வெள்ளி, 29 நவம்பர், 2019

"தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி" (2) - 29

டாக்டர் இரா. மாணிக்கவாசகம்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் இரா.மாணிக்கவாசகம் உரை

வருமாறு:

வேதியலில் வடமொழியாக்கம் :

"வாதி கெட்டு வைத்தியன்" என்பது தமிழில் வழங்கும் ஒரு பழந்தொடர். பல்வகை மருந்துப் பொருள்கள், மூலிகைகள், உலோகங்கள் முதலியன வற்றோடு பயின்று பயின்று வேதையில் வெற்றி காணமுடியாமல் இறுதியில் மூலிகையின் குணம் முதலியன அறிந்தமையால் மருத்துவராவர் என்பது இத்தொடரின் பொருள். ரசவாதம் எனத் தற்போது குறிக்கப்பெறும் சொல்லுக்குப் பண்டைய இலக்கியங் களில் வேதித்தல் என்ற சொல்லே காணப்படுகின்றது. வேதை என்ற சொல்லும் காணப்படுகின்றது.

பரிசோதனைக் குழாய், மருந்துப் பொருட்கள், வாயு அடுப்பு போன்ற எந்தவிதத் துணைக் கருவிகளும் இல்லாமல், துருத்தி பச்சிலை முதலியன கொண்டே வேதித்தனர் என்பது அவர்தம் எல்லையில்லா அறிவாற்றலை விளக்கும். இதைக் காட்டிலும் வியக்கத் தக்க முறைகள் இருந்ததாகச் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த சித்தராக விளங்கிய இராமலிங்க அடிகளாரது குறிப்புக்களால் அறியலாம். இவர் வேதை (ரசவாதம்) ஏழுவகையாகவும் துணை வேதை (உபரசவாதம்) ஏழுவகையாகவும் ஆற்றல் கூடும் என்கிறார்.

ரசவாதம் :

ஸ்பரிசவாதம்   -    தீண்டி வேதித்தல்

ரசவாதம்   -     மருந்தால் வேதித்தல்

தூமவாதம்    -    புகையால் வேதித்தல்

தாதுவாதம்   -     உலோகத்தால் வேதித்தல்

வாக்குவாதம்       -       சொல்லால் வேதித்தல்

அக்ஷவாதம் -              பார்வையால் வேதித்தல்

அங்கப்பவாதம்-        இறையுணர்வால் வேதித்தல்

எளிதில் புரிந்துகொள்ள முடியாத சொற்களால் இராமலிங்க அடிகளாரே எழுதியுள்ளது வியப்பு. வடசொற்களுக்கு இணையான தமிழ் அடுத்து எழுதப் பெற்றுள்ளது காண்க.

உபரசவாதம் :

மந்தரவாதம்     -        சிறுநீரால் வேதித்தல்

தூளனவாதம்        -      கால் தூசால் வேதித்தல்

வாயுபிரேரகவாதம்        -நச்சுக்காற்றால் வேதித்தல்

பிரவேச விசிரிம்பிதவாதம்- தாதுப்பொருட்களால்  வேதித்தல்

தேவாங்க வாதம்     -தியானத்தால் வேதித்தல்

தந்திர வாதம்        -      காரணமின்றி வேதித்தல்

வடசொற்களுக்கான பொருளும் உடன் தரப் பெற்றுள்ளன. இத்தகைய கருத்துக்களை ஊன்றிப்படித்து ஆழ்ந்து சிந்திக்கின் அறிவியலில் மிகப் பன்மடங்கு வளர்ந்துள்ள இக்காலத்தில் ஆராய்ச்சிப்பூர்வமாக மிகப்பெரும் அளவு பணம் செலவு செய்தாலும் சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்ற முடியாத அரிய செயலை மிக எளிதாக மேற்காட்டிய வகைகளில் செய்தனர் நம் முன்னோர் என்பதை நினைத்துப் பார்த்துப் பெருமிதம் அடையாமல் இருக்கமுடியாது; வியவாமலும் இருக்க முடியாது. இதைவிட வியப்பு அத்துணை சொற்களும் இத்துறையில் வட சொற்களாக இருப்பதுவே.

ஞானத்தில் வடமொழி :

பண்டைத் தமிழகத்தில் பயின்று வந்துள்ள மிகு பழங்கடவுட் கோட்பாடு சிவன் தொடர்பானது ஆகும். பிற்காலத்தில் தோன்றிய பல்வகைப் புராணங்கள், தலக்கதைகள், சமய இலக்கியங்கள் ஆகியவை சிவனைப்பற்றித் திசை திருப்பும் உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறி இழிவுபடுத்தும் நிலைக்குக் காரணமாயின என்பது உண்மை. ஓர் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவனாக விளங்கியவன் சிவன். அனைத்துச் சித்தர்களும் இக்கருத்தைக் கூறுவதைக் காணலாம். சிவன் அகத்தியர்க்கு உணர்த்த, அகத்தியர் பிறருக்கு உணர்த்த வந்த ஆன்மீக அறிவு என்பதைச் சித்தர்கள் மரபு ஆய்வாளர்கள் நன்கு அறிவர். இந்தச் சித்தர்கள் கண்ட கடவுட்கொள்கையே சித்தாந்தம் என்பது. சித்தர்கள் கண்ட முடிபு என்பது இச்சொல்லின் பொருளாகும்.

தமிழகத்தில் கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய சைவ சமய சாத்திரங்கள் பதினான்குக்கும் அடிப்படை சித்தர் பாடல்களே. காலம் கணித்துச் சொல்லமுடியாத வாழ்வினையுடைய சித்தர்களில் தொன்மையான அகத்தியர், தமிழில் முதல் தந்திர சாத்திரம் எழுதிய திருமூலர் முதலியோரின் நூல்களில் காணப்பெறும் கருத்துக்களின் ஒருபகுதியே சாத்திரங்களாக மலர்ந்தது என்பதை இரண்டும் பயின்றார் அறிவர். தத்துவங்களைச் சொன்ன அவர்கள் சமயம் என்னும் வட்டத்தை உருவாக்கவில்லை. பின்னர் வந்தவர்களே சைவ சித்தாந்தம் என்னும் எல்லையுடைய சொல்லைத் தோற்றுவித்தனர்.  தமிழ்ச் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டுப் பின்னர் வந்த சாத்திர வல்லுநர்களால் வளர்க்கப்பெற்ற சித்தாந்தத்தில் காணப்பெறும் வடசொற்களின் விழுக்காடும் வியக்கத்தக்கதாகவே உள்ளது.

கீழே சில வடசொற்களும் இணையான தமிழ்ச் சொற்களும் சான்றாகத் தரப் பெற்றுள்ளன.

சர்வஞ் ஞன்   - முற்றுணர்வினன்

இச்சா சக்தி       - விழை வாற்றல்

கிரியாசக்தி      - செயலாற்றல்

ஞானசக்தி    - அறிவாற்றல்

திரோதானசக்தி         - மறைப்பாற்றல்

அனுக்கிரகசக்தி        - அருளாற்றல்

மலபரிபாகம்        - மலநீக்கம்

இந்திரியம்    - பொறி

கரணம்     - கருவி

சாலோகம்      - இறையுலகு பேறு

சாமீப்யம்     - இறையருகு பேறு

சாரூபம்       - இறையுரு பேறு

சாயுச்சியம்      - இறையாதல் பேறு

பஞ்சாட்சரம்     - அய்ந்தெழுத்து

சகமார்க்கம்   - தோழமை நெறி

தாசமார்க்கம்     - அடிமை நெறி

சற்புத்ரமார்க்கம்       - மகன்மை நெறி

இத்தகைய சொற்களின் பட்டியல் மிகப் பெரிதாகும் தன்மையது.  இடம் கருதி சில சான்றுகளே தரப்பெற்றன.

யோகத்தில் வடமொழி

இணைதல் என்னும் பொருளுடைய 'யுஜ்' என்னும் சொல்லில் இருந்து யோகம் என்னும் சொல் தோன்றியதாகச் சொல்வர். சிற்றணு பேரணுவுடன் (ஜீவன் - சிவனுடன்) இணைதற்கான முயற்சியே இது. இதுவும் தமிழர்க்குத் தொன்றுதொட்டு அறிமுகம் ஆன துறையே. இந்திய நாகரிகத்தின் தொன்மையான சிந்துவெளிப் பகுதியினர் யோகம் பயின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதையும், அந்த நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதையும் திராவிட நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதையும் ஆராய்ச்சி அறிஞர்கள் பலரும் ஏற்பர்.

இந்த இறையொன்றல்  ( யோகம் ) துறையிலும் வடசொற்கள் மிகுந்து காணப்பெறுகின்றன.

சான்றாகச் சில :

அஷ்டாங்க யோகம்       - எண்நிலையொன்றல்

அஷ்டமா சித்து     - எண்பெரும் பேறு

ரேசகம்      -   விடுதல் ( வளி )

பூரகம்     -   வாங்கல் ( வளி )

கும்பகம்      -   உள்ளடக்கல்

பிரமாந்திரம்    - பெருந்துளை

ஸ்தூல தேகம்   -   பருஉடல்

சூட்சும தேகம்     -   நுண்உடல்

சாக்கிரம்    -   நினைவு

சொப்னம்     -   கனவு

துரியம்      -   பேருறக்கம்

துரியாதீதம்     -   உயிர்ப்படங்கல்

காயப் பிரவேசம்   -   கூடுவிட்டுக் கூடுபாய்தல்

ஆகாயப் பிரவேசம் -   வெளிப்பயணம்

பிறதுறைகள் :

மேற்காட்டிய துறைகளில் மட்டுமல்லாமல் சோதிடம், மந்திரம் ஆகிய சித்தர்கள் கண்ட பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வட சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

முடிவுரை :

தமிழகத்தில் தோன்றிய இறையுணர்வு மிக்கச் சித்தர்கள் தமிழுக்கும் மக்கட் கூட்டத்திற்கும் மருத்துவம் முதலிய பல துறைகளினாலும் தொண்டாற்றியுள்ளனர் என்பதையும், அந்த நூல்களில் கூறப்பெற்றுள்ளவற்றில் பல மறைபொருட் கூற்றாகவே இருப்பினும் எவ்வாறோ வடசொல்லாகவும் விரைந்து நிகழ்ந்துள்ளன என்பதையும் சிற்சில சான்றுகளுடன் இக்கட்டுரையில் கூறப்பெற்றது.

தமிழ்ச் சித்தர்கள் கண்ட அனைத்துத் துறைகளும் இன்றைய தமிழகத்தில் உள்ளன. ஆனால் சொற்கள் இல்லை அவற்றை மீண்டும் தமிழாக்கி மக்கள் வழக்கில் கொண்டுவரச் செய்து தமிழும் தமிழனும் இழந்த புகழை நிலை நிறுத்துவதே அவை பயின்ற அறிஞர்தம் கடனாக இருத்தல் வேண்டும்..

-  விடுதலை நாளேடு 26 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக