வியாழன், 25 மே, 2017

பெரியாரின் நண்பர் சிங்காரவேலர்


மே நாள் உலக வரலாற்றில் புகழ்மிக்க நாள்! அமெரிக் காவில் தொழிலாளி வர்க்கம் 8 மணி நேர வேலை வேண்டி கோரிக்கை எழுப்பினர். சிகாகோ நகரில் 1.5.1886இல் வேலை நிறுத்தத்தின் மூலம் தங்கள் கோரிக்கையை தொழிலாளர்கள் வெளிப்படுத்தினர். காவல்துறை கொடூரமான தாக்குதல் நடத்தியதில் 4 தொழிலாளர்கள் மாண்டனர். இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 4 தொழிலாளர் தலைவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

சிகாகோவில் நடந்த இக்கொடூர நிகழ்ச்சிக்குப் பின் பல்வேறு நாடுகளின் தொழிலாளர் தலைவர்கள் பாரிஸ் நகரில் 14.7.1889 அன்று கூடினர். இத்தலைவர்கள் சிகாகோ தொழிலாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 1890ஆம் ஆண்டு முதல் மே நாளை (மே முதல் நாள்) அனைத்துலக தொழிலாளர் நாளாக ஒவ்வொரு நாட்டிலும் கொண்டாட தொழிலாளர்களுக்கு ஒரு தீர்மானம் மூலம் வேண்டிக்கொண்டனர். அய்ரோப்பிய நாடுகள் 1890ஆம் ஆண்டு முதல் மே முதல் நாளை மே நாளாகக் கொண் டாடத் தொடங்கின.

மே நாளை முதன் முதலில் இந்தியாவில் 1.5.1923 ஆம் நாளன்று சென்னையில் கொண்டாடிய பெருமை சிங்கார வேலருக்கு உரியது. இக்கூட்டத்தில் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சி (லிணீதீஷீuக்ஷீ ணீஸீபீ ரிவீsணீஸீ றிணீக்ஷீtஹ்) தொடங்கப் பட்டதை சிங்காரவேலர் அறிவித்தார்.

1925இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் சிங்கார வேலர் ‘சுயராஜ்யக் கட்சியின்’ சார்பில் ‘யானை கவுனி’ வார்டில் நின்று வெற்றி பெற்றார்.

1927 மே நாள் சிங்காரவேலரின் இல்லத்தில் கொண் டாடப்பட்டது. அன்று மாலை நடந்த மே நாள் கூட்டத்திற்கு டாக்டர் பி.வரதராஜூலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் சென்னைத் தொழிலாளர்கள் அனைத்திந்தியத் தொழி லாளர்களுடனும், உலகத் தொழிலாளர்களுடனும் ஒன்று பட்டிருக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சிங்காரவேலர் கொண்டு வந்தார்.

1927 ஆகஸ்ட்டில் அமெரிக்காவில் தொழிலாளர் தலைவர்கள் சாக்கோ, வான்ஸைட்டி இருவர் மீதும் பொய் வழக்கு தொடரப்பட்டது. ஆலைத் தொழிலாளருக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் எடுத்துச்சென்ற நிருவாகியைச் சுட்டுக்கொன்றுவிட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக பொய்குற்றம் சுமத்தி வழக்கு மன்றத்தில் வழக்கு நடந்தது. நடுநிலையற்ற நீதிபதி இவ்விரு தலை வர்களை மின்சார நாற்காலியில் உட்காரவைத்துக் கொல்லுமாறு கொடுமையான தீர்ப்பு வழங்கினார்! இக் கொடூர மரண தண்டனையை எதிர்த்து உலகத் தொழி லாளர் வர்க்கம், அமெரிக்க வல்லாட்சியைக் கண்டித்தது. இந்த அநீதியைக் கண்டித்து சிங்காரவேலர் சென்னை நகரில் தொழிலாளர் கூட்டத்தை நடத்தினார்.

தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரி யாருடன் சிங்காரவேலர் கொண்ட நட்பு சிங்காரவேலரை சுயமரியாதை இயக்கத் தொண்டர்களிடையே மிக முக்கியமான பணிகளைச் செய்ய உதவியது.

1931 டிசம்பர் 26இல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டைத் திறந்து சிறந்த சொற்பொழிவு ஆற்றினார். தொன்றுதொட்டு ஆதிக்கம் செலுத்திவரும் மூடநம்பிக்கைள், சாதி மத நம்பிக்கைகள் இவற்றை எதிர்த்துப் போராடும் சுயமரியாதை இயக்கத்தை அவர் மிகவும் பாராட்டினார். சமதர்மம் மட்டுமே சாதி, மத வேற்றுமைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமுதாயத்தைக் கொண்டு வர முடியும் என்று கூறினார்.

மாநாட்டில் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் காட்டும் வழியைப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

“தலைவர் இராமசாமியார் மார்ட்டின் லூதரைப் போல் மதக்கற்பனைகளை நமது நாட்டினின்று ஒழியுமாறு உங்கள் இயக்கத்திற்கு வழிகாட்டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைபிடித்து நமது முப்பத்தைந்து கோடி மக்களின் அறியாமையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பகுத்தறிவை உபயோகிப்பீர்களானால் சமதர்மமே அதாவது மதமற்ற, சாதி வேற்றுமையற்ற, பொருளாதா வேற்றுமையற்ற தர்மமே நமது நாட்டையும் மற்ற நாடுகளையும் காப்பாற்றவல்ல இயக்கமாகும்” என்று மாநாட்டு சொற்பொழிவில் குறிப்பிட் டார்.

சாதி ஏற்றத் தாழ்வுகள் மற்ற நாடுகளில் இல்லாதது. இந்தியாவில் பாமர மக்களையும் கவர்ந்து வரும் இராமாயணமும், பாரதமும் வர்ணாஸ்ரம தர்மத்தையும், சாதியையும் கட்டிக்காக்கும் கோட்டைகளாக விளங்கு கின்றன. சம்புகன் என்ற சூத்திரன் தன் குலத்தொழிலுக்கு மாறாகக் காட்டில் தவம் செய்தான் என்பதற்காக இராமன் சம்புகனின் தலையையே வெட்டிவிடுகிறான்!

தந்தை பெரியார் 1931ஆம் ஆண்டு சென்னையில் சிங்காரவேலரை சந்தித்து தனது “குடியரசு” இதழில் பகுத்தறிவுக் கொள்கைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதி வரும்படி கேட்டுக்கொண்டார். 1931 முதல் 1935 வரை சிங்காரவேலர் ‘குடியரசில்’ பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் பொதுவுடைமைவாதி, சுயமரியாதை இயக்கத் தளபதி, தொழிலாளர் தலைவர் காங்கிரசின் முன்னணித் தலைவர், பெரியாரின் நண்பர் என்று பன்முக ஆளுமை கொண்ட சிங்காரவேலர் 11.2.1945 அன்று இயற்கை எய்தினார் (86ஆம் வயதில்).

தந்தை பெரியாரின் தொண்டர்கள் சிங்காரவேலரின் பன்முகத் தொண்டை என்றைக்கும் மறக்கவே முடியாது. சிங்காரவேலரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ‘சிங்கார வேலர் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செய்யாறு இரா.செங்கல்வராயன்,

11.5.2017

-விடுதலைஞா.ம.,20.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக