ஞாயிறு, 11 ஜூன், 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு! கொண்டாட்டங்களால் கொள்கைப் பரப்புவோம்!

 

முகப்புக் கட்டுரை – வைக்கம் போராட்ட நூற்றாண்டு! கொண்டாட்டங்களால் கொள்கைப் பரப்புவோம்!

2023 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் உயர் ஜாதியினர் தவிர மற்ற ஜாதியினர் நடப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டமே வைக்கம் போராட்டம். இந்தப் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி கேரளா தலைவர் டி.கே. மாதவனால் தொடங்கப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டதால், போராட்டத்தை முன்னெடுக்கத் தலைவர்கள் இல்லாத நிலையில் போராட்டம் கைவிடப்படும் நிலைக்கு வந்தது. இந்நிலையில்

1924ஆம் ஆண்டு மே மாதம் ஈ.வெ.ரா. வுக்கு கேரளாவில் வைக்கம் நகரில் இருந்து ஒரு தந்தியும், ஒரு கடிதமும் வந்தன.
திருவனந்தபுரம் சமஸ்தானத்திலுள்ள ஒரு சிறு நகரம் வைக்கம், ஈழவர் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அந்நகரின் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடமாடவோ, கடந்து செல்லவோ உரிமை கிடையாது. அவர்கள் எதிரிலுள்ள தெருவிற்குப் போக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றித்தான் போக வேண்டும்.

மாதவன் என்ற வழக்கறிஞர் (ஈழவர் வகுப்பு) அத்தெருவழியே நீதிமன்றம் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
இக்கொடுமைகளுக்குத் தீர்வு காண ஈ.வெ.ரா.வால் மட்டுமே முடியும் என்று அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட தலைவர்கள் முடிவெடுத்துதான் ஈ.வெ.ராவை வைக்கத்திற்கு அழைக்கும் கடிதமும் தந்தியும் அனுப்பினர்.

மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈ.வெ.ரா சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்து விட்டு, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை, தான் திரும்பி வரும் வரை ராஜாஜியை ஏற்க கடிதம் கொடுத்துவிட்டு, உடனே வைக்கம் நோக்கிப் புறப்பட்டார்.

வைக்கம் வந்த ஈ.வெ.ரா. தம்மை வரவேற்க திருவிதாங்கூர் மகாராஜாவின் போலீஸ் அதிகாரியும், நிருவாக அதிகாரியும் காத்திருக்க வியப்படைந்தார்.

திருவிதாங்கூர் மகாராஜா டெல்லிக்குச் செல்லும் போது வழக்கமாக ஈரோட்டில் ஈ.வெ.ரா.வின் வீட்டில் தங்குவார். அந்த நன்றி விசுவாசத்தில்தான் இந்த வரவேற்பைக் கொடுத்தார். ஈ.வெ.ராவை போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தடுக்க ஒரு யுக்தியாகவும் மகாராஜா அந்த வரவேற்பைப் பயன்படுத்தினார். ஆனால் ஈ.வெ.ரா கொண்ட கொள்கையில் உறுதியாய்நிற்பவராயிற்றே! மகாராஜா ஏமாந்து போனார்.

அய்ந்தாறு நாள்கள் வைக்கத்தில் நடக்கும் கொடுமையை எதிர்த்து காரசாரமாகப் பேசினார். இதைக் கேட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணர்வு கிளர்ந்தது.
கீழ்ஜாதி மக்கள் சென்றாலே தீட்டாகும் என்று சொல்லப்படும் வைக்கத்தப்பனை (வைக்கத்து கடவுளை) போட்டு துணி துவைக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா. கூற மக்கள் ஆதரவு மிகவும் கூடிற்று. மகாராஜா ஒருவாரம் பொறுத்தபின் தடையுத்தரவு போட்டார்.

ஈ.வெ.ரா அத்தடையுத்தரவை மீறினார்.அதனால், அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம்‘அருவிக்குத்தி’ சிறையில் அடைக்கப்பட்டார். (22.04.1924)இதைக் கேள்வியுற்ற நாகம்மாளும் கண்ணம்மாளும் வைக்கம் வந்து, பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர். நாளுக்கு நாள் ஆதரவு பெருகிற்று.

இச்சூழலில், ராஜாஜி ஈ.வெ.ராவிற்கு ஒரு கடிதம் எழுதினார். நமது இடத்தை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இன்னொரு இடத்தில் போய் ரகளை செய்கிறீர்கள். அதை விட்டுவிட்டு இங்கு வந்து, விட்டுச் சென்ற வேலைகளைக் கவனியுங்கள் என்று அதில் எழுதியிருந்தார். மற்றொரு காங்கிரஸ்காரர் எஸ். சீனிவாச அய்யங்கார் ஈ.வெ.ராவை கையோடு
அழைத்துப் போகவே வந்து விட்டார்.

இங்குதான் தலைவர்களையும் அவர்களின் உண்மை உருவத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோரின் விடிவுக்காக ஈ.வெ.ரா. நடத்திய போராட்டம் ராஜாஜிக்கு ரகளையாகப் பட்டிருக்கிறது! இன்னொரு அய்யங்கார் அழைத்துப் போகவே வந்து விட்டார். அவ்வளவு அக்கறை! ஜாதி உணர்வில், மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவதில் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு இவ்வரலாற்றுச் சம்பவம் சரியான எடுத்துக்காட்டு.
ஆனால், கொள்கைப் பிடிப்புள்ள ஈ.வெ.ரா. இவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல்,வர முடியாது என்று மறுத்துவிட்டார்.

ஈ.வெ.ராவின் போராட்டச் செய்தி நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. பஞ்சாபிலிருந்துகூட ஆதரவு கிடைத்தது. ஆனால், இந்த ஆதரவை இந்துக்களுக்கு எதிரான சீக்கியர் போர் என்று சூழ்ச்சிக்காரர்கள் திசை திருப்ப, பிற மதத்தவர் யாரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று காந்திஜி அறிக்கை விட்டார். அதனால் பிற மதத்தவர்கள் விலகிக் கொண்டனர்.

ஈ.வெ.ரா சிறையிலிருந்து விடுதலையானதும் மீண்டும் அங்கே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். காந்தியின் ஆதரவு இப்போராட்டத்திற்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அதிகாரிகள்
மீண்டும் ஈ.வெ.ராவைக் கைது செய்து 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார்கள். அதன்படி ‘பசுப்புரா’ சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சூழலில் கேரளாவில் ஈ.வெ.ரா தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த வைதீக சனாதனிகள் ஈ.வெ.ரா. மரணமடைய வேண்டும் என்று கடவுளை வேண்டி ஒரு யாகம் நடத்தினர். அதற்கு ‘சத்ரு சம்ஹார யாகம்’ என்று பெயர். இந்த யாகம் நடந்து கொண்டிருந்த போதே திருவிதாங்கூர் மன்னர் மரணமடைந்தார். இதுதான் வரலாற்று நகைச்சுவை!

மன்னர் மறைந்ததையொட்டி போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மன்னர் மறைவிற்குப் பின் அரசியார் பதவிக்கு வந்தார். அவர் போராட்டத் தலைவர்களுடன் பேசித் தீர்வுகாண உடன்பட்டார்.

ஈ.வெ.ராவிற்கும் ராணிக்கும் இடையே உடன்பாடு எற்படுவதை விரும்பாத சமஸ்தான திவான் ராஜாஜிக்குக் கடிதம் எழுத, அவர் காந்திஜிக்குக் கடிதம் எழுதி வரவழைத்தார்.
வைக்கம் வந்த காந்திக்கும் ராணிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஈ.வெ.ரா. கலந்து கொள்ளாமல் பயணியர் விடுதியில் இருந்தார்.

“நாங்கள் தெருக்களைத் திறந்துவிடத் தாயார். ஆனால் ஈ.வெ.ரா கோயிலுக்குள்ளும் போக வேண்டும் என்று போராடுவார். அதுதான் தயங்குகிறோம்” என்றார்.
உடனே காந்திஜி பயணியர் விடுதிக்கு வந்து ஈ.வெ.ராவைச் சந்தித்து ராணி கூறியதைக் கூறி, “ஒத்துக் கொள்வது நல்லது; உங்கள் கருத்தென்ன” என்று கேட்க,“தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள்ளும் செல்லவேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கமாக இல்லாவிட்டாலும் அது எனது லட்சியம். அதை நான் விட்டுக் கொடுக்க முடியாது. இப்போதைக்கு வேண்டுமானால் அதுபோன்ற கிளர்ச்சி இருக்காது” என்று ஈ.வெ.ரா தனது தனித் தன்மையையும், நேர்மையையும், உறுதியையும் வெளிப்படுத்தினார்.

காந்திஜி ஈ.வெ.ராவின் பதிலை அரசியிடம் கூற அரசி ஏற்றுக் கொண்டார். தீண்டப்படாத மக்களுக்கு கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் இருந்த தடை நீங்கியது; அவர்கள் தலைநிமிர்ந்து நடந்தனர்.
இப்போராட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. கோயில் நுழைவுப் போராட்டத்திற்கு அவர்களைத் தூண்டியது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூட இப்போராட்டத்தினால் தூண்டப்பட்டதாக அவரே கூறினார்.
தமிழ்நாட்டிலும் இப்போராட்டத்தின் விளைவாய் தாழ்த்தப்பட்டோரிடையே எழுச்சி ஏற்பட்டது. பல மாதங்களுக்குப் பின்வெற்றியோடு தமிழ்நாடு திரும்பிய ஈ.வெ.ரா.விற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘வைக்கம் வீரர்’ என்னும் அடைமொழியை திரு.வி.க. ஈ.வெ.ரா. விற்கு வழங்கினார்.

வைக்கம் போராட்டத்தில் வென்ற ஈ.வெ.ரா. பெரியார் போராட்ட வெற்றிபற்றி கீழ்க்கண்டவாறு நுட்பமாகப் பேசினார்.“அறப்போராட்டத்தின் நோக்கம் கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாமும் நடக்க வேண்டும் என்பதல்ல; மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்பதேயாகும். சமத்துவம் வேண்டும் என்பதே நமது குறிக்கோள். இது இத்தெருவில் நடந்ததோடு முடிந்து விடவில்லை. தெருவில் நிலைநாட்டிய சுதந்திரத்தை கோயிலுக்குள்ளும் நிலை நாட்டவேண்டியது மனிதர் அனைவரின் கடமையாகும்’’ என்றார்.

வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டயம் நகரில் ஈ.வெ.ரா தலைமையில் மாநாடு நடந்தது. அதில் கோயில் நுழைவு சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து எர்ணாகுளம் நகரில் ஜாதியொழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. ஜாதியொழிய ஜாதியில்லாத மதமாகிய இஸ்லாம் மதத்தில் சேரலாம் என்றும் பரிந்துரைக்
கப்பட்டது. இதையேற்று ஒடுக்கப்பட்ட மக்கள் பெருவாரியாக இஸ்லாம் மதத்தில் சேர்ந்தனர். இந்நிலை நீடித்தால் இந்துமதம் அழியும் என்று அஞ்சிய மதவாதிகள் மவுனமாக, அரசு வேறு வழியில்லாமல் எல்லா இந்துக்களும் எல்லாக் கோயில்களுக்குள்ளும் செல்லலாம் என உத்தரவு பிறப்பித்தது. இது ஈ.வெ.ரா.வுக்குக் கிடைத்த அடுத்த வெற்றி.

வைக்கம் போராட்ட நூற்றாண்டும் தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பும்

இதற்கு பெருமை வாய்ந்த வைக்கம் போராட்ட தள நாயகர் தந்தை பெரியார் செயற்கரும் செயல்கள் குறித்து ஓராண்டு முழுவதும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு சிறப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தும் என்று சட்டப் பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினைப் பிரகடனப்படுத்தினார் சமூக நீதிக்கான சரித்திரநாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30ஆம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும். போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறேன். வைக்கம் போராட்டம் நடை பெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

2. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழி பெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

3. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியீடாக இது வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

4. இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்.

5. எல்லை கடந்துசென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும்
வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

6. கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருள்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

7. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்
குட்டி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

9. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓராண்டு முழுவதும்…

10. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்றுகொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும். இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும்.

11. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும்.
இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

ஆசிரியர் வரவேற்பு

வைக்கம் போராட்டத்தைப் போற்றும் வகையிலும், பிரச்சாரம் செய்யும் வகையிலும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் 30.3.2023 அன்று அறிவித்த அடுக்கடுக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதற்காக நமது முதலமைச்சரை தாய்க்கழகம் திராவிடர் கழகம் உச்சிமோந்து பாராட்டி மகிழ்கிறது.
நூற்றாண்டு 30.3.2023ஆம் நாளிலிருந்து தொடங்குவதால், தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும் இன்று அறிவித்துள்ள அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடும், அதனை விளக்கி முதலமைச்சரின் சுருக்க உரையும் இசைத் தேனாக நமது காதுகளில் ஒலித்தன!

மனித உரிமையின் மாண்புக்கு முன்னோட்டமான இப்போராட்டம் ஒரு துளி ரத்தம் சிந்தாத ஆயுதம் ஏந்தாத ஓர் அமைதிப் புரட்சிவழிப் போராட்டம்!

மனித உரிமைக்கான தாய்ப் போராட்டம்!

பல மனித உரிமைப் போராட்டங்களுக்கும், ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்
களுக்கும் ‘தாய்ப் போராட்டம்’ என்றே பொருத்தமாக இதனை அழைக்கலாம்!
அதன் முக்கியத்தை இப்போதுள்ள இளைஞர், மாணவர், மக்கள் அறியவேண்டிய, இனி வரக்கூடிய தலைவர்களுக்கும் புரியவேண்டிய தேவையும் கருதி, நமது முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள நூற்றாண்டு விழா செயல் திட்டங்கள் செம்மை பெற, ‘செயலாக்கக் குழு’ அமைப்பும் முக்கியம்!

செய்யப்படவேண்டியவை

வெறும் விழாக்கோலம் தாண்டி, புதிய எழுச்சியை உருவாக்கவும், ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்குத் தூண்டுதலாகவும், பல புதிய சமூகப் புரட்சிச் சட்டங்களையும், வைக்கம் நூற்றாண்டு காலத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியும், கொள்கைமிகு முதலமைச்சரும் செய்யவேண்டும் என்பதை எதிர்பார்ப்பதுடன் இதை ஒரு திருப்புமுனையாக அமைப்பது முக்கியம் என்பதையும் நினைவூட்டி, முதலமைச்சருக்கு நமது உளங்கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மனமார – வாயார – கையார வாழ்த்தி, கைதட்டி வரவேற்கிறோம்!
‘‘புதியதோர் உலகு செய்து” நாட்டை புதிய சமத்துவபுரமாக்கிய நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியை தாய்க்கழகத்தின் சார்பில் மனதார உச்சிமோந்து பாராட்டுகிறோம்!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்திட உள்ள கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களையும், கேரள அரசையும் மனதாரப் பாராட்டுகிறோம்!’’ என்று ஆசிரியர் வரவேற்றுப் பாராட்டினார்கள்.

நூற்றாண்டு விழாவில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை

கடந்த மார்ச் 6ஆம் நாளன்று நாகர்கோயிலில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் 200ஆம் ஆண்டு விழாவில் நானும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் கலந்து கொண்டோம்.
அந்தக் கூட்டத்தில் பேசிய நான், ‘‘வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அதனைத் தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.எனக்குப் பிறகு பேசிய மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள், அதனை உறுதிப்படுத்திப் பேசினார்கள்.

“ஞங்கள் நடத்தாம்! தாங்கள் வரணும்…” என்னு, ஆ வேதியில் வெச்சு தன்னே, சகாவு பினராயி விஜயன் என்னெ ஸ்வாகதம் செய்து. உடல் கொண்டு வேறே வேறே என்னாலும், சிந்த கொண்டு நம்மள் ஒன்னாணு என்னு அப்போதன்னே, அத்தேஹம் தெளியிச்சு.

(நாங்கள் நடத்துகிறோம் – நீங்கள் வருகை தாருங்கள் என்று எனக்கு அந்த மேடையில் வைத்தே அழைப்பு விடுத்தார்கள். உடலால் நாம் வேறு வேறு என்றாலும் உணர்வால் ஒருவர் என்பதை அந்த மேடையிலேயே பினராயி விஜயன் அவர்கள் நிரூபித்தார்கள்.)
சில நாட்களில் கேரள அமைச்சர் திரு. சாஜி செரியன் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்து என்னைச் சந்திக்க வைத்தார்கள்.

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மாண்புமிகு சகோதரர் பினராயி விஜயன் அவர்கள் அழைத்து நான் இதுவரை வராமல் இருந்தது இல்லை.

ஞான் இவிடே எத்தியிரிக்குன்னு…

தமிழ்நாட்டில் இப்போ நியமசபா நடக்குன்னு. என்னாலும், வைக்கம் சத்யாகிரஹத்
தின்டே நூறாம் வார்ஷிகத்தில் நிச்சயம் பங்கெடுக்கணம் என்னுள்ளதினால் ஞான் இவிடே எத்தியிரிக்குன்னு..
(தமிழ்நாட்டில் இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவுக்கு நிச்சயம் சென்றாக வேண்டும் என்று நான் இங்கே வந்துள்ளேன்!)
கேரளாவே இங்கு திரண்டு வந்திருக்கிறது என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பிரமாண்ட-மாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைக்கம் – என்பது இப்போது கேரள மாநிலத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு எழுச்சியை -_ உணர்ச்சியை ஏற்படுத்திய ஊர்!
1924 ஆம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல – தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம்! இன்னும் சொன்னால் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்!
அம்பேத்கர் பார்வையில் வைக்கம் போராட்டம்!

“வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது” என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிற்காலத்தில் எழுதினார்கள்.
வைக்கம் போராட்டத்தின் தூண்டுதலால்தான் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் அண்ணல் காந்தியடிகள் அவர்கள் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டிலும், சுசீந்திரத்திலும், திருவண்ணாமலையிலும், மதுரையிலும், திருச்சியிலும், மயிலாடுதுறையிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம்தான். எனவே, சுயமரியாதை -சமூகநீதிப் போராட்டத்தின் தொடக்கமான வைக்கம் மண்ணில் -நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். வெற்றிப் பெருமிதத்துடன் நான் இங்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்.

சூத்திரர்கள் என்றும், பஞ்சமர் என்றும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தலைநிமிர வைக்க கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் சீர்திருத்த இயக்கமானது பல்லாண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இதனைச் சீர்திருத்த இயக்கமாக மட்டுமே சுருக்கிச் சொல்லி விட முடியாது. இவைதான் புரட்சி இயக்கங்கள்!
கேரளாவில் புரட்சி இயக்கம் என்பது –

 நாராயணகுரு
 டாக்டர் பல்ப்பு
 பத்மநாபன்
 குமாரன் ஆசான்
 அய்யன்காளி
 டி.கே.மாதவன் – ஆகிய தலைவர்களால்
வரிசையாக நடத்தப்பட்டது!
தமிழ்நாட்டு புரட்சி இயக்கமானது –
 இராமலிங்க வள்ளலார்
 அய்யா வைகுண்டர்
 அத்திப்பாக்கம் வெங்கடாசலனார்
 பண்டித அயோத்திதாசர்
 டி.எம்.நாயர்
 தந்தை பெரியார் – ஆகிய தலைவர்களால்
வரிசையாக நடத்தப்பட்டது!
இதில் கேரளாவைச் சேர்ந்த டி.கே.மாதவன் அவர்களும் – தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை பெரியாரும் இணைந்து நடத்திய வெற்றிப் போராட்டம்தான் வைக்கம் போராட்டம்!’’ என்றார்.

கேரள முதல்வர் உரை

வைக்கம் சத்தியாகிரகம் கேரளத்துக்கு மட்டுமல்ல, இங்கு தமிழ்நாடு முதல்வர் குறிப்
பிட்டதுபோல் தமிழ்நாட்டுக்கும் பெருமை
கொள்ள வழி வகுத்துள்ளது. தமிழ்நாட்டில் பிராமணிய எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த ஈ.வெ.ரா. பெரியார், அங்கிருந்து வந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன் இங்கு சிறைவாசமும் அனுபவித்தார். அவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் வைக்கத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

தனியார் போராட்டம் அல்ல…

வைக்கம் சத்தியாகிரகம் மற்றொரு முன்மாதிரியையும் நம்முன் உயர்த்திக்-காட்டுகிறது. சீர்திருத்த இயக்கம் என்பது சமூக அமைப்புகளால் மட்டும் நிறைவு பெற்றுவிடாது. இப்போதும் ஜாதியப் பாகுபாடுகளைச் சந்திப்போர் அதற்கு எதிராக தன்னந்தனியாக வேறுபட்டு நின்று நடத்தவேண்டிய போராட்டம் அல்ல என்பதுதான் அது. .

‘அவர்ணருக்காக’ போராடிய ‘சவர்ணர்கள்’

‘அவர்ணர்’ என வரையறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வேண்டும் என்பதே மன்னத்து பத்மநாபன் தலைமையில் நடந்த சவர்ணர்களின் நடைப்பயணம்.

வைக்கம் சத்தியாகிரகத்தையொட்டி பேச்சு வார்த்தைக்கு வந்த காந்திஜியைக்கூட, அவர் பிராமணிய சவர்ணர் அல்ல என்பதால் வைக்கத்தின் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்த இண்டம்துருத்தி மனையில் அனுமதிக்காதது குறித்து இங்கே குறிப்பிட்டார்கள். கோயிலுடன் இணைந்த பொது வழிகளில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்கிற காந்தியின் கோரிக்கையை அந்த ஆதிக்க மனையின் அதிகாரிகள் நிராகரித்தனர். காந்திஜிக்கு அங்கு கிடைத்த அனுபவம், அவமானகரமான சூழல் குறித்தும் இங்கே குறிப்பிடப்பட்டது. அந்த மனைதான் இப்போது ‘சொத்து’ (மரம் ஏறும்) தொழிலாளிகளின் அலுவலகமாகச் செயல்படுகிறது. வரலாறு முற்போக்காக முன்னேறிச் செல்லும் என்பதற்கான சான்றாகும் இது.

சத்தியாகிரகிகள் எதிர்கொண்ட கொடூரமான தாக்குதல்கள் மறக்க முடியாதவை. பிராமணரான ராமன் இளையது என்கிற சத்தியாகிரகியின் கண்களில் பிராமணியத்தின் பிரமுகர்கள் வலுக்கட்டாயமாக சுண்ணாம்பு தேய்த்தனர். வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவராக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற ஏராளமான வலி நிறைந்த அனுபவங்களைக் கொண்டது வைக்கம் போராட்டம். அவற்றை யெல்லாம் கடந்துதான் ஜனநாயக முறையில் இன்று கேரளம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உயர்ந்துள்ளது.

60 ஆண்டுகள் அமலாகாத சட்டம்

ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களுக்கு பொதுப்பாதையைப் பயன்படுத்தும் சுதந்திரம் 1865இல் திருவிதாங்கூர் அரசு வழங்கியது. ஆனால், அந்த அனுமதி அமலாக சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு வெகுஜனப் போராட்டம் தேவைப்பட்டது. சிறப்பான சட்டத்தால் மட்டும் சமூக நிலவரங்களை மாற்றி அமைத்துவிட முடியாது, அதற்கு சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும் வெகுஜனத் தலையீடு தேவை என்பதை வைக்கம் சத்தியாகிரகம் தெளிவுபடுத்துகிறது.
வைக்கம் சத்தியாகிரகம் நாட்டின் பல்வேறுபகுதிகளில் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

அத்தகைய போராட்டங்களின் மூலம் வளர்ந்து வந்த மாற்றங்கள்தான் இன்று தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் ஆட்சி அதிகாரத்துக்கு வழிவகுத்தது. பெரியார், அண்ணா போன்றோரின் திராவிட முன்னேற்ற கழக இயக்கத்தை காலத்துக்கு ஏற்ப அரசியல்படுத்தி முன்னெடுத்துச் செல்கிறது மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, சீர்திருத்த இயக்கத்திடமிருந்து ஊக்கம் பெற்று மனிதாபிமானம் கொண்ட ஒரு புதிய சமூகத்தைப் படைக்க கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு முயற்சிக்கிறது. சீர்திருத்த இயக்கத்தின் உன்னத நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் இரண்டு நீரோட்டங்களின் இத்தகைய சங்கமம், வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டையொட்டி இங்கு சாத்தியமாகி இருக்கிறது என்பது அதிக முக்கியத்துவம் கொண்டதாகும்’’ என்றார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கே விழிப்பையும், தூண்டுதலையும் தந்தது வைக்கம் போராட்டம். அதன் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதன்மூலம் இன்றைய தலைமுறைக்கு விழிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்த முடியும்! ஏற்படுத்த வேண்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக