புதன், 15 மார்ச், 2017

தியாகத்தின் வடிவான திராவிடத்தாய் - கி.வீரமணி



1957-இல் திருச்சியில் நம் அய்யா தந்தை பெரியார் மீது, பார்ப்பனர்களைக் கொல்லத் தூண்டிப் பேசியதாக ஒரு வழக்கு! அதற்கு அப்போது சென்றேன் _- கழகத் தொண்டன் என்ற முறையில் _- சட்டக் கல்லூரியில் முதல் ஆண்டு சேர்ந்த நிலையில்.

திருச்சி மாவட்ட (செஷன்ஸ்) குற்றவியல் நீதிபதி முன் நடைபெற்ற அவ்வழக்கில் அய்யா பெரியார் அவர்களுக்கு 6 மாதம் என மூன்று ஆறு மாதங்கள் தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தண்டிக்கப்பட்ட நிலையில்தான் அய்யா என்னை அழைத்து, அம்மாவுக்குத் துணையாக இருங்கள் என்று பணித்தார்கள். அவர்களிடம் எனக்கு நெருக்கமாகப் பழகும் அரிய வாய்ப்பு அதன்மூலமே கிட்டியது!

அரசியல் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கிறது என்பதற்காக, கையகலக் கடுதாசியான சட்ட நகல்களைக் கொளுத்தியதாக 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை நமது தோழர்களும், தோழியர்களும் சுமார் 3,000 பேர் தண்டிக்கப்பட்டு, சென்னை, வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தனர்.

அம்மா அவர்களுக்குத் துணையாக, கூட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன். விடுதலை அலுவலகப் பணிகளிலும் சில எடுத்துக் கவனித்தேன்.

அம்மா அன்னை மணியம்மையார் பற்றி நான் புரிந்து கொள்ளவும், என்னைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவுமான வாய்ப்பு அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்பட்டது.

அம்மா அவர்கள் கழகப் பிரச்சாரகர்களை அறிவார்கள்; உபசரிப்பார்கள்.  அய்யா அவர்களுக்கு அம்மா, பணிவிடைக்காரராய், தோழியாய், செவிலியாய், சேவகியாய் எல்லா வகைகளிலும் பங்கு பணி யாற்றியவரானதால் மற்றவர்கள் நெருங்கும் வாய்ப்பில்லை. இதனால் அவரைப் புரிந்தவர்களும் வெகு சிலரே. இயக்கம் பிளவுபட்டபோது, அவர்கள் பெற்ற வசவுகள் போன்று உலகில் எந்த ஒரு பெண்மணியும் பெற்றிருக்கவே முடியாது. அவரது கொள்கைப் பயிர் என்ற வயலில் அவை உரங்களாகி விழுந்தன! அவரது உறுதியையும், தன்னலமற்றத் தொண்டூழிய மனப்பான்மை யையும் வளர்த்தன!

அம்மாவிடம் கழகத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் ஏற்பட்ட மரியாதை அதிகமாக அவர்களைத் தொலைதூரத்தில் வைத்துப் பழகவே செய்தது. அய்யாவின் விருப்பப்படி நான் அம்மா அவர்களுக்கு உதவியாக இருந்த வாய்ப்பினால் என்னைப் பற்றிய பல செய்திகளை - எனது தாயார் இளமையில் என்னை விட்டுப் பிரிந்தது; எங்கள் குடும்ப சூழ்நிலை; எப்படி நான் வளர்ந்தேன்; படித்தேன்; உழைத்தேன்; எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களால் நான் கழகக் கொள்கைப் பிரச்சாரத்திற்கு சிறு வயதிலேயே பயன்பட்டேன் என்ற பல்வேறு நிகழ்வுகள், செய்திகள் பற்றி அவர்கள் அறிந்தார்கள்.

அதுபோலவே என்னை ஒரு பெறாத பிள்ளையாகவே அவர்கள் மனதால் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற வகையில் அளவற்ற பாசத்தை, தாயன்பைக் கொட்டித் தீர்த்து விட்டார்கள்!

பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் அய்யா தந்தை பெரியார் அவர்களது ஆணையே என்னை ஆளும் சட்ட திட்டமாக அமைந்து இருந்தது.

அது மேலும் விரிந்தது. அம்மாவின் அன்பு என்ற வளையத்தில் நான் அகப்பட்டேன்; ஆம், நான் அவர்களின் அகத்தில் இடம் பெற்ற பிள்ளையானேன்!

தாயன்பு - வாஞ்சையை இதற்கு முன்பு எவரிடத்திலும் அனுபவித்திராத அளவிற்கு அம்மாவிடம் - ஒரு குறுகிய காலத்தில் நான் பெற்றேன்.

தாயினும் சாலப் பரிந்து என்பதற்கு என்ன பொருள் என்பதை அம்மாவிடம் நான் உணர்ந்தேன்.

அய்யாகூட வேடிக்கையாக சில நேரங்களில் கூறியதுண்டு. “அவன் (வீரமணி) நான் சொல்வதைவிட அம்மா சொன்னால் உடனே கேட்பான்’’ என்று “சீண்டுவதற்கே’’ சொல்லி மகிழ்வதுண்டு!

அய்யா _- அம்மாவின் நம்பிக்கையைப் பெற்றேன் என்பதை விட பாசப் பொழிவிற்கு உரியவனானது நான் பெற்ற பெரும் பேறு!

இன்று அதுதான் என்னை எல்லையற்று உழைக்கச் செய்யும் ஊக்கச் சக்தியாக உயர்ந்து நிற்கிறது!

எத்தனைத் தடை என்றாலும் தாங்கும் இதயம், தாண்டும் கால்கள், அணைக்கும் அன்புக் கரங்கள் எல்லாம் கிடைக்கவே செய்தன!

அய்யாவுக்குச் செவிலியராக, அம்மா இறுதிவரை வாழ்ந்த வாழ்வு தியாக வாழ்வு!

ஒருவர் பொன்னையும், பொருளையும், பதவியையும், புகழையும் ‘தியாகம்’ செய்யலாம்; ஆனால், அம்மா அவர்கள் அய்யாவைக் காப்பாற்ற முதலில் தம் ‘இளமையையே’ தியாகம் செய்தார்கள்!

பிறகு ‘மானத்தையும்’ கூட தியாகம் செய்தார்! இனமானம் தன்மானத்திலும் பெரிது; பொதுவாழ்வுக்கு வருபவர் மானம் பாராது தொண்டு செய்ய வேண்டும் என்ற தந்தை பெரியார் வகுத்த இலக்கணத்தின் பேரிலக்கியமாகத் திகழ்ந்தார்!

அய்யாவின் திருமணத்தைக் காட்டிப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சர் ஆன பிறகு ஒரு நாள் அவர்களது இல்லத்தில்  சந்தித்தபோது சொன்னார்கள். ‘விடுதலை’ நிர்வாகி தோழர் சம்பந்தம் அவர்களும் உடன் இருந்தார்கள். “அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது; மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது மட்டுமல்ல; அய்யா அவர்கள் இவ்வளவு நாள் நம்மோடு வாழவும் வைத்திருக்கிறது’’ என்று சொன்னார்கள்!

இதை மனந்திறந்து அண்ணா அவர்களே கூறினார்கள் என்றால், இதைவிட அம்மாவின் தொண்டுக்கும், தியாகத்துக்கும் வேறு சான்று வேண்டுமா?

தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார் அன்னையார். அதில் நானும் ஒருவன்!

‘அனாதைகள்’ என்று எவரும் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் மருத்துவமனையில் கைவிடப் பெற்ற குழந்தைகளைக் கூட, உடல் நலம் இடந்தராத நிலையிலும் அவர்கள் எடுத்து  வளர்த்து ஆளாக்கினார்கள்.

‘நன்றி பாராட்டாத தொண்டு’ என்ற தந்தையின் மற்றொரு இலக்கண விதிக்கும் இலக்கிய-மானார்கள்!

எளிமை, வீரம், அடக்கம், சிக்கனம் இவை, அவர்களிடம் ஒன்றுக்கு மற்றொன்று போட்டியிட்டு நின்றன!

உடல் சோர்வு உற்ற நிலையிலும் உள்ளச் சோர்வு என்றுமே அம்மா அவர்களிடம் கிடையாது!

ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தினை, தந்தை பெரியார் என்ற மாபெரும் இமயம் சாய்ந்த பிறகு தலைமை தாங்கி, கட்டிக் காத்தாரே அது வரலாறே பெருமை கொள்ள வேண்டிய அதிசயச் சாதனை!

அவர் வாழ அவருக்கும் ஒரு சில பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அம்மாவுக்குத் தெரியாது (பிறகே அவர்கட்குத் தெரிந்தது) அய்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சொத்துகளையும் ஓர் அறக்கட்டளையாக்கி கல்வி அறப்பணிக்கே அதனை விட்டுச் சென்றார்கள்!

அந்த அறக்கட்டளையில் அம்மா ரத்தபாசத்தைக் காட்டவில்லை. அய்யா அவர்களைப் போலவே கொள்கைப் பாசத்தையே கொட்டினார்!

இதைவிட ஒப்பற்ற பெருமனம் வேறு இருக்க முடியுமா?

அய்யாவின் சிக்கனத்தைத் தோற்கடிக்கக் கூடியது அம்மாவின் சிக்கனம். ஆம் அய்யாவிடம் கற்றதுதானே அது!

அம்மா கண்ட களங்கள் பல _- புறநானூற்றுத் தாயாக அவர் வீறுகொண்டு கிளர்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். திருச்சி சிறையில் 1958-இல் மாண்ட சாதி ஒழிப்பு வீரர்கள் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் தம் புதைக்கப்பட்ட சடலங்களை, முதல்வர் காமராஜருடன் வாதாடித் திரும்பப் பெற்றதும், திருவையாறு சாதி ஒழிப்பு வீரர் மஜித் மறைந்தபோது நடுநிசியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் தலைமை தாங்கியதும், 1974ஆம் ஆண்டு இராவண லீலா சென்னையில் நடத்தியதும் அவர் ஒரு தன்னிகரற்ற வீரத்தாய் என்பதற்கான காலப்பெட்டகங்கள்!

 -உண்மை இதழ்,1-15.3.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக