வியாழன், 29 ஆகஸ்ட், 2019

செயலாற்றிய காலம் - சேலத்தில் அன்று!

1944 சேலம் திராவிடர் கழக பெயர் மாற்ற நீதிக்கட்சி மாநாடு - சில நினைவுகள்; நிகழ்வுகள்!


கி. வீரமணி




சேலத்தில் திராவிடர் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா மாநாடு 27.8.2019 அன்று, முன்பு சேலத்தில் அம்மாநாடு நடைபெற்ற அதே நாளில் ஏற்பாடு ஆகி, தோழர்களும், ஆதரவாளர்களும், அன்பர்களும், பகுத்தறி வாளரும், உழைப்புத் தேனீக்களாகி மாநாட் டின் வெற்றிக்கு அயராது உழைத்து வரு கின்றார்கள்.

75 ஆண்டுகளுக்கு முன் நான் 11 வயதுச் சிறுவன். 1943 ஜூலையில்  முதல் முதல் அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு ஏட்டிற்கு நிதி ரூ.112 கொடுக்க ஏற்பாடுசெய்திருந்தார் எனது ஆசான் ஆ. திராவிடமணி. அக்கூட்டத்தில் என்னை மேசைமீது ஏற்றி நிற்க வைத்துப் பேசும் படிப் பணித்தார். அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேசினேன்; கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் என்று கூறுவதைவிட - நம் கழக ஏடுகள் 'குடிஅரசு',  'விடுதலை', 'திராவிட நாடு' ஆகியவையை பாடம் போல் படித்து ஏற்கெனவே ஓரளவு புரிந்துகொண்ட மாணவர் குழாமில் நான் தேர்வு செய்யப்பட்டவன்.

அதற்கிடையில் பல பொதுக் கூட்டங்கள் - நாங்களே தொண்டர்கள், ஏற்பாட்டாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம்;  பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா. நெடுஞ்செழியன் - அண்ணாமலைப் பல்கலைக் கழக மாண வர்கள், அழைத்தவுடன் வந்து சனி, ஞாயிறு களில் பேசி விட்டுத் திரும்புவர். அவர்களை வரவேற்று, தங்க வைத்து, பாராமரிக்கும்  - உபசரிக்கும் பணி எங்கள் மாணவப் பட்டாளங் களுக்கே; காரணம் ஆசிரியர் ஆ. திராவிடமணி அலுவலகம் சென்று மாலை 4, 5 மணி அளவில் தான்  வருவார். அதன் பின்னர்தான் சில கழகத் தோழர்களுடன் நீதிக்கட்சிக்கான சிவப்பு - வெள்ளை - தராசுக் கொடி, புலி - வில் - கயல் - தமிழ்க் கொடி - இரண்டும் ஏந்தி 10 பேர் களானாலும் முழக்கம் போட்டு ஊரைக் கூட்டி கூட்டம் நடத்துவோம்.

29 ஜூலை 1944 திருப்பாதிரிப்புலியூரில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு காலை முத்தய்யா டாக்கீசில், மாலை நிகழ்வு மஞ்சை நகர் மைதானத்தில்! இரயிலில் வந்த அய்யா பெரியாரும், அன்னை மணியம்மை யாரும் தோழர்களால் வரவேற்கப்பட்டு திருப் பாதிரிப்புலியூரில் (கடலூர் NT) ஒரு சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.

என்னை அய்யாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார் டார்ப்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம்! அய்யா, அம்மாவை முதல் முறை பார்த்தேன்; அவர்கள் கேட்ட கேள்வி களுக்குப்  பதில் கூறி விடை பெற்றேன்.

காலை  மாநாடு - அதில் அய்யா - அண்ணா பேசுமுன் என்னை மேசைமீது தூக்கி நிறுத்தி னார்கள். பயமறியாது பேசினேன்; அடுத்துப் பேசினார் அண்ணா.  அதில் தான்  என்னைக் குறித்து "திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர்" என்று  உவமை கூறினார். "இவர் அருந்தியது பார்வதியின் பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்" என்றும் குறிப் பிட்டார். அடுத்து அய்யா பேசும் போது எதிர்ப்பு  - அய்யா அதனை எதிர் கொண்டவிதம் - என் உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வு இன்றும்கூட உறுதியாக நிற்க உதவுகிறது. சிங்கத்தின் கர்ஜனை என்றாலும் விளக்கமாகப் பேசி வாயடைக்க வைத்தார். எதிர்த்துக்  கேட்ட விவரம் தெரியாதவர்கள் பின்னாளில் அவரே மாறினர்; போற்றினர்.

மாலைதான் மழையும்கூட - ரிக்ஷாவில் திரும்பும்போது செருப்பு வீச்சு நிகழ்ச்சி. அவ்விடத்தில்தான் சிலை எழுப்பினர் 1972இல்! வரலாறாகி விட்டது அச்சிலை.

அம்மாநாட்டிற்கு சரியாக ஒரு மாதத்திற்குள் தான் சேலத்தில் நீதிக்கட்சி - திராவிடர் கழக மாநாடு!



ஆசிரியர், திராவிட மணியுடன் கழகத் தோழர்கள்  10 பேர் விருத்தாசலம் வழியே சேலத்திற்கு இரயிலில் சென்றோம். விருத்தா சலம் தாஸ் சைக்கிள் மார்ட்  உரிமையாளரும், கழக முக்கியஸ்தருமான திரு. சி. முனுசாமி - ஜங்ஷனில் எல்லோரும் சேர்ந்து சேலம் பாசஞ்சரில் பயணம். சின்ன சேலத்தில் தோழர் கலைமணி தலைமையில் பல தோழர்கள் - கலைமணி 'குல்' வைத்திருப்பார். 'பாகவதர் கிராப்' என்று அழைப்பர். அவர் நாடக நடிகர், பாடகர், பாட்டும் கூத்தும் பயணத்தை எளிதாக்கின!

சேலம் சென்று காலை உணவு விடுதியில் முடித்தோம்  -  பந்தலில் ஒரே முழக்கம் - சலசலப்பு, "பெரியாரே எங்கள் தலைவர்" என்று 1/32 அளவு நோட்டீசுகள் பறந்தன. தஞ்சை தோழர்கள் ஏராளம் வந்தனர். பந்தலில் கூர்க்காக்கள் - எதிர்த்து கலகம் செய்து அவர்களை விரட்டினர்.  பிறகு பி.ரெத்தினசாமி வந்து அமைதியை நிலைநாட்டினார். நம் கழகத் தோழர்களே டிக்கட் பரிசோதித்து உள்ளே அனுப்பினர்.திருவாரூரில் இருந்த திருவிடம் ஸ்டோர் ஆடை அணிகலன் உரிமையாளர் - கடலூரிலும் கடை உண்டு -  ரெங்கராஜ். அவரை "தண்டவாளம்" என்றே அழைப்பர். சிங்கராயர், முத்துகிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், ஆறுமுக நாடார் இப்படிப் பலரும் அவருடன்;  ஒருவித பரபரப்பு! ஊர் வலத்தில் அய்யா, கி.பெ.ஆ. விசுவநாதம் - 'சண்டே அப்சர்வர்' பாலசுப்ரமணியம் கொடி யேற்ற உரை - ஆங்கிலத்தில் அவர் பேச, பேராசிரியர் அன்பழகன் மொழி பெயர்ப்பு. பி.பா. என்று அழைக்கப்படும் பால சுப்பிர மணியம் பேசத் துவங்கினார். "My Leader Periyar EV Ramasami" என்று ஆரம்பித்தார்;  ஒரே கைதட்டல்! "எனது தலைவர் பெரியார் இராமசாமி  அவர்களே" என்று மொழி பெயர்த்த அன்பழகனார், "இப்படி நான் கூறவில்லை. இதோ இந்த பி.பா. கூறுகிறார்" என்றார்; கைதட்டல் அடங்க வெகு நேரமாயிற்று!!

காரணம் அவர் தந்தை பெரியாருக்கு எதிரான குழுவிற்கு கன்வீனர் போன்றவர் என்றொரு சந்தேகம்.

எதிர்த்தவர்கள் அத்துணைப் பேரும் ஒரே சரணாகதி படலம்தான். புரிந்தது தொண்டர் களுக்கு.

அண்ணாதுரை தீர்மானம் ஆரவாரத்துடன் நிறைவேறியது. எதிர்ப்பே இல்லை.

இடைவேளைக்கு -  உணவுக்குக் கலைந்தது. மீண்டும் கூடி நிகழ்ச்சிகள் தொடங்க சில மணித் துளிகள் முன்பு என்னை மேசைமீது ஏற்றிப் பேச வைத்தனர். ஒரே கை  தட்டல்,  உற்சாகம் எனக்கு,தொண்டை விக்கல், பக்கத்தில் அறிஞர் அண்ணா, சோடாவை உடைத்துக் கொடுத்துப் 'பேசு' என்றார்!

இது என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. அன்று தொடங்கியது - இன்றும் தொடருகிறது!

அய்யா இல்லை

அண்ணா இல்லை

அன்னையார் இல்லை

கலைஞர் போன்றவர்கள் இல்லை

என்றாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் வேகத்துடனும், விவேகத்துடனும், சலிக்காமல்  இன்றும் பல எதிர்ப்புகளையும் சந்தித்துத் தன் பணியைச் செய்கிறது.

தோழர்கள் விசையாக இருந்து முடுக்கி  விடுகின்றனர், எதிலும்  துணிவோடு!

எஞ்சியவை பவள விழா மாநாட்டில்! சந்திப்போமா?

- விடுதலை நாளேடு, 23. 8. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக