ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் அப்பீல் வழக்கு முடிவு தோழர் ஈ.வெ.ரா. விடுதலை


ஈரோடு குடியரசு பத்திரிகையில் சென்ற அக்டோபர் மாதம் 20ந் தேதி என் இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் என்ற மகுடத்தின் கீழ் ஓர் தலையங்கம் வெளியாயிற்று. அக்கட்டுரை யானது சர்க்கார் மீது துவேஷத்தை உண்டுபண்ணக்கூடியதாக இருக்கிறதென அதன் ஆசிரியர் தோழர் ஈ.வெ.ராமசாமி மீதும்,
அவரது சகோதரியும் அப்பத்திரிக்கையின் பிரசரகர்தாவுமான தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் மீதும் நடந்த வழக்கில் கோயம்புத்தூர் ஜில்லா மாஜிஸ்திரேட் தோழர் ராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங்காவல் தண்டனையும், 300 ரூபாய் அபராதமும், தோழர் கண்ணம்ளுக்கு 3 மாத சிறை தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், விதித்தார். பின்னர் தோழர் கண்ணம்மா ஜாமீனில் விடுதலை பெற்று ஹைக்கோர்டில் அப்பீல் செய்து கொண்டார்.
தோழர் ஈ.வெ.ராமசாமி ஜாமீனில் விடுதலை பெற மறுத்ததுடன் அப்பீலும் செய்து கொள்ளவில்லை எனவே அவர் தற்போது ராஜமகேந்திரவரம் சிறையிலிருந்து வருகிறார். மேற்படி அப்பீலின் பயனாக ஹைகோர்ட் நீதிபதி கே.பி.லட்சுமணராவ், அவர்கள் நேற்று கீழ்க்கோர்ட்டார் தீர்ப்பை உறுதி செய்தாரெனினும், இரு எதிரிகளுக்கும் தண்டனை இதுவரை அனுபவித்துள்ள சிறை தண்டனை காலத்திற்குக் குறைத்து விட்டார்.
தோழர் ஈ.வெ.ரா. விடுதலை
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 15ந் தேதி ராஜ மகேந்திரம் ஜெயிலிலி ருந்து விடுதலையாகி, 16ந் தேதி சென்னை வந்து அங்கிருந்து அன்றே புறப்பட்டு 17ந் தேதி ஈரோடு வந்து சேர்ந்தார். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம் ஆகிய ஸ்டேஷன்களுக்கு ஆங்காங்குள்ள சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் வந்து சந்தித்துப் பேசிப் போனார்கள்.
ராஜமகேந்திரம் ஜெயிலில் வெயில் கொடுமையால் சிறிது கருத்தும் இளைத்தும் போயிருக்கிறார். ஆனால் உடல் சவுக்கியமாய் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெயில் கொடுமைக்காக எங்காவது குளிர்ச்சி யான இடத்துக்குப் போக கருதியிருக்கிறார்.
ஜெயிலில் தோழர் ஈ.வெ.ராவுக்கு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் முயற்சியில் ஹை-கிளாஸ் சவுகரியம் கிடைக்கப்பட்டது என்றாலும், அந்த ஜெயிலில் கிளாஸ் பிரிவுகளுக்குப் போதிய சவுகர்யம் இல்லாததால் பி-கிளாஸ் கைதியாகவே இருந்து வருகிறேன் என்று ஜெயில் அதிகாரிகளுக்குச் சொல்லிவிட்டு பி. கிளாஸ் கைதியாகவே இருந்து வந்தார்.
அங்கு சாப்பாடும் ஒரு பத்திரிகையும் தவிர மற்றபடி சி-கிளாஸ் கைதி போலவே நடத்தப்பட்டார். சாப்பாடுகூட ரொட்டி, பால் என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. சி-கிளாஸ் கைதிகளுடனேதான் வைக்கப் பட்டிருந்தார். ஒரு பிளாக்கில் உள்ள 32 அறைகளில் 28 கருப்புக்குல்லாய் கைதிகளுடன் 29 வது கைதியாகவே இருந்து வந்தார்.
வெராண்டா இல்லாத 7 க்கு 10 ரூமில் காலை முதல் மாலை வரையில் வெயிலில் இருக்கும்படியான நிலையில் இருக்க நேர்ந்தது என்பதோடு அறையை விட்டு வெளியில் வந்தாலும் வெயிலில் இருக்க வேண்டியதைத் தவிர வேறு மார்க்கமில்லாத ஜெயிலாய் இருந்தது என்பதோடு பிளாக்கை விட்டு வெளியில் போவதற் கில்லாமலும் வேறு யாருடனும் பேசுவதற்கில்லாமலும் நிர்ப்பந்தத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தப்படி வைக்க மேல் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாகத் தெரிகிறது. மற்றபடி வேறுவித அசவுகரியம் இல்லை என்பதாகத் தெரிகிறது.
தோழர் ஈ.வெ.ரா.ஈரோடு விஜயம்
பாராட்டுக் கூட்டத்தில் ஈ.வெ.ரா.பிரசங்கம்
விடுதலையான பிறகு ஈரோட்டில் பாராட்டுக் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா.பேசியதாவது:-
நான் சிறைவாசம் சென்றுவிட்டு வந்ததைப் பாராட்டு வதற்காக என்று இக்கூட்டம் கூட்டப்பட்டு என்னைப்பற்றி பலர் பலவிதமாகப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். இது ஒரு வித பழக்க வழக்கத்தை அனுசரித்திருப்பதாக மாத்திரம் நான் கருதுகிறேனே ஒழிய இதில் ஏதாவது நல்ல பொருள் இருப்பதாக நான் கருதவில்லை.
முதலாவதாக இப்பொழுது நான் மற்றவர்களைப் போல் சிறைசெல்ல வேண்டுமென்று கருதி நானாக சிறைக்குப் போகவில்லை. ஆனால் சிறைக்குப் போகக்கூடிய சந்தர்ப்பம் எற்பட்டால், அதற்காக பயந்து பின்வாங்காமல் அதையும் ஒரு நன்மையாகவே பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைக் காட்டுவதற்காகவே நான் சிறை செல்ல நேர்ந்தது.
அதாவது குடிஅரசு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட ஒரு சாதாரணமானதும், சப்பையானதுமான வியாசத்திற் காகத்தான் நான் சிறைக்கு போக நேரிட்டதே தவிர, மற்றபடி செல்லத்தக்க ஒரு சரியான காரியம் செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை.
சர்க்கார் இந்தக் குடி அரசுப் பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் என்னை வருடக் கணக்காய் தண்டிக்கக்கூடியதும், நாடு கடத்தக்கூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காய் தென்படலாம். ஆனால் அவர்கள் அந்தக்காலத்திலெல்லாம் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை.
அவர்கள் ஏன் கவனிக்கவில்லை என்பதை இப்போது நான் கவனித்துப்பார்த்தால் காங்கிரசிற்கு பாமர ஜனங்களிடத்தில் இருந்த செல்வாக்கின் பயனாய் நமது வியாசங்களை பொது ஜனங்கள் லட்சியம் செய்ய மாட்டார்கள் என்கின்ற தைரியத்தால் சர்க்கார் அப்பொழுது சும்மா இருந்தார்கள் என்று தோன்றுகிறது.
ஆனால் இப்பொழுது இப்படிப்பட்ட சிறிய வியாசங் களையும் கண்டு இவ்வளவு வல்லமை பொருந்திய சர்க்கார் பயப்படும் படியான நிலைமை ஏற்பட்டுவிட்ட தென்பது நன்றாய்த் தெரிகிறது இதிலிருந்து நாம் என்ன நினைக்க வேண்டி இருக்கிறதென்றால் நமது அபிப்பிராயத்தை மக்கள் மதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் சுயமரியாதை கொள்கையை ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும்,
சர்க்கார் இப்போது உணர்வதாகத் தெரிகிறது அன்றியும் மற்றும் பல புதிய புதிய தீவிரக் கொள்கைகளையும் ஜனங்கள் வரவேற் கிறார்கள் என்பதும் தெரிகிறது. இதுவரை நமது நாட்டில் இருந்து வந்த அபிப்பிராயங்கள் எல்லாம் வெள்ளைக்காரருக்கு இந்நாட்டில் என்ன வேலை அவர்களுக்கு ஏன் ஆயிரக்கணக் கான ரூபாய் சம்பளம், கருப்பு மனிதனுக்கு ஏன் நூற்றுக்கணக் கான பத்துக் கணக்கான ரூபாய்கள் சம்பளம்? அவர்களுக்கு ஏன் பெரிய அதிகாரம்,
நமக்கு ஏன் சின்ன அதிகாரம் என்பது போன்ற பிரச்சினைகளே தேசீயம் என்னும் பேரால் முக்கியமாய் இருந்து வந்தது. இதன் பயனாய் அரசாங்கத்தார் களும் இங்குள்ள பணக்காரர் படித்தவர் மேல் ஜாதிக்காரர் ஆகிய ஒரு சிறு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஏதாவது வாய்ப்பூசி மக்களின் தேசீய அபிலா ஷைகளை திருப்தி செய்து வந்து கொண்டும் இருந்ததால் பாமர ஜனங்களின் எண்ணம்,
உணர்ச்சி, ஊக்கம் எல்லாம் அதிலேயே ஈடுபட்டுக் கிடந்தது. ஆனால் இப்பொழு தோ நாட்டில் வரவர அந்த எண்ணங்கள் மறையத் தொடங்கி விட்டன. அவை வேறு விதமாக  பரிணமிக்க ஆரம் பித்து விட்டன.
எப்படிஎன்றால் வெள்ளையனுக்கு ஏன் 1000, 5000 ரூபாய் சம்பளங்கள், கருப்பனுக்கு 100, 50, 10, 5 ரூபாய் சம்பளம் என்பது போய், மனித சமூகத்தில் யராராயிருந்தாலும் ஒருவனுக்கு ஏன் 5000, 10000 ரூபாய் சம்பளம், மற்றவறுக்கு ஏன் 5 ரூபாய், 10 ருபாய் சம்பளம், என்கிற உணர்ச்சி தோன்றி எல்லா மக்களும், ஜாதி, மதம், தேசம் என்கின்ற பேதமும் பிரிவுமில்லாமல் சகலரும்சமமாய் பாடுபட வேண்டும்.
பயனை சமமாய் அடைய வேண்டும் என்கின்றதான் ஒரு சமதர்ம உணர்ச்சியில் திரும்பி விட்டது. இந்த நிலைமையானது ஆட்சிக்காரருக்கு மாத்திரமோ அல்லது அரசாங்க உத்தியோஸ்தருக்கு மாத்திரமோ விரோதமானதன்றோ, அடக்கி விட வேண்டிய தென்றோ தோன்றாமல் நம் நாட்டில் உள்ள எல்லா பணக்காரர்களுக்கும், எல்லா மேல்ஜாதிக்காரர்களுக்கும் (அதாவது பாடுபடாமல் வயிர் வளர்க்கவும்,
போகபோக்கியம் அனுபவிக்கவும் கருதும் மக்களுக்கும்) படித்தவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் தோன்றி விட்டதுடன் இவர்களால் வாழ்ந்து வந்த மதப்புரோகிதர்கள் என்பவர்களுக்கும் தோன்றிவிட்டது. ஆதலால் இந்தக் கூட்டத்தார்கள் எல்லோருமே அக்கொள் கைக்கு எதிரிகளாய் இருப்பதில் நான் அதிசயப்படவில்லை என்பதோடு இதற்காக நான் ஜெயிலுக்குப் போக நேரிட்டதிலும் அதிசயமில்லை.
(போன வார வரலாற்றுச்சுவட்டில் வந்திருந்த பச்சநாவி என்ற சொல்லுக்கு நஞ்சு என்பது பொருள் ஆகும்)
-விடுதலை,25.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக