வியாழன், 3 நவம்பர், 2016

அய்.ஏ.எஸ். மாணவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆசிரியர் அளித்த கொள்கை விளக்கம்

திராவிடர் கழகம் அரசியல் கட்சியா? பெரியாருக்குப் பட்டம் கொடுத்தவர்கள் யார்?

கடவுள் மறுப்புதான் உங்கள் கொள்கையா?

அய்.ஏ.எஸ். மாணவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆசிரியர் அளித்த கொள்கை விளக்கம்

சென்னை, நவ. 2- திருச்சியில் உள்ள என்.ஆர். - அய்.ஏ.எஸ். அகாடமியில் மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை விளக்க விடை அளித்தார்.

7.10.2016 அன்று திருச்சியிலுள்ள என்.ஆர். அய்.ஏ.எஸ். அகாடமியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பயிற்சி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்த பதிலளித்தார். கேள்விகளும் பதில்களும் வருமாறு:

உங்கள் கொள்கைகளின்

தலையாய கொள்கை!

கேள்வி: உங்கள் கொள்கைகளின் தலையாய கொள் கையாக உள்ளது கடவுள் இல்லை என்பது. அதனை ஏன் நீங்கள் முக்கியமாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். உங் களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? அப்படி உண் டென்றால், அதனை ஏன் நீங்கள் விட்டுவிட்டீர்கள்?

தமிழர் தலைவர் பதில்: இந்தக் கேள்வியில் ஒரு திருத்தம்.  எங்கள் கொள்கை கடவுள் இல்லை என்பதல்ல. எங்கள் கொள்கை மனிதன் மனிதனாக வாழவேண்டும். சமத்துவமாக வாழவேண்டும். எந்தவிதமான பேதமும் இல்லாமல் சமத்து வமும், சம வாய்ப்பும் பெற்றவனாக இருக்கவேண்டும் என் பதுதான் கொள்கை.

அந்தக் கொள்கைக்கு எவை எவையெல்லாம் இடை யூறாக இருக்கின்றனவோ, அந்த இடையூறுகளையெல்லாம் நீக்கினால் தான், அந்தக் கொள்கையை, லட்சியத்தை அடைய முடியும் என்பதற்காக வருகின்றபொழுது, நான் ஏன் சூத்திரன்? உழைக்காத இன்னொருவன் ஏன் பிராமணன்? ஏன் பெண்கள் அடித்தளத்தில் இருக்கவேண்டும்? எதற்காக அய்ந்தாவது ஜாதி பஞ்சமன் இருக்கவேண்டும் என்று சொன்னால், உடனே மனுதர்ம சாஸ்திரத்தை எடுத்துக் காட்டுகிறார்கள். நீயும், நானும் ஏற்பாடு செய்ததல்ல இந்தப் பேதம். பிரம்மா உண்டாக்கினான் என்கிறார்கள்.

கீதையில் சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்

நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன் என்று பகவான் கிருஷ்ணன் சொல்வதாக எழுதியிருக்கிறார்கள்.

நானே அதனை மாற்றவேண்டும் என்றால்கூட, முடியாது என்று கடவுளே கூறுவதாக எழுதியுள்ளார்கள்.

கடவுள் இதனை உண்டாக்கியவன் என்றால், மலேரி யாவை ஒழிக்கவேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? - கொசுவை ஒழிக்கவேண்டும் அல்லவா - அதனால்தான் கொசுவர்த்தி வியாபாரத்தை நிறைய பேர் செய்கிறார்கள். கொசுவை ஒழிக்காமல், மலேரியா நோயை ஒழிக்க முடியுமா?

எனவேதான், சில பேர் கொசுக்கடியையும் தாங்கிக் கொண்டு, கொசு வலையையும் போட்டுக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர, கொசுவை அழிக்கின்ற, கொசுவை உற்பத்தி செய்கின்ற சாக்கடையை அழிக்க அவர்களுக்குத் துணிவு இல்லை. எங்களுக்குத் துணிவு இருக்கிறது. ஆகவே, கடவுள் இல்லை என்று சொல்கிறோம்.

இரண்டாவதாக, உங்களில் யாருக்காவது உண்மையாக கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பவர்கள் கை தூக்குங்கள் பார்க்கலாம்.

சரி, கை தூக்கிய அந்தப் பெண்ணை நான் பாராட்டுகிறேன். எழுந்து நில்லுங்கள்.

“உங்கள் வீட்டிலுள்ள நகைப் பெட்டியை ஊருக்குச் சென்றால் பூட்டி விட்டுச் செல்வீர்களா? உங்கள் வீட்டைப் பூட்டிவிட்டுத்தானே வருவீர்கள்?” இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.

பூட்டி விட்டுத்தான் வருவேன் என்று அந்தப் பெண் பதில் சொல்கிறார்.

ஏன் பூட்டி விட்டு வருகிறீர்கள்? கடவுள் அங்கிங்கெணாத படி எங்கும் இருப்பவன். பெட்டிக்குள் இருக்கமாட்டானா?

ஏனென்றால், கடவுளுக்கு மூன்று தத்துவம் சொல் கிறார்களே,

அதில் ஒன்று, கடவுள் ‘சர்வவியாபி’

ஏன் மனிதனைவிட கடவுளைக் கும்பிடுகிறார்கள் என்றால், மனிதனை விட கடவுள் மேலானவனாம். மனிதன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. நான் இங்கே இருந்தால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இருக்க முடியாது.

கடவுள் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பாராம்!

ஆனால், கடவுள் அப்படியில்லை. கடவுள் இங்கேயும் இருப்பார்; அங்கேயும் இருப்பார்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். எல்லா இடங்களிலும் இருப்பார்.

அப்படியிருக்கும்போதுதான் - சர்வ வியாபி.

இரண்டாவதாக, கடவுள் சர்வ வல்லமை படைத்தவன். இதனை நாங்கள் சொல்லவில்லை கடவுள் நம்பிக்கை யாளர்கள் சொல்கிறார்கள்.

கடவுள் சர்வவல்லமை படைத்திருக்கும்பொழுது, உங்கள் பெட்டியில் இன்னொருவர் கையைவிட்டு நகையை எடுக்கும்பொழுது, சர்வ வல்லமை படைத்த கடவுள் என்ன செய்யவேண்டும் - அதனை அவன் வேடிக்கைப் பார்த்தால் அது நியாயமா?

கடவுள் ‘சர்வ தயாபரனான’ - கருணையே வடிவான கடவுள் என்ன சொல்லவேண்டும்? ‘‘என்னப்பா, அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான நகையை நீ எடுத்துக் கொண்டு போகிறாயே’’ என்று கண்டிக்கவேண்டாமா?

அப்படி இல்லையே!

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறாரா?

நாம் கடவுளைக் காப்பாற்றுகிறோமா?

சாமி சிலை திருட்டு உள்பட வெளிநாட்டிற்குச் சென்று, விசா வாங்காமல், பாஸ்போர்ட் இல்லாமல் சென்று - நம் நடராஜர் சிலை உள்பட - சாமி சிலை மீட்புக்காகவே ஒரு பிராஞ்ச் வைத்திருக்கிறார்கள்.

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறாரா? நாம் கடவுளைக் காப்பாற்றுகிறோமா? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஆகவே, ஒரு காலத்தில் மனிதன் இடி இடித்தவுடன், அது என்னவென்று புரியவில்லை, அதனைக் கும்பிட்டான்.

மின்னல் மின்னிற்று, அதைப்பற்றி புரியவில்லை, அதனைக் கும்பிட்டான்.

மனிதன் குகையில் வாழ்ந்தான், மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பிடித்தது, அதனை அணைக்கத் தெரியாமல், அய்யோவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

அன்றைக்கு புயலடித்தால் வாயு பகவான் என அதனைக் கும்பிட்டான்.

ஆனால், இன்றைக்கு அப்படியில்லையே, மின் விசிறி சுற்றுகிறதே, வாயு பகவான் எப்படி இருக்கிறான்?  ரெகுலேட் டரில் இருக்கிறார். நாம் மெதுவாக சுற்றச் சொன்னால், வாயு பகவான் மெதுவாகவே சுற்றவேண்டும். ஆகவேதான், அறிவு வளராத காலத்தில், வெளிச்சம் இல்லாத காலத்தில், இருட் டைப் பேய் என்று நினைத்ததுபோன்று, அந்தக் காலத்தில் இருந்ததே தவிர வேறொன்றுமில்லை.

அதனைக் காரணம் காட்டி நம்மைக் ‘கீழ்ஜாதி’ ஆக் கினார்கள்.

உங்களுக்குத் தெரியவேண்டும் என்று நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்

‘அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக’ என்று சொல்லும்பொழுது,

உழைக்கின்ற என்னை கீழ்ஜாதி என்று ஆக்கியிருக் கின்றானே என்றால், அதனை செய்தவன்மீது கோபம் வரவேண்டும் அல்லவா! அப்படி ஒருத்தன் இருக்கானா? என்று பெரியார் கேட்டார், இல்லை என்று பதில் கிடைத்தது. தனக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரியவேண்டும் என்று நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்.

திராவிடர் கழகம் அரசியல் கட்சியா?

கேள்வி: திராவிடர் கழகம் அரசியல் கட்சியா? அல்லது ஏதாவது ஒரு சிறிய தொண்டு அமைப்பா?

தழிழர் தலைவர்: திராவிடர் கழகம் எந்தக் காலத்திலும் ஒரு அரசியல் கட்சியல்ல. கட்சிக்கும் - இயக்கத்திற்கும் வித்தியாசம் உண்டு. கட்சிக்கு என்ன வேலை என்றால், தேர்தலில் நிற்பது அல்லது ஒரு இலக்கு உண்டு.

இயக்கத்திற்கு அந்த இலக்கு இல்லை. அடிப்படையில் நாங்கள் இருப்பது திராவிடர் இயக்கம். ஆங்கிலத்தில் மூவ்மெண்ட் (Movement).. கட்சி என்றால் ஆங்கிலத்தில் பார்ட்டி (party).

அவ்வப்பொழுது பார்ட்டி என்பது மாறும். அதற்குரிய வழிமுறைகள் மாறும்.

மூவ்மெண்ட் என்பது கடைசி முட்டாள் உள்ளவரை - கடைசி அறியாமை இருக்கின்ற வரையில் - ‘கடைசி இருட்டு’ இருக்கின்ற வரையில் அந்த மூவ்மெண்ட் - அந்த இயக்கம் நடந்து வருகின்ற - ஒரு பகுத்தறிவு இயக்கம் - ஒரு சமூகநீதி இயக்கம்  - பெண்ணடிமை போக்குகின்ற ஒரு இயக்கம் - எல்லோருக்கும் சம வாய்ப்பு வரவேண்டும் என்பதற்கான ஓர்  இயக்கமே தவிர - இது ஓர் அரசியல் கட்சி அல்ல.

இன்னொன்றையும் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் கட்சிக்கும், சமூக சீர்திருத்த, சமூகப் புரட்சி இயக்கத்திற்கும், பெரியார் இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு என்னவென்றால்,

அரசியல் கட்சிக்காரர்கள் மக்களுக்குப் பின்னால் போகிறவர்கள். மக்கள் எதை எதை விரும்புகிறார்களோ, அதைத்தான் சொல்வார்கள். எது மக்களுக்கு நாக்கில் தேன் தடவியதுபோன்று இருக்குமோ அதைத்தான் சொல்வார்கள். எதைக் கொடுத்தால், அவர்களுடைய வாக்குகளைப் பெற முடியும் என்று நினைக்கின்றார்களோ - அவ்வப்பொழுது ஏமாற்றி, சொல்வது அரசியல் கட்சிகளின் வேலை.

மக்களை எங்கள் பின்னால் அழைத்துப் போகக்கூடியவர்கள்!

சமுதாய இயக்கமான எங்களுடைய இயக்கம் இருக்கிறதே - நாங்கள் மக்கள் பின்னால் போகக்கூடியவர்கள் அல்ல - மக்களை எங்கள் பின்னால் அழைத்துப் போகக்கூடிய ஒரு இயக்கம்.

எங்களை அவர்கள் வெறுத்தாலும், எங்கள்மேல் கல்லைத் தூக்கி எறிந்தாலும், எங்கள்மீது சாணியைப் போட்டாலும் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம்.

பெரியாரைப்பற்றி நாம் இவ்வளவு பெருமையாகப் பேசுகின்றோம். எங்கள் ஊரில் நடந்த நிகழ்வு என்ன தெரியுமா?

1943 ஆம் ஆண்டில் கடலூருக்கு வந்தார் பெரியார் அவர்கள். ரிக்ஷாவில் அவர் வரும்பொழுது இருட்டு நேரம், பெரியார்மீது செருப்பை எறிந்தார்கள்.  நீங்கள் இதனைப் பெரியார் படத்தில் பார்த்திருப்பீர்கள். யார்மீதாவது செருப்பு எறிந்தால் கோபம் வரும். ஆனால், பெரியார் என்ன செய்தார் என்றால், கொஞ்ச தூரம் சென்றதும், வண்டியை திருப்பு என்றார்.

(உடனே மாணவர்கள் அடுத்து என்ன நடந்தது என்பதை சொல்கிறார்கள்.)

நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பிறகு ஏன் கொல்லன் தெருவில் ஊசி விற்பது. நான் உங்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு போகவேண்டுமே தவிர, உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பது அல்ல.

அவர்தாம் பெரியார் பார்! என்றார்கள்.

ஆகவேதான், அவமானங்கள், நன்றி பாராட்டாத தன்மை, இழிவுகளை ஏற்பது இவைகளையெல்லாம் தாண்டி மிகப்பெரிய அளவிற்குத் தாண்டி வருவதுதான் ஒரு சமூக இயக்கம்.

லெனினை வெறுத்தார்கள், சாக்ரட்டீசுக்கு நஞ்சு கொடுத் தார்கள். ஆனால், இன்றைக்கு அவர்களைப் பாராட்டுகிறார் கள். ஆகவேதான், புரட்சிகரமான காரியங்களைச் செய்யும் பொழுது, அந்த சமூகம் அன்றைக்கு ஏற்றுக்கொள்ளாது. பிறகுதான் மக்கள் அதனை உணருவார்கள்.

நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வது கொள்கைக்காக

அரசியல்வாதிகள் அப்படியல்ல. அப்பப்ப பெய்கின்ற மழை போன்றவர்கள். உடனே லாபம் அடையவேண்டும் - சிறைச்சாலைக்குச் சென்று திரும்பி வரவேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வது கொள்கைக்காக. அவர்கள் சிறைச்சாலைக்குச் செல்வது எதற்காகவென்று உங்களுக்குத் தெரியும். அதனை விளக்கவேண்டிய அவசியமில்லை.

எனவே, திராவிடர் கழகம் அரசியல் கட்சியாக - பெரியார் காலத்திலும் இல்லை; எங்கள் காலத்திலும் ஆகாது. இனி ஒருபோதும் ஆகாது.

காரணம், நாங்கள் கசப்பு மருந்தை வினியோகம் செய்ப வர்களே தவிர, நாங்கள் இனிப்பைக் கொடுப்பவர்கள் அல்ல.

சாரங்கபாணி எப்படி வீரமணி ஆனார்?

கேள்வி: ‘சாரங்கபாணி’ எப்படி ‘வீரமணி’ ஆனார்?

தமிழர் தலைவர்: ஒரு முஸ்லிம் பள்ளிக்கூடத்தில்  நான் இரண்டாம் வகுப்பு படித்தேன். என்னுடைய அப்பா ஒரு தையற்கடைக்காரர். அப்பொழுது நான் ஒருவரிடம் டியூசனுக் குச் சென்றேன். அங்கு டியூசன் சொல்லிக் கொடுத்தவர் தலைமை ஆசிரியராக இருந்தார். அந்த முஸ்லிம் பள்ளிக் கூடத்திற்கு ஹயர் எலிமெண்டரி பள்ளிக்கூடம் என்று பெயர். அப்பொழுதெல்லாம் எட்டாம் வகுப்புவரை உண்டு. அதற்குப் பிறகு இ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதவேண்டும்.

இரண்டாம் வகுப்பில், கிங் சாலமன் கதை இருக்கிறது தெரியுமல்லவா, அந்தக் கதையில் குழந்தையைக் கொண்டு வந்து என்னுடைய குழந்தை என்று சொல்வார்கள். அந்த நாடகத்தில் எனக்கு ராஜா வேடம் கொடுத்தார்கள். எழுத் தாளர் ஜெயகாந்தன் அவர்களும், நாங்களும் ஒரே தெருவில் வசித்தவர்கள். ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஆனால், எனக்கு நேர் எதிரானவர் கொள்கையில் அவர்.

நான் அந்தப் பக்கம் போனால், சாரங்கபாணி ஒழிக! என்று முழக்கமிடுபவர். அவருடைய அப்பா திராவிடர் கழகத்துக் காரர். அவருடைய அத்தை எனக்கு திண்ணைப் பள்ளிகூட வாத்தியாராக இருந்தவர்.

பிறகு நாங்கள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றோம். அந்தப் பள்ளிக்கூட நாடகத்தில் நடித்தபொழுது வசனம் கொடுத் தார்கள், அதனை நான் வீரத்தோடு பேசினேன்.

உடனே எங்களுடைய ஆசிரியர் அழைத்து, நீ நன்றாகப் பேசுகிறாய்; வாரா வாரம் பிள்ளைகளை அழைத்து பேச்சுப் பயிற்சி கொடுக்கலாம் என்றார்.

அவர் நிறைய பேருக்கு இலவசமாக டியூசன் சொல்லிக் கொடுத்தார்.

அப்பொழுது, நீதிக்கட்சி வந்து - தமிழின உணர்வு வரவேண்டும் - தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் வரவேண்டும் என்று சொன்னவுடன்,  கும்பகோணத்துக் கடவுள் பெயரான சாரங்கபாணி பெயரை எனக்கு வைத்திருந்தார்கள். அதை வீரமணி என்று அவர் மாற்றினார். அவருடைய பெயர் சுப்பிரமணி என்றிருந்தது - அதனை அவர் திராவிடமணி என்று மாற்றிக் கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில்தான், நாராயணசாமி என்ற பெயர் நாவலர் நெடுஞ்செழியனாயிற்று. ராமய்யா என்ற பெயர் பேராசிரியர் அன்பழகன் ஆயிற்று. சோமசுந்தரம் என்கிற பெயர் மதியழகனாயிற்று.

ஆனால், இப்பொழுது குழந்தைகளுக்கு வைக்கின்ற பெயர் ‘உஷ், புஷ்’ என்று வாயில் நுழைய முடியாததாக இருக்கிறது.

அதற்கு முன்பெல்லாம் சிவராஜன் என்று எழுதுவோம். இப்பொழுது தொலைக்காட்சிகளில்கூட ஒரு புது மோகம் எப்படி வந்திருக்கிறது என்றால், ஷிவ்ராஜ், ஷிவ்குமார் என்று. அது உச்சரிப்புக்கே - வயிற்றுக்கே இடைஞ்சலாகும்.

எனவே, நீங்கள் எல்லாம் திருமணமாகி சென்றாலும், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வையுங்கள், தமிழ்நாட்டில். முல்லை என்று பெயர் வையுங்கள். பூக்களின் பெயர் வையுங்கள். தலைவர்களின் பெயர் வையுங்கள். அந்தக் காலத்துப் புலவர்களின் பெயர் வையுங்கள். வாயில் நுழைகின்ற மாதிரி பெயர் வையுங்கள் அதுதான் மிக முக்கியம்.

பெரியார் பட்டம் கொடுத்தது யார்?

கேள்வி: பெரியார் என்று பட்டம் கொடுத்தது தர்மமாம்பாள் என்று நாங்கள் படிக்கிறோம். ஆனால், சில புத்தகங்களில் சிவராஜ் மீனாம்பாள் என்று இருக்கிறதே?

தமிழர் தலைவர்: மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மேயர் சிவராஜ் அவர்களுடைய வாழ்விணையர். அந்த அம்மையார் தந்தை பெரியாரை, அப்பா என்றுதான் அழைப்பார்கள். பெண்கள் மாநாடு 1938 ஆம் ஆண்டு நடைபெற்றது. நீலாம்பிகை என்பவர் (மறைமலை அடிகளாரின் மகள்) அந்த மாநாட்டில் இருந்தார். எல்லோரும் சேர்ந்துதான் பட்டம் கொடுத்தார்கள்.

அவர் கொடுத்தாரா? இவர் கொடுத்தாரா? என்று சர்ச்சை வேண்டாம். ஆகமொத்தம் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆண்களைவிட பெண்கள்தான் தொலைநோக்கு உள்ளவர்கள் என்பதற்கு அடையாளம், பெரியாரை, பெரியார் என்று முதலில் அடையாளம் கண்டுகொண்ட பெருமை பெண்ணுலகத்திற்கே உண்டு.

ஆகவே, தருமாம்பாளாக இருந்தாலும், மீனாம்பாள் சிவராஜாக இருந்தாலும், அவர்கள் அக்கா - தங்கை போன்று ஒன்றுபட்ட இயக்கத்து சுயமரியாதை வீராங்கனைகள். அவர்கள் எல்லாம் இணைந்துதான் பெரியார் என்ற அந்தப் பட்டத்தைக் கொடுத்தார்கள். அதிலொன்றும் கோடு போட்டு பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எல்லாம் பிரிக்கப்படக் கூடியவர்கள் அல்ல. ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.

உங்கள் குடும்பத்தினர்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா?

கேள்வி: உங்கள் குடும்பத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா?

தமிழர் தலைவர்: என்னுடைய குடும்பத்தைப் பொருத்த வரையில், என்னுடைய அப்பாவிற்கு கடவுள் நம்பிக்கை உண்டு. முழுக்க முழுக்க நான் ஆசிரியர் திராவிடமணியினுடைய மாணவனாகவே வந்துவிட்டேன்.  ‘ராமலிங்க பக்த ஜனசபை’ என்கிற ஒரு இடம் இருந்தது. அதில் அருட்பா எல்லாம் படிக்கும்பொழுது,

அய்ந்தாவது திருமுறையிலிருந்து, ஆறாவது திரு முறைக்கு மாறிவிட்டார். அப்படி மாறி வந்து அருட்பாவை படிக்கின்றபொழுது, எனக்கு அருட்பா மீது ஒரு பெரிய விருப்பம்.

நான் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, ராமலிங்க சாமி சிலையை வைத்து, திருவருட்பாவை, பொருள் புரிகிறதோ, இல்லையோ கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருப்பேன்.

பிறகு உருவ வழிபாடு தேவையில்லை என்று படிப்படியாக வந்து, எனக்கென்று சிந்திக்கக்கூடிய ஆற்றல் வந்து, அந்தக் கருத்துகளை மேலாக்கி - 1943ஆம் ஆண்டு கடலூரில், பேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிட நாடு பத்திரிகையை ஆரம்பிக்கும்பொழுது, அதற்காக 101 ரூபாயை வசூல் செய்து கொடுத்தோம். இன்றைக்கு ஆயிரம் கோடி ரூபாய் போன்றது.

அந்த விழாவில், மேஜையின்மீது ஏறி என்னை உரையாற்றச் சொன்னார்கள். அந்தப் பயிற்சி எடுத்ததிலிருந்து எனக்கு கடவுள் நம்பிக்கையோ மற்றவையோ கிடையாது.

எங்கள் குடும்பம் ஒரு நல்ல

“பல பட்டறை” குடும்பம்!

கடவுள் நம்பிக்கை இல்லாததினால்தான், இவ்வளவு தன்னம்பிக்கை யோடு வாழ்க்கையில் நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு என்னுடைய குடும்பத்தில், என்னுடைய பிள்ளைகள் யாரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கிடையாது. என்னுடைய குடும்பத்தினருக்கு ஜாதி மறுப்புத் திருமணம் - மத மறுப்புத் திருமணம் - மாகாண மறுப்புத் திருமணம் - தேச மறுப்புத் திருமணம் - இவை அத்தனையும் சேர்ந்து - எங்கள் குடும்பம் ஒரு நல்ல பல பட்டறை குடும்பம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்கிறேன்.

கோபமாக சில பேர் சொல்வார்கள், இது ‘பல பட்டறை’ என்று. பல பட்டறை இருந்தால் நல்லதுதானே! ஒட்டு மாம்பழம் இரண்டு சேர்ந்தாலே மிகவும் சுவையாக இருக்கிறது. எங்களுடைய பேரப் பிள்ளைகள் எல்லாம் எங்களைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஒருவேளை அதுதான் காரணமோ என்னமோ தெரியவில்லை. அறிவியல்வாதிகள் நீங்கள்தான் சொல்லவேண்டும்.

எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. இன்னொரு பெருமையான செய்தி என்னவென்றால், என்னைவிட, என்னுடைய வாழ்விணையர் மிகத் தீவிரமான கொள்கையாளர். கடவுள் மறுப்பு மற்றவை எல்லாவற்றிலும்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம், அய்யாவிற்கு மிகவும் மரியாதை உண்டு.

‘என்னங்க சாமி, சாமி எப்போ வருகிறீர்கள் என்று அந்த மடத்தினுடைய சம்பிரதாயத்தைக் குறைக்கக்கூடாது என்பதற்காக சொல்வேன்.

பெரியாருடைய சீடன் நான். அதனால், பெரியார் எப்படி அழைத்தாரோ, அப்படி அழைப்பதுதான் மரபு என்று நான் நினைத்து, என்னிடம் பெரியார் அய்யாவிற்குப் பிறகு, தொலைபேசியில் பேசுவார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அப்படி பேசும்பொழுது, சரிங்க சாமி, எப்பொழுது வருகிறீர்கள், சந்திக்கலாமா? என்று கேட்பேன்.

என்னுடைய பிள்ளைகள் அருகில் நின்றுகொண்டு கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

நான் பேசி முடித்தவுடன், ‘ஏம்பா, சாமி, சாமி என்கிறீர்களே, நீங்கள்தான் சாமி என்று சொல்லவே கூடாது என்பீர்கள். அவரைப் போய், மனிதனைப் போய் ஏன் சாமி என்று சொல்கிறீர்களே’ அதற்கு என்ன அர்த்தம் என்பார்கள்.

நான் உடனே, அல்ல, அவருக்குரிய மரியாதையான ஒரு வார்த்தை என்பதினால்தான் சொல்கிறேன் என்றேன்.

என்ன இருந்தாலும், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது அப்பா என்பார்கள்!

நான் பெரியாரைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்

உன் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற அளவிற்கு நீ வளர்ந்துவிட்டாய். உன்னை நான் பாராட்டுகிறேன். அதில் நான் ‘பிற்போக்குவாதிதான்’. நான் பெரியாரைப் பின்பற்றிக் கொண்டிருக் கிறேன் என்று ஒப்புக்குச் சொல்வேன்.

ஆகவேதான்,

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மண்ணுயிர்க் கெல்லாம் இனிது

என்பதுதான் சிறப்பு.

பயத்தை ஏற்படுத்தித்தானே கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தி யிருக்கிறார்கள்

ஆகவே, எங்கள் குடும்பத்தில் இரட்டை வேடம் போடவேண்டிய அவசியமே கிடையாது. நம்பவில்லை என்றால், நம்பவில்லை என்று சொல்லுங்கள்.

இவன் என்ன செய்திருக்கிறான், பயத்தை ஏற்படுத்தித்தானே கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.

நம்பியவர்களுக்கு நடராஜா! நம்பாதவர்களுக்கு எமராஜா! என்று சொன்னார்கள். பிறகு யார் எமராஜாவிடம் செல்வதற்குத் தயாராக இருப்பார்கள்?

இறைவனடி என்ன சாராயக்கடையா?

இறந்து போனவர்களுக்கு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறார்கள் நம் நாட்டில்; இதனை நீங்கள் நாள்தோறும் பார்க்கலாம். அவர்கள் கடவுளை நம்பியா விளம்பரம் கொடுக்கிறார்கள்.

நல்ல செல்வந்தராக இருப்பார் - ஆண்டுதோறும் அரைப்பக்கம் விளம்பரம் கொடுப்பார்கள்.

“இறைவனடி சேர்ந்தார் - என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இறைவனடி என்ன சாராயக்கடையா? நியாயமாக என்ன சொல்லவேண்டும்? ஒவ்வொருவரும் இறைவனடியை எப்பொழுது அடைவோம் என்று அல்லவா இருக்கவேண்டும்.

அப்படி சேரக்கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவு டாக்டர்கள் - இவ்வளவு மருத்துவமனைகள் - இவ்வளவு பேர் மருத்துவப் படிப்பு படிக்கிறார்கள். அதனை எவ்வளவு நாள் தள்ளிப் போட முடியுமோ, அவ்வளவு நாள் தள்ளிப் போடுகிறார்கள்!

அச்சம் என்பது மடமையடா!

ஆனால், இரட்டை வாழ்க்கை. சமுதாயத்தில், தோழர்களே, தோழியர்களே! நீங்கள் இரட்டை வாழ்க்கை வாழாதீர்கள். தைரியமாகச் சொல்லுங்கள். பயம் கூடாது.

அச்சம் என்பது மடமையடா!

அஞ்சாமை திராவிடர் உடைமையடா!

மிக்க மகிழ்ச்சி. நேரமின்மைக் காரணத்தினால் சில கேள்விக ளோடு நிறுத்திக் கொண்டீர்கள்.

அடுத்த முறை இங்கே நான் வரும்பொழுது, சமூகநீதி சம்பந்தமாக - உங்கள் பாடத் திட்டத்திற்குச் சம்பந்தமானது - மண்டல் கமிசன் - இட ஒதுக்கீடு போன்ற பல விஷயங்களில் நீங்கள் கேள்வி கேட்கலாம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்

-விடுதலை,2.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக