சனி, 19 நவம்பர், 2016

துவேசிப்பவர்கள் யார்?

வகுப்புத் துவேஷத்தை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும், சயமரியாதைக்காரர்களும், புதிதாக உண்டாக்கு கிறார்களா?

ஏற்கெனவே நீடித்த காலமாய் இருந்து வருவதைக் காட்டி அதை அடியோடு ஒழிக்கப் பார்க்கிறார்களா என்று யோசித்துப் பார்க்குபடி பொது மக்களை கேட்கின்றோம்.

வகுப்பு என்பது யாரால் ஏற்பட்டது?

வகுப்புக்கு வகுப்பு பேதமும், மேல் கீழ் தன்மையும் யாரால் ஏற்பட்டன?

கீழ் வகுப்பார் என்பவர்களைக் கொடுமை செய்து வருகிறவர்கள் யார்?

பெருங்குடி மக்களைச் சூத்திரன் என்றும், 4ஆவது வகுப்பான் என்று சொல்லுகிறவர்கள் யார்?

‘பிராமணனுக்கு வேறு இடம், சூத்திரனுக்கு வேறு இடம்’ என்று சொல்லி எழுதிக் காட்டியிருப்பவர்கள் யார்?

‘பஞ்சமருக்கு இடமில்லை’ என்று எழுதி வைத்தி ருப்பவர்கள் யார்?

‘பார்ப்பனர்களுக்கு மாத்திரம்’ என்று விளம்பரம் செய்தவர்கள் யார்?

மக்களைப் “பிறப்பித்த கடவுளை” ஆராதிக்க வேண்டுமானால், எங்கள் மூலம் தான் ஆராதிக்க முடியும் என்றும், அய்ந்தாவது வகுப்பானுக்கு அந்த உரிமை இல்லை என்றும், அவன் கோவிலுக்குள், குளத்துக்குள் வரக்கூட தடுக்கிறவர்கள் யார்?
அதுவும் சட்டப் பூர் வமாகவும், சாஸ்திர மூலமாகவும் தடுத்து விடு கிறவர்கள் யார்?

இவர்கள் எல்லாம் வகுப்பு வாதிகள் அல்லா தவர்களா?

வகுப்புத் துவேஷக் காரர்கள் அல்லாதவர் களா?

வகுப்பு அபிமானி களா?

வகுப்பு அன்பர்களா? என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாத மக்கள் ஜஸ்டிஸ் கட்சியாராகட்டும், சுயமரியாதைக்காரர்கள் ஆகட்டும் மனித உரிமைக்குப் போராடுகிறார்களே அல்லாமல், மனித ஜீவ அபிமானத்துக்குப் போராடுகிறார்களே அல்லாமல், மற்றபடி பணத்துக்குப் போராடுகிறார்களா?

அரசியல் ஏக போக உரிமைக்கு போராடுகிறார்களா?

சாதி அகம்பாவத்துக்கோ,
ஜாதி ஆணவத்துக்கோ,

ஜாதி ஆதிக்கத்துக்கோ போராடுகிறார்களா?

- தந்தை பெரியார்
குடிஅரசு, 8.12.1935, தொகுதி 19, ப:294
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
-விடுதலை ஞா.ம.,19.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக