமிழ் இலக்கணம் அகத்தியரால் ஆக்கப்பட்டது ஏன் என்பதை விளக்கும்போது அவரது மற்றொரு கருத்தைக் காண்கிறோம் - சோதிடம் முதலிய பிற கலைகளெல்லாம் ஆரியத்தினும் தமிழினும் ஏனைய மொழிகளினும், வேறுபாடு இன்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சில வேறுபாடு உடைமையின் அவற்றை வேறு விதிக்க வேண்டுதலானும், அதுபற்றி அகத்தியத்துள் இம்மூன்றுமே எடுத்தோதினார்.(2)

அகர இகரம் அய்காரமாகும், அகர உகரம் ஔகாரமாகும் என்ற சூத்திரங்கள் வடமொழி மரபை உளத்தில் கொண்டு போலும், சிவஞான முனிவர் இச்சூத்திரங்கள் சந்தியக்கரங் களை உணர்த்துகின்றன என்று கொண்டார்.

இக்கூற்றை மறுத்து, வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள் தொல்காப்பியம் எழுத்து அதிகார ஆராய்ச்சி என்ற நூலில், இவை சந்தியெழுத்தின் இயல்பினைக் கூறுவனவாயின். ஆசிரியர், இவற்றைத் தனியெழுத்துக்களின் இயல்பினைக் கூறும் நூன்மரபில் வைத்திருப்பார். அவ்வாறன்றி, மொழியிலுள்ள எழுத்துக்களின் இயல்பினைக் கூறும் மொழி மரபில் இவற்றை வைத்திருத்தலின், மொழியிலுள்ள அய்காரத்திற்கு அ, இ என்பது வரும் என்றும் ஔ காரத்திற்கு அ, உ என்பது வரும் என்றுமே அவர் கருத்துக் கொண்டார் என்பது அறியப்படும் என்று கூறியுள்ளார்.

அகரத்திம்பர் தோன்றும் என்னும் சூத்திரத்தின் பொருள் அகர இகரமேயன்றி அவற்றோடு யகர மெய்யும் சேர்ந்து அய்காரமாகும். அகர உகரமே யன்றி அவற்றோடு வகர மெய் சேர்த்து ஔகாரமாகும் என்றும் சிவஞான முனிவர் கூறியுள்ளார். இதற்கு அடிப்படையாக அவருக்கு அமைந்தது, அய்காரத்தில் யுகரமும் ஔகாரத்தில் வகரமும்; கலந்துள்ளன என்பது வடமொழி இலக்கண மாபாடியக்காரரான பதஞ்சலியாருக்கு உடன்பாடு என்பதாகும்.

-  விடுதலை நாளேடு 7 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக