திங்கள், 23 அக்டோபர், 2023

கடலூர் தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாறு (செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்)

“செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்”

(கடலூர்  தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாறு)

1

தந்தை பெரியார் அவர்களின் அரை நூற்றாண்டு தாண்டிய அயராத தொண்டுக்குத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் தங்களிடையே உண்டான மாச்சரியங்கள், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி தந்தை பெரியார் அவர்களை எப்படி தமிழர்களின் தனிப் பெரும் பொதுச் சொத்தாகக் கொண்டாடுகின்றனர் என்பதற்கு கடலூர் சிலை திறப்பு விழா சீரியதோர் எடுத்துக்காட்டாக விளங்கியது!

கடலூரில் தந்தை பெரியாரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் படம் - அதன் வாசகங்கள் அல்லாது மேலும் தனிச் சிறப்பு 

3 அடி X 2 அடி அகல நீளத்தில் "சரித்திரக் குறிப்பு" என்ற தலைப்பில் ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளதாகும்.

"29.7.1944 அன்று தந்தை பெரியார் அவர்கள் மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட இதே இடத்தில் இன்று (13.8.1972) அவருக்கு, மக்களால் அன்புடனும் சிறப்புடனும் சிலை எழுப்பப்படுகிறது." என்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட கல் - தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சமுதாயப் புரட்சி எவ்வளவு பிரம்மாண்டமானது; வன்முறை தவிர்த்து, புதியதோர் சகாப்தத்தை உருவாக்கியது என்பதை உலகுக்கே பறைசாற்றுவதாகும்.

தந்தை பெரியார் மீது செருப்பு வீசி அவரை அலற வைத்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்ட மக்கள் இன்று அவரால் அல்லவா நம் விழிகள் திறக்கப்பட்டன என்ற பெருமிதமான நன்றி உணர்வுடனும் அவருக்குச் சிலை எடுக்கிறார்கள்; பாம்பு போட்டு மிரட்டிய மக்கள் பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பைத் தந்தல்லவா தமது நன்றிப் பெருக்கை, மரியாதையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்!

அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதுபோல் உலக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் பெறாத பேறு இது; எந்த சமுதாயப் புரட்சிவாதியும் அவர்களது வாழ்நாளில் இவ்வளவு அரிய வெற்றிக் கனியைச் சுவைத்ததே இல்லை.

தலைவர் தந்தை பெரியார் அவர்களும், முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், மேலவைத் தலைவரும், அன்பில் அவர்களும் ஊர்வலத்தில் பவனி வந்த காட்சி, சுயமரியாதைக் குடும்பப் பாசத்தையும் பற்றினையும் எடுத்துக்காட்டும் காட்சியாகத் திகழ்ந்தது - மக்கள் காட்டிய உணர்ச்சிப் பிரவாகம் கட்டுக்கடங்காததாயிற்று!

- விடுதலை - 14.8.1972

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக