வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழ் மொழியில் வடசொற்கள் புகுந்தமை- 30

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் (தமிழ் மொழித் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம், சென்னை - 600 005)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் உரை வருமாறு:

உலகம் தோன்றிப் பன்னெடுங் காலம் ஆகிவிட்டது. மனிதன்  தன் உள்ளக் கருத்தினை ஒருவரோடு ஒருவர்க்குத் தெரிவித்துக்கொள்ளத் தனக்கு வசதியாக மொழியினைப் படைத்துக் கொண்டான். வெண்டிரியே என்னும் மொழி நூலறிஞர் எண்ணத்தை ஏற்றிச் செல்லும் வண்டி மொழி (Language is a vehicle of thought)  என்பர். உலகில் இதுகாறும் பல்மொழிகள் தோன்றியிருந்தாலும், கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இன்றளவும் நிலைத்து நிற்பவை ஒரு சில மொழிகளே எனலாம். மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் திகழ்ந்து, இலக்கிய இலக்கணச் செல்வங்களைப் பெற்று, இன்றளவும் மாயாமல் நிலைத்து வாழும் மொழிகளாகத் தமிழ், சீனம் முதலிய மொழிகளைக் குறிப்பர். சுருங்கச் சொன்னால், தமிழ்மொழி முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்க் கருத்து வளமும் சிந்தனைச் செல்வமும் நிறைந்தமொழியாய் இலங்குகின்றது.

இத்தகு பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ் மொழியில் காலப்போக்கில் வடமொழியிலிருந்து சில சொற்கள் புகுந்தன. எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த வகையில் கலப்புகள் நேர்ந்தன என்பதனை ஒருவாறு காண்போம்.

காலப்போக்கில் ஓர் இனத்தார் பிற இனத்தாருடன் கலந்து பழகும்பொழுது, ஒன்றிரண்டு சொற்கள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குச் செல்வது இயற்கை. இயல்பாகப் புகுவது என்பது வேறு; வற்புறுத்திப் புகுவிப்பது என்பது வேறு. இயல்பாகப் புகுவதாயின் அது காலப்போக்கில் நேரிடும் மாறுதல் எனக் கொள்ளலாம். வற்புறுத்திப் புகுத்தப்படுமாயின் முதற்கண் அது வெறுப்புடன் நோக்கப்படும்; எதிர்ப்பு எழும்; எதிர்ப்புகள் அடக்கப்பட்டாலுங்கூட, உள்ளத்தில் ஓர் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்; காலப்போக்கில் உறவு பகையாக வெடிக்க வாய்ப்புண்டு. எனவே தான் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பவணந்தி முனிவர்,

"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே"

என்று குறிப்பிட்டார். அவரே புதியன புகுத்தலும் என்று சொல்லாமல் புகுதலும் என்று சொன்னார். புகுத்தல் என்பது வலிந்து மேற்கொள்ளும் முயற்சி; புகுதல் என்பது இயல்பாக நிகழும் மாறுதல்.

தமிழ் இலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பிய ஆசிரியர் தொல்காப்பியனார் பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்குங் காலையில் ஒருமொழியினர் என்றும் நினைவில் இறுத்திப் போற்றத்தக்க நெறியினைப் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளார்.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

- தொல்காப்பியம், சொல், 401

இதனால் பிறமொழிச் சொற்கள் எந்த மொழியில் புகுகின்றனவோ அந்த மொழியின் ஒலியமைப்புக்கு ஏற்றவாறு மாறி அமையவேண்டும் என்பது தொல் காப்பியனார் கருத்து என்று புலப்படுகின்றது. இவ்வாறு மாறியமைந்த வடசொற்களே ஆணை, விண்ணப்பம், ஞானம், அனுபவம், அமாவாசை முதலிய சொற்கள்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் புகுந்த சொற்கள் சில இவ்வாறு சிறு மாறுதல் பெற்றுத் தமிழுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. அய்ரோப்பா, இங்கிலாந்து, ஆங்கி லேயர், உயில், கிறிஸ்து, யோவான், உவிவிலியம் முத லான சொற்கள் எடுத்துக்காட்டு ஆகும் என்று டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் குறிப்பிடுவதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர் குறிப்பிடுகின்றார்: "தேவையும் பயனும் நோக்கி ஒரு சில சொற்களை கடன் வாங்கும்போது எதிர்ப்புணர்ச்சி எழுவதில்லை. அழகுக்காக, அலங்காரத்திற்காக என்று பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்கும்போது எதிர்ப்பு எழுகிறது (மொழி வரலாறு; கடன் வாங்கல்; பக்கம் 102)."

தொடரும்

- விடுதலை நாளேடு 28 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக