வெள்ளி, 11 நவம்பர், 2016

சென்னை யாருக்கு? இப்படி ஒரு பொதுக்கூட்டம்


1.2.1953 விடுதலையில் வெளிவந்த ஒரு வித்தியாச மான கூட்ட நோட்டீஸ் இது. ‘நாடு பிரிவினைக் கூட்டம்’ எனும் தலைப்பைப் பார்த்துத் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியவோ, திராவிட நாடு பிரியவோ  நடைபெற்ற கூட்ட மல்ல.
இந்திய அரசு 1953இல் சென்னை மாகாணத்திலிருந்து 1953 அக்டோபர் 1 முதல் தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலப் பகுதிகளைப் பிரிக்க முடிவு செய்தது.
தெலுங்கு பேசுவோர் ஆந்திர மாநிலம் வேண்டு மென்று போராடிய வேளை அது. பொட்டி சிறீராமுலு என்பவர் ஆந்திர மாநிலம் வேண்டுமென்று உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தார்.
அப்படி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும் போது, நம் சென்னை மாநகரையும், ஆந்திராவோடு சேர்க்க வேண்டும் என்று ‘மதராஸ் மனதே’ அதாவது சென்னை எங்களுக்கே என்று குரல் கொடுத்து வந்தனர். தமிழ் நாட்டுப் பகுதிக்குத் திருச்சியைத் தலைநகராக்கும்படி யோசனையும் சிலர் கூறினர். அந்த வேளையில் சென்னையைத் தமிழகத்தோடு தக்க வைத்திடத் திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும் பெரிதும் முயன்றது உண்மை வரலாறு. அதற்காக மாநாடுகள், கூட்டங்கள் நடத்தியதோடு அறிக்கைகள், தலையங்கங்கள் பல எழுதியவர் தந்தை பெரியார்.
ஆனால், இன்று பலரும் வரலாற்றைத் திரித்து ராஜாஜிதான் சென்னையைப் பெற்றுத் தந்ததுபோல் புரட்டு எண்ணமதை விதைத்து உள்ளனர். ராஜாஜி திருப்பதியை எடுத்துக் கொள்ளச் சொல்லிச் சென்னையை மீட்டார் எனவும் கூறுவர். ராஜாஜிக்கும் பங்கு உண்டு என்பதையும் நாம் மறைக்கவில்லை. திராவிடர் கழகம் மேற்கொண்ட அரிய முயற்சி வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். இளைஞர்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும்.
இங்கே இடம் பெற்ற விளம்பரம் அதற்கான சான்றுகளில் ஒன்று 1.2.1953 அன்று நடைபெற்ற கூட்டம் அது. அதில் பங்கு கொண்டவர்கள் பட்டியல் பாருங்கள். திராவிடர் கழகத்தவர் மட்டுமல்லாது, காங்கிரஸ், முசுலீம் லீக், தமிழ் அரசுக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தவர் எனத் தமிழர் ஒன்று கூடிய அற்புதம் இது.
ஏ.எம். உபையதுல்லா சாகிப், செங்கல்வராயன், திரு.வி.க., பாஷ்யம் அய்யங்கார், எஸ். ராமனாதன், டாக்டர் சுப்பராயன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சி.சி. அந்தோணிப் பிள்ளை முதலானவர்கள் காங்கிரஸ் இயக்கத்தவர், கே. விநாயகம் தமிழரசுக் கட்சி, நடிகர் எம்.ஜி.ஆர். பங்கேற்ற நிகழ்ச்சி புரட்சித் தலைவர் புரட்சி நடிகர் என அழைக்கப்படாது ‘நடிகமணி’ என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்.
நாகூர் ஹனீபா அந்நாளிலேயே இன்னிசையைத் தண்டபாணி தேசிகருடன் வழங்கியிருக்கிறார். நடிகவேள் எம்.ஆர். ராதா குதிரைமீது அமர்ந்து ஊர்வலத்தின்முன் சென்று இருக்கிறார். இப்படி இன்று முல்லைப் பெரியாறு, காவிரி காக்க ஒன்றுபடுவார்களா என்று இவ்விளம்பரம் பார்ப்பவர்களுக்கு ஏக்கம் ஏற்படலாம்.
தகவல்: பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்
-விடுதலை,20.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக