செவ்வாய், 28 ஜனவரி, 2020

வேத மொழியும் பேத நிலையும் - 44 -கரூர் பி.ஆர்.குப்புசாமி பி.ஏ., பி.எல்.,

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

வேதமொழியும், பேத நிலையும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கரூர் பி.ஆர்.குப்புசாமி (பி.ஏ., பி.எல்.,) ஆற்றிய உரை வருமாறு:

மனிதகுல வரலாற்றில் சமூக பேதநிலை ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது. ஏற்பட்ட பேதத்தால் ஏற்றம் பெற்றோர், ஏய்க்கப்பட்டு வாடும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரை என்றும் தலைதூக்காவண்ணம் ஏற்பாடுகள் செய்வதும் காணக் கூடியதே.

ஆனால், பேத நிலையைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கானோரே இயல்பாக ஏற்று அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம் என்பதுபோல் இருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சிகரமான சமுதாய அமைப்பைப் பிற நாடுகளில் காணுவது அரிது.

திட்டமிட்டு ஏற்படுத்திய இப் பேத நிலையை இயல்பு எனப் பாதிக்கப்பட்டோரே எண்ணி, அவ்வாறே செயல்பட்டு, அவர்கள் மேம்படச் செய்யப்படும் சமுதாய மாற்ற முயற்சிகட்கு, அவர்களே முட்டுக்கட்டையாகச் செயல்படும் விந்தை வேறு எங்கும் இவ்வளவு நீண்ட காலம் இருப்பதைக் காணமுடியாது.

இங்குள்ள பேதநிலை, மாந்தரின் சிந்தனைமுறை, சமுதாய வாழ்நிலைகள், அனைத்து கலாச்சார அம்சங்கள், ஆயிரம் படிப் பொருளாதார அமைப்புகள் என அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கச் செய்யப்பட்டுள்ளது.

இப்படி உள்ள அமைப்பை கவனித்தால், வடமொழி இப் பேத நிலையின் உச்சாணிக் கொம்பில் உள்ளோரின் பயன் கருவியாகப் பயன்பட்டு வந்ததை-வருவதை-காணலாம்.

அம்மொழி வேதமொழி எனப்பட்டது வேதம் எனில் மறைக்கப்பட்டது (மறை) என மறைமலை அடிகளார் விளக்கினார்.

ஏற்றத்தாழ்வான சமூகத்தை நடத்த மறைக்கப்பட வேண் டியவை-ஏற்றம் பெற்றோருக்கு-ஏராளமாகி விடுகின்றன.

அப்படி மறைக்கப்பட்டு மகிமைப்படுத்தப்பட்டு தங்களுக்கென மேல்தட்டார் வைத்துக்கொண்டு, கீழோர்க்கு மறுக்கப்பட்டு வந்துள்ளவற்றைப் பார்த்தால், வடமொழி எப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பேதநிலை சமூகத்தில் மேல்தட்டுக் கருவியாகவும் செயல்பட்டு வந்தன, வருகின்றன என்பது விளங்கும்.

மாந்தர் பெயரை எடுத்துக்கொண்டால் ரமேஷ், ஆர்த்தி, சத்யா, சிந்து, ஜலஜா, ஷைலஜா, பிந்து, ப்ரியா-இவை மேல்தட்டுப் பெயர்கள்.

மண்ணாங்கட்டி, வீரன், மாறன், கருப்பன், குப்பன் இவை சாமான்யருக்குள்ளவை.

ஆண்டைகளின் கடவுள் பெயர்களோ சுகுந்த குந்தாளம்பிகை, பாலகுஜாம்பாள், பர்வதவர்த்தினி, ரிஷபர், தக்ஷினேஷ்வரர் இப்படி.

அடிமைகளின் தேவதைகளோ பரட்டத் தலைச்சி, மாசடச்சி, கருப்புராயன், சூரக்கொம்புடையார், கத்தரிக்காய் சித்தன் இப்படி.

ஊரை எடுத்துக்கொண்டாலோ அக்ரஹாரமா, வசதிபுரியா, வறுமைப் பகுதியா எனப் பேரே கூறி நிற்குமே!

மகாதானபுரம், ஆண்டான்கோவில், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீரங்கம் இவை போன்றவை ஆண்டைகள்-அக்ரஹாரம்.

மேட்டுப்பட்டி, வெட்டுக்காடு, பூலாங்காடு, பெரும்பள்ளம் இப்படி வரும் பள்ளத்தில் வீழ்ந்தோர் குடி இருப்புகள் - சேரிகள் !

மேட்டுக்குடியினர் குலங்களோ, வாதுல, பரத்துவாஜ, நைத்ருவகாஷ்யப கவுண்டின்ய, சச்மர்ஷண, ஹரித, விஷ்வாமித்ர என வரும்.

நம்மவர் குலங்களோவெனில் பெருங்குடி, காடை, பண்ணை, அந்துவன், செங்கண்ணன் என்பதாக வரும்.

அவாள் பாடுவது ஸங்கீதம், நம்மவர் வேலைக்காட்டில் மகிழ்ந்திருக்கும் வேளையில் படிப்பதுகூட ஒப்பாரி.

வீட்டிற்குள்ளே அவர்கள் ஆடும் ஆட்டம் பரம பதஸோபனம் போன்றவை. தாழ்நிலை மக்கள் ஆடுவதோ பல்லாங்குழி, தாயக்கரம் போன்றவை.

வீட்டுக்கு வெளியில் மேலவர் ஆடுவது பரத நாட்டியம், பாகவத மேளம், நம்மவர் ஆடுவது சதிர், தட்டுக்கரம், ஒயில் கும்மி.

அவர்கள் பிரவசனம், கதாகாலஷேபம் நடத்துவர். பள்ளத்தில் வீழ்ந்தோரோ குன்னுடையான் பாட்டு, முத்துப்பட்டன் கதை, அதிகப்பட்சம் பவளக்கொடி !

பெருங்கோவில்களில் பட்டர்கள், புரோகிதர்கள், சிறு கோவில்களில் பண்டாரம், பூசாரி.

அவர்களுக்கு பஜகோவிந்தம், கீதகோவிந்தம்.

பிறருக்கு வாங்கலம்மன் தாலாட்டு மாரியம்மன் ஊஞ்சல் போன்றவை. அவர்கள் பாராட்டுவது தர்மிஷ்டன், பரோபகாரி, சுந்தரபுருஷன், நாரீமணி, அபிநய சுந்தரி இப்படி.

மற்றவரோ நல்லவன், வல்லவன், வீரன், தீரன் இப்படி.

மேட்டுக்குடித் திட்டலோ, கர்மி, லோபி, துஷ்டன் இப்படி.

தமிழ் குடிமக்களோ! திருட்டுப்பயல், குருட்டுப் பயல், முட்டாள், காட்டுப்பயல் இப்படி.

அங்கே நாடகம்

இங்கே கூத்து

அங்கே ஸபா

இங்கே மைதானம்

உயர் குடியினர்க்கு புண்யாஹவசனம், ஆயுஸ் ஹோமம், சத்ருஸங்கார யாகம், சஷ்டியப்தபூர்த்தி போன்ற சடங்குகள்.

தாழ்குடியினருக்கோ மிளகாய் சுற்றிப்போடல். நெய்விளக்கு வைத்தல், முடி கயிறு கட்டல், கம்பளி கட்டல் போன்ற சடங்குகள்.

வசதி வர்க்கமோ, க்ஷேத்திராடணம் போகின்றனர். வறிய மக்களோ குலக்கோயில் சென்று கும்பிட்டு மீள்கின்றனர்.

மேட்டுக்குடியினர்க்கு பிடிப்பது தோஷம். பள்ளத்து மக்களுக்கு அடிப்பது எசவடம்.

அசிங்கமான அர்த்தங்கள் இருப்பினும் கேசவன், லிங்கம் என வடமொழியில் பெயர் வைத்துவிட்டால் தெரிவதில்லை.

அழகன், முல்லை, வெண்ணிலா, அன்பழகன், வழுதி, அல்லி என்பவற்றிற்குத் தற்போது வரவேற்புக் குறைகிறது.

புதுக்கவிதை, பொங்கிவரும் மக்களது நியாய ஆவேசத்தை அள்ளி வந்தாலும், பொறுக்கமுடியாத அளவு வடமொழி மோகத்தில் மூழ்கிவிட்ட விபத்து எப்படி நடந்தது அங்கே? சுகயுகம், ஞானி, யாத்திரைகள், சுயாகம், யாகங்கள், தரிசனம், பிரிய்லங்கள், பரீட்சை, புஷ்பம் இப்படி ஆயிரம்!

சாமான்யரின் தமிழ் கவிதை சப்பிடும்போது, ஏற்றக்குடியினர் செல்வாக்கு விரியும் இடதுசாரி இயக்கம், வாய்ப்பை நழுவவிடாமல் வடமொழியைத் திணிக்க வகை செய்துவிட்டதுபோலும் !

குற்றம் தாழ்குடித் தமிழ்ப் பற்றாளரின் மீதே!!

இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மக்களில், வெள்ளைச்சட்டை தரித்து வெளிச்சம் போட்டு வாழ வாய்ப்புக் கிடைத்தவரில் பெரும்பாலோர் (அவர் எந்த ரக சமதர்ம இயக்கத்தவராயினும்கூட) வடமொழி மோகிகளாக மாறி வருகின்றனர்.

மேட்டுக்குடியினர் நாகரிகமே மேற்கொள்ளத் தக்கது என எப்போதுமே தனம் படைத்தோர் நடந்துவந்தனர். இன்று புற்றீசல் போல் புறப்பட்ட புதுப்பணக்காரர்கள் அனைவரும் வடமொழி நேயராகத் தங்களை ஆக்கிக் கொண்டுள்ளார்கள். அதன்மூலம் அவர்கள் கல்ச்சர்டு  (Cultured) ஆகிறார்களாம்!

சினிமாக்காரர்கள் இந்த வடமொழி மோகம் மக்களிடையே வர அதிகம் காரணமாகி விட்டனர். அவர்களின் அழுகிய வாழ்வும் அழகிய வடமொழிப் பெயர்களால் மறைக்கப்படுகிறதோ! சினிமா தொடர்பான ஆண், பெண் அனைவரின் பெயர்களையும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டவும், உற்பத்தியாகும் பண்டங்கட்கு சூட்டவும் ஆன ஒரு திருக்கூத்து நடந்தேறி வருகிறது. பெரிதெல்லாம் வடமொழியே! சிறிதெல்லாம் தாய்மொழியே!

குறுக்குவழியில் பணம் சேர்த்துவிட்டவன், நமஸ்காரம் என்று கூற விழைகிறான்; வணக்கம் அவனுக்குக் கசக்கிறது.

கலப்படம் செய்துவந்த பணத்தால் கட்டப்படும் பெரிய உணவு விடுதிக்கும், தங்கும் விடுதிக்கும் பெயர்கள் ஸ்வர்க்கா, ஸ்வப்ணா, சொர்ணா, ஸ்வாகதம் முதலியன. அங்கு அதிகாலையில் வைக்கப்படும் இசை ஸுப்ரபாதம்.

கள்ளத்தால் விளைந்த காசைக்கொண்டு கட்டிய அரங்குக்குப் பெயர்கள் சவிதா, ஸ்ரீலேகா, அலங்கார், பிரீதா, ரம்யா, ரூபா.... இப்படி.

கொள்ளை அடிக்கும் குழுமங்கட்குப் பெயர்கள் கீதாலயா, அரவிந்த், ஸ்நேகா, சவும்யா, திவ்யா, ஸ்வரூப், பூமிகா, க்ரீயா இப்படி.

இது புதிதல்ல! அன்று பார்ப்பனரைப் பார்த்து மன்னர்களும், நிலப் பிரபுக்களும் கலாச்சாரம் பெற்றார்கள்.

இன்று பனியாக்கள் அதைச் செய்கிறார்கள்.

புதிய ஊரமைப்பில் பங்களா முகப்பில் உள்ள பெயர்களைப் பாருங்கள் - க்ரூபா, கீதா நித்யாலயா வகையறா.

என்றும் அக்கிரஹார இல்லங்களில் வடமொழிப் பெயர் தாங்கிய முகப்பைத்தாம் பார்க்கலாம்.

இன்று அதைப் புது வசதிப் பொதிவயிறர்கள் தம் போஷ் ஏரியாவில் (Posh area) உள்ள புதிய அரண்மனைகளுக்கு வைத்துக் கொள்கின்றனர்.

85, 90 விழுக்காடு சாமான்யர் குலங்கட்கு திருமணத்திற்கு வடமொழி மந்திரம் சொல்லும் புரோகிதர் கிடையாது. ஆனால் துட்டு சேர்ந்துவிட்ட காரணத்தினாலேயே புத்தி கெட்டு அய்யரை வைத்து விவாஹம் செய்துகொள்ளும் நிலையைப் பார்க்கிறோம்.

இதிலும் சினிமாத்தனம் போகவில்லை. எந்த சினிமாவிலும் அய்யரே திருமணத்தை நடத்தி வைக்கிறார் - வடமொழி மந்திரம் கூறி!

ஆதிக்கம் செலுத்தும், சுரண்டும் கூட்டத்தின் கருவியாக எப்படி வடமொழி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் உள்ளது என்பதை இங்கு ஓடும் ஓட்டத்தில் மட்டுமே சுட்டிக் காட்டினோம்.

இன்று அந்த மேட்டுக்குடி மக்களால், வஞ்சிக்கப்பட்ட சாமான்யர் எப்படித் தங்கள் தாய்மொழிகளை மறக்கடிக்கப் பட்டு, வடமொழி மோகம் கொள்ளுமாறு, பார்ப்பன-பணக்காரக் கூட்டுச் செய்துவருகிறது என்பதையும் நாம் கவனிக்காமல் இருக்கக்கூடாது.

சமூக பேத நிலைமையை ஒழிப்பது என்பதில், சமற்கிருத ஆதிக்கத்தை ஒழிப்பதும் அடங்கும் என்பது மேற்கூறியவற்றால் தெற்றென விளங்கும்.

இந்த ஒழிப்புப்போர் நெடுங்காலம் நடந்துதான் வருகிறது.

தன்மான இயக்கம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவை வடமொழி மரபுகளையும், வடமொழிப் பெயர்களையும், வடமொழிமூலம் திணிக்கப்பட்ட வாழ்முறைக் கோட்பாடு களையும் எதிர்த்து அழிக்கப் போராடுகின்றன.

அதற்கு அப்பாற்பட்டாலும்கூட சாமான்யர், சமற்கிருத மயமாகும் தன்மைகளைப் பலமுறைகளில் தடுத்து நிறுத்த அல்லது ஒழித்துக்கட்டும் காரியங்களை எக்காலத்திலும் செய்தே வந்துள்ளனர். வடமொழிப் புராணங்கள் மூலம் ஏற்றம் பெறும் கடவுள்களைவிட மக்கள் தங்கள் குல தெய்வங்களைத்தாம் முதல்நிலைத் தெய்வங்களாக வைத்துள்ளனர்.

3000 ஆண்டுகளாக மன்னர்களும், பலரக பிரபுக்களும், தனவேந்தர்களும், எல்லா வகைக் கலை, இலக்கிய வடிவங்கள் மூலமும் முயன்று பெருமைப்படுத்தி வைத்துள்ள வடமொழி மதச் சொற்கள் மக்களால் எப்படிப் பரிகாசமாகப் பயன்படுத்தப்படுகின்றன பாருங்கள் !

நாமஞ்சாத்திவிட்டான் !

கோவிந்தா ! கோவிந்தா !!

பஜனை(!) செய்யப்போயிட்டான் !!!

அய்ந்தாம் வேதம் !

தலையணை மந்திரம்

இப்படிப் பலப்பல.

ஆனால், சாமான்யர் தம் குல தெய்வம் தொடர்பான சொற்களைக் கொச்சைப்படுத்தினால் பொறுப்பதில்லை.

எனவே, வடமொழி-அதன் தொடர்பான நம்பிக்கைகள் எதிர்ப்பு என்பது மக்களிடையே உள்ளார்ந்து இருக்கின்றன.

என்றும் பேதநிலையை நிலைநாட்டப் பயன்படும் வடமொழியை, இன்று இந்தியாவில் பார்ப்பன-பணக்கார ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு வளர்க்க முயல்கின்றன என்பதை நாம் அறிவோம்.

எனவே, மக்களின் மேலே காட்டிய வடமொழி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டு அவர்களைச் செயலில் இறங்கச் செய்வது நம் கடமை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக