வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

மணியம்மையை திருமணம் செய்து கொண்டதற்கான பெரியாரின் விளக்கம்

நான் வாரிசாகச் செய்து கொண்ட மணியம்மை 31 வயதினரும், படித்தவரும், என்னுடன் கூடவே ஆறு ஆண்டுகள் இயக்கப் பணி புரிபவரும், என் நம்பிக்கைக்கு ஆளாகப் பத்திரிக்கை உரிமை, நிர்வாக உரிமை ஏற்று நடத்துபவரும், பணம் காசு விஷயத்தில் நம்பிக்கையாகப் பொறுப்பாக நடப்பவருமான அப்பேர்பட்டவரை, நான் சட்டப்படியான வாரிசாக வாழ்க்கை துணையாக ஆக்கினால், இதில் யாருக்கு என்ன குறைவு, கெடுதி நட்டம், ஒழுக்கக் கேடு என்று யோசித்து பாருங்கள்.

இந்த காரியத்தால் ஏற்பட்டது இன்ன தவறென்று கூற, குற்றமென்று கூற ஏதேனும் காரணம் காட்ட வேண்டுமே, இந்த பகுத்தறிவு வாதிகள்! இயக்க நலனை - பொது தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டுமென்று, என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்து கொள்கிறேன். இதில் யாருக்குத்தான் தலையிட உரிமை இருக்க முடியும்? அப்படி நான் மணந்து கொண்ட பெண் 14 வயது சிறுமியா, அல்லது 15 வயதுச் சிறுமியா? ஏதுமறியா பெண்ணை ஏமாற்றி செய்த காரியமா? வேறு யாருக்காவது உரிமையா? யாருடைய பாதுகாப்பிலாவது இருந்தவரா? தன் நலத்தை, தனது நலத்தை, தனது வாழ்வைத் தெரிந்துகொள்ள முடியாத, தகுதியில்லாத சிறுபெண்ணா? அல்லது காசு பணம் காட்டி ஏமாற்றப்பட்டதா? என்னை அறியாததா? அல்லவே.

தம் வீட்டாராலேயே ஆறு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து ஒப்புவிக்கப்பட்ட பெண் ஆயிற்றே? சொந்த வீட்டிலேயே பூப்படைந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திருமணம் செய்து கொள்ளாமல், திருமணம் செய்து கொள்வதில்லை என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்த பெண்; தன் இளமையிலேயே தன் தகப்பனாரோடு இயக்க மாநாடுகளுக்கெல்லாம் வந்து இயக்கம் - கொள்கைகளில் பற்றுதல் ஏற்படுத்திக் கொண்டு, தனது வீட்டிலும் இயக்கப் பணி செய்து கொண்டிருந்த பெண்; வேலூருக்கு நானும் இயக்க தோழர்களும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போதெல்லாம் இயக்க பற்றுதலால் யாவருக்கும் ஏற்ற பணிவிடை செய்து வந்த பெண்; 1938ஆம் ஆண்டு 'இந்தி எதிர்ப்பில்' வேலூர் சிறை சென்றவர்கெல்லாம் பணிவிடை செய்து வந்த பெண், தன் தகப்பனார் இறந்த பிறகு இறந்த மூன்றாவது மாதமே (1943 ல்) இருந்து, என்னோடு ஆறு வருட காலமாக பழகி சுற்று பயணத்தில் கூடவே இருந்து பிரச்சாரம், காரியதரிசி  வேலை, ரிப்போர்ட்டர் வேலை செய்துவரும் பெண்; என்னால் பலதடவை வற்புறுத்தப்பட்டும், அவர் பெற்றோரால் வற்புறுத்தப்பட்டும் திருமணம் வேண்டாம் என மறுத்து, தனது இயக்க தொண்டே பிரதானம் எனக் கருதி தொண்டாற்றி வந்த பெண்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணை - ஆறு வருடம் பழகி எனது முழு நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒரு பெண்ணை நான் துணைவியாக, நட்பாக, நம்பிக்கைக்கு ஏற்ற வாரிசாக ஏற்றுக்கொள்ளுகிறேன் என்றால், ஒரு கூட்டம் ஏன் ஆத்திரப்பட வேண்டும்? அதில் மற்றவர் பிரவேசிக்க உரிமைதான் ஏது?

திருவாரூர் மாநாட்டு சொற்பொழிவு (02-10-1949)
பெரியார் இன்றும் என்றும் பக் 817

#பெரியார்
#மணியம்மை

Via
Palanivel Manickam
Siva kumar pari tsf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக