திங்கள், 7 நவம்பர், 2016

சச்சி ராமாயண் எழுதிய பெரியார் லலாய் சிங் பற்றிய சில வரிகள்


தந்தைபெரியார் 1973 டிசம்பர் 24-ஆம் தேதி இறந்துவிட்டார் என்ற செய்தி லாலய் சிங்கிற்கு அவரது சென்னை நண்பர் மூலம் கிடைத்தது, அய்யா இறந்த நினைவு நாள் நிகழ்ச்சியை சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கூடி நினைவஞ்சலி செலுத்தினர். இதற்கு தலைமையேற்ற லலாய் சிங் 3 மணி நேரம் உரையாற்றினார்.
அன்று இரவு முதல் உடல்நிலை சீர்குலைந்தது, சிலநாட்கள் அய்யா அவர்களின் மறைவு செய்தியினால் கவலையில் மூழ்கி உணவு தண்ணீர் அருந்தாமல் இருந்த காரணத்தால் உடல் மிகவும் நலிவுற்றார். அதன் பிறகு அவரது நாத்திக நண்பர்கள் ஒன்று கூடி சீர்திருத்தவாதிகள் மறைந்துவிட்டால் அவர்களின் பணியை நாம் தான் எடுத்துச் செல்ல வேண்டும் நாம் சோர்ந்துவிட்டால் பெரியாரின் பணிகளை யார் எடுத்துச்செல்வது என்று கூறி அவருக்கு பெரியார் லலாய் சிங்யாதவ் என்று பெயர் சூட்டினர்.
பெரியாரின் மறைவிற்குப் பிறகு லலாய் சிங் முழுமையான சமூகப் பணியில் இறங்கினார். தனது நிலங்களை விற்று 3 பதிப்பகங்களை கான்பூர் நகரில் வாங்கினார். அதன் மூலம் வேதம், ஸ்மிருதி, உபநிடதம், ராமாயணம், மகாபாரதம், கீதை, மற்றும் இந்துமதப் புராணங்களை படித்து அது முழுக்க மக்களை ஏமாற்ற எழுதிய ஆபாச அருவருப்புக் கதைகள் என்று கூறி அதற்கான ஆதாரங்களை தொடர்ந்து சிறு சிறு நூல்களாக வெளியிட்டு வந்தார்.
அவரது நூல்கள் தொடர்ந்து உபி அரசால் தடைசெய்யப்பட்டு வந்தாலும், அவரும் துணிச்சலுடன் எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று நூல்களுக்கான தடையை நீக்கி மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்தார். அப்படி அரசால்  தடை விலக்கப்பட்ட நூல்களை  இலவச மாக மக்களுக்கு கொடுத்து வந்தார்.
தனது 80-ஆவது வயதில் பெரியார் ஜன் ஜாகிருதி சன்ஸ்தான் (பெரியார் மக்கள் விழிப்புணர்வு அமைப்பு) என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு கருத்தரங்கங்களை நடத்தி வந்தார்.
1993-ஆம் ஆண்டு அவரது மறைவிற்குப் பிறகு 2006-ஆம் ஆண்டு அந்த அமைப்பின் செயலாளர் ராஜ்வசி, மற்றும் துணைச் செயலாளர் ரகுவீர் சிங் ஆகியோர்   பெரியார் ஜன் ஜாகிருதி சன்ஸ்தான் என்ற அமைப்பை பெரியார் லலாய் சிங் ஜன் ஜாகிருதி சன்ஸ்தான் என்று புதிய பெயரிட்டு அதை உத்தரப்பிரதேச அரசு பதிவு எண் 2427/26.12.2006 அன்று பதிவு செய்தார்கள்.
இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாத்திக மாநாடுகள் நடத்தப்பட்டும் ஆண்டு தோறும் சிறந்த நாத்திகர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.
-விடுதலை ஞா.ம.30.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக