திங்கள், 22 மார்ச், 2021

குழந்தைத்_திருமண_தடுப்புச்_சட்டம்

#வைதிகர்களுக்கான_பதிவு

#குழந்தைத்_திருமண_தடுப்புச்_சட்டம்

1891 ல் சட்ட முன்வரைவு ஆரம்பிக்கப்பட்டு  1929 ஆம் ஆண்டு நிறைவேறியதுதான் ‘சார்தா சட்டம்’ எனும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் (The Child Marriage Restraint Act). இந்தச் சட்டம் இயற்றுவதற்கு கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆனது.இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன் பெண்ணுக்கு வயது 8ம் ஆணுக்கு வயது 12 ம் இருந்தால் போதும்.இதை மாற்றி பெண்ணுக்கு 14 என்றும் ஆணுக்கு 18 எனவும் மாற்றியது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம். 

வைதிக பிரமுகர்கள் முதல் மதவாதிகள் வரை இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புக் குரலை தொடர்ந்து முன் வைத்த காரணங்களால் பல முறை தள்ளிப் போனது. 

அன்றைய நாளேடுகள் வார மற்றும் மாதப் பத்திரிக்கை அனைத்தும் வைதிகர்களால் நடத்தப்பட்டு வந்தன.ஒட்டு மொத்த பத்திரிக்கைகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.இச்சட்ட முன் வரைவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில்  வ.உ.சி, விவேகானந்தர்,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் முக்கியமானவர்கள். 
எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் முக்கியமானோர் எம்.கே.ஆச்சார்யா, காஞ்சி மடத்து சங்கராச்சாரியார், பால கங்காதர திலகர்,சுப்பரமண்ய சிவா என பட்டியல் நீள்கிறது.

1894 ஆம் ஆண்டு விவேகானந்தர் எழுதுகிறார்,

“...பெண்களுக்கு 9 வயதிலேயே திருமணம் செய்கின்ற வெட்கக்கேட்டை நிறுத்த வேண்டும். எல்லா பாவங்களுக்கும் இதுதான் ஆணிவேர். நண்பரே, இது ஒரு மாபெரும் பாவம். சிறுவயது திருமணத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஒரு சட்டம்போட முனைந்தவுடன் நமது உதவாக்கரை மக்கள் எழுப்பிய கூச்சலை நினைத்துப் பாருங்கள், என்ன கேவலம்! நாமாக அதை நிறுத்தாவிட்டால் அரசாங்கம் தலையிடவே செய்யும், அதைத்தான் அரசாங்கம் விரும்பவும் செய்கிறது...10 வயது பெண்ணிற்கு, தொப்பை பெருத்த, வயதான ஒரு கணவனைப் பார்த்து, பெற்றோரே அவனது கையில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள்.என்ன பயங்கரம்!..”

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை எதிர்த்து சென்னை மாகாண சட்ட சபையில் குரல் எழுப்புகிறார் எம்.கே.ஆச்சார்யா (MLA -South Arcot)எனும் 
சனாதனவாதி,

“பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது ஆங்கிலேய அரசு.பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?”

இது போன்ற எத்தனையோ எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கடந்துதான் The Child Marriage Restraint Act சட்டமாகப்பட்டது. 

இப்போது வைதிகர்களே திருமண வயது வரம்பை மதித்து அதன்படி வாழப் பழகிவிட்டனர்.வைதிக சாஸ்திரங்களில் உள்ள கர்ம அனுஷ்டானங்கள் காலத்திற்கு ஏற்றவை அல்ல என்பதை அவர்களே உணர்ந்தி்ருக்கிறார்கள்.பிடிவாதமாக இன்னும் சாஸ்திர சம்பிரதயங்களையும் கர்ம அனுஷ்டானங்களையும் பின்பற்றும் படி கூறும் உபன்யாஸகர்களும் தொழில் முறை வைதிக வாத்தியார்களும், மடாதிபதிகளும் உண்டு. 

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 1978 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு ஆணுக்கு திருமண வயது 21 எனவும் பெண்ணிற்கு 18 எனவும் மாற்றப்பட்டது.இன்று வரை இதுவே தொடர்கிறது.

இன்றும் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க, ஆசிய நாடுகளில் பெண்களின் திருமண வயதை 16 வயதிற்கும் குறைவாக வைத்துள்ளன.இந்த நாடுகள் அனைத்திலும் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 

அடுத்து வரும் பதிவுகளில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வைதிக பத்திரிக்கைகள் தெரிவித்த  காரணங்களைப் பார்ப்போம்.
- தினகரன் செல்லையா, முகநூல் பதிவு, 19.3.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக